என் மலர்
விருதுநகர்
- ஈரோடு இடைத்தேர்தல் அனைத்து அமைச்சர்களும் தொகுதியில் முகாமிட்டிருப்பது தவறான நடைமுறை என்று மாநில செயலாளர் கூறினார்.
- அதானி குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பொதுக் கூட்டத்தில் பேசுவதுபோல் பேசி உள்ளார்.
விருதுநகர்
விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பால கிருஷ்ணன் இன்று நிருபர்க ளிடம் கூறியதாவது:-
மத்தியில் அதானி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும்போது அதானியை அழைத்து செல்கிறார். மோடி அரசு அதானிக்கு சலுகைகளை வாரி வழங்குகிறது. பாராளு மன்றத்தில் மோடி அதானி குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பொதுக் கூட்டத்தில் பேசுவதுபோல் பேசி உள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலில் பிரசாரத்திற்காக அனைத்து அமைச்சர்களும் அங்கு முகாமிட்டுள்ளனர். இந்த நடைமுறையை கொண்டு வந்தது அ.தி.மு.க.தான். இதை தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தில் பெண்கள் காப்பகத்தில் விதிமுறைகள் மீறப்படுகின்றன. மேலும் அங்கு பாலியல் தொல்லை களும் கொடுக்கப்படுகிறது. எனவே தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காப்பகங்களை அரசே பொறுப்பேற்று நடத்த வேண்டும். ஈரோடு இடைத்தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெறுவார்.
நிலக்கரி ஆலைகளால் கடுமையாக மாசு ஏற்படுகி றது. ஆனால் அதைபற்றி எதுவும் சொல்லாமல் பட்டாசு ஆலைகளை குறைகூறுவது தவறான நடைமுறை. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாநிலக்குழு உறுப்பினர் பாலசுப்பிர மணியன், சி.ஐ.டி.யூ. செயலாளர் தேவா ஆகி யோர் உடன் இருந்தனர்.
- தொழிலதிபர் அடித்துக்கொலை? செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிகிச்சை பலனின்றி பார்த்த சாரதி பரிதாபமாக இறந்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி (வயது48). இவர் அதே பகுதியில் பழக்கடை நடத்தி வந்தார். மேலும் கார்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.
சம்பவத்தன்று காலை பார்த்தசாரதி கார் வாங்க பைபாஸ் ரோட்டில் மெக்கானிக் ஷாப் நடத்தி வரும் முருகேசன் என்பவருடன் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. செல்போனும் சுவீட்ஆப் செய்யப்பட்டிருந்தது.
இதனால் பதட்டமடைந்த உறவினர்கள் பார்த்த சாரதியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்த நிலையில் அவர் முருகேசன் ஒர்க்ஷாப் பின்புறம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக மனைவி பிரியாவிற்கு தகவல் கிடைத்தது. உடனே அவர் அங்கு சென்றார்.
உயிருக்கு போராடி கொண்டிருந்த கணவரை மீட்ட பிரியா அவரை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்த சாரதி பரிதாபமாக இறந்தார். பார்த்தசாரதி உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்கள் இருந்தன.
எனவே அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அவரது மனைவி பிரியாவும், கணவர் சாவில் மர்மம் இருப்பதாக புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 3 பெண்கள்-தொழிலாளி மாயமானார்கள்.
- டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள பேராநாயக்கன்பட்டி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் துரைபாண்டி. இவரது மகள் மகாலட்சுமி (வயது19). பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்த இவர் திடீரென மாயமானார். சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏழாயிரம் பண்ணையை சேர்ந்தவர் பவித்ரமூர்த்தி (28). கட்டிட தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருச்சுழி அருகே உள்ள ஒட்டன் குளத்தை சேர்ந்தவர் வினோத் (32). இவரது மனைவி கவுசல்யா (20). இவர் அடிக்கடி செல்போனில் பேசினார். இதனை கணவர் கண்டித்தால் சம்பவத்தன்று கவுசல்யா மாயமானார். இதுகுறித்து வீரசோழன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி பூங்கொடி (24). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
- உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.
ராஜபாளையம்
ராஜபாளையம், என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் உடல் நலத்திற்கான தூய்மை மற்றும் கைகழுவுதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் பள்ளி செயலர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமையில் நடைபெற்றது. தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் லட்சுமி கை கழுவுதலின் 12 விதமான முறைகள், கை கழுவுவதற்கு எடுத்துக்கொள்ளவேண்டிய நேரம், அதனால் அடையும் பயன்கள், சரிவர கை கழுவாததினால் ஏற்படும் பாதிப்பு கள், கழிவறையை பயன்படுத்தும் முறைகள், அங்கு மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் போன்றவற்றை காணொளி காட்சிகளுடன் விளக்கி கூறினார். சுப்புலட்சுமி மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு கருத்துகளை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
ரோட்டரி கிளப் ஆப் ராஜபாளையம் கிங் சிட்டி அமைப்பின் குளோபல் கிராண்ட் ஆலோசகர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், ரோட்டரி அமைப்பின் தலைவர் குமார்ராஜா, என்.ஏ.மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி இயக்குநர் விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில் உதவி தலைமையாசிரியர் மாரியப்பன் நன்றி கூறினார்.
- பயனாளிகளுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
- கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வேலாயுதபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இந்த முகாமில் இலவச வீட்டுமனை பட்டா 50 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 60 ஆயிரத்து 300 மதிப்பிலும், முதியோர் உதவித்தொகை, ஆதரவற்ற விதவை உதவித்தொகை மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் 46 பயனாளிகளுக்கு தலா ரூ.1000 மதிப்பிலான உதவி தொகைகளும், 105 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும், 4 பயனாளிகளுக்கு புதிய மின் னணு குடும்ப அட்டைகளும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 240 மதிப்பி லும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.7 ஆயிரத்து 430 மதிப்பிலும், கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.71 ஆயிரத்து 200 மதிப்பி லும் என மொத்தம் 216 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 88 ஆயிரத்து 170 மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவி களை கலெக்டர் ஜெய சீலன் வழங்கினார்.
முகாமில் அருப்புக் கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் சங்கர் நாராயணன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) யசோதாமணி, கலுசிவலிங்கம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமாகினர்.
- விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அய்யனார் நகரை சேர்ந்தவர் சையது இப்ராகிம். இவரது மகள் ரமலான் ராபியா(21). அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ரமலான் ராபியாவை அவரது சகோதரர் தினமும் பஸ் நிறுத்ததிற்கு அழைத்து செல்வார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை.
விசாரித்த போது கல்லூரிக்கு வரவில்லை என தெரியவந்தது. பஸ் நிறுத்தத்தில் இருந்து எங்கு சென்றார் என்று தெரியவில்லை. இதுகுறித்து சையது இப்ராகிம் அளித்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் எம்.ராமசந்திராபுரம் தங்கக்கொடி(27). 6 மாதங்கள் அம்மாபட்டி அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்தார். அதன் பிறகு வேறு வேலை தேடி வந்தார். இந்த நிலையில் வேலை சம்பந்தமாக மதுரை சென்று வருவதாக கூறி சென்ற அவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து அவரது தாய் தங்கேஸ்வரி அளித்த புகாரின்பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
விருதுநகரை சேர்ந்தவர் கருப்பசாமி(36). இவரது சகோதரி மகன் ஹரீஷ்(15). இவரது வீட்டில் தங்கி படித்து வந்தார். படிப்பு சரியாக வரவில்லை. இதனால் ஹரீசை சென்னையில் உள்ள சகோதரி வீட்டிற்கு கருப்பசாமி அனுப்பி வைத்தார். ஆனால் அங்கும் அவர் சரியாக படிக்கா ததால் அவரை மீண்டும் விருதுநகருக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் இருந்து சைக்கிளில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கருப்பசாமி அளித்த புகாரின்பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
- இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரி வித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விருதுநகர் கலெக்டர் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையிலும் மார்ச் 3-ந்தேதி காலை 10.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோர் தங்களது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் பெறுவதில் பிரச்சினைகள் ஏதும் இருப்பின் அது தொடர்பான கோரிக்கை மனுக்களை இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 21-ந்தேதி வரை விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு இரட்டை பிரதிகளில் அனுப்பி வைக்கலாம்.
விண்ணப்பங்களில் "ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் மனு" என குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பத்தில் மனுதாரர் கோரிக்கை விவரத்துடன் ஓய்வூதியதாரர் பெயர், குடும்ப ஓய்வூதியம் என்றால் உறவுமுறை, பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாள், கடைசியாக பணிபுரிந்த அலுவலகம், ஓய்வூதிய கொடுவை எண் மற்றும் ஓய்வூதியம் பெறும் கருவூலம் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட வேண்டும்.
தற்போது ஓய்வூதியம் பெறுவதில் உள்ள குறைபாடுகள் குறித்து ஏற்கனவே சென்னையில் உள்ள மாநில கணக்காயருக்கு அனுப்பப்பட்டு அது தொடர்பான பதில் ஏதும் பெற்றிருப்பின் அதன் விவரங்களும் இணைக்கப்பட வேண்டும்.
ஓய்வூதியர்களுக்கு உள்ள குறைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் விவாதித்து, ஓய்வூதியர்களின் குறைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
- தரமற்ற உணவு தயாரிப்பு பொருட்களை அனுப்பி வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- மாறன் மற்றும் அவரது மகன் அபிஷேக் இருவரும் சேர்ந்து அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை காமாட்சி செட்டியார் தெற்கு தெருவை சேர்ந்தவர் புரட்சி ராஜன். இவர் உணவு பொருள் ஏஜென்சி நடத்த உதவுவதாக கூறி வந்த விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார்.
அதன்படி திருச்சியை சேர்ந்த மாறன் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். அவர் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்தால் உணவு பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார். அதனை நம்பி புரட்சி ராஜன், மாறன் தெரிவித்த வங்கிக்கணக்கில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்துள்ளார்.
அதன் பிறகு உணவு பொருள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை மாறன் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அந்த பொருட்கள் தரமற்றவையாக இருந்துள்ளன. இதனால் புரட்சி ராஜன் மீண்டும் மாறனை தொடர்பு கொண்டு அதுபற்றி தெரிவித்துள்ளார்.
மேலும் பொருட்களை திருப்பி அனுப்பி விடுவதாகவும், தனக்கு பணத்தை திருப்பி அளிக்கும்படியும் கேட்டுள்ளார். மாறனும் அதற்கு சம்மதித்துள்ளார். அதன்படி புரட்சி ராஜன் பொருட்களை திருப்பி அனுப்பினார். ஆனால் மாறன் பணத்தை திருப்பி தரவில்லை.
அதுபற்றி கேட்ட போது மாறன் மற்றும் அவரது மகன் அபிஷேக் இருவரும் சேர்ந்து அவரை திட்டி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக புரட்சி ராஜன் அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் கூறுவது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
- எங்கள் கூட்டணியின் நோக்கமே தமிழகத்தில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.
சிவகாசி
விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் சிவகாசி அருகே நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு அம்ரித் பாரத் திட்டத்தில் சிவகாசி, திருத்தங்கல் ெரயில் நிலையங்களை சேர்க்கவில்லை. சென்னை- கொல்லம் ெரயில் சிவகா சியில் நிற்பதில்லை. தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.
ராகுல்காந்தி பிரதமர் ஆனால் சிவகாசி முன்னேற்றம் அடையும். சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.
சிவகாசிக்கு பல சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த தயாராக இருந்தாலும், மத்திய அரசு நிதி அளித்தால் மட்டுமே சாத்தியமாகும். மாநகராட்சி கட்டமைப்புகளை மேம்படுத்தும்படியும் இது குறித்து மத்திய மந்திரிக்கு ரூ.250 கோடி நிதி கேட்டு மனு அளித்து 3 மாதங்களாகியும் எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நிலம் எடுப்புப் பணி முடிந்தும் சிவகாசி ெரயில்வே மேம்பால பணிகள் தொடங்கும். 2019 தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் முன்மொழிந்தவர் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின். எங்கள் கூட்டணியின் நோக்கமே தமிழகத்தில் 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் கூறி மக்களை குழப்பி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாணிக்கம் தாகூர் எம்.பி. சிவகாசி ஒன்றியத்திற்குட்பட்ட ஏ.துலுக்கப்பட்டி கிராமத்தில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு வரும் கலையரங்க கட்டிடப் பணிகளைஆய்வு செய்தார்.
ஊராம்பட்டியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எம்.பி. நிதியில் அமைக்கப் பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் மாணிக்கம்தாகூர் எம்.பி கேட்டறிந்தார்.
விளாம்பட்டி ஊராட்சி காமராஜர்புரம் காலனியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளை ஆய்வு செய்த எம்.பி. பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் விவேகன்ராஜ், வக்கீல் குப்பையாண்டி, வட்டார தலைவர் தர்மராஜ், விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
- விருதுநகர் அருகே வாலிபரை கடத்தி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.
- வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள பழைய செந்நெல்குளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது32). முதுகலை பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் மார்கெட்டிங் பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குளம் பஸ்சில் சென்று வந்த போது விஜயகரிசல்குளத்தை சேர்ந்த மாரீஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
மாரீஸ்வரியின் கணவர் இறந்து விட்டார். இந்நிலையில் தான் அவருக்கும், முருகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக இருவரும் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அதனை பயன்படுத்தி மாரீஸ்வரியிடம் இருந்து நகைகளை வாங்கி ரூ.3.50 லட்சத்திற்கு முருகன் அடகு வைத்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் பகுதியில் முருகன் நின்று கொண்டிருந்த போது மாரீஸ்வரியின் சகோதரன் மாரீஸ்வரன் அவரது நண்பருடன் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் இருவரும் சேர்ந்து முருகனை இருசக்கர வாகனத்தில் விஜயகரிசல்குளம் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாரீஸ்வரியின் தாய் மற்றும் சகோதரி ஆகியோரும் வந்துள்ளனர். 4 பேரும் சேர்ந்து முருகனை கடுமையாக தாக்கினர்.
மேலும் மாரீஸ்வரி யுடனான தொடர்பை கைவிட வேண்டும் என்றும், நகைகளை திரும்ப கொடுக்க வேண்டும் என்று கூறி எச்சரித்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதில் காயமடைந்த முருகன் ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஆட்சிமொழி சட்டவாரம் கொண்டாட்டம் நடக்கிறது.
- கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ் வளர்ச்சித்துறை யின் சார்பில் வருகிற 21-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஆட்சிமொழி சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள், அரசு அலுவலர்கள், வணிக நிறுவனங்கள் பங்கேற்கும் விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்படுகிறது.
அரசு அலுவலகங்களுக்கு ஆட்சிமொழி சட்டம், வரலாறு, அரசாணைகள், பிழையின்றி தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்குப் பயிற்சி அளித்தல், சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மாணவர்களுடன் பட்டி மன்றம், ஒன்றியம், வட்டம் அளவில் அரசுப் பணியாளர்கள், பொது மக்கள், தமிழ் அமைப்பு களுடன் ஆட்சிமொழிச் சட்டம் குறித்து விளக்கக் கூட்டம் ஆகியவை நடத்தி ஆட்சிமொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியை தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர் பங்கேற்று நடத்த தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. ஆட்சிமொழி சட்ட வாரத்தினை சிறப்பாகக் கொண்டாட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வருகிற 17-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
- முகாமில் கலந்து கொள்ளபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகம் வாயிலாக மாதத்தின் 3-ம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி படித்த வேலை தேடும் மனுதாரர்களுக்காக வருகிற 17-ந்தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ./டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 17-ந்தேதி நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவு செய்துவிட்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனத்தினர் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.
இந்த தகவலை கலெக்டர் ஜெயசீலன் தெரி வித்துள்ளார்.






