என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • இளம்பெண்கள்-கல்லூரி மாணவர் மாயமானார்கள்.
    • சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டி அம்மச்சி யாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது 16 வயது மகள் திருச்சுழியில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. திருச்சுழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை சிவானந்த புரத்தை சேர்ந்தவர் தேவ ஜோதி. இவரது மகள் திலக வதி (20). சம்பவத்தன்று வெம்பக்கோட்டை அருகே சிப்பிப்பாறையில் தங்களது பழைய வீட்டிற்கு தாய்-மகள் வந்துள்ளனர். அங்கி ருந்த திலகவதி திடீ ரென மாயமானார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவர்

    சிவகாசி சுப்பிரமணிய புரம் காலனியை சேர்ந்தவர் முக்தீஸ்வரி. இவரது மகன் தனமகேந்திரன் (16). பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்த இவர், சம்ப வத்தன்று சென்னை செல்வ தாக கூறி விட்டு சென்றார். அதன் பின் குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை. செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. சிவகாசி கிழக்கு போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கல்பனாதேவி(வயது38). இவரது கணவர் லட்சும ணன் ராணுவத்தில் வேலை செய்து வருகிறார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு போனில் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் கல்பனா தேவி கோபித்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். ஆனால் அப்போதும் போனில் அழைத்து மனை வியை லட்சுமணன் தகாத வார்த்தைகளை பேசி திட்டி யதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கல்பனாதேவி தாய் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். பல இடங்க ளில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதையடுத்து அவரது தாய் கஸ்தூரி அளித்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம் பட்டியை சேர்ந்தவர் லதா(45). இவரது தாயார் லட்சுமி(80). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் மதுரைக்கு செல்வதற்காக தாயாருடன் அருப்புக்கோட்டை பஸ் நிலையத்திற்கு லதா வந்தார். அங்கு லட்சுமி மாயமானார். எங்கு சென்றார்? என்பது தெரியவில்லை. இதையடுத்து லதா அளித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் லட்சுமியை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள புனல்வேலி புலவர்தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகள் ராமலட்சுமி(வயது 23). இவருக்கும், சங்கரன் கோவில் அருகே உள்ள சுப்புலாபுரத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கும் திருமணமாகி வானதி (2) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராமலட்சுமியை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வந்து சமாதானப்படுத்தும்படி கூறி மகேந்திரன் விட்டுச்சென்றுள்ளார்.

    இந்தநிலையில் பெற்றோர் வீட்டிலிருந்த ராமலட்சுமி, குழந்தையுடன் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மகளை கண்டுபிடித்து தருமாறு தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் மகாலிங்கம் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிவகாசி போலீஸ் நிலையத்தில் இளம்பெண் தற்கொலை முயன்றுள்ளார்.
    • மகளிர் போலீஸ் நிலைய முதுநிலை காவலர் கார்த்தீஸ்வரி டவுன் போலீசில் புகார் செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி தேவி (வயது 20). கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்தது.

    இது தொடர்ந்து நீடிக்கவே கடந்த 2-ந்தேதி சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ராஜ்குமார், தேவியை வர வழைத்து சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மனைவியின் நடத்தையில் ராஜ்குமார் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த தேவி சிவகாசி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    அங்கு பணியில் இருந்த போலீஸ்காரரிடம் தேவி அழுது கொண்டே புகார்களை கூறினார். அப்போது அவரது நடவடிக் கையில் மாற்றம் இருந்தது. பேசி கொண்டிருந்தபோது தேவி திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தட்டி எழுப்பி கேட்டபோது, வலிப்பு மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு விட்டதாக தெரி வித்தார். இதையடுத்து தேவியை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மகளிர் போலீஸ் நிலைய முதுநிலை காவலர் கார்த்தீஸ்வரி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் தேவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சாத்தூர் அருகே பட்டாசு வேலைக்கு சென்ற இளம்பெண் மர்மமான முறையில் இறந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சிந்தப்புலி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் ராஜபாண்டி (வயது 33).இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்தார்.

    அப்போது எந்திரத்தில் சிக்கிய விபத்தில் இவரது கை ஊனமானது. அதே மில்லில் வேலை பார்த்த விஜய் என்பவரை திரு மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி விஜய் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ராஜபாண்டி தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சிந்தப்புலியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்து விட்டார். இங்கிருந்து அவர் வெற்றிலையூரணியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று ராஜ பாண்டி வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென் றார். ஆனால் அவர் பட்டாசு ஆலைக்கு செல்லவில்லை. செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ராஜபாண்டியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்த னர். இந்த நிலையில் சிந்தப்புலி -மேட்டமலை இடையே உள்ள உப்போடையில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ராஜபாண்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது 2 கால்களும் மடங்கிய நிலையில் இருந்தன. சில இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் போலீசார் சம்பவஇடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜபாண்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூரில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.
    • இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்களில் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறும். இதில் விவசாயிகள் கலந்து கொள்வதுடன் விவசாயம் சம்பந்தப்பட்ட பொதுவான கோரிக்கைகளை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராஜபாளையத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் ரத்தினவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றி யத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி தென்றல் நகரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.5.57 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வரும் நாற்றாங்கால் நர்சரி பண்ணையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்து மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் விதம், விநியோகிக்கப்படும் முறைகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்தார்.

    தென்றல் நகரில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் ரூ.1.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கிடைமட்ட உறிஞ்சி குழியி னையும், திருவள்ளுவர் நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், ரூ.4 லட்சம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள மிதிவண்டி நிறுத்த கூடத்தையும், மருதுநகரில் பிரதமரின் ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ. 1.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், ஒப்படைக்கப்பட்ட ஒட்டுமொத்த வருவாய் திட்டத்தின் கீழ், ரூ.3.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பணிகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ராஜபாளையம் நகராட்சி பழைய பஸ் நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையம் முழுவதுமாக இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்படும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்து இந்த பணிகளை தரமாகவும், விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, பொறியாளர் ரத்தினவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • அருப்புக்கோட்டை அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்கப்பட்டது.
    • அவரை மர்ம நபர்கள் கொலை செய்து புதைத்து விட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை அருகே ராமானுஜபுரம் நான்கு வழி சாலை பகுதியில் உள்ள கொண்டுசெட்டி ஊரணியில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அந்தப்பகுதி மக்கள் அருப்புக்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கிடந்த ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிணமாக கிடந்தவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை. அவரை மர்ம நபர்கள் கொலை செய்து புதைத்து விட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சத்திரப்பட்டி மற்றும் சடையம்பட்டி நியாயவிலை கடைகளில் பொருட்கள் தரம் குறித்தும், இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி மேலக்காந்திநகரில் செயல்பட்டு வரும் நுண் உயிர் உரம் தயாரிக்கும் மையத்தை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரம் தயாரிக்கும் விதம், பொதுமக்களிடம் பெறப்படும் குப்பைகளை பிரித்தெடுத்தல் உள்ளிட் டவை குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் சாத்தூர் எட்வர்டு நடுநிலைப்பள்ளியில் நடை பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாமை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சாத்தூர் ஊராட்சி ஒன்றியம், சத்திரப்பட்டி மற்றும் சடையம்பட்டி நியாயவிலை கடைகளில் பொருட்கள் தரம் குறித்தும், இருப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். கீழஓட்டம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.27.35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடங்களையும், வெங்கடாசலபுரம் ஊராட்சி கே.கே.நகரில் ரூ.11.56 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தையும், சடையம்பட்டி ஊராட்சியில் ரூ.22.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி அலுவலக கட்டிடத்தையும், மேட்டமலை ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ், தலா ரூ.2.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், படந்தால் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையையும் கலெக்டர் ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திலகவதி, கோட்டாட்சியர் அனிதா, செயற்பொறியாளர், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.81 லட்சம் உண்டியல் வசூலானது.
    • உண்டியல் என்னும் பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி.ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் மதுரை ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதம் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன்படி 10 நிரந்தர உண்டியல், 4 தற்காலிக உண்டியல்கள் உள்பட 14 உண்டியல்கள் திறக்கப்பட்டது. அதில் ரூ. 81 லட்சத்து ஆயிரத்து 488-ம். தங்கம்- 309 கிராம்.வெள்ளி- 1014 கிராம் கிடைத்தது. உண்டியல் என்னும் பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டி.ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் மதுரை ஐயப்ப சேவா சங்கம், கோயில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    இந்து அறநிலைய துறை விருதுநகர் கோவில்களின் உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, சவுந்திர ராஜன், ஹரிராம், மகாராஜன், நவரத்தினம், மற்றும் அறங்காவலர் குழுவினர் ஆய்வாளர்கள், உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    • ராஜபாளைய போலீஸ் நிலையத்தில் வாலிபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்
    • வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், சீனிவாசன் மற்றும் போலீசார் ஆகியோர் நேற்று நள்ளிரவில் தென்காசி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி முன்பு வாலிபர் ஒருவர் குடிபோதையில் மற்றொரு வாலிபரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.

    தகராறில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தெற்கு வெங்காநல்லூரைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் சக்தி கருப்பசாமி (வயது 23) என தெரியவந்தது.

    அந்த வாலிபரை போலீஸ் நிலையத்தில் இருக்கவைத்து விட்டு அவர்கள் மீண்டும் ரோந்துப் பணிக்கு சென்றனர். அப்போது அங்கு ரமேஷ் என்ற காவலர் மட்டும் எழுத்தர் அறையில் இருந்துள்ளார்.

    சிறிது நேரத்தில் சக்தி கருப்பசாமி தனது கழுத்தில் அணிந்திருந்த டாலரில் வைத்திருந்த சிறு கத்தியை எடுத்து கழுத்து, மார்பு, கைகளில் கிழித்துக்கொண்டு சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்ட காவலர் ரமேஷ் ஓடிவந்து பார்த்துள்ளார். அப்போது கத்தியை வைத்து மேலும் கிழித்துக்கொள்ள அந்த வாலிபர் முயன்றுள்ளார்.

    இதனால் அதிர்ச்சி யடைந்த ரமேஷ், அவரை தடுத்து அவர் கையிலிருந்த கத்தியை பிடுங்கிவைத்து வாலிபரை எச்சரித்து அமரவைத்துள்ளார். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின்பேரில் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கண்மாயில் மூழ்கி 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தண்டியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு 8 வயதில் பிரீத்தி என்ற மகள் இருந்தாள்.

    இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பிரீத்தி அதே பகுதியை சேர்ந்த அன்பழகி என்ற சிறுமியுடன் தண்டியனேந்தல் கண்மாய்க்கு சென்றார். தண்ணீரை பார்த்ததும் 2 பேரும் கண்மாயில் இறங்கி விளையாடியதாக கூறப்படுகிறது.

    விளையாட்டின் மீதான ஆர்வத்தால் பிரீத்தி ஆழமான பகுதிக்கு சென்று சிக்கினாள். சிறிது நேரத்தில் மூச்சுத்திணறிய அவர் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக பிரீத்தியின் உடலை பார்த்து அவளது பெற்றோர் மற்றும் உறவி னர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. 

    • திருமணமான ஒரு வாரத்தில் புதுப்பெண் திடீர் மாயமானார்கள்.
    • சாத்தூர் டவுன் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது36). இவருக்கும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த தேவி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் விமரிசையாக நடந்தது. புதுமண தம்பதியர் விருந்துக்காக சிவகாசி வந்திருந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று உறவினர்களுடன் வெளியே சென்ற தேவி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ்வரன் மற்றும் குடும்பத்தினர் தேவியை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் பலனில்லை. இதுகுறித்து விக்னேஷ்வரன் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண்ணை தேடி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகள் சுகப்பிரியா(20). அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரு கிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற சுகப்பிரியா திடீரென மாயமானார். இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். சாத்தூர் ஒரிஜினல் கிணற்று தெருவைச் சேர்ந்தவர் வெற்றி ஈஸ்வரன். தற்காலிக மின் ஊழியரான இவர் திடீரென மாயமானார். சாத்தூர் டவுன் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மலை ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி.

    பேரையூர் :

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். சதுரகிரி கோவிலுக்கு மாசி மாத பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு நாளை (18-ந் தேதி) முதல் 21-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்கி இருக்கிறது.

    மகா சிவராத்திரி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பகலில் 4 கால பூஜைகளும், இரவில் 4 கால பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்களும் நடைபெற்ற உள்ளன.

    பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக மதுரை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தாணிப்பாறை மலைஅடிவாரப் பகுதிக்கு சிறப்பு பஸ்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    நாளை மகா சிவராத்திரி என்பதால், தாணிப்பாறை வழியாக, காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மலை ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி உண்டு எனவும், ஆனால் கோவிலில் பக்தர்கள் நாளை இரவில் தங்கி வழிபட அனுமதி இல்லை என்றும் சாப்டூர் வனத்துறையினர் கூறியுள்ளனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "சாப்டூர் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட விலங்குகள் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படும் என்பதால், இரவு நேரத்தில் பக்தர்கள் தங்கி வழிபட அனுமதி இல்லை" என்று கூறினர்.

    ×