என் மலர்
விழுப்புரம்
- டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார்.
- கட்சி பதவியை விட்டுக்கொடுக்க முகுந்தன் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியானது.
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நேற்று நடைபெற்ற பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார்.
இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

உடனே குறுக்கிட்ட டாக்டர் ராமதாஸ், ''இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள் என்றார்.
இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை வாங்கி, 'நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என்று ஆவேசமாக கூறினார்.
தொடர்ந்து அந்த மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பா.ம.க. உட்கட்சி மோதல் தொடர்பாக திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாசை பா.ம.க. தலைவர் அன்புமணி சந்தித்து பேசினார்.
அவருடன் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், வழக்கறிஞர் பாலு, வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி ஆகியோர் இருந்தனர்.
கட்சி பதவியை விட்டுக்கொடுக்க முகுந்தன் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியானது.
சமாதான பேச்சுவார்த்தைக்கு அன்புமணி பல நிபந்தனை விதித்துள்ளதாகவும், பேச்சுவார்த்தையில் பெரும்பாலும் சுமூக முடிவு எட்டப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு எல்லாம் பதவி கொடுக்க கூடாது.
- இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது.
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் உள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பா.ம.க.வின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடியும் தருவாயில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது காலியாக உள்ள இளைஞர் சங்கத் தலைவர் பதவிக்கு, பரசுராமன் முகுந்தன் என்பவரை அறிவித்தார். இவர் டாக்டர் ராமதாசின் மகள் வழி பேரன் ஆவார்.
இளைஞர் அணி தலைவராக முகுந்தனை முன்மொழிந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணிக்கு உறுதுணையாக இருப்பார் என்று ராமதாஸ் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் இருந்த அன்புமணி இடைமறித்து அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் கூறும்போது 'கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு எல்லாம் பதவி கொடுக்க கூடாது. அவர் கட்சியில் சேர்ந்தே 4 மாதம்தான் ஆகிறது. அவர் போன் செய்தால்கூட எடுக்க மாட்டார். அதற்கு பதில் கட்சியில் நீண்ட காலமாக இருப்பவர்களுக்கு பதவி கொடுக்கலாம்' என்றார்.
உடனே குறுக்கிட்ட டாக்டர் ராமதாஸ், ''இது நான் ஆரம்பித்த கட்சி. நான் சொல்வதைத்தான் கேட்கணும், கேட்காவிட்டால் யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது. இல்லாவிட்டால் போங்கள். மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார். அவர் தலைவருக்கு உதவியாக இருப்பார். இதை யாராலும் மாற்ற முடியாது. விருப்பம் இல்லாவிட்டால் செல்லலாம். இங்கு நான் சொல்வதைத்தான் கேட்கணும்'' என்றார்.
இதனால் ஆத்திரமடைந்த டாக்டர் அன்புமணி, மேடையில் ஜி.கே.மணியிடம் இருந்து மைக்கை வாங்கி, 'நான் பனையூரில் கட்சி அலுவலகம் அமைத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம்' என்று ஆவேசமாக கூறினார்.
தொடர்ந்து அந்த மைக்கை தூக்கி வீசிவிட்டு கோபத்துடன் மண்டபத்தை விட்டு வெளியேறி அங்கிருந்து காரில் வேகமாக புறப்பட்டுச் சென்றார். தொடர்ந்து ராமதாசும் மேடையில் இருந்து இறங்கிச் சென்றார்.
கூட்டத்தில் இருந்த பா.ம.க. தொண்டர்கள் சிலர், டாக்டர் அன்புமணிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியபடி வெளியேறினார்கள். டாக்டர் ராமதாஸ் வெளியில் வந்து காரில் ஏறியபோது, அவர் கார் முன்பு சிலர் மறியலில் ஈடுபட்டு கோஷம் எழுப்பினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும், பா.ம.க.வினரும் அவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்படுத்தினார்கள்.
பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் டாக்டர் ராமதாசும், டாக்டர் அன்புமணியும் ஒரே மேடையில் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் பா.ம.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாசை இன்று காலை 11 மணிக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- என்ஜின் டிரைவர் உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
திண்டிவனம்:
சென்னை எழும்பூரிலிருந்து இன்று காலை 6மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பாண்டிச்சேரி ரெயில் திண்டிவனம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் தண்டவாளத்தில் திடீரென அதிகப்படியான சத்தம் கேட்டதால் என்ஜின் டிரைவர் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இது குறித்து ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் வந்து பார்த்தபோது தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து பாண்டிச்சேரி ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக தண்டவாளத்தில் ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பயணிகள் உரிய நேரத்திற்கும் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வந்தனர்.
தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தண்டவாளத்தை ரெயில்வே ஊழியர்கள் சரி செய்த பின் திண்டிவம் நோக்கி ரெயில் வந்து கொண்டிருக்கிறது. என்ஜின் டிரைவர் உடனடியாக தகவல் தெரிவித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- வேனை பொன்னேரியைச் சேர்ந்த குமார் என்பவர் ஓட்டி வந்தார்.
- வேன் விபத்தில் சிக்கி 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டிவனம்:
சென்னை பொன்னேரியில் இருந்து 28 பக்தர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று திருச்செந்தூர் முருகன் கோவில் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் பொன்னேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பொன்னேரியைச் சேர்ந்த குமார் என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த வேன் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது, முன்னாள் சென்ற அரசு பஸ் மீது மோதாமல் இருப்பதற்காக திடீரென்று வேன் டிரைவர் எதிர்பாராத விதமாக பிரேக் அடித்ததால் தனியார் பஸ் மீது வேன் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் வேன் சென்டர் மீடியனில் மோதியதில் 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒலக்கூர் போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததுடன், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பிய பக்தர்கள் சென்ற வேன் விபத்தில் சிக்கி 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மீன் பிடிக்க பக்கிங்காம் கால்வாய்க்கு சென்றனர்.
- மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தை தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன்கள் லோகேஷ் (24). விக்கரம் (23). சூர்யா (23). இதில் விக்ரம், சூர்யா ஆகியோர் இரட்டையர்கள் ஆவார்கள். லோகேஷ், சூர்யா ஆகியோர் மரக்காணத்தில் உள்ள பூக்கடையிலும், விக்ரம் முட்டை கடையிலும் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் அண்ணன்-தம்பிகள் 3 பேர் மேலும் சிலருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் பொழுது போக்கிற்காக மீன் பிடிக்க மரக்காணம்-திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் உள்ள பக்கிங்காம் கால்வாய்க்கு சென்றனர்.
அவர்கள் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். மரக்காணம் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கால்வாயில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக லோகேஷ் கால்வாயில் தவறி விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் தத்தளித்த படி கூச்சல் போட்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பிகளான விக்ரம், சூர்யா ஆகியோர் லோகேசை காப்பாற்ற கால்வாயில் குதித்தனர். ஆனால் கால்வாயில் அதிகமாக தண்ணீர் சென்றதால் 3 பேரும் இழுத்து செல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மரக்காணம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் கால்வாயில் மூழ்கிய அண்ணன், தம்பிகள் 3 பேரையும் தேடினார்கள்.
மீனவர்களின் பைபர் படகுகளை வரவழைத்தும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று இரவு நேரம் ஆனதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக தேடும் பணி நடைபெற்றது.
அப்போது லோகேஷ் தண்ணீரில் மூழ்கி பலியாகி கிடந்தது தெரிய வந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சூர்யா, விக்ரம் ஆகியோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கால்வாயில் மூழ்கி பலியான லோகேஷ் உடலை பார்த்து அவரது தந்தை கணேசன் மற்றும் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம்:
மழை நிவாரணம் கேட்டு விழுப்புரத்தில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து குடும்பங்களுக்கும், மழையால் சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும், சேதமடைந்த பயிர்களுக்கும் உரிய நிவாரணம் உடனடியாக வழங்க வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள நகராட்சி திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார்.
முன்னாள் மத்திய மந்திரி செஞ்சி ராமச்சந்திரன், சி.வி. ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் அர்ச்சுனன், சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ் செல்வன்,அண்ணா தொழிற்சங்க செயலாளர் அற்புதவேல், மாவட்ட மருத்துவரணி டாக்டர் முத்தையன், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல்,தொழில் நுட்ப பிரிவு தலைவர் வக்கீல் பிரபாகரன், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பாலாஜி, நகர செயலாளர்கள் பசுபதி, வண்டிமேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் முகுந்தன், பன்னீர், சுரேஷ் பாபு, பேட்டை முருகன், நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், கவுன்சிலர்கள் ராதிகா செந்தில், கோதண்டனர், திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மழை நிவாரணம் வழங்க கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
- கட்டப்பஞ்சாயத்து தொடர்பாக அறிவிப்பு பலகை எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
- புகார் கொடுப்பவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மட்டுமே நடைபெறும்.
விழுப்புரம்:
தமிழக டி.ஜி.பி சங்கர் ஜூவால் பல்வேறு மாவட்டகளுக்கு நேரடியாக சென்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அதன்படி விழுப்புரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நேற்று அவர் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலையங்கள் முன்பு அறிவிப்பு பலகை என்ற புதிய போர்டு வைக்கப்பட்டுள்ளது.
அதில் போலீஸ் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்துகளுக்கு அனுமதி இல்லை. இப்படிக்கு போலீஸ் நிலையம் என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது கூறியதாவது:-
போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக புகார்கள் வந்தது.
குறிப்பாக சிவில் வழக்கு, மகளிர் போலீஸ் நிலையங்களில் குடும்ப நல வழக்குகள், அடிதடி வழக்குகளில் வழக்கு பதிவு செய்வதில் புகார்தாரர்கள், எதிர் தரப்பினர்களை வைத்து கட்டப் பஞ்சாயத்து நடப்பதாக புகார் கூறப்பட்டது.
மேலும் இடைத்தரகர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து வந்து போலீஸ் நிலையங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யும் இடங்களாக மாறி வருவதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பான புகார்கள் போலீஸ் சூப்பிரண்டுக்கு சென்ற நிலையில் ஒவ்வொரு போலீஸ் நிலையங்கள் முன்பும் கட்டப்பஞ்சாயத்து தொடர்பாக அறிவிப்பு பலகை எழுதி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில உள்ள போலீஸ் நிலையங்கள் முன்பு கட்டப் பஞ்சாயத்துக்கு இடமில்லை என்று பெரிய எழுத்தில் எழுதி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் புகார் கொடுப்பவர்களிடம் மனுக்கள் பெறப்பட்டு விசாரணை மட்டுமே நடைபெறும். மற்றபடி பேச்சு வார்த்தை போன்ற பஞ்சாயத்துக்கள் நடைபெறாது.
இதனை வெளிப்படையாக தெரிவிக்கவே இந்த போர்டுகளை போலீஸ் நிலையம் முன் வைத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- இரு தரப்பினரையும் காலை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- இரு தரப்பினர் புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் இடையாளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் இவருக்கு இன்று பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்கின்ற ஜெயசந்திரன், சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் அதே பகுதியில் உள்ள விடுதலை சிறுத்கதைகள் ட்சி கொடி கம்பத்தின் அருகே பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
இந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை ஆட்டி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த ராவணன், சுபாஷ், கன்னியப்பன் ஆகியோர் ஏன் கட்சி கொடி கம்பத்தை இதுபோல் செய்து உள்ளீர்கள் என கேட்டு உள்ளனர்.
ஆனால் அதற்கு லட்சுமணன் தரப்பினர் தாங்கள் அந்த கொடியை சேதப்படுத்தவில்லை என கூறியுள்ளனர். இதனையடுத்து இவர்களுக்குள் மோதல் உருவாகும் சூழலை கண்ட அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென ராவணன் தரப்பினர் லட்சுமணன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது . இதனால் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது. இதில் எதிர்தரப்பை சேர்ந்த பா.ம.க. கட்சியில் உள்ள லட்சுமணன் தரப்பினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அறிந்த மயிலம் போலீசார் இரு தரப்பினையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு அசம்பாவிதம் நிகழாமல் இருப்பதற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரு தரப்பையும் விசாரணைக்காக போலீசார் அழைத்துச் செல்ல வந்துள்ளனர். அப்பொழுது லட்சுமணன் உறவினர்கள் மற்றும் பா.ம.கவினர் ஒரு தரப்பினரை மட்டுமே போலீஸ் விசாரிப்பதாக கூறி திடீரென லட்சுமணன் தரப்பினர் சென்ற காரை வழிமறித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
திடீரென பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் திண்டிவனம் ஜக்காம் பேட்டையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் சமாதானம் பேசி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இரு தரப்பினரையும் காலை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்துசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இரு தரப்பினர் புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெள்ள பாதிப்பை மத்தியக்குழு ஆய்வு செய்துள்ளது.
- ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரத்தை தமிழக அரசு சொந்த நிதியில் வழங்க வேண்டும்.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மழை,வெள்ள நிவாரணநிதி வேண்டி அனைத்துக்கட்சி குழுவை பிரதமரை சந்திக்க அனுப்பிவைக்க வேண்டும். வெள்ள பாதிப்பை மத்தியக்குழு ஆய்வு செய்துள்ளது. இக்குழு ஆய்வு செய்து 10 நாட்கள் கடந்தும் மத்திய அரசிடம் ஆய்வறிக்கையை அளிக்க வில்லை. எனவே மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்தியக்குழு ஆய்வுக்கு பின்னும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாநில பேரிடர் நிவாரண நிதி 946 கோடி ரூபாயில் செலவிடப்பட்டு வருகிறது. மத்திய அரசு நிதி ஒதுக்கும்வரை காத்திருக்க இயலாது. இன்னும் முழுமையான கணக்கெடுப்பை முடித்து விரிவான அறிக்கையுடன் முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி குழு பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்து நிதி வழங்க வலியுறுத்தவேண்டும்.
விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவாகக்கூடிய நிலையில் ரூ.6800 என்பதை ஏற்கமுடியாது. ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரத்தை தமிழக அரசு சொந்த நிதியில் வழங்க வேண்டும். பின் மத்திய அரசு நிதியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். அறிவிக்கப்பட்ட நிதியைக்கூட மாநில அரசு வழங்க மறுக்கிறது. விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 6 லட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ 6 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும்.
தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவதாக ஆட்சிக்கு வந்த தி.மு.க.கடன் வாங்குவதிலும், வட்டி கட்டுவதில் முதன்மை மாநிலமாக திக்ழ்கிறது. 8.34 லட்சம் கோடி கடனுடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. வட்டி கட்டுவதில் தற்போது ரூ. 54,676 கோடியுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தமிழக அரசு திவாலாகிவிடும்.

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில் தமிழ்கட்டாயப்பாடம் என சட்டம்நிறை வேற்றப்பட்டு 19 ஆண்டுகள் கடந்தும் அதை அமல்படுத்த முடியவில்லை. இச்சட்டத்தை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்சநீதி மன்றம் சென்றும், இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்க தமிழக அரசு வலியிறுத்தவில்லை. இது தமிழுக்கு தி.மு.க.செய்யும் துரோகமாகும்.
தமிழகத்தில் 26 இடங்களில் மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்க தமிழக அரசுமுடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. இந்த மணல் குவாரிகளை திறக்கக்கூடாது. மணலுக்கு மாறாக செயற்கை மணல் மற்றும் இறக்குமதி மணலை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். தமிழகத்தில் கவுரவ பேராசிரியர்களுக்கு ரூ 25 ஆயிரம் போதுமான தல்ல. ரூ 50 ஆயிரம் வழங்க வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ .6 ஆயிரம் வழங்குவது நியாயமல்ல.
ஒரேநாடு ஒரே தேர்தல் என நடத்தப்பட்டால் ஒரு மாநிலத்தில் ஆட்சி கவிழும்போது அந்த ஆட்சி சில மாதங்கள் மட்டுமே இருக்கும். இதை பா.ம.க. ஏற்காது. அம்பேத்கரை அமித்ஷா அவமதித்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அனைத்து கட்சிகளும் அம்பேத்கரை போற்றித்தான் ஆகவேண்டும். அவரை கொச்சைபடுத்தியோ, அவமதிப்பதை ஏற்க முடியாது. ஒரே நாளில் 7 அம்பேத்கர் சிலையை நான் திறந்தேன். அம்பேத்கர் இல்லை என்றால்பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது. அம்பேத்கரை விமர்சிப்பதை யாராக இருந்தாலும் ஏற்க முடியாது. மது விலக்கு என்ற துறையை வைத்துக்கொண்டு மது விற்பனையை அதிகரிக்கிறார்கள். அந்த துறையை எடுத்துவிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
- பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் சேத மடைந்தது.
விழுப்புரம்:
புயல் கரையை கடந்து 2 வாரங்கள் ஆகியும் விழுப்புரம் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை.
வங்க கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த 30-ந்தேதி புதுவை அருகே கரையை கடந்தது. அப்போது புதுவை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 55 செ.மீ. மழை பெய்தது. விழுப்புரம் நகரில் 63.5 செ.மீ. மழை பெய்தது.
இதன் காரணமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் மழை நீர் சூழ்ந்தது. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகள், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் சேத மடைந்தது.
குறிப்பாக விழுப்புரம் நகரத்திற்குட்பட்ட பெரும்பா லான பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடு களை மழை நீர் சூழ்ந்தது.
அதில் விழுப்புரம் புறநகர் பகுதியான கிழக்கு பாண்டி சாலையில் உள்ள லிங்கம் நகர், ஆசிரியர் நகர், நேதாஜி நகர், கணபதி நகர் மற்றும் கீழ் பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பஜனை கோவில் தெரு, பெருமாள்கோவில் தெரு, ஹவுசிங் போர்டு காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கழிவு நீருடன் கலந்த மழை நீர் சுமார் 4 அடி உயரத்துக்கு தற்போதும் தேங்கி உள்ளது.
இதனால் அப் பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அப் பகுதி பொதுமக்கள் சிலர் உறவினர்கள் வீடுகளில் தங்கி உள்ளனர்.
புயல் பாதித்து 2 வாரங்கள் நிறைவடைந்த நிலையில் விழுப்புரம் புறநகர் பகுதியில் வெள்ளம் வடியாததால் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இது குறித்து நகராட்சி அலுவலகம் மற்றும் கலெக்டர் அலுவலக வட்டா ரங்களில் விசாரித்தபோது, ஆசிரியர் நகர், லிங்கா நகர் இடையே உள்ள மாரியம்மன் கோவில் அருகே உள்ள நீர் வழிப்பாதையில் தண்ணீ ரை வெளியேற்ற முடிவெடுத்த போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் சுமார் 800 மீட்டர் நீளத்துக்கு 2 பைப் மூலம் தொடர்ந்த னூர் ஏரியில் நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.அப் பகுதி மக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது என்றனர்.
- கவியரசன், சுனிலை பார்த்து ‘உன் மிரட்டல் வேலை எல்லாம் புதுச்சேரியில் வைத்துக் கொள்’ என கண்டித்துள்ளார்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறை வான சுனிலை தேடி வந்தனர்.
கண்டமங்கலம்:
புதுச்சேரி ஆட்டுப்பட்டியை சேர்ந்தவர் சுனில். ரவுடியான இவர் மீது கஞ்சா, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த சித்தலம்பட்டு காலனியை சேர்ந்த சினேகா என்ற பெண்ணை சுனில் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தாய் வீட்டிற்கு சென்றிருந்த மனைவி சினேகாவை பார்க்க, சுனில் கடந்த 8-ந் தேதி சித்தலம் பட்டிற்கு சென்றுள்ளார். அன்று இரவு, அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் யாசிக், கவியரசன் உள்ளிட்டோருடன் திருக்கனூரில் உள்ள மதுக் கடையில் மது அருந்தியுள்ளார்.
போதை தலைக்கேறிய நிலையில் சுனில், யாசிக் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த சுனில், மறைத்து வைத்திருந்தபேனா கத்தியால் யாசிக்கின் தொடையில் கிழித்துள்ளார். இதில் அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. கவியரசன், சுனிலை பார்த்து 'உன் மிரட்டல் வேலை எல்லாம் புதுச்சேரியில் வைத்துக் கொள்' என கண்டித்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு, கவியரசன் வீட்டின் முன்பு பயங்கர சத்தத்துடன் ஒரு பெட்ரோல் குண்டு வெடித்து சிதறியது. அதிர்ஷ்டவசமாக அப்போது மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. குண்டு வெடித்த இடத்திற்கு அருகே கட்டப்பட்டிருந்த ஒரு கறவை மாடு காயம்அடைந்தது.
இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர்சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் முன்விரோ தம் காரணமாக ரவுடி சுனில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறை வான சுனிலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருமங்கலம் மாரியம்மன் கோவில் அருகே பதுங்கி சுனில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சுனில் விக்ரவாண்டி அருகே மதுரப்பாக்கத்தை சேர்ந்த கணேஷ் என்ற கணேஷ்ராஜ் (25) ஆகிய இருவரையும் கைது செய்து விழுப்புரம் மாஜிஸ்திரேட் 2 முன்பு ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
- பல்வேறு இடங்களில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
- சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
ஃபெஞ்ஜல் புயல் கரையை கடந்த போது விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பொழிவை சந்திக்க நேரிட்டது. விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டி போடும் அளவிற்கு கொட்டி தீர்த்த அதிகன மழையின் காரணமாக பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளில் வசித்து வரும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. பல்வேறு இடங்களில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
சில இடங்களில் நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண நிதி கிடைக்காத பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி திண்டிவனம் அருகே உள்ள கோவடி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய இடங்களுக்கு நிவாரண வழங்க கோரியும் மேலும், நிவாரண வழங்காததை கண்டித்தும் ஆத்திரமடைந்த அந்த பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பெண்கள் உட்பட பொது மக்கள் திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் புதுச்சேரி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் பள்ளி பாழடைந்துள்ளதாகவும் பள்ளிகளில் பல இடங்களில் மின் பழுது ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பாழடைந்த பள்ளியை உடனடியாக சரி செய்ய வேண்டும் என பள்ளி மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். கோவடி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட சென்ற தாசில்தாரை அருகே உள்ள மொளசூர் கிராம மக்கள் சூழ்ந்து கொண்டு அவரை முற்றுகையிட்டு தங்கள் ஊருக்கும் நிவாரணம் வழங்க கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.






