என் மலர்
வேலூர்
- சில ஆவணங்களை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
- கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர்:
வேலூர் காட்பாடி காந்தி நகரில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் கதிர் ஆனந்த் எம்.பி. ஆகியோருக்கு சொந்தமான வீடு உள்ளது.
மேலும் ஆந்திர எல்லையோரம் உள்ள கிறிஸ்டியான் பேட்டையில் கிங்ஸ்டன் என்ஜினியரிங் கல்லூரி நடத்தி வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரிக்கு வந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வீடு மற்றும் கல்லூரியில் சோதனையை தொடங்கினர்.
அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரி கதவுகள் மூடப்பட்டன. 2 இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க. நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன்.
இவர் காட்பாடி அடுத்த பள்ளி குப்பத்தில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் இவரது உறவினருக்கு சொந்தமான சிமெண்டு குடோன் பகுதிகளிலும் அமலாக்க துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர். இந்த இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் வீடுகளில் நடந்த சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அமைச்சர் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரியில் இருந்து சில ஆவணங்களை அமலாக்க துறையினர் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சோதனை நடந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் கடந்த 2019-ம் ஆண்டு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டார்.
அப்போது காட்பாடி காந்திநகரில் உள்ள அவர்களின் வீடு. கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள அவர்களுக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் துரைமுருகன் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் ரொக்கம், சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து வள்ளிமலை சாலை பள்ளிக்குப்பத்தில் உள்ள பூஞ்சோலை சீனிவாசனின் வீடு, பள்ளிக்குப்பத்தில் உள்ள அவரது சகோதரி விஜயா வீடு, சிமெண்ட் கிடங்கு, அதற்கு அடுத்த தெருவில் உள்ள தி.மு.க பிரமுகர் தாமோதரன் வீடு, வஞ்சூர், செங்குட்டை, கோட்டநத்தம் ஆகிய இடங்களில் உள்ள தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது சகோதரி விஜயாவின் சிமெண்ட் குடோனில் இருந்து சாக்கு மூட்டை, அட்டைப் பெட்டிகள், துணிப்பைகளில் இருந்து கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவை அனைத்தும் 200 ரூபாய் கட்டுகளாக இருந்தது. ஒவ்வொரு கட்டிலும் ஊரின் பெயர், வார்டு எண்கள் எழுதப்பட்டி ருந்ததால் இந்தப் பணம் தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
கைப்பற்றப்பட்ட நோட்டுகள் அனைத்தும், வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் எந்திரத்தை வரவழைத்து எண்ணப்பட்டன. மொத்தம் ரூ.11.51 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

கடந்த 2019-ம் ஆண்டு பணம் பறிமுதல் செய்யப்பட்ட துரைமுருகன் வீடு, கல்லூரி மற்றும் பூஞ்சோலை சீனிவாசன் சிமெண்ட் குடோன் ஆகிய இடங்களில் இன்று அமலாக்க துறையினர் சோதனையை நடத்தினர்.
தேர்தலில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது சம்பந்தமாக இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
காட்பாடியில் இன்று காலை 4 இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனை தி.மு.க.வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காந்திநகர் பகுதியில் உள்ள துரைமுருகன் வீட்டு முன்பு சுமார் 500-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள்.
அதேபோன்று அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
- அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
- சோதனையை அடுத்து வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வேலூரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனையை அடுத்து அவரது வீட்டிற்கு பத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் துரைமுருகன் வீடு, அவருக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசனின் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதோடு வேலூரில் எம்.பி. கதிர் ஆனந்த் வசிக்கும் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- ஏரி வண்டல் மண்ணை விவசாயம் மற்றும் பானை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த பாப்பான் தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய் சாமி. இவர் கணியம்பாடி ஒன்றிய விவசாய சங்க தலைவராக இருந்து வருகிறார்.
இன்று காலை பழைய பஸ் நிலையம் வந்த ஜெய் சாமி அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் முன்பு அரை நிர்வாண நிலையில் அமர்ந்து நெற்பயிரை வைத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயியிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர் காட்டுப்புத்தூர் அடுத்த பாப்பான் தோப்பு கிராமத்தில் உள்ள ஏரி வண்டல் மண்ணை அங்குள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள் கடத்திச் சென்று கிணறு போல் வெட்டி அதில் பதுக்கி வைத்துள்ளனர்.
ஏரி வண்டல் மண்ணை விவசாயம் மற்றும் பானை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் அதிபர்கள் வண்டல் மண்ணை பதுக்கி வைப்பதால் விவசாயத்திற்கு வண்டல் மண் கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறோம்.
இது குறித்து கலெக்டர் அலுவலகம் மற்றும் கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
போலீசாரின் சமாதானத்தை ஏற்காமல் ஜெய் சாமி தொடர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பழைய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டன.
- பயணிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
வேலூர்:
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மேலகுப்பம் மலையில் இருந்து மழை நீர் அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்தது.
விவசாய நிலங்களில் இருந்த மழை நீர் வடிந்து இன்று காலை ஆற்காடு அடுத்த பூட்டுத்தாக்கு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது. அப்பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால் மழை நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.
மழை நீர் வழிந்து செல்ல வழி இல்லாததால் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கியது.
ஏற்கனவே கடந்து 2 நாட்களாக பெய்த மழையில் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறியது. குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டன.
இதனால் சென்னையில் இருந்து பெங்களூரு மார்க்கமாக வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் வரிசையாக நின்றன.
பயணிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலையில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றி சாலையை சீரமைத்து வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
- ஸ்டீல் கைப்பிடியை பொருத்தும் பணியில் காகிதப்பட்டறையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.
- மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர்கள் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் மேல்வல்லம் பகுதியில் புதிய வீட்டின் மொட்டை மாடியில் சீலிங் வேலை நடந்து கொண்டிருந்தது. ஸ்டீல் கைப்பிடியை பொருத்தும் பணியில் காகிதப்பட்டறையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர்.
கைப்பிடியை பொருத்தும் பணியின்போது அவர்களுக்கு மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர்கள் உயிரிழந்தனர்.
ஸ்டீல் கம்பி எதிரே உள்ள மின்கம்பியில் உரசியதில் அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் முகேஷ் (24), சதீஷ் (24) பலியாகினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் கைதானவருக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை.
- இட ஒதுக்கீடு கொடுத்தால் நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் என அன்புமணி கூறியுள்ளது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
வேலூர்:
வேலூர் அடுத்த ஜங்காலப்பள்ளி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் கைதானவருக்கும் தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை. எதிர்க்கட்சிகள் செய்வது சில்லித்தனமான வேலை இது.
இட ஒதுக்கீடு கொடுத்தால் நிபந்தனையற்ற ஆதரவு தருவோம் என அன்புமணி கூறியுள்ளது பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிலர் திட்டமிட்டு தாக்கியதால் விட்டல் குமார் படுகாயம் ஏற்பட்டு இறந்துள்ளார்.
- விட்டல் குமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை சேர்ந்தவர் விட்டல் குமார் (வயது 40). பா.ஜ.க. ஆன்மீக பிரிவு மாவட்ட துணை தலைவராக இருந்து வந்தார்.
நேற்று அந்தப் பகுதியில் இவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விட்டல் குமார் இறந்தார்.
அந்த பகுதியை சேர்ந்த சிலர் திட்டமிட்டு தாக்கியதால் விட்டல் குமார் படுகாயம் ஏற்பட்டு இறந்துள்ளார். அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் எனக்கூறிய அவருடைய குடும்பத்தினர் விட்டல்குமார் உடலை வாங்க மறுத்தனர்.
மேலும் பாஜகவினர் 50-க்கும் மேற்பட்டோர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
விட்டல் குமாரை கொலை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
அதுவரை உடலை வாங்க மாட்டோம். போராட்டத்தில் ஈடுபடுவோம் என பா.ஜ.க.வினர் தெரிவித்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் குவிப்பு மற்றும் பா.ஜ.க.வினர் திரண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
- மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
- அனிதாவின் உறவினர்கள் டாக்டர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் ஆவடி ஆயுதபடையில் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி அனிதா (வயது 24). கர்ப்பமாக இருந்தார். இவர் கடந்த 12-ந்தேதி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
பிரசவத்திற்காக வழங்கப்பட்ட தேதி கடந்து சென்றதால் தன் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்தாவது பிரசவம் பார்க்கும்படி அனிதாவின் கணவர் மருத்துவமனையை அணுகி கேட்டுள்ளார். இதற்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
நேற்று காலை அனிதா தனக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக கூறினார். நேற்று மாலை பிரசவத்துக்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கினர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பிரசவத்தின் போது ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின்னர் சிறிது நேரத்தில் தாயும் இறந்தார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அனிதாவின் உறவினர்கள் டாக்டர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களால் தான் தன் மனைவியும், தன் குழந்தையும் இறந்துள்ளதாக கோடீஸ்வரன் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் மற்றும் சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விடியல் பயணத்திட்டத்தில் இதுவரை 580 கோடி பெண்கள் இலவச பயணம் சென்றுள்ளனர்.
- தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடக்கவில்லை. மக்களாட்சி தான் நடக்கிறது.
வேலூர்:
வேலூர் மாவட்டம், காட்பாடி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 247 ஊராட்சிக்கு 345 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை, வேளாண் துறை உள்ளிட்ட 15 துறைகளின் சார்பில் 4,844 பயனாளிகளுக்கு ரூ.128.92 கோடி மதிப்பபிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் 31-வது நிகழ்ச்சியாக கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை குறித்து மக்களிடையே புரிதல் ஏற்பட்டுள்ளது. இதற்கு திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் தான் காரணம்.
சர்வதேச சேது ஒலிம்பிக் போட்டி நடத்தியதை பார்த்து வெளிநாட்டினரும் பாராட்டு தெரிவித்தனர்.
விளையாட்டு வீரர்கள் நித்யஸ்ரீ, யாசிப் ஆகியோர் இங்கு வந்துள்ளனர். அவர்கள் சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். சாதிக்க எதுவுமே தடையில்லை.
தமிழகத்தில் தாய்மார்களுக்கான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. மகளிருக்கான திட்டங்களை ஒவ்வொரு நாளும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். கோடிக்கணக்கான ரூபாய் மகளிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. திராவிட மாடல் அரசு உங்களை மேலும் உயர்த்தும். மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. யார்? யாருக்கு என்ன தேவை என்பதை பார்த்து, பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார்.
திராவிட மாடல் ஆட்சியின் காரணமாக மக்களிடம் மகிழ்ச்சியை பார்க்கிறோம். மகளிர் பொருளாதார மேம்பாடு அடைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விடியல் பயணத்திட்டத்தில் இதுவரை 580 கோடி பெண்கள் இலவச பயணம் சென்றுள்ளனர்.
இதன் மூலம் அவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வரை மிச்சமாகிறது. அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் மூலம் 20 லட்சம் குழந்தைகள் பயன் அடைந்துள்ளனர். மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் ரூ.1.16 லட்சம் கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது மகளிர்களின் உழைப்பின் மீது நம்பிக்கையால் அவர்களுக்கு தொடர்ந்து கடன் உதவி வழங்கப்படுகிறது.
இங்கு விளையாட்டு உபகரணங்கள் பெற்ற விளையாட்டு வீரர்கள் இந்தியாவிலேயே சிறந்த வீரர்களாக உருவாக வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இங்கு விளையாட்டு உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் பெற்ற அனைவருக்கும் என்னுடைய அன்பையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் கலந்து கொண்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நடிகர் விஜய் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை. தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடக்கவில்லை. மக்களாட்சி தான் நடக்கிறது என்றார்.
- பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 2 பயணிகள் ரெயில் (மெமு) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- ஜோலார்பேட்டையில் இருந்து இன்று மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
வேலூர்:
அரக்கோணம்-ஜோலார்பேட்டை வழித்தடத்தில் வளத்தூர்-மேல்பட்டி இடையே இன்று காலை 10.55 மணி முதல் மதியம் 2.55 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 2 பயணிகள் ரெயில் (மெமு) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
காட்பாடியில் இருந்து இன்று காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக, ஜோலார்பேட்டையில் இருந்து இன்று மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- படுகாயத்துடன் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கருகம்பத்தூர் பகுதியில் இன்று அதிகாலையில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொணவட்டம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப், சர்வீஸ் சாலையில் நின்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயத்துடன் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் சென்னை மணலி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாட்டில் 56 சதவீத மக்கள் வேளாண்மைத் துறையை சார்ந்து வாழ்கிறார்கள்.
- அரசோடு தனியார் துறையும் சேர்ந்து செயல்பட்டாலே மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்.
வேலூர்:
வி.ஐ.டி. பல்கலைகழகம் சார்பில் மாணிக்க விழா மற்றும் ராஜம்மாள் கோவிந்தசாமி டவர், சரோஜினி நாயுடு மாணவியர் விடுதி தொடக்க விழா நேறறு நடந்தது. விழாவிற்கு வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்து பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு ராஜம்மாள் கோவிந்தசாமி டவர், சரோஜினி நாயுடு மாணவியர் விடுதியை திறந்து வைத்தும், மாணிக்க விழா மற்றும் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதன்பின் வெங்கையா நாயுடு பேசியதாவது:-
மாணிக்க விழாவில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி.விசுவநாதனின் யோசனை, அனுபவம் மற்றும் திட்டங்கள் தான் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு காரணம் ஆகும். அவர் இளைய தலைமுறையினருக்கு கல்வியோடு தன்னம்பிக்கையும் கொடுத்துள்ளார். 4 தலைமுறைகளை கண்டவர். அடுத்த தலைமுறையினருக்கு முன் உதாரணமாக திகழ்கிறார். அவருடைய ஒழுக்கம், அர்ப்பணிப்பு, கடின உழைப்பு ஆகியவை பல்கலைக்கழக வளர்ச்சிக்கு காரணமாகும். அவர் 1984-ம் ஆண்டு என்ஜினீயரிங் கல்லூரியை தொடங்கினார். 2001-ல் இது பல்கலைக்கழகமாக மாறியது. முதலில் 180 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் இப்பொழுது 1 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். வேலூர், சென்னை, அமராவதி, போபால் ஆகிய இடங்களில் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
அடுத்து அவர் டெல்லியில் தன்னுடைய பல்கலைகழகத்தை தொடங்க வேண்டும். இவர் சமூக உயர்வுக்காக பாடுபட்டவர். இந்தியாவில் 27 சதவீதம் பேருக்கு உயர்கல்வி கிடைக்கிறது. உலகம் முழுதும் உள்ளவர்கள் இந்தியாவை அங்கீகாரம் செய்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கல்வி கொண்டு செல்லப்படுகிறது. இந்தியாவில் 18 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். அவர்களுக்கும், கிராமத்தில் உள்ளவர்களுக்கும் அடிப்படைக் கல்வி, மருத்துவம் போன்ற சேவைகள் கிடைப்பதில் இடைவெளி உள்ளது. அதனால் கல்வி, மருத்துவத்தை இலவசமாக வழங்க வேண்டும். இந்தியா கல்வி, சுகாதாரம், வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
நாட்டில் 56 சதவீத மக்கள் வேளாண்மைத் துறையை சார்ந்து வாழ்கிறார்கள். அரசு வேளாண்மைத் துறையில் உள்ள சிக்கலை தீர்த்து அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு தங்களுடைய திட்டங்களை செயல்படுத்துகின்றன. ஆனால் இன்னும் மக்களுக்கு அதிகமான உதவிகள் விரைந்து தேவைப்படுகிறது.
எல்லாவற்றையும் அரசே செய்து விடும் என்ற தவறான எண்ணம் மக்களிடையே நிலவி வருகிறது. அரசே அனைத்தையும் செய்துவிட முடியாது. அரசோடு தனியார் துறையும் சேர்ந்து செயல்பட்டாலே மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கும்.
தனியார் நிறுவனங்கள் கல்வி, சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தி கிராம மக்களுக்கு உதவிட வேண்டும். மாணவர்கள் பெரியவர்களை மதித்து நடப்பதோடு தங்களுடைய குறிக்கோளை மறந்து விடக்கூடாது. இன்றைய மின்னணு சாதனங்கள் இளைய தலைமுறையின் எதிர்காலத்தை சிதைக்கும் வகையில் உள்ளது. அதனை கவனமுடன் கையாள வேண்டும். தேவைப்படும்போதுதான் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் செல்போனை கொடுக்க வேண்டும். தற்போது செல்போனிலேயே அதிக நேரம் மாணவர்கள் மூழ்கியிருப்பதை பார்க்க முடிகிறது. இதே நிலை நீடித்தால் தங்களது அப்பா, மனைவி பெயரை சொல்வதற்கு கூட கூகுளை தான் தேடும் நிலை ஏற்படும்.
அவர்கள் அதிகாலையிலேயே எழுந்து கொள்ள வேண்டும். நடு ஜாமத்தில் தூங்க செல்லக்கூடாது. உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடற்பயிற்சி செய்வது அவசியம். மாணவர்கள் உயர்வாக சிந்தித்து செயல்பட வேண்டும்.
பீட்சா, பர்கர் எல்லாம் இந்தியாவின் உணவு இல்லை. இவை அனைத்தும் அமெரிக்க போன்ற வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு கால சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்படும் உணவாகும்.
நாம் புரோட்டின் மிகுந்த சத்தான உணவுகளை உண்ண வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். நம் நாட்டில் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பது அதிகரித்து வருகிறது.
நீர் நிலைகளை நாம் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்கும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும்.
ஓட்டு என்பது சக்தி வாய்ந்தது. உங்களுடைய ஓட்டு உங்களுடைய தலை எழுத்தை மாற்றும்.
எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது. மாணவர்கள் எத்தனை மொழியை கற்றுக் கொண்டாலும் தங்களது தாய்மொழியை மறந்து விடக்கூடாது. மாணவர்கள் கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் வி.செல்வராஜ், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கே.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., வி.ஐ.டி துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், நிர்வாக இயக்குநர் சந்தியா பெண்டாரெட்டி, உதவி துணைத்தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் வரவேற்று பேசினார்.
முடிவில் இணை துணை வேந்தர் பார்த்தசாரதி மாலிக் நன்றி கூறினார்.






