என் மலர்tooltip icon

    வேலூர்

    ஆம்பூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே உள்ள நதிசீலபுரம் பகுதியை சேர்ந்தவர் அகமதுபாஷா இவரது மகன் ஜாபர் (வயது 26). இவர் ஒட்டலில் வேலை பார்த்து வருகிறார். ஜாபர் நேற்று இரவு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் ஜாபரை வழிமறித்து சரமாறியாக தாக்கி அவரிடம் இருந்து ரூ.1000 மற்றும் 2 செல்போன்களை பறித்து சென்று விட்டனர்.

    இது குறித்து ஜாபர் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ஆம்பூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த இமானுவேல் (23). ஆனந்தன் (29). ஆகிய 2 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. 

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்பாடியில் வியாபாரி வீட்டில் புகுந்து 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    வேலூர்:

    காட்பாடி சோலைநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 60). காட்பாடி போலீஸ் நிலையம் எதிரே எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். உறவினர் நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூர் சென்றார்.

    இதனை பயன்படுத்தி கொண்ட கும்பல் நேற்று முன்தினம் இரவு முன்பக்க கதவை பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த செயின், கம்மல்கள் உள்ளிட்ட 10½ பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    காட்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    காட்பாடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் எண்ணை தடவி கொண்டு வீடுபுகுந்து கொள்ளையடிக்க முயன்ற நெல்லை வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். காட்பாடி பகுதியில் வடமாநிலத்தவர்கள் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர்.

    கொள்ளை சம்பவங்களை தடுக்க கூடுதல் போலீசார் ரோந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    கே.வி. குப்பம், செங்கத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள மேல்மாயில் பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் இவரது மனைவி புவனா (வயது 40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    புவனா இன்று காலை வீட்டில் உள்ள துணிகளை துவைத்து வீட்டின் மேற்கூரையின் மீது காயபோட்டுள்ளார். அப்போது அருகே சென்று கொண்டிருந்த மின் கம்பி மீது தவறுதலாக கைபட்டு மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த முன்னூர் மங்கலத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). நேற்று இரவு அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த ராஜேந்திரன் இயற்கை உபாதைக்காக வெளியே வந்தார். அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை தவறுதலாக மிதித்து விட்டார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து புதுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் கார், பைக்கை தொங்க விட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #DMK
    வேலூர்:

    அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க.வினர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர். மத்திய மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அவை தலைவர் முகமது சகி, மாவட்ட மாணவ அணி செயலாளர் சீனிவாசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்த மேடைக்கு இருபுறமும் கிரேன் மூலம் கார், பைக் கட்டி தொங்க விட்டிருந்தனர்.

    வேலூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் காந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, வசந்தி ரவி, பொருளாளர் கண்ணையன், சிறுபான்மை பிரிவு செயலாளர் அப்துல், நகர செயலாளர் பிரகாஷ், புகழேந்தி, சக்திவேல், ஒன்றிய செயலாளர் சேஷாவெங்கட், பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, சுந்தரம், மாவட்ட அவை தலைவர் அசோகன், முன்னாள் ஊராட்சி  தலைவர் பத்மநாபன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ்செல்வி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். நல்லதம்பி எம்.எல்.ஏ. நகர செயலாளர் ராஜேந்திரன், ஜோதிராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. சூரியகுமார், கந்திலி ஒன்றிய செயலாளர் அன்பழகன், ராஜமாணிக்கம் உள்பட ஏராமானோர் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் உதவி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    மாவட்ட செயலாளர் எ.வ.வேலு, சிவானந்தம், எம்.எல்.ஏக்கள் கு.பிச்சாண்டி, மு.பெ.கிரி, மற்றும் ஸ்ரீதரன், அண்ணாதுரை, கார்த்தி வேல்மாறன், முன்னாள் எம்.பி. வேணுகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். #DMK
    ஊழலை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே தி.மு.க. தான். அவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம் நகைச்சுவையாக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். #ADMK #TNMinister #SellurRaju #DMK
    வேலூர்:

    காட்பாடியில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடையில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் பண்ணை பசுமை நுகர்வோர் விற்பனை கடைகள் 2016ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி தொடங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.1 கோடி 39 லட்சத்து 13 ஆயிரத்து 350-க்கு விற்பனை நடந்துள்ளது.

    ரூ.5.97 லட்சம் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. தரமான காய்கறிகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கவும், வெளிமார்க்கெட்டுகளில் காய்கறி விலையை கட்டுப்படுத்துவதற்காகவே பண்ணை கடைகள் தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு இல்லை. இந்தாண்டு பருவமழை நன்றாக பெய்துள்ளது. இதனால் ரூ.8 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்படுகிறது. வேளண்மை கூட்டுறவு சங்கங்களில் ரசாயன உரத்துடன் இயற்கை உரமும் விற்பனை செய்யப்படுகிறது.


    ஊழலை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே தி.மு.க. தான். கசாப்பு கடைக்காரன் காரூன்யம் பேசுவது போல் உள்ளது. ஊழலுக்காக தி.மு.க. ஆட்சி தான் கலைக்கப்பட்டது. சர்க்காரியா கமி‌ஷனால் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சியும் தி.மு.க. தான்.

    தி.மு.க.வின் சொத்துக்கள் எவ்வளவு. இவர்கள் என்ன கல்குவாரியில் கல் உடைத்து சம்பாதித்ததா? இவர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டம் நகைச்சுவையாக உள்ளது. யார்... யாரை குற்றம் சாட்டுவது என்று பொதுமக்கள் கேலி, கிண்டல் செய்கின்றனர்.

    தி.மு.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளர்கள், இன்னாள் மாவட்ட செயலாளர்களை ஆராய வேண்டும். அவர்களின் ஆரம்ப நிலை என்ன? இப்போது சொத்து சேர்த்தது எப்படி? அ.தி.மு.க. ஆட்சி சிறப்பாக நடக்கிறது. திட்டங்கள் சிறப்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #SellurRaju #DMK
    பேரணாம்பட்டில் இளம்பெண்ணை தாக்கிய கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு ஏரிகுத்தி புதுமனை காலனியை சேர்ந்த மோகன் மகன் பாரதி (வயது 28). திருமணம் ஆகாதவர். இவர், அதே பகுதியில் உள்ள தெருக்குழாயில் தண்ணீர் பிடித்தார். குடம் நிரம்பிய பிறகு சரியாக குழாயை மூடாமல் சென்று சென்றுள்ளார். இதனால் தண்ணீர் வீணாகியுள்ளது.

    அப்போது, அங்கு வந்த ராஜூ என்பவரின் மனைவி சுதா, குழாயை சரியாக மூடி விட்டு செல்ல முடியாதா? என்று கேட்டு பாரதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகராறு முற்றியதால் ஆத்திரமடைந்த சுதாவும், அவரது கணவர் ராஜூவும் இளம்பெண் பாரதியை தாக்கினர்.

    காயமடைந்த இளம்பெண் சிகிச்சைக்காக பேரணாம் பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து, பேரணாம்பட்டு போலீசில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் மணி கண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து ராஜூ (27) மற்றும் அவருடைய மனைவி சுதாவை (24) கைது செய்தனர்.

    வேலூர் ஜெயிலில் பணியாற்றி வந்த பெண் காவலாளி செல்போன் விவகாரத்தில் சிக்கியிருப்பதை தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை கைதி நளினிக்கும் உதவினாரா? என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    வேலூர்:

    சென்னை புழல் ஜெயிலில் கைதிகள் கு‌ஷன் படுக்கை வசதியுடன் டி.வி., ரேடியோ, செல்போன்கள் என சுக போகமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் போட்டோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    புழல் ஜெயிலை தொடர்ந்து வேலூர் மத்திய ஜெயிலும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. வழக்கமாக ஆண்கள் ஜெயிலில் தான் கைதிகளிடம் செல்போன், கஞ்சா சிகரெட் பாக்கெட்டுகள் சிக்கும். சமீப காலமாக பெண்கள் ஜெயிலில் செல்போன், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கியுள்ளன.

    இங்கு, ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி நளினி உள்பட முக்கிய தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 150க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலுக்குள் காவலர்கள் உள்பட அனைவரும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    2ம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் திலகவதி (55). இவர், கடந்த சில மாதங்களாக கேன்டீன் பொறுப்பை கவனித்து வந்தார்.

    கடந்த 15-ந் தேதி காலை பணிக்கு வந்த திலகா, காய்கறிகளை வாங்கி கொண்டு கேன்டீனுக்குள் செல்ல முயன்றார். அப்போது, அவரது ஜாக்கெட்டுக்குள் இருந்து மின்சாதன பொருளின் வைபரட் சத்தம் கேட்டது.

    2-வது நுழைவு கேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த ஜெயில் ஊழியர் விஜயா, திலகாவை சோதனையிட்டார். அப்போது, அவரது ஜாக்கெட்டுக்குள் செல்போன் ஒன்று இருந்தது. செல்போன் வைபரட் மோடில் வைத்துள்ளார். அழைப்பு வந்ததால் திலகா சிக்கி கொண்டார்.

    இதுபற்றி பாகாயம் போலீஸ் நிலையத்தில் திலகா மீது புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிந்து திலகாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் பெண் கைதிகளிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு போன் கொடுத்து உதவியது அம்பலமாகியுள்ளது.

    கடந்த 2010ம் ஆண்டு ஜெயிலில் செல்போன் வைத்திருந்ததாக ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது சிக்கிய பெண் காவலர், எந்தெந்த கைதிகளுக்கு செல்போன் கொடுத்து உதவி வந்தார்.

    அவர்கள் வெளியில் யார் யாரிடம்... என்னென்ன பேசினார்கள் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் களமிறங்கியுள்ளனர். மேலும் நளினிக்கும் செல்போன் கொடுத்து திலகா உதவினாரா? எனவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திலகவதியின் போனில் இருந்த சிம்கார்டில் உள்ள எண்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, சிறைத்துறை விதியை மீறி செல்போன் எடுத்து சென்ற குற்றத்திற்காக காவலர் திலகாவை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி. ஜெயபாரதி உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் புழல் ஜெயிலை போல் வேலூர் மத்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலிலும் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா? என அதிரடியாக ஆய்வு நடத்த சிறப்பு குழு அமைக்கப்பட்டு வருகிறது.
    குடியாத்தம் அருகே யானை தாக்கியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த மோர்தானா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60). இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது.

    கடந்த 11-ந் தேதி காலை கோவிந்தசாமி மற்றும் அவரது தம்பி குப்புசாமி (50) மற்றும் சிலர் மீன் பிடிப்பதற்காக மோர்தானா அணை பகுதியில் ஓரமாக சென்றனர். அப்போது, காட்டிற்குள் இருந்து வந்த ஒற்றை யானை பிளியறியபடி அவர்களை விரட்டியது. இதில் யானை தாக்கியதில் கோவிந்தசாமி படுகாயமடைந்தார்.

    அவருக்கு மார்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை உடன்வந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பிறகு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கோவிந்தசாமி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரெயில் மோதி டெய்லர் மற்றும் பெண் பரிதாபமாக இறந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    காட்பாடி அருகே உள்ள அரும்பகுதி திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (42) டெய்லர். இன்று காலை அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி சரவணன் இறந்தார்.

    காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லத்தேரி ரெயில்வே கேட் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ரெயிலில் அடிபட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சத்துவாச்சாரி அம்மன் கோவில் திருவிழாவில் மூதாட்டியிடம் 3 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி எம்.ஜி.ஆர். நகரில் தண்டு மாரியம்மன் கோவில் என்று அழைக்கப்படும் திரவுபதி அம்மன் சமேத தருமராஜா கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவையொட்டி, இன்று காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

    இதைத்தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது ஆண், பெண் பக்தர்கள் ஒரே வரிசையில் அன்னதானம் வாங்குவதற்காக நின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி, மூதாட்டி ஒருவரின் கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை மர்மநபர் பறித்துக் கொண்டு நைசாக தப்பி ஓடி விட்டான்.

    நகையை பறிகொடுத்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டார். அங்கிருந்தவர்கள் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    நகை பறித்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ராணிப்பேட்டையில் 40 பயணிகளுடன் சென்ற ஆந்திர அரசு பஸ் டிரான்ஸ்பார்மரில் மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

    வாலாஜா:

    ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள உறவுகொண்டா (உருவிகொண்டா) பகுதியில் இருந்து சென்னைக்கு இன்று காலை அம்மாநில அரசு பஸ் 40 பயணிகளுடன்சென்று கொண்டிருந்தது.

    சித்தூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காரை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த பேரி கார்டு வளைவில் பஸ் திரும்பியது.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி அங்கிருந்த டிரான்ஸ்பார்மரில் பயங்கரமாக மோதியது. இதில் டிரான்ஸ்பார்மர் உடைந்து நொறுங்கியது. மின்வயர்கள் பஸ் கூரை மீது கொத்தாக விழுந்தது.பஸ்சுக்குள் இருந்த 40 பயணிகளும் ‘அபயக்குரல்’ எழுப்பினர். பஸ்சை விட்டு உடனடியாக கீழே இறங்கி விட்டனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    தகவலறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்தனர். விபத்தில் சிக்கிய பஸ்சில் இருந்த அனைத்து பயணிகளும் மாற்று பஸ்களில் தங்களது ஊர்களுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஓசூரை சேர்ந்த வாலிபர் உள்பட 2 பேர் பலியாகினர்.

    ஆம்பூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முனிஸ் அலிகான். இவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் சவுதி அரேபியாவிற்கு ஹஜ் புனித பயணம் சென்றிருந்தார். நேற்றிரவு, விமானம் மூலம் சென்னை திரும்பினர்.

    அவர்களை ஓசூருக்கு அழைத்து வருவதற்காக, முனிஸ் அலிகானின் மகன் முகமதுஅபாஸ் (23) மற்றும் இவரது உறவினர் லியகத் அலித்கான் மகன் ஜுபேர் அலிகான் (40) ஆகிய இருவரும் 2 கார்களை எடுத்து சென்றனர். ஒரு காரில் ஹஜ் பயணம் சென்றவர்கள் வந்தனர்.

    மற்றொரு காரில் முகமது அபாஸ் மற்றும் ஜுபேர் அலிகான் விமான நிலையத்தில் இருந்து ஓசூருக்கு புறப்பட்டனர். அப்போது, ஹஜ் பயணம் சென்றுவிட்டு திரும்பிய தருமபுரி அரபிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் அப்துல்ரகுமான் (38) என்பவரும், லிப்ட் கேட்டு அவர்களுடன் காரில் ஏறி பயணித்தார்.

    சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை வேலூரை கடந்து கார்கள் சென்றது. ஆம்பூர் அடுத்த கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் சென்றபோது முகமது அபாஸ் உள்பட 3 பேர் பயணித்த கார், முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றது.

    அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து உருண்டது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த முகமது அபாஸ், ஜுபேர் அலிகான் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

    உடன் வந்த பேராசிரியர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். ஆம்பூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேராசிரியரையும் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×