என் மலர்tooltip icon

    வேலூர்

    காட்பாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தபட்ட பிரீபெய்டு ஆட்டோக்கள் இன்று முதல் மீண்டும் ஓடத் தொடங்கியது.

    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையத்தில் ‘பிரீபெய்டு’ ஆட்டோ சேவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. டீசல், பெட்ரோல் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த சேவை 2 முறை நிறுத்தப்பட்டது.

    இதனிடையே காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் ‘பிரீபெய்டு’ ஆட்டோ சேவை தொடங்குவது குறித்து ஆட்டோ டிரைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் சித்தூர் பஸ்நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது.

    இதில், சுமார் 120 ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர். மண்டலக்குழு முன்னாள் தலைவர் சுனில்குமார் மற்றும் பலர் பேசினர்.

    கூட்டத்தில், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது, மதுபோதையில் ஆட்டோ ஓட்டக்கூடாது, சீருடை அணிந்து தான் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முதல் காட்பாடி ரெயில் நிலைய வளாகத்தில் ‘பிரீபெய்டு’ ஆட்டோ சேவை தொடங்க ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

    தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலை காட்பாடி ரெயில் நிலைய வணிக மேலாளர், வட்டார போக்குவரத்து அலுவலர், காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரிடம் ஆட்டோ டிரைவர்கள் வழங்கினர்.

    இதையடுத்து இன்று காலை முதல் பிரீபெய்டு ஆட்டோக்கள் இயக்கபட்டன. குறைந்த கட்டணத்தில் ஆட்டோக்கள் இயக்கபடுவதால் பயணிகள் வரவேற்பு அளித்துள்ளனர்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து 3 பெண் கைதிகள் உள்பட மேலும் 32 பேர் விடுதலை செய்யப்பட்டனர். #MGRCenturyCeremony
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    முதற்கட்டமாக கடந்த ஜூலை மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, 6 கட்டங்களாக மொத்தம் 63 ஆண் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்த நிலையில், 7வது கட்டமாக இன்று காலை மேலும் 29 ஆண் கைதிகள் மற்றும் 3 பெண் கைதிகள் என 32 பேர் விடுதலை செய்யப்பட்டனர். காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 32 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்த தற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

    அதன்படி, இதுவரை மொத்தம் 95 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜெயில் கைதிகளை அவர்களது உறவினர்கள் வந்து வரவேற்று வீடுகளுக்கு அழைத்து சென்றனர். #MGRCenturyCeremony

    ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி சாந்தன் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு உருக்கமான கடிதம் எழுதி அனுப்பி உள்ளார். #RajivGandhiAssassination #Santhan
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், முருகனின் மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 27 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் உள்பட ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்காக போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் சாந்தன், தன்னை விடுதலை செய்யக்கோரி தனது வக்கீல் ராஜகுரு மூலமாக மத்திய உள்துறை மந்திரிக்கு 4 பக்கத்திற்கு உருக்கமாக கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

    அந்த கடித விவரம் வருமாறு:-

    நான் சுதேந்திரராஜா என்கிற சாந்தன். உண்மையை சொல்லி விடுகிறேன். ராஜீவ்காந்தி கொலை சதி திட்டத்தோடு இந்தியாவிற்குள் நுழையவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு போவது தான் என் நோக்கம்.

    அந்த காலக்கட்டத்தில் இலங்கை தமிழர்கள் பலரும் தலைநகர் கொழும்பு வழியாக பயணிக்காமல் இங்கு வந்து தான் வெளிநாடுகளுக்கு பயணிப்பது வழக்கமாக கொண்டிருந்தனர். அப்படித்தான் நானும் வந்தேன். இங்குவரும் போது இலங்கையில் என் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட பிறகு எனக்கு அளிக்கப்பட்ட பாஸ்போர்ட்டுடன் தான் வந்தேன். இது சி.பி.ஐ. வசமானது. பாஸ்போர்ட்டை வைத்தே நான் இலங்கை குடிமகன் என நிரூபிக்கப்பட்டது.

    சர்வதேச அளவில் பிரபலமான ஒரு தலைவரை கொல்ல வரும் வெளிநாட்டவன் யாராவது தன்னை பற்றிய உண்மையான தகவல்கள் அடங்கிய பாஸ்போர்ட்டை கொண்டு வருவானா?,

    இந்த வழக்கில் இன்னொரு சாந்தனும் குற்றவாளியாக காட்டப்பட்டுள்ளார். தடா நீதிமன்றத்தில் சி.பி.ஐ. வக்கீல் வாதிடும்போது, விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளருக்கு நான் பணம் கொடுத்ததாக சொன்னார். பணம் பெற்ற விடுதலை புலி ஆதரவாளர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும்போது என்னை அடையாளம் காட்டவில்லை. இன்னொரு சாந்தனின் போட்டோவை காட்டினார்.



    உச்ச நீதிமன்ற தீர்ப்பில் பக்கம் 558-ல், இந்த வழக்கில் 19-வது எதிரியாக சேர்க்கப்பட்டு, பிறகு விடுதலை செய்யப்பட்ட ஒருவரிடம், விரைவில் ஒரு முக்கியமான தலைவரை கொல்லப்போவதாக நான் சொன்னதாக பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால், பக்கம் 157-ல் அது அடுத்த சாந்தன் என்றிருக்கும். இப்படி பல குளறுபடிகள் தீர்ப்பில் உள்ளன.

    புலனாய்வு அதிகாரிகள் இப்போது சொல்லும் உண்மையை பற்றியோ, 1999-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள தவறுகள் பற்றியோ நான் இப்போது வெளிக்கொணர விரும்பவில்லை. பழையவற்றை புறந்தள்ளிவிட்டு பயணப்படவே விரும்புகிறேன்.

    2011-ம் ஆண்டில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டபோது நோயாளியான என் அப்பா, தூக்கு தண்டனை ரத்து என்ற 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை அறியும் முன்னரே இறந்துவிட்டார். வயோதிக தாயாருக்காவது மகனுக்கான கடமைகளை செய்ய விரும்புகிறேன். என்னுடைய உறவுகளுடன் என்னை சேர்த்து வைக்க மத்திய அரசால் முடியும்.

    என்னுடைய சிரமம் மிகுந்த சிறை வாழ்க்கையை சிதறடிக்க உதவுங்கள்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் சாந்தன் எழுதி உள்ளார்.  #RajivGandhiAssassination  #Santhan
    ரைஸ் மில் அதிபரிடம் ரூ.2.70 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரக்கோணம்:

    திருத்தணியை சேர்ந்த தெய்வசிகாமணி (வயது 45) ரைஸ் மில் வைத்துள்ளார். இவர் அரக்கோணம் தனியார் வங்கி ஒன்றில் நேற்று மதியம் தனது கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் எடுத்துக்கொண்டு அதை ஒரு கவரில் சுற்றி பைக் பெட்டியில் வைத்துக் கொண்டு திருத்தணி நோக்கி சென்றார்.

    அப்போது வழியில் தனியார் கல்லூரி முன்பு உள்ள டீ கடை முன்பு வண்டியை நிறுத்தி விட்டு டீ குடித்துவிட்டு திரும்பி வந்து பைக் அருகே வந்தபோது பெட்டி திறந்திருந்ததை பார்த்து  திடுக்கிட்டார். உள்ளே இருந்த பணத்தை காணவில்லை. பணம் திருடுபோனதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    அங்கே நிறைய பைக்குகளும் ஆள் நடமாட்டமும் இருந்தது பதட்டத்துடன் அங்கிருந்தவர்களிடம் விசாரித்த போது யாருக்கும் தெரியவில்லை என்று கூறினார்கள்.

    இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஆற்காட்டில் லோடு ஆட்டோ மீது லாரி மோதியதில் வாலிபர் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த திமிரியில் கலவை ரோடு கனியனூரை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் குமரேசன் (வயது 26). கனியனூர் பெரிய ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி மகன் பாலாஜி (28). இருவரும் லோடு ஆட்டோவில் வேலை செய்து வருகின்றனர். இன்று காலை வேலூரில் இருந்து ஆற்காட்டிற்கு லோடு ஏற்றிக் கொண்டு சென்றனர்.

    ஆட்டோவை, பாலாஜி ஓட்டினார். பக்கத்தில் குமரேசன் உட்கார்ந்திருந்தார். மேல்விஷாரம் பைபாஸ் சாலையில் சென்றபோது, ஆட்டோ மீது பின்னால்வந்த லாரி மோதியது.

    இதில் சாலையின் தடுப்புச்சுவரில் ஆட்டோ மோதி நொறுங்கியது. குமரேசன், பாலாஜி ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    இருவரும் மீட்கப்பட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரேசன் பரிதாபமாக உயிரிழந்தார். பாலாஜி மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

    இது குறித்து, ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அடுத்த அரிகலபாடி ஊராட்சியில் குரங்குகளின் தொல்லை தாங்காமல் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த அரிகலபாடி ஊராட்சியில் கடந்த 10 வருடங்களுக்கு முன் குரங்குகள் அதிக அளவில் இருந்தது. இதனால் அவதிப்பட்டு வந்த நிலையில் ஊர் பொதுமக்கள் சிலர் குரங்கை பிடித்து வனப்பகுதியில் விட முடிவு செய்து குரங்கு ஒன்றுக்கு நூறு ரூபாய் கொடுத்து கூண்டுகள் வைத்து பிடித்து வாகனங்கள் மூலம் தொலை தூரத்தில் உள்ள காட்டு பகுதிகளில் விட்டுவிட்டு வந்தனர்.

    இந்நிலையில் கடந்த மாதம் ஏதோ ஒரு ஊரிலிருந்து இரவு நேரத்தில் வாகனங்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகளை இந்த பகுதியில் விட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் குரங்குகள் நடமாட்டம் மீண்டும் இப்பகுதியில் அதிகரித்துள்ளது. மீண்டும் மக்கள் துயரமான நிலையில் உள்ளனர். பயிர்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீடுகளில் புகுந்து கையில் கிடைத்த பொருட்களை குரங்குகள் எடுத்து சென்றுவிடுகிறது. இதற்கு தீர்வு தெரியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில் பெல் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில் பெல் நிறுவன நுழைவு வாயில் முன்பு, நிறுவன மேற்பார்வையாளர்கள் ஊதிய மாற்ற அறிவிக்கையை காணொலி காட்சி மூலம் வெளியிட்டதை கண்டித்தும், பதவி உயர்வில் ஏற்பட்ட இழப்பீடை ஈடுசெய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். முன்னதாக பெல் ஊரக வளாகத்தில் தொடங்கி பெல் நிறுவன நுழைவு வாயில் வரை ஊர்வலமாக சென்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பொது செயலாளர் ஸ்டாலின், உதவி தலைவர்கள் ராஜேந்திரன், கணேஷ்பாபு, உதவி பொது செயலாளர் கண்ணன், அமைப்பு செயலாளர் ரத்தீஷ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆம்பூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஆம்பூர்:

    வாணியம்பாடி அடுத்த பொன்னேரி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 36). கார் டிரைவர். இவர் நேற்று மாலை வேலூரில் இருந்து பொன்னேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

    ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் என்ற இடத்தில் சென்ற போது காரில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து பெருமாள் ஜோலார்பேட்டையை சேர்ந்த சுதாகரன் (37)என்பவருக்கு போன் மூலம் தொடர்பு கொண்டு காரில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்து தரும்படி கூறியுள்ளார். சுதாகரன் அவரது நண்பர் தாமோதரன் என்பவருடன் பச்சக்குப்பத்திற்கு வந்து காரில் ஏற்பட்ட பழுதை சரி செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி திடீரென கார் மீது மோதியது. இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். சுதாகரன், தாமோதரன் பலத்த காயமடைந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு, படுகாயமடைந்தவர்களை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் சத்துவாச்சாரியில் கணவருடன் பைக்கில் சென்ற இளம்பெண்ணிடம் 3 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    வேலூர்:

    காட்பாடி காங்கேய நல்லூரை சேர்ந்தவர் சேகர் (வயது48). துணிவியாபாரி. இவரது மனைவி தனலட்சுமி (45). தம்பதி இருவரும் நேற்று சத்துவாச்சாரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து விட்டு இரவு வீடுதிரும்பிக் கொண்டிருந்தனர்.

    கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலத்தின் மீது பைக்கில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் தனலட்சுமி அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    அதிர்ச்சியடைந்த தம்பதியினர் இது குறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் செயின் பறித்து சென்ற கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோர்ட்டில் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் அறைக்கு வெளியே உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ஆதிசக்திநகரை சேர்ந்தவர் சேகர் (வயது 51). இவர் பர்னீச்சர் கடையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மீனா. இவருக்கும், இவரது அத்தை ராஜம்மாள் மகள் ரமிளாவிற்கும் இடையே சொத்து தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது. இது தொடர்பாக திருப்பத்தூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நேற்று இந்த வழக்கு மீதான விசாரணை நடந்து கொண்டிருந்தது.

    அப்போது சேகர் தனது மனைவி மீனாவுடன் கோர்ட்டிற்கு வந்தார். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது கோர்ட்டு அறைக்கு வெளியே வளாக பகுதியில் நின்று கொண்டிருந்த சேகர் திடீரென தான் கையில் எடுத்து வந்திருந்த மண்எண்ணெய் கேனை திறந்து, உடலில் மண்எண்ணெயை ஊற்றினார். அங்கிருந்தவர்கள் அதனை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.

    உடனடியாக நீதிபதி வேலரஸ், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சேகரை மீட்டு, பாதுகாப்பாக அழைத்து செல்லும்படி உத்தரவிட்டார்.

    அதைத் தொடர்ந்து போலீசார் சேகரை மீட்டு, வெளியே அழைத்து வந்து அவரது உடலில் தண்ணீரை ஊற்றினர். பின்னர் போலீசார் விசாரணையில், ‘‘வழக்கின் தீர்ப்பு ரமிளாவுக்கு சாதகமாக போய்விடுமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்’’ என்றார்.

    இது குறித்து கோர்ட்டு ஊழியர் பார்த்தீபன் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக சேகரை கைது செய்தனர்.

    வேலூரில் மேற்படிப்பு படிக்காமல் ரூ.6 லட்சம் கொடுத்து போலி சான்றிதழ் பெற்று உயர் மருத்துவ சிகிச்சை அளித்துவந்த டாக்டரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. #FakeCertificate
    வேலூர்:

    வேலூரில் டாக்டர் சங்கர் அறுவை சிகிச்சை நிபுணர் என்று கூறி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவர் ஏற்கனவே எம்.பி.பி.எஸ். முறைப்படி படித்து இருந்தார்.

    அதன்பிறகு சர்ஜரி (அறுவை சிகிச்சை) உயர்படிப்பு படித்திருந்ததாக பெயர் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவர் உயர்படிப்பு படிக்கவில்லை என தமிழக மருத்துவ கவுன்சிலுக்கு தகவல் வந்தது.



    இதையடுத்து மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவரது உயர் படிப்பு சான்றிதழை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அதில் அந்த சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. எம்.பி.பி.எஸ். மட்டுமே முடித்திருந்த அவர் சிசெல்லஸ் நாட்டில் உள்ள அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிசின் என்ற மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை நிபுணர் கல்வி பயன்றதாக சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தது.

    இது எப்படி கிடைத்தது என்று அவரிடம் விசாரித்தபோது புனேயில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் ரூ.6 லட்சம் கொடுத்து சான்றிதழை பெற்றதாக அவர் தெரிவித்தார். அவருக்கு சான்றிதழ் கொடுப்பதற்காக அந்த நிறுவனம் தேர்வு ஒன்றையும் நடத்தி உள்ளது. அன்றே தேர்வு எழுதி அன்று மாலையே சான்றிதழையும் கொடுத்துள்ளனர்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சான்றிதழை வழங்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக மேல் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் கூறினார்.

    அவர் தனது கிளினிக் அறிவிப்பு பலகையிலும் மற்ற வகையிலும் அறுவை சிகிச்சை நிபுணர் என்று குறிப்பிடக்கூடாது எனவும், அதுபோன்ற சிகிச்சை அளிக்க கூடாது என்று உத்தரவிட்டதாகவும் டாக்டர் செந்தில் தெரிவித்தார்.

    தமிழ்நாடு முழுவதும் இதேபோல போலி சான்றிதழ் பெற்று டாக்டர்கள் சிகிச்சை அளிக்கலாம் என சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்.

    2014-ம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் இதேபோல 21 டாக்டர்கள் போலி சான்றிதழ் பெற்று சிகிச்சை அளித்து வருவதை மராட்டிய மருத்துவ கவுன்சில் கண்டு பிடித்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க தடை விதிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டில் இதுபோல போலி சான்றிதழ் மூலம் சிகிச்சை அளித்து சிக்கியது இதுதான் முதல்முறை என்று டாக்டர் செந்தில் கூறினார். தொடர்ந்து வேறு யாராவது போலி சான்றிதழ் பெற்றிருக்கிறார்களா? என ஆய்வு நடப்பதாகவும் தெரிவித்தார்.

    சில டாக்டர்கள் உயர் மருத்துவ கருத்தரங்குகளில் பங்கேற்றுவிட்டு அந்த படிப்பை படித்தது போல குறிப்புகளை போட்டுக் கொள்கிறார்கள். இது தவறானது என்றும் மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் கூறினார்கள்.

    2 ஆண்டுகளுக்கு முன்பு சில டாக்டர்கள் நீரிழிவு, தோல்நோய், அழகு சிகிச்சை நிபுணர் போன்ற வேறு படிப்புகளை படித்தது போல போலியாக குறிப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால் மருத்துவ கவுன்சில் விதிகள்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாக்டர் செந்தில் கூறினார்.

    உரிய படிப்புகள் படிக்காமல் இதுபோன்று சிகிச்சைகள் அளிப்பது மனிதனுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியது என்று மருத்துவ நிபுணர் ஜார்ஜ் தாமஸ் கூறினார். #FakeCertificate
    குடியாத்தம் அருகே குழந்தை பிறந்த 22 நாட்களில் வீட்டில் உள்ள கழிவறையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த மோடிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மகள் ஜனனியும் (வயது 22), குடியாத்தத்தை அடுத்த பரதராமி அருகே உள்ள வி.ராமாபுரம் பகுதியை சேர்ந்த தேவராஜ் மகன் சந்துருவும் (25) கடந்த 1½ வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து கர்ப்பிணியான ஜனனிக்கு கடந்த 22 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் கடந்த வாரம் கைக்குழந்தையுடன் ஜனனி தாய் வீட்டிற்கு வந்தார். நேற்று மதியம் அவர் வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ஜனனியின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 1½ ஆண்டே ஆவதால் அது தொடர்பாக வேலூர் உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 
    ×