என் மலர்tooltip icon

    வேலூர்

    ஆம்பூர் அருகே வேன் மீது பைக் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அக்கில்அகமது இவரது மகன் ஆசிப் (வயது 18). இவர் நேற்று மாலை கன்னிகாபுரத்தில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி முன்னாள் சென்று கொண்டிருந்த வேன் மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஆசிப் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் இருந்து இன்று 5 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்து வரும் நன்னடத்தை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

    வேலூர் ஜெயிலில் உள்ள 15 பெண் கைதிகள்- 185 ஆண் கைதிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு சிறை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுவரை 100க்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று மேலும் 5 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜெயிலில் அவர்களுக்கு வேலை பார்த்ததற்கான பணம், உடமைகளை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.

    ஜெயில் வாசலில் அவர்களது உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர் ததும்ப அழைத்து சென்றனர்.
    குடியாத்தம் ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    வேலூர்:

    குடியாத்தம் சாம்பரிஷிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சார்லஸ் (வயது 23) ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்டோவில் பயணி ஒருவரை ஏற்றிக் கொண்டு ஆம்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

    அழிஞ்சிகுப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 23). ராஜா (25). உதயவாணன் (22). தென்னரசு (23) ஆகிய 4 பேர் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது சார்லஸ் ஓட்டிச் சென்ற ஆட்டோ அவர்கள் மீது லேசாக உரசியபடி நிற்காமல் சென்றுள்ளது.

    சார்லஸ் ஆட்டோ பயணியை ஆம்பூரில் இறக்கி விட்டு குடியாத்தம் திரும்பிக் கொண்டிருந்தார். ஆட்டோ உரசியபடி சென்ற ஆத்திரத்தில் இருந்த 4 பேரும் ஆட்டோ அந்த வழியாக வந்ததை கண்டு வழிமறித்து சார்லசை உருட்டு கட்டைகளை கொண்டு சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

    இதில் பலத்த காயமடைந்த சார்லஸ் ரத்த வெள்ளத்தில் நிலை குலைந்து மயங்கி விழுந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து மேல்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன் இன்று அந்த வழக்கில் தீர்ப்பு கூறினார். குற்றவாளிகள் தினேஷ், ராஜா, உதயவாணன், தென்னரசு ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் அ.கோ. அண்ணாமலை வதாடினார்.
    ரெயில்களில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து காட்பாடியில் சோதனை நடத்தப்பட்டது.
    வேலூர்:

    தீபாவளி என்றாலே பட்டாசு தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவுக்கு பட்டாசுகளை மக்கள் வெடித்து மகிழ்ச்சி அடைவார்கள்.

    புத்தாடை வாங்குவதற்கு ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுவதை போல பட்டாசு கடைகளிலும் அலைமோதும். இப்படி வாங்கப்படும் பட்டாசுகளை ரெயில்களில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பட்டாசுகளை ரெயிலில் எடுத்து செல்ல கூடாது என காட்பாடி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ரெயில் நிலையங்களில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ரெயில்களில் ஆபத்தான முறையில் பட்டாசுகளை எடுத்து செல்லக்கூடாது. மீறி எடுத்து சென்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்டது.

    இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் கூறுகையில்:-

    இந்திய ரெயில்வே சட்டம் 164வது பிரிவின் படி, ரெயில்களில் பட்டாசு, பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட இதர வெடிபொருட்களையும், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களையும் எடுத்து செல்வது குற்றச்செயலாகும்.

    இந்த சட்டத்தின்படி அதிகபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பட்டாசு கொண்டு செல்ல கூடாது என அறிவுறுத்தி வருகிறோம்.

    விதிமுறையை மீறி பட்டாசு கொண்டு செல்லப்படுவது கண்டறிப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    காதலுக்கு பெண் வீட்டில் கடும் எதரிப்பு தெரிவித்ததையடுத்து காதல் ஜோடி வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் இன்று தஞ்சமடைந்தனர்.
    வேலூர்:

    காட்பாடி அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேமண்ணா இவரது மகள் பிரியங்கா (வயது 26). எம்.பி.ஏ. பட்டதாரி. லத்தேரி காளாம்பட்டு பகுதியை சேர்ந்த ராஜேஷ்குமார். (29) என்ஜினீயர். இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தள்ளனர்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் இருவரின் காதலுக்கு கடும் எதரிப்பு தெரிவித்து வந்தனர்.

    மேலும் பிரியங்காவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

    இதையடுத்து காதல்ஜோடி இருவரும் கடந்த வாரம் வீட்டை வீட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் காதல் ஜோடி இன்று எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்து பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தனர்.

    அதில் எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதையும் மீறி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எனவே அவர்களால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    மனுவை பெற்ற போலீசார் இது குறித்த விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    வாலாஜா அருகே பணத் தகராறில் வாலிபர் அடித்துக் கொலை செய்யபட்டார்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள ஒழுகூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் சரவணன் (வயது 25). கூலி தொழிலாளி. இவரது நண்பர் சுமைதாங்கி பகுதியை சேர்ந்த மற்றொரு சரவணன் (30).

    இவர்கள் இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தலங்கை பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பினர். அப்போது சுமைதாங்கி சரவணன் ரூ.5 ஆயிரம் வைத்திருந்ததாக தெரிகிறது. அந்த பணத்தை காணவில்லை என்று கூறி ஒழுகூர்சரவணன் வீட்டுக்கு சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர் நான் உன் பணத்தை எடுக்க வில்லை நீ தான் மது போதையில் வேறு ஒருவருக்கு பணத்தை கொடுத்து விட்டாய் என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து அவரை அடையாளம் காட்டு என்று கூறி பைக்கில் இருவரும் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் ஒழுகூர் சரவணன் பைக்கை நிறுத்தும்படி கூறி பைக்கில் இருந்து இறங்கி ஓடினார்.

    இதனால் ஆத்திரமடைந்த சரவணன் அவரை பிடித்து எதற்காக ஓடுகிறாய் அப்படியென்றால் நீ தான் பணத்தை எடுத்தாயா என்று கேட்டு அவரை சரமாரியாக தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த ஒழுகூர் சரவணன் நிலைகுலைந்து மயங்கி விழுந்தார். இதையடுத்து சுமைதாங்கி சரவணன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    படுகாயமடைந்த ஒழுகூர் சரவணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஒழுகூர் சரவணன் இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து வாலாஜா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா அருகே குட்டையில் முழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாணியம்பாடி வடக்குபட்டியை சேர்ந்தவர் முருகன் இவரது மகன் அருண்குமார் (18). இவர் கடந்த ஒரு வருடமாக வாலாஜா சீனிவாசன் பேட்டையில் உள்ள அவரது பெரியம்மா வீட்டில் தங்கி ராணிப்பேட்டை தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    அருண்குமார் நேற்று தனது நண்பர்கள் 6 பேருடன் பூண்டி பாலாற்றில் உள்ள குட்டையில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது அருண்குமார் மட்டும் குட்டையில் இறங்கி குளித்தார். சிறிது நேரத்தில் அருண்குமார் குட்டை நீரில் மூழ்கி தத்தளித்தார்.

    இதனை கண்ட அவரது நண்பர்கள் நீண்ட நேரமாக போராடி அவரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அருண்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே காதலியை தற்கொலைக்கு தூண்டியதாக காதலன் மீது போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் அருகே கீழ்க்குப்பம், ஜவஹர் நகரை சேர்ந்த எட்வின் என்பவரின் மகள் சினேகா (வயது 19). இவரும், அதே பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் டேனியல் என்ற அன்பழகனும் (21) காதலித்து வந்தனர். சினேகா, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து திருமணம் செய்யாமலேயே டேனியலுடன் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் சினேகா கடந்த 26-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சினேகாவின் தாயார் கீதா, அரக்கோணம் டவுன் போலீசில் எனது மகள் சாவில் மர்மம் உள்ளது என்று புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    டேனியல் கடந்த சில மாதங்களாக நான் சினிமாவில் நடிக்க போகிறேன் என்று கூறி வந்து உள்ளார். அப்போது சினேகா, நான் உன்னை நம்பி வந்து உள்ளேன். நீ தற்போது பார்த்து வரும் வேலையை சரியாக பார்த்தாலே போதும் என்று கூறி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையேதகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மனஉளைச்சல் அடைந்த சினேகா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து சினேகாவை தற்கொலைக்கு தூண்டியதாக டேனியலை போலீசார் கைது செய்தனர். #tamilnews
    ஆம்பூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    ஆற்காடு அருகே உள்ள உப்புபேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் அர்ஜூனன் (வயது 22). இவர் நேற்று காலை ஆம்பூருக்கு வேலைகாரணமாக சென்று விட்டு மாலை வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

    ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு என்ற இடத்தில் பைக் வந்த போது பின்னால் வந்த வேன் பைக் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்து தூக்கி வீசபட்ட அர்ஜூனன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்பாடியில் இளம் பெண்ணிடம் செயின் பறித்து விட்டு தப்பி சென்ற வாலிபரை போலீசார் தேடிவருகின்றனர்.

    வேலூர்:

    காட்பாடி மதிநகரை சேர்ந்தவர் சம்பத் இவரது மனைவி செல்வி (வயது 48). இவர் இன்று காலை ஓடைபிள்ளையார் கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே பைக்கில் ஹெல்மட் அணிந்து வந்த மர்ம நபர் திடீரென செல்வி அணிந்து இருந்த 3பவுனை செயினை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டார்.

    அதிர்ச்சியடைந்த செல்வி திருடன், திருடன் என கூச்சலிட்டார். அதற்குள் அந்த நபர் தப்பிச் சென்று விட்டார்.

    இது குறித்து செல்வி விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருநங்கை தமிழ்ச்செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டயப் படிப்பில் சேர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. #Transgender #VelloreMedicalCollege

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே உள்ள புளியங்கண்ணு கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி (வயது22). திருநங்கையான இவர். பிளஸ்-2 தேர்வில் 757 மதிப்பெண் பெற்றார்.

    இவருக்கு செவிலியர் பட்டயப் படிப்பில் சேர்க்கை அளிக்க வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான புகார் மீது மருத்துவக் கல்வி இயக்குநர், தமிழ்நாடு நர்சிங் கவுன்சில், இந்திய நர்சிங் கவுன்சில் ஆகியவையும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதையடுத்து சென்னை ஐகோர்ட்டிலும் மாநில மனித உரிமை ஆணையத்திலும் தமிழ்ச்செல்வி மனுதாக்கல் செய்தார்.

    இதன்மீது விசாரணை நடத்திய நீதிபடி ஜெயச்சந்திரன், நடப்பு கல்வியாண்டிலேயே வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டயப் படிப்பில் தமிழ்ச்செல்விக்கு இடம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இதன்படி, மருத்துவக் கல்வி இயக்ககம் தமிழ்ச் செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டயப் படிப்பில் இடம் ஒதுக்கீடு செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

    இதையடுத்து, திருநங்கை தமிழ்ச்செல்விக்கு வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை அளிக்கப்பட்டது. அதற்கான சேர்க்கை கடிதத்தை தமிழ்ச்செல்வியிடம் கல்லூரி டீன் சாந்திமலர் வழங்கினார்.

    மிகுந்த சட்டப் போராட்டத்துக்கு பிறகு செவிலியர் பட்டயப் படிப்பில் சேர்க்கை கிடைத்திருப்பது குறித்து திருநங்கை தமிழ்ச்செல்வி கூறியதாவது:-

    பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகே திருநங்கையான எனக்கு செவிலியர் பட்டயப் படிப்பில் சேர சேர்க்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்தி நன்றாக படித்து சிறந்த முறையில் பணியாற்றுவதுடன், திருநங்கை சமூக முன்னேற்றத்துக்கும் உரிய பங்களிப்பை செய்வேன்.

    திருநங்கைகள் தடையின்றி படிக்கவும், அரசு வேலைவாய்ப்பு பெறவும் மத்திய, மாநில அரசு இதுவரை சட்டம் வகுக்கவில்லை. அதற்கான சட்ட அனுமதி அளிக்கும்பட்சத்தில் திருநங்கைகள் சமூகமும் எல்லா துறைகளிலும் நல்ல நிலைக்கு உயர முடியும், என்றார் அவர்.

    அவரது தாயார் அமுதா கூறுகையில், ‘எனது கணவர் சீனிவாசன் 15 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதன்பிறகு கூலி வேலை செய்தே குடும்பம் நடத்தி வந்தேன். தமிழ்ச்செல்வி திருநங்கையாக மாறியது குறித்து ஊரார் பலரும் கேலி செய்தனர்.

    எனினும், எனது குழந்தை என்பதைவிட இந்த மண்ணில் பிறந்த ஒரு ஜீவன், அதைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்ச்செல்வியை நல்லமுறையில் வளர்த்து அவர் விரும்பியதைப் படிக்க வைத்தேன்.

    சமூகத்தில் திருநங்கைகள் குறித்து மாறுபட்ட கண்ணோட்டம் உள்ளது. அவ்வாறு இல்லாமல் அவர்களும் சக மனிதர்களே என்ற கண்ணோட்டம் ஏற்பட்டால் திருநங்கைகள் சமூகம் மேம்பட வழிவகை ஏற்படும்’ என்றார்.

    கல்லூரி டீன் சாந்தி மலர் கூறும்போது, ‘ஒரு காலத்தில் பெற்றோர்களே திருநங்கைகளை வெறுத்து ஒதுக்கினர். இதனால், பொதுமக்களும் அவர்களை வேண்டா வெறுப்பாக நடத்தும் நிலை இருந்தது. இப்போது, திருநங்கைகளை அனைவரும் ஏற்கும் நிலை வந்துவிட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி திருநங்கைகள் சிறப்பாக படித்து சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும்.

    இக்கல்லூரியில் தமிழ்ச்செல்வி எந்தவித பாகுபாடின்றி மற்ற மாணவிகளை போல் சமமாக நடத்தப்படுவார். இவருக்கு விடுதியில் இடம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விடுதியில் கிடைக்காத பட்சத்தில் காலியாக உள்ள டாக்டர்கள் தங்கும் அறையை இவருக்கு ஒதுக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது’ என்றார். #Transgender #VelloreMedicalCollege

    நாட்டறம்பள்ளியில் லாரி மீது சொகுசு பஸ் மோதியதில் டிரைவர், உதவியாளர் பரிதாபமாக இறந்தனர்.

    நாட்டறம்பள்ளி:

    சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று இரவு சொகுசு பஸ் புறப்பட்டு வந்தது. டிரைவர் அஜித் (வயது 35) என்பவர் ஓட்டிவந்தார். பஸ் உதவியாளர் கொடைக்கானலை சேர்ந்த சரவணகுமார் (27) என்பவர் உள்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பஸ் திடீரென மோதியது.

    இதில் பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. டிரைவர் அஜித், உதவியாளர் சரவணகுமார் ஆகிய 2 பேரும் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    பயணிகள் மணிகண்டன், தமிழரசன் என்பவர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது நட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரில் சேர்த்தனர்.

    பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்கு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×