என் மலர்
வேலூர்
வேலூர் தென்னமரத் தெருவை சேர்ந்தவர் பன்னீர் (வயது 50). பைனான்சியர். ஊதுபத்தி ஏஜென்சி தொழில் செய்து வருகிறார்.
நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் கதவை உடைத்து அங்கு சென்று பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.4½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று காலை வீடு திரும்பிய பன்னீர் கதவு உடைந்து கிடப்பதையும், பீரோ திறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
வேலூர் மாநகர பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் தொரப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 50). சக்தி சேனா இந்து மக்கள் இயக்க பொது செயலாளர். வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிற மதத்தைப்பற்றி அவதூறு பரப்பியதாக இவர் மீது திருச்சி பொன்மலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று இரவு வேலூர் வந்த பொன்மலை போலீசார் ராஜகோபாலை கைது செய்தனர்.
பின்னர் அவரை திருச்சிக்கு அழைத்து சென்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் அருகே கொசவன்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கலாநாதன் (வயது 60). இவரது வீட்டின் கதவை நேற்று முன்தினம் நள்ளிரவில் சிலர் தட்டியுள்ளனர்.
தூக்கத்தில் இருந்து எழுந்த கலாநாதன், கதவை தட்டுபவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனது உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த கலாநாதனின் உறவினர்கள் வீட்டின் முன்பு நின்றிருந்தவர்களை பார்த்து சத்தம் போட்டுள்ளனர். கூட்டமாக வருவதை பார்த்து 2 பேர் தப்பி ஓடினர். குஞ்சணன் மட்டும் சிக்கினார். பிடிபட்ட அவரை மரத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கினர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கலாநாதனின் உறவினர்கள் உடலை அருகில் இருந்த தண்ணீர் இல்லாத கிணற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
இது தொடர்பான தகவல் கே.வி.குப்பம் போலீசாருக்கு நேற்று காலை தெரியவந்தது. போலீசார் விரைந்து சென்று குஞ்சணன் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அவரை கட்டி வைத்து அடித்து கொலை செய்ததாக கலாநாதன் (60), முரளி (40), விஜயன் (58) ஆகியோரை கைது செய்தனர்.
குஞ்சணன் பர்கூருக்கு வேலைக்கு வந்துள்ளார். வழிதவறி கொசவன் புதூருக்கு சென்றுள்ளார். நள்ளிரவு நேரத்தில் கிராமத்திற்குள் புகுந்ததால் திருடன் என நினைத்து தாக்கியுள்ளனர்.
இதனால் அவர் இறந்துவிட்டார் என கூறியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசின் சிபாரிசின் மீது நடவடிக்கை எடுக்காமல் கவர்னர் காலம் கடத்தி வருகிறார். இதுகுறித்து முருகன் கடந்த 31-ந் தேதி வேலூர் மத்திய சிறை அதிகாரிகள் மூலம் கவர்னருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.
அதில் ராஜீவ்காந்தி கொலைக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை, வேண்டுமென்றால் உண்மை கண்டறியும் சோதனை நடத்துங்கள். அல்லது கருணை கொலை செய்யுங்கள், இல்லையென்றால் உண்ணாவிரதம் இருந்து சாகவிடுங்கள் என்று கூறி உள்ளார்.
இதனால் அவர் கடந்த 2-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று காலை உணவையும் சாப்பிட மறுத்து விட்டார். தொடர்ந்து 5-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருக்கிறார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இவருடைய வக்கீல் புகழேந்தி நேற்று வேலூர் ஜெயிலில் உள்ள முருகன் மற்றும் நளினியை சந்தித்து பேசினார்.
கடந்த 2-ந்தேதி முதல் முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மேலும் முருகன் தனது அறையில் சாமிபடங்களை வைத்துள்ளார். அந்த அறையில் சிறை அதிகாரிகள் ஷூ கால்களுடன் சென்று அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் அவர் கோரிக்கை மனு கொடுத்துள்ளதால் அவரை அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #Murugan #Hungerstrike
கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் தமிழகத்துக்குள் நுழைகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளும், ஆந்திர மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 21 தடுப்பணைகளும் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாலாறு வறண்டு கிடக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள 21 தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க அம்மாநில அரசு கடந்த நவம்பர் மாதம் ரூ.41.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தற்போது பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கு பாலாற்று பாசன விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தற்போது 500 மீட்டருக்கு ஒரு தடுப்பணை என்ற அடிப்படையில் பாலாற்றின் குறுக்கே புதிதாக மேலும் 30 தடுப்பணைகளைக் கட்ட ஆந்திர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக, அம்மாநில நீர்வள ஆதாரத்துறையின் சித்தூர், பலமநேர் கண்காணிப்பு பொறியாளர்கள் அலுவலகம் மூலம் ஆந்திர அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதை வேலூர் மேம்பாலாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் அன்பரசன், வேலூர் நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதமும் உறுதிப்படுத்துகிறது.
ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்தில் பாலாறு பாலைவனமாக மாறி விடும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பாலாற்றின் குறுக்கே மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்தக்கோரி பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு மனு அனுப்பியிருப்பதாக வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் குழு உறுப்பினர் அசோகன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:-
கடந்த 2000-2005ஆம் ஆண்டுகளில் ஆந்திர மாநிலம், கணேசபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே அணைகட்டி 40 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
இதையடுத்து, அந்த தண்ணீரை பல தடுப்பணைகள் கட்டித் தேக்குவதற்கு திட்டமிட்டு தொடர்ந்து தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதனால், பாலாற்றுப் படுகை பகுதியில் வேலூர், குடியாத்தம், ஜோலார்பேட்டை, பேர்ணாம்பட்டு, திருப்பத்தூர் ஆகிய மேல்பாலாற்றுப் பகுதிகள் ஏற்கெனவே கருப்பு வட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் மேலும் 30 தடுப்பணைகள் கட்டப்பட்டால் தமிழகத்துக்கு ஒருசொட்டு தண்ணீர் கூட வராமல் பாலாறு பாலைவனமாக மாறிவிடும்.
பாலாற்றுப் படுகையில் ஆந்திரா தொடர்ந்து தடுப்பணைகளைக் கட்டுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இனியாவது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். #Reservoir #PalarRiver
வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வனவர்கள் ரவி, முருகன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடியாத்தம் சித்தூர் சாலையில் உள்ள சைனகுண்டா சோதனை சாவடியில் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து வேகமாக வந்த காரை மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. அதனை ஜீப்பில் துரத்தினர். 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள போடிகுப்பம் என்ற இடத்தில் காரை மடக்கினர். காரை நிறுத்திவிட்டு 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். காரில் 1½ டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ. 30 லட்சமாகும்.
காருடன் செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த செம்மரங்களை ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. காரில் இருந்த தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். #RedSandalwood
அரக்கோணம்:
சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்தபடுவதாக அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு மற்றும் போலீசார் நேற்று இரவு ஆந்திராவுக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் பயணிகள் ரெயில்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சிறு சிறு மூட்டைகளாக பதுக்கி வைக்கபட்டிருந்த சுமார் 300 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்த ரேசன் அரிசி மூட்டைகளை வருவாய்துறையினரிடம் ஓப்டைத்தனர்.
வாலாஜா அடுத்த தேவதானம் பிள்ளையார் கோவிலை சேர்ந்தவர் பாலாஜி (வயது 27). பால் வியாபாரி. அதே பகுதியை சேர்ந்தவர் ரகு (26). இவர்கள் இருவரும் நேற்று இரவு ஜெ.ஜெ. நகரில் இருந்து வீட்டிற்கு செல்வதற்காக அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.
அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் இவர்கள் மீது மோதியது. இதில் பாலாஜி சம்பவ இடத்திலேயே இறந்தார். ரகு படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இது குறித்து தகவலறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
மேல்விஷாரத்தை சேர்ந்த ஹலீல் கார் டிரைவர். இவரது மனைவி ஷம்மா (வயது 32). கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இன்று காலை அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஷம்மா உடல்நிலை மோசமானது. இதுபற்றி உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஷம்மாவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்கிறோம் என தெரிவித்துள்ளனர்.
ஆனால் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துள்ளனர். இந்த நிலையில் ஷம்மா இறந்தார்.
இதனைக் கண்ட உறவினர்கள் கதறி அழுதனர். ஷம்மாவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லவிடாமல் தடுத்தவர்கள் அவரது சாவுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும். அதுவரை உடலை வாங்க மட்டோம் என கூறி முற்றுகையிட்டனர்.
வேலூர் டி.எஸ்.பி. ராதாகிருஷண்ன், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களை சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காக்கங்கரை ஊராட்சியில் உள்ள நாராயணபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஓம் சக்தி கோவில் அமைத்துள்ளது.
இந்த கோவிலில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த பெண்கள் விரதம் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் பூஜை செய்து வழிபட்டு வந்தனர்.
இதேபோன்று பெண்கள் மற்றும் ஆண்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இந்த கோவிலில் இருந்து மேல்மருத்துவருக்கு சென்று வருவார்கள். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு பெண் பக்தர்கள் வந்தனர்.
அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அம்மன் கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க தாலி சங்கிலி மற்றும் பீரோவில் இருந்த 2 பவுன் நகைகள், உண்டியலில் இருந்த பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த தகவலை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனே கோவில் அருகே திரண்டனர்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கோவிலின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து 12 பவுன் நகைகளையும், கடந்த சில மாதங்களாக திறக்கப்பட்டதால் உண்டியலில் இருந்த ரூ.50 ஆயிரத்தையும் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
மேலும், கோவிலின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சில வீடுகளில் ஆடுகளையும், கோழிகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் அடுத்த அடுக்கம்பாறையில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது.
இங்கு ரூ.14½ கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு, மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம், இதய உள்ளுருவி கணிப்பு ஆய்வகம், சிறுநீரக சுத்திகரிப்புப்பிரிவு விரிவாக்கம், ரத்த புரத நோய்கள் ஆய்வகம், காந்தி அதிர்வு பிம்பங்கள் ஆகிய நவீன சிகிச்சை பிரிவுகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வேலூர் உதவி கலெக்டர் மெகராஜ், அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் சாந்திமலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ராஜவேலு வரவேற்றார்.
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வணிகவரி, பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டு நவீன சிகிச்சை பிரிவுகளை திறந்து வைத்து பேசினர்.
விழாவில், எம்.எல்.ஏ.க்கள் சு.ரவி, லோகநாதன், ஆவின் தலைவர் வேலழகன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் சுரேஷ், வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு வந்த அணைக்கட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ., அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோரிடம், ‘அரசு விழாக்களில் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். எனது தொகுதிக்கு உட்பட்ட இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன சிகிச்சை பிரிவுகள் தொடங்க வேண்டும் என்று பலமுறை சட்டசபையில் வலியுறுத்தி உள்ளேன். ஆனால் இந்த விழாவில் கலந்து கொள்ள எனக்கு முறையாக அழைப்பு விடுக்கவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு அமைச்சர்கள், அடுத்த அரசு விழாவில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.
சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ.விடம் வந்து, இதுபோன்ற பிரச்சனைகள் இனிமேல் நடைபெறாது என்று கூறினார். அதற்கு அவர், கடந்த அரசு விழாவிலும் இதுபோன்று தான் கூறினீர்கள். தற்போதும் அதே தவறு நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் அரசு விழாக்களில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை வேண்டுமென்றே புறக்கணிக்கிறீர்கள். எனவே நான் இந்த அரசு விழாவை புறக்கணிக்கிறேன் என்று கூறிவிட்டு தனது ஆதரவாளர்களுடன் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவத்தால் விழாவில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சோளிங்கர்:
சோளிங்கர் பஸ் நிறுத்தம் அருகே தனியார் லாட்ஜ் உள்ளது. இன்று காலை இந்த லாட்ஜின் 2-வது மாடியில் உள்ள ஒரு அறையில் இருந்து தூர்நாற்றம் வீசியது.
லாட்ஜ் ஊழியர்கள் அந்த அறையின் கதவினை தட்டி திறக்க முயன்றுள்ளனர். ஆனால் உள்பக்கம் பூட்டி இருந்ததால் திறக்க முடியவில்லை.
இது குறித்து சோளிங்கர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவின் உள்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வாலிபர் ஒருவர் கயிற்றில் தூக்கிட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வாலாஜா வன்னிவேடு பகுதியை சேர்ந்த தியாகராஜன் (வயது 40). கூலி தொழிலாளி என்பது தெரிய வந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






