என் மலர்
வேலூர்
வாலாஜா:
ஆற்காடு இளைஞர் முன்னேற்ற கைபந்து கிளப் சார்பில் ஏழை எளிய மக்கள் 300 குடும்பத்தினருக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி அரசு கலைக்கல்லூரி முன்பு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் ஜெயமுருகன் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், துணை சேர்மன் தங்கதுரை, பொருளாளர் பாலசந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு கலந்து கொண்டு பெல்லியப்பா நகர், விசி.மோட்டூர், அனந்தலை, குடிமல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த வாழ்வாதாரம் இழந்து வாடும் 300குடும்பத்தினருக்கு 5கிலோ அரிசியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கிளப் பயிற்சியாளர் மல்லிகேஷ்வர் குமார், உறுப்பினர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடி:
அமைச்சர் நிலோபர் கபில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தொற்று நோய் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் இந்த ஆண்டு ரம்ஜான் மாதம் வந்துள்ளது.
இந்த நிலையில் நோய்த்தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.
மற்ற மாநிலங்களில் உள்ளது போல் நாமும் பள்ளிவாசல்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே தொழுது வருகின்றோம்.
எனவே நாளை (வெள்ளிக்கிழமை) முதல் பிறை தென்பட்டால் ரம்ஜான் நோன்பு ஆரம்பிக்க உள்ளது. இதில் ஏற்கனவே நாம் பின்பற்றிவரும் நடைமுறையை இப்போதும் பின்பற்றி நோன்பு சகஹர், இப்தார் வீட்டிலேயே இருந்து செய்து தாராவீஹ் வீட்டிலேயே தொழுது இந்த நோயிலிருந்து அனைவரும் மீண்டு வர இறைவனை கையேந்தி துவா செய்ய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
2020-ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் நோன்பு காலத்தில் அளிக்கப்படும் ரம்ஜான் அரிசி உள்ளிட்ட அனைத்தையும் பள்ளிவாசல்களுக்கு வழங்க, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்து, சிறுபான்மை மக்களுக்கு வழங்கிட ஆணையிட்டுள்ளார்.
இவற்றை அளிக்கும் போது ஒரே இடத்தில் கூட்டம் கூட கூடாது என்பதற்காகவும், பள்ளி வாசல்களில் எக்காரணத்தை கொண்டும் நோன்பு கஞ்சி காய்ச்ச கூடாது என்பதற்காக, அதனை ஏழை, எளிய மக்களுக்கு பிரித்து அளிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் இப்தார் விருந்து அளித்து வந்தது. தற்போது இந்த ஆண்டு அதனை நடத்த முடியாத ஒரு சூழ்நிலையையும் ஏற்பட்டு இருப்பதால், இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இஸ்லாமிய மக்கள் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் இருந்து தொழுகைகளை வீட்டிலேயே நடத்தி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குடியாத்தம்:
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம். ஜெயபிரகாஷ். இவரது மனைவி கீதாம்பிகை. இவர்கள் தற்போது குடியாத்தம் ராஜா கோவில் முத்து நகர் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
ஜெயபிரகாஷ் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் லேப் டெக்னீசியன் பிரிவில் பயிற்றுநராக பணியாற்றி வருகிறார்.
தற்போது ஊரடங்கு உத்தரவால் ஜெயப்பிரகாஷ் தனது மனைவியுடன் சொந்த ஊரான விளாப்பாக்கம் கிராமத்திற்கு கடந்த மாதம் 24-ந்தேதி சென்றுவிட்டார்.
மர்ம நபர்கள் வீட்டில் பூட்டை உடைத்து பிரோ இருந்த 55 பவுன் தங்க நகைகளும், வெள்ளி பொருட்களும், ரூ.5 ஆயிரம் பணத்தை திருடி சென்று விட்டனர்.
இந்நிலையில் இன்று ஜெயபிரகாஷ் தனது மனைவியுடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் கொள்ளை நடந்ததை கண்டு திடுக்கிட்டார்.
இதனையடுத்து ஜெயபிரகாஷ் குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார்.
சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் திருட்டு நடைபெற்ற வீட்டில் ரேகைகளை பதிவு செய்தனர்.
கல்லூரி ஊழியர் வீட்டில் திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:
சென்னையை சேர்ந்த ஆசிப்அகமது திருக்கோவிலூர் தெளிபகுதியை சேர்ந்த நவீன்குமார் அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா. இவர்களை ராணிப்பேட்டை சிப்காட்டை சேர்ந்த வழிப்பறி கொள்ளையர்கள் யுவராஜ், அரவிந்தன், வாசு, ஜெயபிரகாஷ் மற்றும் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த அண்ணன் தம்பியான சூர்யா, சதீஷ், இளங்கோ, சாரு ஆகிய 8 பேர் சேர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெட்டி கொலை செய்தனர். பின்னர் அவர்களை வேலூர் மாவட்டம் திருவலம் பொன்னை ஆற்றில் ஒரே குழியில் புதைத்தனர்.
காட்பாடி டி.எஸ்.பி துரைபாண்டியன் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் நேற்று கொன்று புதைக்கப்பட்டவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன. மண்டை ஓடு எலும்புகள் என தனித்தனியாக கிடந்தன சூர்யா ஆசிப் அகமது ஆகியோரின் பிணத்தை அவரது பெற்றோர்களும் நவீன் குமார் பிணத்தை அவரின் மனைவி அடையாளம் காட்டினர். அப்போது அவர்கள் கதறி அழுதனர்.
தோண்டி எடுக்கப்பட்ட 3 பேரின் பிணங்களும் வேலூர் தடய அறிவியல் துறை அலுவலர் சொக்கநாதன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் 3 பேரின் பிணங்களும் அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
கொலைக்கான காரணம் குறித்து கைதான சென்னை சகோதரர்கள் சூர்யா, சதீஷ் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நாங்கள் சென்னையைச் சேர்ந்த இளங்கோ சாரு தலைமையிலும் ஆஷிப், நவீன்குமார் ஆகியோர் என இரு குழுக்களாக பைக் மற்றும் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தோம். இதில் எங்கள் தரப்பைச் சேர்ந்த இளங்கோ உள்பட 4 பேரும் அடிக்கடி கைது செய்யப்பட்டோம். ஆசிப் போலீசாரிடம் தகவல் கூறியதன் பேரில் தான் நாங்கள் கைது செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது.
இதனால் ஆசிப்பை கொலை செய்ய திட்டமிட்டோம். இளங்கோ விற்கும் ராணிப்பேட்டையை சேர்ந்த பிரகாசுக்கும் ஜெயிலில் பழக்கம் இருந்தது. இதனால் ஜெயபிரகாஷ் மூலம் ஆசிப்பை தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம்.
சம்பவத்தன்று ஆசிப், நவீன்குமார் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக திருக்கோவிலூர் தெளி கிராமத்திற்கு சென்றிருப்பது தெரியவந்தது. அவரிடம் இளங்கோ செல்போனில் தொடர்பு கொண்டு வேலூர் மாவட்டம் திருவலத்தில் மதுவிருந்து இருப்பதாகவும் உடனே வரும்படியும் தெரிவித்தார். இதனையடுத்து இளங்கோ உள்பட நாங்கள் 4 பேரும் ஜெயப்பிரகாஷ் உட்பட அவரது கூட்டாளிகள் 4 பேரும் என 8 பேரும் தயார் நிலையில் இருந்தோம். ஆசிப் தனியாக வருவார் என எதிர்பார்த்தோம்.
ஆனால் அவருடன் நவீன்குமார் அதே ஊரை சேர்ந்த உறவினர் சூர்யா ஆகியோரும் 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை பொன்னையாற்று பகுதிக்கு அழைத்து சென்று அனைவரும் மது குடித்தோம். அப்போது திட்டமிட்டது போல இளங்கோ ஆசிப்பை திடீரென தலையில் கத்தியால் வெட்டி சாய்த்தார்.
மேலும் நவீன் குமாரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றோம். அவருடன் வந்திருந்த மாணவர் சூர்யாவை விட்டு விடலாம் என நினைத்தோம். ஆனால் அவர் வெளியே கூறி விடுவார் என்ற பயத்தில் அவரையும் வெட்டி கொலை செய்தோம்.
பின்னர் தயாராக வைத்திருந்த மண்வெட்டி மூலம் குழி தோண்டி ஒரே குழியில் 3 பேரையும் புதைத்தோம். அவர்கள் வந்த 2 மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று விட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இளங்கோ, சாரு, ஜெயபிரகாஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா அவதியால் நிவாரண உதவிப்பணிகள் தொடர்ந்து தமிழக அரசால் சேவை மனப்பான்மை உள்ளவர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
அரக்கோணம் அம்மா உணவகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஏப்ரல் 22-ந்தேதி வரை கட்டணமில்லா உணவு வழங்கி வந்தார்கள்.
இந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்கி வேலூர் கிழக்கு மாவட்டத்தில் அரக்கோணம், வாலாஜா, ராணிப்பேட்டை, மேல்விஷாரம், ஆற்காடு மற்றும் வேலூர் பகுதியில் காட்பாடியில் உள்ள அம்மா உணவகங்களில் வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக இன்று இரவு முதல் மே 3-ந்தேதி வரை கட்டணமில்லா உணவு வழங்கப்படும்.
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரக்கோணம் மற்றும் நெமிலி பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிட்டு வருகின்றனர்.
நெல் அறுவடை செய்யப்பட்டு அவற்றை நெல் மூட்டைகளாக ஒன்று சேர்த்து ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அரக்கோணம் மற்றும் நெமிலி ஒன்றியங்களில் நெமிலி, சயனபுரம், கீழ்வெங்கடாபுரம், புதுகண்டிகை, பள்ளூர், சேத்தமங்கலம் அருகிலபாடி, திருமால்பூர், எஸ்.கொளத்தூர், அகவலம், அசநெல்லிகுப்பம், ரெட்டிவலம், தக்கோலம், புதுக்கேசாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளது.
அரக்கோணம் மற்றும் நெமிலி ஒன்றியங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அந்தந்த பகுதியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதிகாரிகள் அவற்றை கொள்முதல் செய்யாமல் அங்கேயே வெட்ட வெளியில் வைத்துள்ளனர்.
இதனால் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் சேதமாகிறது. கடன் வாங்கி பல நாட்கள் பாடுபட்டு அறுவடை செய்த நெல்மூட்டைகள் விலை போகாமல் நேரடி கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடப்பதாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கொரோனா பிரச்னை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் போக்குவரத்து இயக்க முடியாத சூழ்நிலை உள்ளது. இதை காரணம் காட்டி ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அப்படியே தேக்கி வைத்துள்ளனர்.
கலெக்டர் தலையிட்டு உடனடியாக விவசாயிகளின் அனைத்து நெல்மூட்டைகளையும் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மசூதி முத்தவல்லிகள் மற்றும் பொறுப்பு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நோன்பு கஞ்சிக்கான அரிசி மொத்தம் 97 மசூதிகளுக்கு கொடுக்கப்படுகிறது.
இந்த மசூதிகளில் மொத்தம் 78,046 பேர் ரம்ஜான் நோன்பை கடைப்பிடிக்கிறார்கள்.
அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அரிசியின் அளவு 172889 கிலோ வழங்கப்படுகிறது. ரம்ஜான் நோன்பை கடைப்பிடிப்பவர்கள் வீட்டிலிருந்தபடி தொழுகை செய்து கஞ்சி தயார் செய்து அருந்த வேண்டும்.
மசூதியில் இவை செய்யக்கூடாது. கருகம்பத்தூர், கொணவட்டம், ஆர்.என்.பாளையம், சைதாப்பேட்டை, கஸ்பா, சின்ன அல்லாபுரம் ஆகிய பகுதிகளில் கொரோனா பரவுவதை தடுக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
அங்கு இருப்பவர்கள் வெளியில் வரக்கூடாது. அங்கு வசிப்பவர்கள் முன்னேற்பாடுகளுடன் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். என்று ஜமாத்காரர்கள் எடுத்துக்கூற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், உதவி கலெக்டர் கணேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவலம் பேரூராட்சியில் பணியாற்றும் பணியாளர்களுக்குகான கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் (பொ) அம்சா தலைமை தாங்கி முகாமினை கண்காணித்து துப்புரவு பணியாளர்களுக்கு பணியின் போது பாதுகாப்புகள் குறித்து விளக்கி பேசினார்.
பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், இளநிலை உதவியாளர் துரை முன்னிலை வகித்தனர். இதனையடுத்து நடந்த மருத்துவ முகாமில் வட்டார மருத்துவர் அலுவலர் மருத்துவர் சங்கர் கணேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் பேரூராட்சி அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வேலூர் மாவட்டத்தில் 22 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 39 பேர் என மொத்தம் 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதில் 65 பேர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 பேர் குணமாகி வீடு திரும்பினர்.
இதேபோல் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பினார். 10-க்கும் மேற்பட்டோர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் சிகிச்சை பெற்று வரும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரை சேர்ந்த 3 பேர், வாணியம்பாடி, திருப்பத்தூரை தலா ஒருவர் வீதம் 5 பேர் இன்று குணமடைந்தனர். குணமடைந்த 21 பேரையும் இன்று ஆஸ்பத்திரியில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்டத்தில் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்த 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் 28 நாட்கள் முடிவடைந்து விடுவிக்கப்பட்டனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 700 பேர் முதற்கட்டமாக தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் 630 பேர் 28 நாட்களை கடந்த விடுவிக்கப்பட்டனர். 70 பேர் மட்டுமே தற்போது கண்காணிப்பில் உள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 760 பேர் தனிமைப்படுத்தபட்டனர். இதில் 615 பேர் விடுவிக்கப்பட்டு தற்போது 145 பேர் கண்காணிப்பில் உள்ளனர். மொத்தம் 3 மாவட்டங்களிலும் 2045 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் நேற்று முதல் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கின. வேலூர் வேலப்பாடியில் பத்திரப்பதிவு அலுவலகமும், வேலூர் மண்டல துணை இயக்குனர் அலுவலகமும் இயங்கி வருகிறது.
துணை இயக்குனரின் கட்டுப்பாட்டில் வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய கோட்டங்களில் உள்ள 44 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. சுமார் 26 நாட்கள் ஊரடங்குக்கு பின்னர் நேற்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன.
திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகள் கொரோனா தொற்று காரணமாக 100 சதவீதம் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே ஆம்பூரை சேர்ந்தவர்கள் பள்ளிகொண்டாவிலும், வாணியம்பாடியை சேர்ந்தவர்கள் நாட்டறம்பள்ளியிலும், திருப்பத்தூரை சேர்ந்தவர்கள் ஜோலார்பேட்டையிலும் பத்திரப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரக்கோணம், ஆற்காடு, நெமிலி, பெரணமல்லூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்பட 17 பத்திரப்பதிவு அலுவலகங்களில் யாரும் பதிவு செய்ய வரவில்லை. அவற்றை தவிர 24 பத்திரப்பதிவு அலுவலகங்களில் 116 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த 55 வயதான டாக்டர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார்.
அவரது உடலை அடக்கம்செய்ய சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் உள்ள கல்லறைக்கு ஆம்புலன்சில் உடலை கொண்டு சென்றனர்.
அங்கு வசிக்கும் பொதுமக்கள் டாக்டர் உடலை அடக்கம் செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டாக்டர் உடலைக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் மீது கற்களை வீசினார்கள். இது தொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்.
அவர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் பணியாற்றும் போலீசாருக்கு கொரோனா தொற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து போலீசாருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, வேலூர் மாவட்ட போலீசாருக்கான கொரோனா பரிசோதனை வேலூர் நேதாஜி விளையாட்டரங்கில் நடந்தது. இதில் முதல் கட்டமாக 72 போலீசாருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.
தொடர்ந்து ஒதுக்கப்படும் ரேபிட் கிட் கருவிகளை பொறுத்து படிப்படியாக அனைத்து போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது.






