என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் வசிப்பவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை பரிசோதிக்க அப்பகுதியில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் வசிப்பவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை பரிசோதிக்க அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் கொரோனா சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    திருவலம் சுகாதார மைய வட்டார மருத்துவ அலுவலர் கணேஷ், அரசு மருத்துவர் லோகானந்த் ஆகியோர் தலைமை தாங்கி பரிசோதனை மேற்கொண்டனர்.

    இதில், சைதாப்பேட்டை பகுதி மக்கள், மருத்துவ சிகிச்சைக்காக வேலூருக்கு வந்த வடமாநிலத்தவர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    மேலும் அவர்களிடம், காய்ச்சி வடிகட்டிய சுத்தமான நீர்பருகுதல், சமூக இடைவெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதில், திருவலம் சுகாதார மைய செவிலியர் விஜயா, ஆய்வக பரிசோதனை உதவியாளர் சரவணன், கல்வித்துறை மற்றும் 10-வது பட்டாலியன் என்.சி.சி.சார்பில் முதன்மை அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    வடமாநிலங்களுக்கு நோயாளிகளை ஏற்றி சென்று ஒடிசாவில் தவித்த கார் டிரைவர்கள் 330 பேர் வேலூர் வந்தடைந்தனர்.
    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரிக்கு வந்த வடமாநிலத்தவர்கள் கடந்த 17-ந்தேதி முதல் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆம்புலன்ஸ் மற்றும் கார்கள் மூலம் மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை வேலூரைச் சேர்ந்த கார் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று அழைத்துச் சென்றனர்.

    நோயாளிகளை இறக்கி விட்டு அங்கிருந்து வேலூர் டிரைவர்கள் ஊருக்கு புறப்பட்டனர். கடந்த 20-ந் தேதி மேற்கு வங்காளம் ஒடிசா மாநில எல்லையான பலாசூரில் உள்ள சுங்கச்சாவடி அருகே தமிழக கார்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் கடந்த 5 நாட்களுக்கு மேலாக அங்கு டிரைவர்கள் தவித்தனர்.

    இந்த நிலையில் தமிழக வாகனங்கள் திரும்பி வர அனுமதிக்க வேண்டுமென ஒடிசா மாநில முதல்-அமைச்சருக்கு வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

    இதனை தொடர்ந்து அங்கிருந்து டிரைவர்கள் விடுவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் 130 பேர் வேலூர் வந்தனர். அவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

    மேலும் அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அனைவருக்கும் எந்த அறிகுறியும் இல்லை என தெரியவந்துள்ளது. ஆனாலும் அவர்கள் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.

    இன்று காலையில் வட மாநிலங்களுக்கு சென்ற மேலும் 200 கார் டிரைவர்கள் வேலூர் வந்தனர். அவர்கள் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் 47 டிரைவர்கள் ஒடிசாவில் இருந்து புறப்பட்டனர். அவர்கள் நாளை வேலூர் வந்து விடுவார்கள் என கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். வட மாநிலங்களுக்கு சென்று வந்த கார் டிரைவர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
    சைனகுண்டா, மாத்தாண்ட குப்பம் ஆகிய இடங்களில் தமிழக- ஆந்திர சாலையின் குறுக்கே தடுப்பு சுவர் கட்டப்பட்டது. இரு மாநில வாகனப் போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையையொட்டி காட்பாடி, கிறிஸ்டியான் பேட்டை, பரதராமி, பத்தலபள்ளி, சைனகுண்டா, சேர்க்காடு, பொன்னை (மாத்தாண்ட குப்பம்) ஆகிய 6 சாலை உள்ளன.

    இங்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், மற்றும் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே தமிழகத்திற்கு அனுமதிக்கப்படுகின்றன. மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

    இந்த நிலையில் சைனகுண்டா, பொன்னை (மாத்தாண்ட குப்பம்) ஆகிய சாலைகளை முழுமையாக மூடுவதற்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து சைனகுண்டா, மாத்தாண்ட குப்பம் ஆகிய இடங்களில் தமிழக- ஆந்திர சாலையின் குறுக்கே தடுப்பு சுவர் கட்டப்பட்டது.

    30 அடி நீளத்துக்கு சாலையின் குறுக்கே 4 அடி உயரம் மற்றும் 3 அடி அகலத்துக்கு தொட்டி போல் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது.

    தொட்டி போல் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவருக்கு இடையே 3 அடி அகலத்துக்கு மண் கொட்டப்பட்டுள்ளது. வேகமாக வந்து தடுப்புச்சுவர் மீது மோதாமல் இருக்க தடுப்பு சுவருக்கு சற்று தூரத்தில் சாலையின் இரு புறமும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.

    தடுப்பு சுவர் அமைத்து மூடப்பட்டுள்ள சைனகுண்டா, பொன்னை மாத்தாண்டம் வழியாக எந்த வாகனமும் வர முடியாது.

    சைனா குண்டா வழியாக வரும் வாகனங்கள் பரதராமி சோதனைச்சாவடி வழியாகவும், மாத்தாண்டகுப்பம் வழியாக வரும் அனுமதி பெற்ற வாகனங்கள் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை மற்றும் சேர்க்காடு சோதனை சாவடி வழியாகவும் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் சார்பில் 500 ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 10 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    வேலூர்:

    வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடுகிடுப்பைகாரர்கள், நரிக்குறவர்கள், இருளர்கள் மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி உட்பட 10 வகையான மளிகை பொருட்களை காட்பாடி தாசில்தார் ஆர்.பாலமுருகன் தலைமையில் வழங்கப்பட்டது. உடன் நாஷ்வா தொண்டு நிறுவன தலைவர் கணேஷ், வழக்கறிஞர் பி.டி.கே.மாறன் மற்றும் காட்பாடி ரெட் கிராஸ் கிளையின் நிர்வாகிகள் உள்ளனர்.

    வி.ஐ.டி. துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் சார்பில் 500 ஏழை குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் 10 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

    அதேபோல் வேலூர் காய்கறி மார்க்கெட் தினக் கூலிகளாக வேலை செய்யும் சுமை தூக்கும் தொழிலாளர்கள், வேலூர் கொசப்பேட்டை பகுதி எஸ்.எஸ்.கே. மானியம் சார்ந்த தினக்கூலி பெண்கள், தோட்டபாளையம் பகுதியை சார்ந்த தினக்கூலி பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் விதவைகளுக்கும் அரிசி உட்பட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

    மேலும் சில்க் மில், ஆபீசர் லைன் மற்றும் வி.ஐ.டி. அருகே உள்ள ஆட்டோ டிரைவர்கள், வேலூர் நகர இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் மெக்கானிக்களுக்கள் குடும்பத்தினருக்கும் அரிசி உட்பட உணவுப் பொருட்கள் கொடுக்கப்பட்டது.

    சி.எம்.சி. மருத்துவ மனையில் சிகிச்சை பெற வட இந்தியாவிலிருந்து வந்திருக்கும் உணவின்றி தவிக்கும் ஏழை எளிய குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி உட்பட 10 வகையான சமையல் பொருட்கள் வி.ஐ.டி. துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்வில் நாஷ்வா தொண்டு நிறுவன அமைப்பின் தலைவர் எம்.கணேஷ், வழக்கறிஞர் பி.டி.கே.மாறன், காட்பாடி ரெட் கிராஸ் கிளை செயலாளர் ஜனார்த்தனன், துணை தலைவர் சீனிவாசன், பொருளாளர் பழனி, செயற்குழு உறுப்பினர் காந்திலால் பட்டேல் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் உட்பட பலர் நிகழ்வுக்கு உதவி புரிந்தனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த டாக்டர் குணமடைந்தார். இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த டீக்கடைக்காரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவர் கொரோனா பரிசோதனைக்கு முன்பு சைதாப்பேட்டையில் உள்ள தனியார் கிளீனிக்கில் சிகிச்சை பெற்றார். அந்த கிளீனிக்கில் உள்ள 74 வயது டாக்டர் மற்றும் நர்சு ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் 74 வயது டாக்டருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த டாக்டர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்.

    அவரை மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் சூறை காற்றுடன் கோடை மழை பெய்தது. வெயிலில் தவித்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வைத்தது. இரவு நேரங்களில் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் இரவு தூங்க முடியாமல் தவித்தனர். நேற்று அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி வெயில் சுட்டெரித்தது. மாலையில் திடீரென தட்பவெப்ப நிலை மாறியது. வேலூர் மாவட்டம் முழுவதும் கருமேகம் சூழ்ந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம் வாணியம்பாடி திருப்பத்தூர் பகுதிகளில் மழை பெய்தது. ஆலங்காயத்தில் அதிகபட்சமாக 28 மில்லி மீட்டர் மழை பதிவானது. வாணியம்பாடியில் 11 மில்லி மீட்டர் திருப்பத்தூரில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இன்று காலையில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கருமேகம் சூழ்ந்தது. காலை 7 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக வெயிலில் தவித்த பொதுமக்கள் குளிரச் செய்த மழையால் நிம்மதி அடைந்தனர்.

    காட்பாடியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தையில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இதில் தண்ணீரில் காய்கறிகள் மிதந்ததால் வியாபாரிகள் வேதனையடைந்தனர். அரக்கோணம் அருகே உள்ள வளர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் இவரது மகள் மகாலட்சுமி (வயது 16). அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். 

    இன்று காலையில் அந்த பகுதியில் இடி மின்னலுடன் லேசான சாரல் மழை பெய்தது. அப்போது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்திற்கு சென்ற மகாலட்சுமி இடி தாக்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் இன்று காலை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடும் வெயிலால் அவதிப்பட்ட மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இந்த மழை செடி கொடிகளுக்கும் புத்துயிர் ஊட்டுவதாக அமைந்தது.
    மாஞ்சா நூல் பயன்படுத்தி விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வேலூர்:

    காட்பாடி சேனூர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 36). வேலூர் ஜெயிலில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று பணி முடிந்து பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வேலூர் ஊரீசு கல்லூரி அருகே வந்தபோது அறுந்து தொங்கிய பட்டம் விட பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் சுரேஷ்பாபு கழுத்தை அறுத்தது. படுகாயமடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஊரடங்கு காரணமாக சிலர் பொழுதுபோக்கிற்காக வீட்டின் மாடியில் நின்று பட்டம் விடுகிறார்கள். இதற்கு சாதாரண நூல்களைப் பயன்படுத்த வேண்டும். கண்ணாடி துகள்கள் அறைத்து மாஞ்சா போடப்பட்ட நூல் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.

    மாஞ்சா நூல் பயன்படுத்தினாலும் அதனால் யாருக்காவது விபத்து ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விடுபவர்கள் குறித்து பொதுமக்கள் 0416-2258532, 2256966 என்ற தொலைபேசி எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    அ.தி.மு.க. மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வேலூர் அம்மா உணவகத்தில் 3 வேளையும் இலவச உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் கே. சி.வீரமணி தொடங்கி வைத்தார்.

    வேலூர்:

    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவுரையின் படி வேலூர் அண்ணா சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் அ.தி.மு.க. மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் இலவசமாக பொதுமக்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டம் தொடங்க தொடக்க விழா நேற்று நடந்தது.

    விழாவிற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ சதீஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டுபொதுமக் களுக்கு உணவு மற்றும் முக கவசங்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    மேலும் அம்மா உணவக பணியாளர்களுக்கு சுகாதாரமாக உணவகத்தை பராமரிக்க வேண்டும் என்றும் சுத்தமான உணவை கையுறை முகக் கவசங்கள் கொண்டு தயாரித்து வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

    பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் முதல்வரின்அறிவுரைகளை பின்பற்றினால் கொரோனா எனும் இந்த கொடிய நோயை தமிழகத்தில் இருந்து விரட்ட முடியும். மேலும் வீட்டிலேயே இருந்து நோய் பரவாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் வேலூர் கிழக்கு மாவட்ட இணை செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பகுதி செயலாளர் நாகு, தகவல் தொழில்நுட்ப நிர்வாகி ராஜசேகர், பகுதி நிர்வாகிகள் முனுசாமி, மகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தினமும் சுமார் 1500 நபர்கள் உணவருந்தும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஜனனீ சதீஷ்குமார் தெரிவித்தார்.

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 17 பேர் சிகிச்சைக்கு பின் ஆஸ்பத்திரியில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 22 பேரும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 39 பேரும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 18 பேரும் என மொத்தம் 79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    இதில் 66 பேர் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் 11 பேர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் கடந்த வாரம் குணமடைந்து வீடு திரும்பினர்.

    வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே சிகிச்சை பெற்ற 2 பேரில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

    இந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த 20 பேர் கடந்த 21-ந்தேதி குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

    அவர்களை தொடர்ந்து நேற்று மதியம் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 10 பேர் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் என மொத்தம் 17 பேர் குணமடைந்தனர். அவர்களை டீன் செல்வி சுகாதார துணை இயக்குனர் மணிவண்ணன் மற்றும் செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் பழங்கள் வழங்கி அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் இன்று வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 6 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 10 பேர், திருப்பத்தூரை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 17 பேர் குணமடைந்தனர். அவர்களை இன்று காலை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட 79 பேரில் 57 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

    வேலூரில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் வசூலிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாநகர பகுதியில் ஊரடங்கு மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    ஆனாலும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை நேரங்களிலும் ஏராளமானோர் வீடுகளை விட்டு வெளியேறி பைக்கில் சுற்றி திரிகின்றனர். இவர்களை மடக்கி போலீசார் விசாரித்தால் மருந்து மற்றும் உணவு வாங்க செல்வதாக காரணம் கூறுகின்றனர்.

    மேலும் சில வாலிபர்கள் அத்துமீறி சாலைகளில் சுற்றித் திரிகின்றனர்.இதை தடுக்க போலீசார் கட்டாய ஹெல்மட் அமல் படுத்தி உள்ளனர்.

    இதனால் வேலூரில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளுக்கு உடனடி அபராதம் வசூலிக்கப்படுகிறது.

    வேலூர் கிரீன் சர்கிள் அண்ணா சாலை காட்பாடி தொரப்பாடி சத்துவாச்சாரி பகுதிகளில் இன்று காலையில் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    2 நாட்களில் ஹெல்மெட் அணியாத 500 க்கும் மேற்பட்டோரிடம் அபராதம் வசூலிக்கபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    வேலூரில் ஊரடங்கை மீறி ஓட்டலில் சமூக இடைவெளி கடை பிடிக்காத துணிக்கடை மற்றும் ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
    வேலூர்

    வேலூர் தாசில்தார் ரமேஷ்,வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் இன்று காலை வேலூர் மூங்கில் மண்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஊரடங்கு மீறி திறந்திருந்த துணிக்கடைக்கு சீல் வைத்தனர்.

    மேலும் அங்குள்ள ஓட்டலில் சமூக இடைவெளி கடை பிடிக்கவில்லை இதனால் அந்த ஓட்டலுக்கும் சீல் வைத்தனர்.
    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் காய்கறி வாங்க வந்த தொழிலாளி லாரி மோதி படுகாயம் அடைந்தார்.
    வேலூர்:

    வேலூர் கஸ்பா வசந்தபுரத்தை சேர்ந்தவர் தேவநாதன். இவர் செல்லியம்மன் கோவில் எதிரேயுள்ள பார்க்கிங்கில் வேலை செய்து வருகிறார். இன்று காலை வேலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டில் காய்கறிகளை வாங்கிக் கொண்டு தனது பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    செல்லியம்மன் கோவில் சாலையில் இருந்து எதிர் திசைக்கு சென்றபோது வேலூரில் இருந்து ஆந்திராவுக்கு சென்ற லாரி தேவநாதன் மீது மோதியது.

    இதில் லாரியின் சக்கரம் அவரது கால் மீது ஏறி இறங்கியதில் காலில் அடிப்பகுதி நசுங்கியது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவநாதனின் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    ×