search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாஞ்சா நூல்"

    • வனம், வன விலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாநில அரசுக்கு அரசியல் சாசனம் வழிவகைகளை செய்தளித்துள்ளது.
    • உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் மாஞ்சா நூல் மற்றும் மக்காத நைலான் உள்ளிட்ட செயற்கை இழை நூல்களை பயன்படுத்தத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாகுவின் ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வனம், வன விலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாநில அரசுக்கு அரசியல் சாசனம் வழிவகைகளை செய்தளித்துள்ளது. பட்டங்கள் பறக்கவிடப்பட்டபோது பசையுடன் கண்ணாடித் துகள் தடவப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தியதால் மக்கள் பலரும், பறவைகளும் காயமடைந்தனர். அதுமட்டுமல்லாமல் சில இடங்களில் மக்களும், மிருகங்கள், பறவைகள் இறக்க நேரிட்டன.

    எனவே மாஞ்சாவில் இருந்து மக்களையும் மற்ற உயிரினங்களையும் காப்பாற்றுவதற்கான அவசியம் எழுந்தது. அவை மக்கிப்போகாமல் நிலம், ஆறு, குளம் போன்ற இடங்களில் ஆங்காங்கு கிடப்பதால், அதில் சிக்கிக்கொள்ளும் உயிரினங்கள் மூச்சு திணறியும், அதை உண்பதால் பலவித சிரமங்களுக்கு ஆளாகியும் இறந்துவிடுகின்றன.

    இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் தேசிய பசுமை தீர்ப்பாயம் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், மாஞ்சா நூல்கள் அல்லது பட்டம் பறக்க உபயோகப்படுத்தப்படும் நைலான் நூல்கள் அல்லது செயற்கை இழையால் செய்யப்பட்ட, பூசப்பட்ட நூல்கள் மற்றும் மக்கிப்போகாத நூல்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவை உபயோகப்படுத்தப்படாததை மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

    எனவே மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவு ஆகியவற்றின் அடிப்படையில் சில உத்தரவுகளை அதிகாரிகளுக்கு கவர்னர் பிறப்பித்துள்ளார்.

    அதன்படி, மாஞ்சா நூல் உள்பட மக்கிப்போகாத தன்மையுள்ள, பட்டம் பறக்க பயன்படுத்தப்படும் நைலான் நூல், பிளாஸ்டிக் நூல், செயற்கை இழையால் செய்யப்பட்ட நூல்கள் ஆகியவற்றை தயாரிப்பது, விற்பது, சேமித்து வைப்பது, கொள்முதல் செய்வது, இறக்குமதி செய்வது என அனைத்து நடவடிக்கைகளுக்கு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்படுகிறது.

    இந்த உத்தரவை அனைத்து மாவட்ட கலெக்டர்கள், வன அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேலான போலீஸ் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையர்கள் அமல்படுத்த வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும். உடனடியாக இந்த உத்தரவு செயல்பாட்டுக்கு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • தடையை மீறி மாஞ்சா நூல் பட்டம் தயாரித்து விற்றவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சென்னையில் மாஞ்சா நூல் பட்டத்தால் தொடர்ச்சியாக மனித உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும் பலர் காயம் அடைந்து உடல் ஊனம் அடைந்தனர். இதையடுத்து சென்னையில் மாஞ்சா நூல் பட்டம் தயாரிக்க, பறக்க விட, விற்பனை செய்ய, சேமித்து வைக்க போலீஸ் கமிஷனர் தடை விதித்தார். இதையும் மீறி மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    தடையை மீறி மாஞ்சா நூல் பட்டம் தயாரித்து விற்றவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் மாஞ்சா நூல் பட்டம் மீதான தடையை மேலும் 60 நாட்களுக்கு நீட்டித்து போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். மாஞ்சாவுக்கு நேற்று (2-ந்தேதி) முதல் அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை 60 நாட்கள் தடை நீடிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • பட்டம் பறக்க பயன்படுத்தக்கூடிய மாஞ்சா நூல் நிக்கி சரண் கழுத்தில் திடீரென மாட்டியது.
    • தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாஞ்சா தடவி பறக்கவிட்டவர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் நிக்கி சரண் (வயது33). அவரது பெண் நண்பர் வந்தனா (33). சாலி கிராமத்தை சேர்ந்தவர். இருவரும் ஒரே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

    நேற்று இரவு இருவரும் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் தேனாம்பேட்டை விஜயராகவா தெருவில் சென்றனர். அப்போது பட்டம் பறக்க பயன்படுத்தக்கூடிய மாஞ்சா நூல் நிக்கி சரண் கழுத்தில் திடீரென மாட்டியது. இதை சற்றும் எதிர் பார்க்காத அவர் கழுத்து அறுந்த நிலையில் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். அப்போது பெண் நண்பர் வந்தனா சுதாரித்துக் கொண்டு நண்பரை காப்பாற்ற மாஞ்சா நூலை இழுத்த போது அவரது கை விரல்களில் காயம் ஏற்பட்டது.

    இருவருக்கும் ரத்தக் காயம் ஏற்பட்டு வீதியில் நின்ற நிலையில் அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர். கழுத்து பகுதி பலமாக வெட்டப்பட்ட நிலையில் இருந்த நிக்கி சரண் மற்றும் வந்தனா இருவரும் அங்கிருந்து கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாஞ்சா தடவி பறக்கவிட்டவர்கள் யார் என்று விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் மாஞ்சா நூல் மூலம் பட்டம் பறக்கவிட்டதாக கோயம்பேடு பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவனை கைது செய்தனர்.
    • மாஞ்சா நூல் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை.

    போரூர்:

    மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிடவும், மாஞ்சா நூல் தயாரிப்பு, விற்பனைக்கும் ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டு உள்ளது. எனினும் பல்வேறு இடங்களில் மாஞ்சா நூலில் காற்றாடி விடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில் மாஞ்சா நூல் காற்றாடியால் 3 பேரின் கழுத்து அறுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் இவாஞ்சலின் (வயது23) சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் தனது நண்பர் அஜய் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு மேம்பாலத்தில் அரும்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எங்கிருந்தோ அறுந்து வந்த மாஞ்சா நூல் அவர்கள் 2 பேரின் கழுத்திலும் சிக்கி அறுத்தது.

    இதில் நிலை தடுமாறிய இவாஞ்சலின், அஜய் ஆகியோர் மோட்டார் சைக்கிளோடு கிழே விழுந்தனர். இதில் அவர்கள் இருவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

    இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாஞ்சா நூல் மூலம் பட்டம் பறக்கவிட்டதாக கோயம்பேடு பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவனை கைது செய்தனர்.

    தரமணியை சேர்ந்தவர் குணசீலன். இவர் மோட்டார் சைக்கிளில் பரங்கிமலை பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பறந்து வந்த மாஞ்சா நூல் குணசீலனின் கழுத்தை அறுத்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, மாஞ்சா நூல் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்றனர்.

    • மாஞ்சா நூல் தயாரித்து விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    • மாஞ்சா நூல் வைத்து காற்றாடி விட்டவர்கள் குறித்து எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    சென்னையில் மாஞ்சா நூலில் காற்றாடி விடுவது தடை செய்யப்பட்டு உள்ளது. மாஞ்சா நூல் அறுந்து செல்லும்போது அது வாகனங்களில் செல்பவர்கள் மீது விழுந்து காயத்தையும் சில நேரங்களில் மரணத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

    இதையடுத்து மாஞ்சா நூல் தயாரித்து விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் மாஞ்சா நூலில் காற்றாடி விடுவது தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் மணலி புதுநரை சேர்ந்த அண்ணா துரை (வயது40) என்பவர் பிராட்வே நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    எர்ணாவூர் மேம்பாலம் லிப்ட் கேட் அருகே சென்று கொண்டு இருந்தபோது எங்கேயோ அறுந்து பறந்து வந்த மாஞ்சாநூல் அண்ணா துரை கழுத்தில் சுற்றி இறுக்கியது. இதில் கழுத்து அறுந்து ரத்தம் கொட்டியது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் அண்ணாதுரையை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மாஞ்சா நூல் வைத்து காற்றாடி விட்டவர்கள் குறித்து எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல இடங்களில் மாஞ்சா நூல்கள் மூலம் ஆபத்தான வகையில் பட்டம் விடப்படுகிறது.
    • சென்னையில் மாஞ்சா நூல் தயாரிப்பு, விற்பனையை முழுவதும் கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை மாநகர போலீஸ் எல்லையில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல்களை தயாரித்து விற்பனை செய்பவர்களை கண்காணிக்க ஒவ்வொரு காவல் மாவட்டங்கள் வாரியாக ஏற்கனவே தனிப்படையினர் அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனையும் மீறி பல இடங்களில் மாஞ்சா நூல்கள் மூலம் ஆபத்தான வகையில் பட்டம் விடப்படுகிறது.

    இதையடுத்து நேற்று முன்தினம் முதல் வருகிற செப்டம்பர் 6-ந் தேதி வரை சென்னை மாநகர போலீஸ் எல்லையில் மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்ய தடைவிதித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.

    மேலும் இந்த உத்தரவை மீறி யாரேனும் சட்ட விரோதமாக மாஞ்சா நூல் தயாரித்து விற்பனை செய்தாலோ அல்லது மாஞ்சா நூலில் பட்டம் விட்டாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து சென்னையில் மாஞ்சா நூல் தயாரிப்பு, விற்பனையை முழுவதும் கட்டுப்படுத்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×