search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோயம்பேடு-பரங்கிமலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பெண் என்ஜினீயர் உள்பட 3 பேரை மாஞ்சா நூல் அறுத்தது- போலீசார் எச்சரிக்கை
    X

    கோயம்பேடு-பரங்கிமலையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது பெண் என்ஜினீயர் உள்பட 3 பேரை மாஞ்சா நூல் அறுத்தது- போலீசார் எச்சரிக்கை

    • போலீசார் மாஞ்சா நூல் மூலம் பட்டம் பறக்கவிட்டதாக கோயம்பேடு பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவனை கைது செய்தனர்.
    • மாஞ்சா நூல் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை.

    போரூர்:

    மாஞ்சா நூல் காற்றாடி பறக்கவிடவும், மாஞ்சா நூல் தயாரிப்பு, விற்பனைக்கும் ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டு உள்ளது. எனினும் பல்வேறு இடங்களில் மாஞ்சா நூலில் காற்றாடி விடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில் மாஞ்சா நூல் காற்றாடியால் 3 பேரின் கழுத்து அறுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை, அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் இவாஞ்சலின் (வயது23) சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் தனது நண்பர் அஜய் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு மேம்பாலத்தில் அரும்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எங்கிருந்தோ அறுந்து வந்த மாஞ்சா நூல் அவர்கள் 2 பேரின் கழுத்திலும் சிக்கி அறுத்தது.

    இதில் நிலை தடுமாறிய இவாஞ்சலின், அஜய் ஆகியோர் மோட்டார் சைக்கிளோடு கிழே விழுந்தனர். இதில் அவர்கள் இருவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

    இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாஞ்சா நூல் மூலம் பட்டம் பறக்கவிட்டதாக கோயம்பேடு பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவனை கைது செய்தனர்.

    தரமணியை சேர்ந்தவர் குணசீலன். இவர் மோட்டார் சைக்கிளில் பரங்கிமலை பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பறந்து வந்த மாஞ்சா நூல் குணசீலனின் கழுத்தை அறுத்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து பரங்கிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, மாஞ்சா நூல் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது என்றனர்.

    Next Story
    ×