search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகம் முழுவதும் மாஞ்சா நூல் பயன்படுத்த தடை: தமிழக அரசு உத்தரவு
    X

    தமிழகம் முழுவதும் மாஞ்சா நூல் பயன்படுத்த தடை: தமிழக அரசு உத்தரவு

    • வனம், வன விலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாநில அரசுக்கு அரசியல் சாசனம் வழிவகைகளை செய்தளித்துள்ளது.
    • உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் மாஞ்சா நூல் மற்றும் மக்காத நைலான் உள்ளிட்ட செயற்கை இழை நூல்களை பயன்படுத்தத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதுகுறித்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாகுவின் ஆணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    வனம், வன விலங்குகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு மாநில அரசுக்கு அரசியல் சாசனம் வழிவகைகளை செய்தளித்துள்ளது. பட்டங்கள் பறக்கவிடப்பட்டபோது பசையுடன் கண்ணாடித் துகள் தடவப்பட்ட மாஞ்சா நூலை பயன்படுத்தியதால் மக்கள் பலரும், பறவைகளும் காயமடைந்தனர். அதுமட்டுமல்லாமல் சில இடங்களில் மக்களும், மிருகங்கள், பறவைகள் இறக்க நேரிட்டன.

    எனவே மாஞ்சாவில் இருந்து மக்களையும் மற்ற உயிரினங்களையும் காப்பாற்றுவதற்கான அவசியம் எழுந்தது. அவை மக்கிப்போகாமல் நிலம், ஆறு, குளம் போன்ற இடங்களில் ஆங்காங்கு கிடப்பதால், அதில் சிக்கிக்கொள்ளும் உயிரினங்கள் மூச்சு திணறியும், அதை உண்பதால் பலவித சிரமங்களுக்கு ஆளாகியும் இறந்துவிடுகின்றன.

    இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் தேசிய பசுமை தீர்ப்பாயம் 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பு வழங்கியது. அதில், மாஞ்சா நூல்கள் அல்லது பட்டம் பறக்க உபயோகப்படுத்தப்படும் நைலான் நூல்கள் அல்லது செயற்கை இழையால் செய்யப்பட்ட, பூசப்பட்ட நூல்கள் மற்றும் மக்கிப்போகாத நூல்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவை உபயோகப்படுத்தப்படாததை மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் என்று பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது.

    எனவே மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவு ஆகியவற்றின் அடிப்படையில் சில உத்தரவுகளை அதிகாரிகளுக்கு கவர்னர் பிறப்பித்துள்ளார்.

    அதன்படி, மாஞ்சா நூல் உள்பட மக்கிப்போகாத தன்மையுள்ள, பட்டம் பறக்க பயன்படுத்தப்படும் நைலான் நூல், பிளாஸ்டிக் நூல், செயற்கை இழையால் செய்யப்பட்ட நூல்கள் ஆகியவற்றை தயாரிப்பது, விற்பது, சேமித்து வைப்பது, கொள்முதல் செய்வது, இறக்குமதி செய்வது என அனைத்து நடவடிக்கைகளுக்கு தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்படுகிறது.

    இந்த உத்தரவை அனைத்து மாவட்ட கலெக்டர்கள், வன அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேலான போலீஸ் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் ஆணையர்கள் அமல்படுத்த வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றாதவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும். உடனடியாக இந்த உத்தரவு செயல்பாட்டுக்கு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×