என் மலர்
செய்திகள்

வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திரா செல்லும் 2 சாலைகள் தடுப்புச்சுவர் கட்டி மூடப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையையொட்டி காட்பாடி, கிறிஸ்டியான் பேட்டை, பரதராமி, பத்தலபள்ளி, சைனகுண்டா, சேர்க்காடு, பொன்னை (மாத்தாண்ட குப்பம்) ஆகிய 6 சாலை உள்ளன.
இங்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், மற்றும் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே தமிழகத்திற்கு அனுமதிக்கப்படுகின்றன. மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
இந்த நிலையில் சைனகுண்டா, பொன்னை (மாத்தாண்ட குப்பம்) ஆகிய சாலைகளை முழுமையாக மூடுவதற்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
இதனையடுத்து சைனகுண்டா, மாத்தாண்ட குப்பம் ஆகிய இடங்களில் தமிழக- ஆந்திர சாலையின் குறுக்கே தடுப்பு சுவர் கட்டப்பட்டது.
30 அடி நீளத்துக்கு சாலையின் குறுக்கே 4 அடி உயரம் மற்றும் 3 அடி அகலத்துக்கு தொட்டி போல் தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது.
தொட்டி போல் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவருக்கு இடையே 3 அடி அகலத்துக்கு மண் கொட்டப்பட்டுள்ளது. வேகமாக வந்து தடுப்புச்சுவர் மீது மோதாமல் இருக்க தடுப்பு சுவருக்கு சற்று தூரத்தில் சாலையின் இரு புறமும் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
தடுப்பு சுவர் அமைத்து மூடப்பட்டுள்ள சைனகுண்டா, பொன்னை மாத்தாண்டம் வழியாக எந்த வாகனமும் வர முடியாது.
சைனா குண்டா வழியாக வரும் வாகனங்கள் பரதராமி சோதனைச்சாவடி வழியாகவும், மாத்தாண்டகுப்பம் வழியாக வரும் அனுமதி பெற்ற வாகனங்கள் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை மற்றும் சேர்க்காடு சோதனை சாவடி வழியாகவும் வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






