search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தையில் தண்ணீரில் மிதக்கும் காய்கறிகள்.
    X
    தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தையில் தண்ணீரில் மிதக்கும் காய்கறிகள்.

    வேலூர், திருவண்ணாமலையில் சூறை காற்றுடன் கொட்டிய கோடை மழை

    வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் சூறை காற்றுடன் கோடை மழை பெய்தது. வெயிலில் தவித்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வைத்தது. இரவு நேரங்களில் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் இரவு தூங்க முடியாமல் தவித்தனர். நேற்று அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி வெயில் சுட்டெரித்தது. மாலையில் திடீரென தட்பவெப்ப நிலை மாறியது. வேலூர் மாவட்டம் முழுவதும் கருமேகம் சூழ்ந்தது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம் வாணியம்பாடி திருப்பத்தூர் பகுதிகளில் மழை பெய்தது. ஆலங்காயத்தில் அதிகபட்சமாக 28 மில்லி மீட்டர் மழை பதிவானது. வாணியம்பாடியில் 11 மில்லி மீட்டர் திருப்பத்தூரில் 2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    இன்று காலையில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கருமேகம் சூழ்ந்தது. காலை 7 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக வெயிலில் தவித்த பொதுமக்கள் குளிரச் செய்த மழையால் நிம்மதி அடைந்தனர்.

    காட்பாடியில் பெய்த பலத்த மழையின் காரணமாக தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தையில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இதில் தண்ணீரில் காய்கறிகள் மிதந்ததால் வியாபாரிகள் வேதனையடைந்தனர். அரக்கோணம் அருகே உள்ள வளர்புரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் இவரது மகள் மகாலட்சுமி (வயது 16). அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். 

    இன்று காலையில் அந்த பகுதியில் இடி மின்னலுடன் லேசான சாரல் மழை பெய்தது. அப்போது வீட்டின் பின்புறம் உள்ள நிலத்திற்கு சென்ற மகாலட்சுமி இடி தாக்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் இன்று காலை பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடும் வெயிலால் அவதிப்பட்ட மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இந்த மழை செடி கொடிகளுக்கும் புத்துயிர் ஊட்டுவதாக அமைந்தது.
    Next Story
    ×