என் மலர்tooltip icon

    வேலூர்

    காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள சோதனைச்சாவடியில் கண்காணிப்பு உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில எல்லைகளில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகிறது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள சோதனைச்சாவடியில் கண்காணிப்பு உயர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில எல்லைகளில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகிறது.

    இந்த கண்காணிப்பு உயர் கோபுரத்தின் மீது 3 ஷிப்டுகளில் போலீசார் பணியில் ஈடுபட்டு கண்காணிக்கின்றனர்.

    வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுகிறது.

    உரிய அனுமதி பெற்று வருபவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு வேலூர் மாவட்ட எல்லைகளில் 14 இடங்களில் கொரோனா பரிசோதனை சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் தங்கியிருக்கக்கூடிய பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    அதன்படி வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் தங்கியுள்ள வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் அரப்பாக்கம், வல்லம், ஆசனாம்பட்டு, காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை, திருவலம், கீரைசாத்து, தெங்கால், முத்தரசி குப்பம், பரதராமி, சைனகுண்டா, மாதனூர், பத்தல பள்ளி, அழிஞ்சி குப்பம், ஓணாங்குட்டை ஆகிய 14 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கு மருத்துவக் குழுவினர் போலீசார் உள்ளிட்ட குழுவினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் வேலூர் பொதுமக்களை கொரோனா பரிசோதனைக்கு பின்னர் அனுப்பி வைக்கின்றனர்.

    மேலும் வேலூர் மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் கிராமப் பகுதிகளில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து யாராவது வந்திருக்கிறார்களா? என கண்காணிக்க வேண்டும்.

    அப்படி வந்திருந்தால் அவர்கள் குறித்த விவரங்களை வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை, வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தானாக முன்வந்து கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ராணிப்பேட்டை மீண்டும் சிவப்பு மண்டலத்திற்கு மாறியது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கனவே 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 16 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதால் சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியது.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திலுருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வந்த 58 வயதுடைய நபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. அதனால் ஆரஞ்சு நிறத்திலிருந்து ராணிப்பேட்டை மாவட்டம் நேற்று மீண்டும் சிவப்பு மண்டலத்திற்கு மாறியது.

    புதியதாக பாதிப்பு ஏற்பட்ட நபர் கடந்த 28ம் தேதி காலை நமது மாவட்டத்திற்கு வந்துள்ளார். அவர் வந்த உடனே பரிசோதனை செய்யப்பட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவரது குடும்ப உறுப்பினருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. புதியதாக கொரோனா பாதிப்பு நம் மாவட்டத்திலிருந்து உருவாகவில்லை.

    கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவித மாற்றம் இல்லை. தற்போதுள்ள நிலையே தொடரும்.

    அரசு உத்தரவுபடி கட்டுப்பாட்டு பகுதி இல்லாத இடங்களில் குறிப்பிட்ட அத்தியாவசிய பணிகளுக்காக அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகள் மட்டும் செயல்படுகிறது. வெளிமாநில வெளி மாவட்டங்களில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வந்திருந்தால் அருகில் உள்ளவர்கள் உடனடியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சென்னை கோயம்பேடு உள்பட அருகில் உள்ள மாவட்டங்களுக்கு அத்தியாவசிய பொருளான காய்கறியை கொண்டு வருவதற்கு பாஸ் பெற்று சென்று வந்தவர்களையும் பரிசோதனை செய்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்து மத்திய மாநில அரசுகளின் உத்தரவுபடி தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ள ஒருசில இடங்கள் 28 நாட்கள் கால அவகாசம் முடியும் தருவாயில் உள்ளது.

    அந்த பகுதிகளில் மட்டும் அத்தியாவசிய தேவைகள் பொருட்கள் கிடைக்க ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 1,000 பேருக்கு இலவச அரிசி, மளிகை, காய்கறிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 1,000 பேருக்கு இலவச அரிசி, மளிகை, காய்கறிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் கே.எம்.ஐ. சீனிவாசன் தலைமை தாங்கினார். தொகுதி எம்.எல்.ஏ., ஜி.லோகநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., கே.எம்.கலைச்செல்வி, ஒன்றிய அவைத்தலைவர் தேவன், ஒன்றிய மாவட்டப் பிரதிநிதி மஞ்சுளா ராஜா, மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரமேஷ்குமார், துணை செயலாளர்கள் பொன்முடி, ரோஸ்மேரி வஜ்ஜிரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    குடியாத்தம் ஒன்றிய செயலாளர் சிவா, வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு உள்பட மாவட்ட பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முழு ஏற்பாடுகளையும் தன் சொந்த செலவில் ஒன்றிய செயலாளர் கே.எம்.ஐ.சீனிவாசன் செய்திருந்தார்.
    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பணிபுரியும் நர்சுகள் தங்குவதற்காக காட்பாடி தனியார் கல்லூரி, வேலூர் தனியார் ஓட்டல்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கொரோனா வார்டில் உள்ள டாக்டர்களுக்கு வேலூர் தனியார் கல்லூரியில் அறை ஒதுக்கி உள்ளனர். நர்சுகளுக்கு தங்குமிடம் ஒதுக்குவதில் இழுபறி நீடித்துள்ளது. நேற்று இரவு பணி முடிந்த நர்சுகள் தங்குவதற்கு இடமில்லாமல் அலைக்கழிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த நர்சுகள் அரசு ஆஸ்பத்திரி முன்பு திருவண்ணாமலை சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த மருத்துவ கல்லூரி ஆர்.எம்.ஓ. இன்பராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நர்சுகளிடம் தங்குவதற்கு அறை, உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் ஆஸ்பத்திரியில் உள்ள நர்சிங் விடுதியில் இரவு தங்க வைக்கப்பட்டனர்.

    நர்சுகள் தங்குவதற்காக காட்பாடி தனியார் கல்லூரி மற்றும் வேலூர் தனியார் ஓட்டல்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 2 இடங்களில் இன்று முதல் நர்சுகள் பணி முடிந்து தங்கிக் கொள்ளலாம். மேலும் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    வேலூரில் வெளிமாநிலங்கள் சென்று வந்த 182 பேர் வீடுகளில் கொரோனா ஸ்டிக்கர் ஒட்டிய அதிகாரிகளை கண்டித்து டிரைவர்கள் முற்றுகையிட்டனர்.

    வேலூர்:

    கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் வெளிமாவட்டங்களில் இருந்து வேலூர் சிஎம்சி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக வந்த வடமாநிலத்தவர்கள் உணவு, தங்குவதற்கு பணமில்லை என்று கூறி கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

    இதையடுத்து அவர்களுக்கு லாட்ஜ் கட்டணத்தில் சலுகை, 3 வேளை உணவும் வழங்கப்பட்டது. இதற்கிடையே சிகிச்சை முடிந்த அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து கடந்த வாரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் வாடகை கார் மூலம் ஜார்கண்ட், பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊரடங்கு காரணமாக வடமாநிலங்கள் சென்ற வாகனங்கள் மீண்டும் வேலூர் வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த மாநில அரசின் உதவியோடு 2 நாட்களுக்கு முன்பு டிரைவர்களின் ஒரு குழுவினர் வேலூர் திரும்பினர். வேலூர் வந்த 182 டிரைவர்களை அலமேலுமங்காபுரம் தனியார் மண்டபத்தில் தங்க வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 132 பேருக்கு அறிகுறி இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரிய வந்தது.

    இதையடுத்து 132 பேர் நேற்று முன்தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 50 டிரைவர்களுக்கு பரிசோதனை செய்யப் பட்டது. அவர்களுக்கு நேற்று பாதிப்பில்லை என்று முடிவு வெளியானது.

    இதற்கிடையே வெளிமாநிலங்களுக்கு சென்று திரும்பிய டிரைவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர்கள் அவர்கள் தங்கியிருந்த மண்டபத்திற்கு சென்று அங்கிருந்த போலீசாரிடம் முறையிட்டனர். தொடர்ந்து எங்களுக்கு முடிவு தெரியும் வரையில் இங்கிருந்து செல்ல மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கிருந்த டிரைவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கொரோனா பாதிப்பில்லாத எங்கள் வீடுகளில் ஏன் கொரோனா ஸ்டிக்கர் ஓட்டுநீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிரைவர்களிடம் பராமரிப்பு இல்லாத இல்லாவிட்டாலும் நீங்கள் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்துள்ளதால் உங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் அந்த ஸ்டிக்கரில் பாதிக்கப்பட்டவர் என்று குறிப்பிடப்படவில்லை. வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்று தான் உள்ளது.

    இதை நீங்கள் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார். இதை ஏற்ற டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முகக்கவச தானியங்கி எந்திரத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான 39 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 33 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    வெளியில் செல்லும் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் முககவசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முகக்கவச தானியங்கி எந்திரத்தை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்தார்.

    இந்த முகக்கவச தானியங்கி எந்திரத்தை ராணிப்பேட்டை பெல் சப்ளையர்ஸ் அசோசியேசன் தயாரித்து கொடுத்துள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் முகக்கவசம் தட்டுப்பாடு போக்க கலெக்டர் திவ்யதர்ஷினி உத்தரவை ஏற்று தானியங்கி முகக்கவச சாதன எந்திரம் ராணிப்பேட்டையில் நிறுவப்பட்டுள்ளது.

    இந்த தானியங்கி எந்திரத்தில் ரூ.5 சில்லரை நாணயத்தை போட்டால் முகக்கவசம் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஏழை எளிய பொதுமக்கள் அனைவரும் 5 ரூபாய் விலையில் தரமான முகக்கவசத்தை பெறலாம்.

    வாணியம்பாடி இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருடன் பணி செய்த போலீசார் 41 பேருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்பது பரிசேதனையில் தெரியவந்துள்ளது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த போலீஸ் நிலையம் மூடப்பட்டது. வளாகம் முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டன. போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்த போலீசார் மற்றும் பெண் இன்ஸ்பெக்டர் பணியின் போது சந்தித்த ஆம்பூர் வாணியம்பாடி போலீசார் என மொத்தம் 41 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லை. இதனை தொடர்ந்து அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி, சிஎம்சி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த வேலூர், திருப்பத்தூரை சேர்ந்த 5 பேர் குணமடைந்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 22 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 39 பேர், திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 18 பேர் என மொத்தம் 79 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 16 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 33 பேரும், வேலூர் மாவட்டத்தில் 10 பேரும் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    3 மாவட்டங்களிலும் சேர்த்து 19 பேர் தற்போது அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி மற்றும் சி.எம்.சி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் திருப்பத்தூரை சேர்ந்த ஒருவர் இன்று குணமடைந்தனர். அவர்களை இன்று மாலை வீடுகளுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர். இதன் மூலம் வேலூரில் 7 பேர் திருப்பத்தூரில் ஒருவர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வேலூரில் மூப்பனார் ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் மற்றும் த.மா.கா. நிர்வாகிகளுக்கு வேலூர் மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி மளிகை பொருட்கள் வழங்கினார்.

    வேலூர்:

    வேலூரில் மூப்பனார் ஆட்டோ ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் மற்றும் த.மா.கா. நிர்வாகிகளுக்கு வேலூர் மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி 15 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறி ஆகியவற்றை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட தலைவர் பாலகணேஷ், மாவட்ட செயலாளர் சேகர், இளைஞரணி துணை தலைவர் சீனிவாசன், சதீஷ்குமார், வெங்கடேசன், தொழிற்சங்க தலைவர் முனியப்பன், ராஜேஷ்கண்ணா, தினேஷ்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேலூரில் ஊரடங்கால் வீடுகளில் அடைந்துள்ள மக்கள் பகல் நேரங்களில் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். நேற்று அப்பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்ததால் சிறுவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் கொளுத்தியது. இதனால், ஊரடங்கால் வீடுகளில் அடைந்துள்ள மக்கள் பகல் நேரங்களில் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். நேற்று 100 டிகிரி அளவுக்கு வெயில் அடித்தது.

    இந்நிலையில், கோடை வெயிலுக்கு இதம் தரும் வகையில் வேலூரில் நேற்று மாலை காற்று வீசியது. பிறகு லேசான தூறலாக தொடங்கிய மழை ½ மணி நேரத்துக்கும் மேல் கனமழையாக பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.

    தோட்டப்பாளையம், சைதாப்பேட்டை, சத்துவாச்சாரி உள்ளிட்ட சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

    மழைத்துளிகள் சிறுசிறு பனிக்கட்டிகளாக விழுந்ததால் வீடுகளின் கூரைகளில் கற்கள் விழுவது போன்ற ஓசை எழுந்தது. திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்களும், சிறுவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

    கண்ணமங்கலம், சந்தவாசல், படவேடு மற்றும் அதைச் சற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று மாலை சுமார் ½ மணி நேரம் இடி மின்னல் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

    சூறைக்காற்று வீசியதால் ஆங்காங்கே சாலையில் மரங்கள் விழுந்தன. கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் உள்ள ஆரம்ப பள்ளியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. கண்ணமங்கலம்-ஆற்காடு சாலையில் கம்மவான்பேட்டை அருகே சாலையோர மரம் அடியோடு சாய்ந்தது.

    குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவுக்கு அனுமதி இல்லை என வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் திருவிழாக்களில் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழாவும் ஒன்று. இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி வைகாசி மாதம் முதல் நாள் சிரசு விழா கொண்டாடப்படும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த நிலையில் கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் அனைத்து மத விழாக்களும் ரத்து செய்யப்படுகிறது. அதனால் அடுத்த மாதம் நடைபெற இருந்த குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவுக்கு அனுமதி இல்லை என வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

    ×