என் மலர்
செய்திகள்

வேலூரில் ஆலங்கட்டி மழை- சிறுவர்கள் உற்சாசம்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே 100 டிகிரிக்கு அதிகமாக வெயில் கொளுத்தியது. இதனால், ஊரடங்கால் வீடுகளில் அடைந்துள்ள மக்கள் பகல் நேரங்களில் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். நேற்று 100 டிகிரி அளவுக்கு வெயில் அடித்தது.
இந்நிலையில், கோடை வெயிலுக்கு இதம் தரும் வகையில் வேலூரில் நேற்று மாலை காற்று வீசியது. பிறகு லேசான தூறலாக தொடங்கிய மழை ½ மணி நேரத்துக்கும் மேல் கனமழையாக பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியது.
தோட்டப்பாளையம், சைதாப்பேட்டை, சத்துவாச்சாரி உள்ளிட்ட சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.
மழைத்துளிகள் சிறுசிறு பனிக்கட்டிகளாக விழுந்ததால் வீடுகளின் கூரைகளில் கற்கள் விழுவது போன்ற ஓசை எழுந்தது. திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்களும், சிறுவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.
கண்ணமங்கலம், சந்தவாசல், படவேடு மற்றும் அதைச் சற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று மாலை சுமார் ½ மணி நேரம் இடி மின்னல் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.
சூறைக்காற்று வீசியதால் ஆங்காங்கே சாலையில் மரங்கள் விழுந்தன. கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் உள்ள ஆரம்ப பள்ளியின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. கண்ணமங்கலம்-ஆற்காடு சாலையில் கம்மவான்பேட்டை அருகே சாலையோர மரம் அடியோடு சாய்ந்தது.






