என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் சத்துவாச்சாரியில் ரேசன் பொருட்கள் வாங்க வீடு வீடாக டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது
    வேலூர்:

    ரேசன் கடைகளில் பொருட்களை பெற வீடு வீடாக டோக்கன் வழங்கப்படும் என்றும் மாநிலம் முழுவதும் டோக்கன் வழங்கும் பணி நடைபெறும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    அந்த டோக்கன்களில் ரே‌ஷன் பொருட்கள், வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ரேசன் அட்டைதாரர் டோக்கனில் உள்ள நாள், நேரத்தில் பொருட்கள் வழங்கப்படும் கடைக்குச் சென்று அவற்றைப் பெறலாம் என்று கூறியுள்ளனர். பொருட்களை வாங்க வரிசையில் நிற்கும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வேலூர் மாநகர பகுதியில் இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வீடு வீடாக டோக்கன் வினியோகம் செய்துள்ளனர். அதனைப் பெற்ற பொதுமக்கள் ரே‌ஷன் கடைகளில் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

    ஆனால் சத்துவாச்சாரி டபுள் ரோடு பகுதியில் ரேசன் பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் வீடுவீடாக இதுவரை விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

    இதுபற்றி ரேசன் கடை விற்பனையாளரிடம் கேட்டால் வீடு வீடாக வந்து டோக்கன் எதுவும் வழங்கப்படவில்லை. ரேசன் அட்டைதாரர்கள் கடைகளில் வந்து டோக்கன்களை பெற்று பொருட்கள் வாங்கிச் செல்லலாம் என கூறியதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் அந்த கடையில் கூட்டம் அதிகரித்து சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பலர் டோக்கன் வந்தபிறகு பொருட்களை வாங்கலாம் என வீடுகளிலேயே நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். அரசு உத்தரவை மீறி டோக்கன் வீடு வீடாக விநியோகம் செய்யப்படாமல் கடைகளிலேயே இருந்துகொண்டு வழங்குவதை தடுத்து நிறுத்த வேண்டும். அறிவித்தபடி வீடுகள்தோறும் டோக்கன்கள் வழங்கி சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியூர்களில் இருந்து வந்த 3,648 பேர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தின் எல்லைகளில் 14 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

    கடந்த 3 நாட்களில் சென்னையிலிருந்து 1,516 பேர் வந்துள்ளனர். இதில் 10 பேர் கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்தவர்கள். சென்னையில் இருந்து வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

    இதில் 600 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லை. கோயம்பேட்டில் இருந்து வந்த 10 பேர் உள்பட மேலும் 80 பேருக்கு இன்னும் முடிவுகள் வரவில்லை.

    வெளியூர்களிலிருந்து வந்த அனைவரது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளுக்குள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    வெளியே சாலைகளில் சுற்றித் திரியக் கூடாது. தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் பொதுமக்கள் 1077 , 0416 - 2258016 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து 2132 பேர் வந்துள்ளனர். அவர்கள் 21 இடங்களில் அமைந்துள்ள சிறப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர். எனப்படும் கொரோனா கண்டறியும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் மட்டும் ஆஸ்பத்திரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

    பாதிப்பு இல்லை என தெரிய வரும் நபர்கள் அவருடைய வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

    ஆனாலும் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் சுயகட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வேலூரில் ஓட்டல் உள்பட 4 கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. பால், காய்கறி, மளிகை, மருந்து, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் குறிப்பிட்ட நாளில் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை வேலூர் மெயின் பஜாரில் அரசின் உத்தரவை மீறி செல்போன் கடை திறந்திருப்பதாகவும் பி.எம். செட்டித்தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிடுவதாகவும் வேலூர் தாசில்தார் ரமேஷ், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவர்கள் அந்த கடைகளுக்கு சென்று சோதனை செய்ததில் அவை உண்மை என்று உறுதியானது. இதையடுத்து அந்த 2 கடைகளையும் வருவாய்த்துறையினர் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

    இதேபோன்று தொரப்பாடியில் கோழி இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் வருவாய்த்துறையினர் ‘சீல்’ வைத்தனர்.
    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஊருக்கு அனுப்பி வைக்க கோரி வடமாநிலத்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்கம் ஒடிசா ஜார்கண்ட் அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பேர் வேலூரில் தங்கியுள்ளனர்.

    லாட்ஜ்களில் தங்கியுள்ளவர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2,500 பேர் அனுமதி பெற்று கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் ஊருக்கு திரும்பி உள்ளனர். தற்போது உள்ள 7 ஆயிரம் பேரும் தங்கள் ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வடமாநில பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு வருகின்றனர். இன்று காலையிலும் 200-க்கும் மேற்பட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

    அவர்கள் தரையில் அமர்ந்து கோ‌ஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் எஸ்.பி. பிரவேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    வேலூரில் இருந்து வெளியூர் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வர வேண்டாம் கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான பாஸ் எதுவும் வழங்கப்படவில்லை .

    இதற்காக அரசு அறிவித்துள்ள இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து ஆன்லைனில் பாஸ் பெறலாம். இது தொடர்பாக அறிவிப்பு பலகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

    வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர் திரும்பவதற்கு இன்னும் அனுமதி வரவில்லை. அனுமதி கிடைத்த பின்னர் தான் அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல ஆன்லைனில் அனுமதி சீட்டு பெற முடியும்.

    அதற்கான அனுமதி சீட்டு கிடைத்தவுடன் நீங்கள் தங்கியுள்ள லாட்ஜ் உரிமையாளர்களுக்கு பாஸ் பெறுவதற்கான தகவல் தெரிவிக்கப்படும். அதன் பிறகு ஆன்லைன் மூலம் பாஸ் பெற்று சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அரக்கோணம், ராணிப்பேட்டை, காட்பாடி அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று சு.ரவி எம்எல்ஏ கூறியுள்ளார்.

    அரக்கோணம்:

    வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அரக்கோணம் எம்.எல்.ஏ.வுமான சு.ரவி அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அரக்கோணம் நகராட்சி, வாலாஜாப்பேட்டை நகராட்சி, இராணிப்பேட்டை நகராட்சி, மேல்விஷாரம் நகராட்சி, ஆற்காடு நகராட்சி மற்றும் வேலூர் மாநகராட்சியை சேர்ந்த காட்பாடி வடக்கு பகுதி, காட்பாடி தெற்கு பகுதி ஆகிய இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் ஊரடங்கு நாட்களில் நேற்று வரை ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

    அதற்கான முழு செலவையும் வேலூர் கிழக்கு மாவட்டஅ.தி.மு.க. ஏற்றுக் கொண்டது. தற்போது ஊரடங்கு மேலும் 14 நாட்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், நாளை முதல் ஊரடங்கு முடியும் வரை இந்த 7 உணவகங்களில் மக்களுக்கு தொடர்ந்து இலவசமாக உணவு வழங்கப்படும். அதற்கான முழு செலவையும் வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வே ஏற்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் குணம் அடைந்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 22 பேரும் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 40 பேரும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 18 பேரும் என மொத்தம் 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

    இவர்களில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 33 பேரும், வேலூர் மாவட்டத்தில் 14 பேரும் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    3 மாவட்டங்களிலும் சேர்த்து 15 பேர் தற்போது அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரி மற்றும் சி.எம்.சி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் குணம் அடைந்தனர். அவர்கள் இன்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சொந்த ஊருக்கு அனுப்ப கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வடமாநில வாலிபர்கள் முற்றுகையிட்டனர்.

    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்கம் ஒடிசா, ஜார்கண்ட், அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பேர் வேலூரில் தங்கியுள்ளனர்.

    லாட்ஜ்களில் தங்கியுள்ளவர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2,500 பேர் அனுமதி பெற்று கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் ஊருக்கு திரும்பி உள்ளனர். தற்போது உள்ள 7 ஆயிரம் பேரும் தங்கள் ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நேற்று 100-க்கும் மேற்பட்ட வடமாநில பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர்.

    போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    வட மாநிலத்தவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு இன்னும் அனுமதி வரவில்லை. அனுமதி கிடைத்த பின்னர் தான் அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல ஆன்லைனில் அனுமதி சீட்டு பெற முடியும்.

    அதற்கான அனுமதி சீட்டு கிடைத்தவுடன் நீங்கள் தங்கியுள்ள லாட்ஜ் உரிமையாளர்களுக்கு பாஸ் பெறுவதற்கான தகவல் தெரிவிக்கப்படும். அதன் பிறகு ஆன்லைன் மூலம் பாஸ் பெற்று சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும் என்றார். இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    ராணிப்பேட்டை பகுதியில் உள்ள வடமாநில ஜவுளி வியாபாரிகள் 14 பேர் நேற்று ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அனைவரும் சொந்த மாநிலத்திற்கு செல்ல வாகன அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அவர்களிடம் ஆன்லைனில் விண்ணப்பிக்க கூறியும் அனுமதி வந்தவுடன் ஊருக்கு செல்லலாம் என கூறி அதிகாரிகள் அவர்களை அனுப்பி வைத்தனர்.

    ராணிப்பேட்டை அருகே குழந்தைக்கு உணவு ஊட்டுவதில் ஏற்பட்ட தகராறில் என்ஜினீயரை கத்தியால் குத்தி கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பெல் ஊரகத்தில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் அகிலேஷ்குமார் சர்மா (வயது 37). ஜார்கண்டை சேர்ந்த இவர் ராணிப்பேட்டை சிப்காட் பெல் நிறுவனத்தில் உதவி பொறியாளர் மேற்பார்வையாளராக வேலைபார்த்து வந்தார்.

    இவரது மனைவி ஆஷாகுமாரி(27). இவர்களது மகன் அயோக்குமார் (5). இவர்களுடன் அகிலேஷ்குமாரின் தாய் சாவித்திரிதேவி வசித்து வந்தார்.

    ஊரடங்கால் அகிலேஷ்குமார் சர்மா, வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். அவரது மனைவி ஆஷாகுமரிக்கும் அவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மகன் அயோக்குமார் சரியாக சாப்பிடுவதில்லை என்று கூறப்படுகிறது. அவனுக்கு உணவு ஊட்டுவதில் கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த ஆஷாகுமாரி கணவன் அகிலேஷ்குமார் சர்மாவை காற்கறி வெட்டும் கத்தியால் குத்தினார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து ஆஷாகுமாரியை போலீசார் கைது செய்தனர்.

    கே.விகுப்பம் அருகே திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    கே.வி.குப்பம்:

    கே.வி.குப்பத்தை அடுத்த வடுகந்தாங்கல் அஞ்சுகம்நகரை சேர்ந்த தம்பதியர் கண்ணப்பசெட்டியார்-பத்மாவதி. இவர்களின் மகன் சங்கர் (வயது 45), வியாபாரி. இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.

    அதேபகுதியில் உள்ள இ.பி.காலனியைச் சேர்ந்த தம்பதியர் சாந்தகுமார்-சம்பூர்ணம். இவர்களின் மகள் மகாலட்சுமி (20). இவரும், சங்கரும் 2 ஆண்டுகளாக காதலித்தனர். ஊரடங்கையொட்டி இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர் கோவிலில் எளிய முறையில் திருமணம் நடந்தது.

    நேற்று மதியம் 2.30 மணியளவில் கணவரின் வீட்டில் இருந்த மகாலட்சுமி, குளிப்பதற்காக துணியை எடுத்து வருவதாகக் கூறி விட்டு, ஒரு அறைக்குள் சென்று கதவை மூடி உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். பின்னர் வெகுநேரம் ஆகியும் அவர் கதவைத் திறக்கவில்லை.

    சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை தட்டி உள்ளனர். கதவு திறக்காததால் உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மகாலட்சுமி தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவரை தூக்கில் இருந்து மீட்டு மோட்டார்சைக்கிளில் வடுகந்தாங்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மகாலட்சுமி இறந்து விட்டதாகக் கூறினர்.

    இதுகுறித்து மகாலட்சுமியின் தங்கை விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் கே.வி.குப்பம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மகாலட்சுமியின் பிணத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால், வருவாய் கோட்டாட்சியரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    வேலூர் வள்ளலார் பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    வேலூர்:

    வேலூர் வள்ளலார் பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு வேலூர் தொகுதி செயலாளர் சி.கே.சிவாஜி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். வேலூர் மாநகராட்சி 2-வது மண்டலத்தை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கபட்டது.

    நிகழ்ச்சியில் 2-வது மண்டல சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், மேற்பார்வையாளர் கோவிந்தராஜ், வட்ட செயலாளர் சி.கே.எஸ்.வினோத்குமார், முன்னாள் அவைத்தலைவர் ஜானகிராமன் பகுதி செயலாளர் ஜி.எஸ்.ஏ. ஆறுமுகம், இணை செயலாளர் சம்பத், பேச்சாளர் இடிமுரசு ரவி, வட்ட செயலாளர் ஆர்.கே.ரமேஷ்,  கட்சி நிர்வாகிகள் மகேஷ், சேகர், டைலர் குமார், சுதர்சன், காலேசு பாஷா, புருஷோத்தமன், ரமேஷ், அய்யனார், வெங்கடேசன், லட்சுமணன், வி.எஸ்.ரமேஷ்,  மகேஷ்குமார், அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    வேலூரில் எளிய முறையில் சமத்துவ மக்கள் கட்சி பிரமுகர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சரத்குமார் காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மத்திய மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிமாவட்ட செயலாளர் சசிகுமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அபிநயா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக இவர்களது திருமணம் ஓட்டேரி காமாட்சிபுரம் பகுதியிலுள்ள வலம்புரி விநாயகர் கோவிலில் உறவினர்கள் 20 பேருடன் எளிமையான முறையில் நடந்தது.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் காணொளி மூலம் சசிகுமார், அபிநயா தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
    2 வாரங்களுக்கு மேல் பாதிப்பு இல்லாமல் இருந்தும் வேலூர் மாவட்டம் மட்டும் எப்படி சிவப்பு மண்டலத்தில் நீடிக்கிறது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் பலியானார். 14 பேர் குணமாகி வீடு திரும்பினர். மேலும் 5 பேர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியிலும், 2 பேர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று மத்திய அரசு பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்கள் என பாதிப்பு ஏற்பட்டதின் அடிப்படையில் மாவட்டங்களைப் பிரித்து வெளியிட்டது. இதில் சிவப்பு மண்டலம் தவிர மற்ற மண்டலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவித்துள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் கடைசியாக கடந்த 17-ந் தேதி 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகு 15 நாட்களாக யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் பல மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டு சில நாட்கள் ஆகியும் அந்த மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திற்கு சென்றுள்ளன‌.

    2 வாரங்களுக்கு மேல் பாதிப்பு இல்லாமல் இருந்தும் வேலூர் மாவட்டம் மட்டும் எப்படி சிவப்பு மண்டலத்தில் நீடிக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மாவட்டங்களை மண்டல வாரியாக திங்கட்கிழமை தோறும் பிரித்து வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை கணக்கெடுப்பின்படி வேலூர் தொடர்ந்து சிவப்பு மண்டலத்தில் நீடிக்கிறது. மேலும் தற்போது தொடர்ந்து 21 நாட்கள் பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் மட்டுமே சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகில் வேலூர் மாவட்டம் இருப்பதால் இங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாகவும் வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை பகுதிகளில் இருந்து வேலூருக்கு வருபவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

    நேற்று சென்னையில் இருந்து வேலூர் வந்த 200 பேருக்கும் வேலூர் மாநகர பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 200 பேருக்கும் என மொத்தம் 400 பேரின் ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

    இன்னும் முடிவுகள் வெளி வரவில்லை. மற்றபடி இதற்கு முன்பு ரத்தம் சளி எடுக்கப்பட்ட அனைவருக்கும் முடிவுகள் வந்துள்ளன. அதில் யாருக்கும் அறிகுறிகள் இல்லை. அடுத்த வாரத்தில் வேலூர் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×