என் மலர்
செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஊருக்கு அனுப்பி வைக்க கோரி வடமாநிலத்தவர்கள் போராட்டம்
வேலூர்:
வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்கம் ஒடிசா ஜார்கண்ட் அசாம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பேர் வேலூரில் தங்கியுள்ளனர்.
லாட்ஜ்களில் தங்கியுள்ளவர்களுக்கு 3 வேளை இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2,500 பேர் அனுமதி பெற்று கார்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் ஊருக்கு திரும்பி உள்ளனர். தற்போது உள்ள 7 ஆயிரம் பேரும் தங்கள் ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமாநில பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு வருகின்றனர். இன்று காலையிலும் 200-க்கும் மேற்பட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.
அவர்கள் தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் எஸ்.பி. பிரவேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
வேலூரில் இருந்து வெளியூர் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வர வேண்டாம் கலெக்டர் அலுவலகத்தில் இதற்கான பாஸ் எதுவும் வழங்கப்படவில்லை .
இதற்காக அரசு அறிவித்துள்ள இணையதள முகவரி மூலம் விண்ணப்பித்து ஆன்லைனில் பாஸ் பெறலாம். இது தொடர்பாக அறிவிப்பு பலகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
வடமாநிலத்தவர்கள் சொந்த ஊர் திரும்பவதற்கு இன்னும் அனுமதி வரவில்லை. அனுமதி கிடைத்த பின்னர் தான் அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல ஆன்லைனில் அனுமதி சீட்டு பெற முடியும்.
அதற்கான அனுமதி சீட்டு கிடைத்தவுடன் நீங்கள் தங்கியுள்ள லாட்ஜ் உரிமையாளர்களுக்கு பாஸ் பெறுவதற்கான தகவல் தெரிவிக்கப்படும். அதன் பிறகு ஆன்லைன் மூலம் பாஸ் பெற்று சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






