என் மலர்
வேலூர்
வேலூர் காந்தி ரோட்டில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த மூதாட்டிக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருடன் தங்கியிருந்த (36 வயது) மகள் உறவினர் உட்பட விடுதியில் தங்கி இருந்த 47 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் மூதாட்டியின் 36 வயது மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கணியம்பாடி அருகே உள்ள கொட்டாமேடு கிராமத்தைச் சேர்ந்த 43 வயது நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வாழை மண்டியில் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். அவர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய குடும்பத்தினர் மற்றும் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு வட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
ஊரடங்கு உத்தரவால் 9 ஆயிரம் வட மாநிலத்தவர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட வட மாநிலத்தினரை அவர்களது சொந்த மாநிலத்திற்கு திரும்பி செல்ல வேலூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதில் முதல் கட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,230 பேர் சிறப்பு ரெயில் மூலம் நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் வேலூரில் தங்கியுள்ள ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மேலும் 1,200 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சொந்த மாநிலத்திற்கு திரும்புவதற்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
பாஸ் வழங்கப்பட்டுள்ள 1,200 பேர் இன்று இரவு 10 மணிககு காட்பாடியில் இருந்து சிறப்பு ரெயிலில் ஜார்கண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதேபோல் காட்பாடியில் இருந்து நாளை முதல் 2 நாட்கள் மேற்குவங்கத்துக்கு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. 3 ரெயில்களில் வேலூரில் உள்ள 3,500 வடமாநிலத்தவர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்திற்காக வேலூர் மற்றும் ராணிப்பேட்டை என இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் வேலூர் மாவட்டத்தில் 72 கடைகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் 46 கடைகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 88 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.
நேற்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மது வாங்கி சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகள் முன்பு கூட்டம் அலைமோதியது.
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் ரூ.5 கோடிக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.3 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 215 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளைத் தவிர்த்து மீதமுள்ள 149 கடைகள் திறக்கப்பட்டன.
நேற்று மட்டும் இந்த டாஸ்மாக் கடையில் ரூ.5 கோடிக்கு மது விற்பனையானது. வழக்கமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுமார் ரூ.3 கோடி வரை விற்பனையாகும் நேற்று கூடுதலாக மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
4 மாவட்டத்திலும் மொத்தம் ரூ.13.4 கோடிக்கு நேற்று ஒரே நாளில் மது விற்பனையாகி உள்ளது.
வேலூர்:
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட்டன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் திறக்கப்படவில்லை.
வேலூர் மாநகரில் காகிதப்பட்டறை, பழைய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. ஆற்காடு ரோட்டில் உள்ள உயர் ரக மதுபான (எலைட்) விற்பனை கடை, செங்காநத்தம் புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் உள்ள கடைகள் திறக்கப்பட்டன.
கடைகள் முன்பு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியுடன் நின்று வாங்கிச் செல்லவும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. டாஸ்மாக் கடைகள் முன்பு இன்று அதிகாலையிலேயே ஆதார் அட்டையுடன் குடிமகன்கள் குவிந்தனர். காலை 8 மணி முதலே அவர்கள் கடைக்கு முன்பாக காத்திருந்தனர்.
வயது அடிப்படையில் நேரக்கட்டுப்பாட்டுடன் மது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை எந்தவித வயது வித்தியாசமின்றி டாஸ்மாக் கடைகள் முன்பு குவிந்தனர்.
சில டாஸ்மாக் கடைகள் முன்பு சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து கடைகள் திறக்கப்பட்டது. அப்போது வரிசையில் நின்ற குடிமகன்கள் நண்பர்களுடன் சேர்ந்து கோஷமிட்டனர். மதுபாட்டில்களை வாங்கிய சிலர் கைகளில் அவற்றை தூக்கி காண்பித்தபடி சென்றனர்.
வேலூர் ஆற்காடு ரோட்டில் உள்ள எலைட் மது விற்பனைக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. வை சேர்ந்த கோபி உள்ளிட்ட 4 பேர் கடையின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் டி.எஸ்.பி பாலகிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். கொரோனா பரவாமல் தடுக்க டாஸ்மாக் கடையை திறக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அப்போது போலீசார் இது கட்டுப்படுத்தப்பட்ட பகுதி அல்ல. எனவே இந்த கடை திறக்கலாம் நீங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்றனர் அப்போது ம.தி.மு.க.வினர் நாங்கள் கடையை இழுத்து பூட்டு போடுவோம் எனக் கூறினர். இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அங்கு சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றி சீல் வைக்கப்பட்டது.
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
வேலூர் மாவட்டத்தில் கருகம்பத்தூர், கஸ்பா, காட்பாடி, ஆர்.என். பாளையம், பேர்ணாம்பட்டு, சைதாப்பேட்டை ஆகிய 6 பகுதிகளும் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், ஜாப்ராபாத், திருப்பத்தூர், உமராபாத், வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி ஆகிய 6 பகுதிகள் கட்டுப்படுத்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அம்மூர், அரக்கோணம், ஆற்காடு, கல்மேல்குப்பம், கீழ் விஷாரம், மேல்விஷாரம், பனப்பாக்கம், ரசூல்பேட்டை, வாலாஜா, சோளிங்கர், திமிரி ஆகிய 12 பகுதிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆனா நத்தல், திருவண்ணாமலை நகராட்சி, எஸ்.வி. நகரம், மங்களம், சந்தவாசல், சென்மியாமங்களம், வந்தவாசி, கீழ்பென்னாத்தூர் ஆகிய 9 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தம் 33 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
கடந்த 2 நாட்களில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் கொண்டு சென்று வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் முன்னதாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று வந்த விவசாயிகள் குறித்த விவரங்களை சுகாதார துறையினர் சேகரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு சென்ற விவசாயிகள், வியாபாரிகள் தாமாக முன்வந்து கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி பொதுமக்களுக்கும் பரவுவதை தடுக்க முடியும். கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று வந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் குறித்த விவரங்களையும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகள், சுகாதாரத்துறை, தாசில்தார் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி கொண்டுசென்ற 22 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மேலும் 10 பேருக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குடியாத்தம்:
குடியாத்தம் வனச்சரகம் ஆந்திர மாநில எல்லை பகுதியில் உள்ளது. குடியாத்தம் ஆந்திர மாநில எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த மோர்தானா, சைனகுண்டா , கொட்டமிட்டா, தனகொண்டப்பள்ளி, குடிமிப்பட்டி, மோடி குப்பம் மற்றும் பரதராமி அடுத்த கொத்தூர், டி.பி. பாளையம், ரெட்டியார் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளை நிலங்களுக்குள் இரவு நேரங்களில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் பல குழுக்களாகப் பிரிந்து ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லையோர கிராமங்களில் உள்ள நிலங்களில் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி வந்தது.
பல மாதங்களாக நடைபெறும் இந்த யானைகள் நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்த யானைகள் கூட்டத்தை வனத் துறையினர், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உதவியுடன் தினமும் விரட்டி வந்தனர்.
இருந்தாலும் யானைகள் மீண்டும், மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. .
இதனையடுத்து மண்டல வனப்பாதுகாவலர் சேவா சிங், மாவட்ட வன அலுவலர் பார்கவ் தேஜா, உதவி வனப் பாதுகாவலர் முரளிதரன் ஆகியோர் ஏற்பாட்டின்படி ஓசூர் பகுதியில் இருந்து யானை விரட்டும் படையைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழுவினர் மற்றும் பரதராமி பகுதியில் உள்ள செம்மர தோட்ட காவல் படையினர் 15 பேரும் வனத்துறையினர் உடன் இணைந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனையடுத்து குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன் தலைமையில் வனவர்கள் ரவி, பிரகாஷ் உள்ளிட்டோர் கொண்ட குழுவில் ஓசூரில் இருந்து வந்த யானை விரட்டும் படையினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து நேற்று முன்தினம் இரவு கொட்டமிட்டா பகுதியில் மாந்தோப்புக்குள் புகுந்து சேதப்படுத்திய 15 யானைகளை நேற்று மதியம் வரை பல மணி நேரம் விரட்டிச் சென்று மூங்கில் தோட்டம் வழியாக மோர்தனா காட்டுப் பகுதிக்கு விரட்டி உள்ளனர்.
அதேபோல் பரதராமி அடுத்த கொத்தூர், டி.பி. பாளையம் ஆஞ்சநேயர் கோவில் அருகே நேற்று இரவு முகாமிட்டிருந்த 16 யானைகளை வனவர் முருகன் தலைமையில் வனத்துறையினர் செம்மர தொட்ட காவலர்கள் என 25-க்கும் அதிகமானோர் மற்றும் கிராம மக்கள் 100 பேருடன் இணைந்து பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதியில் விரட்டி விட்டனர்.
தினந்தோறும் 10, 20 என தற்போது 31 யானைகள் வருகிறது. இதனிடையே யானைகள் கூட்டத்தை நிரந்தரமாக தடுக்கும் பொருட்டு குடியாத்தம் வனத்துறை சார்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
சுமார் ரூ.16 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு யானைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் திட்ட மதிப்பீடுகள் தயார் செய்து கருத்துரை மற்றும் நிதி ஒதிக்கீடுகாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கினால் இப்பகுதியில் யானைகள் சரணாலயம் அமைக்கப்பட்டு காட்டுப் பகுதியில் யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வசதியும் யானைகள் நிலங்களுக்குள் புகாமல் தடுப்பதற்காக நிரந்தரமாக யானைத் தடுப்பு காவலர்கள் அமைத்தப்படுவார்கள் எனவும் மேலும் சூரிய சக்தி மின் வேலி, யானை புகா பள்ளங்கள், பணியாளர்கள் குடியிருப்பு, கண்காணிப்பு கோபுரங்கள், பணியாளர்களுக்கு தேவையான வாகனங்கள் உள்ளிட்ட முகாம் அலுவலகம் உள்ளிட்டவை அமைக்கப்படும் எனவும் இந்த திட்டத்துக்காக காத்திருப்பதாகவும் இந்த திட்டம் ஏற்கப்பட்டு நிதி ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் யானைகள் விளை நிலங்களுக்குள் புகுவது நிரந்தரமாக தடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் மீண்டும் குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா பகுதியில் மாந்தோப்புக்குள் புகுந்து ஏராளமான மாமரங்களை சேதப்படுத்தியது
வேலூரில் ஊரடங்கு கடைபிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இதற்காக மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை தடுக்கவும் மற்றவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்லாமல் இருக்கவும் பல்வேறு இடங்களில் சாலைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் இன்று முதல் வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி திருவண்ணாமலை ஆரணி பகுதிகளிலிருந்து சித்தூர் காட்பாடி குடியாத்தம் செல்லும் அனைத்து கனரக வாகனங்கள் சாத்துமதுரை அரியூர் மூலை கேட் வழியாக சென்று வரவேண்டும்.
திருவண்ணாமலை, ஆரணியில் இருந்து சித்தூர் காட்பாடி குடியாத்தம் செல்லும் மோட்டார் சைக்கிள் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் பாகாயம் புதிய மாநகராட்சி அலுவலகம் கோட்டை பின்புறம் பழைய பைபாஸ் பாலாறு புதிய பாலம் வழியாக செல்ல வேண்டும்.
சி.எம்.சி ஆஸ்பத்திரி காகிதப்பட்டறை பழைய பஸ் நிலையம் செல்பவர்கள் கோட்டை பின்புறம் பழைய பைபாஸ் சாலை வழியாக வந்து நேஷனல் சர்க்கிள் அருகே திரும்பி செல்ல வேண்டும்.
காட்பாடியில் இருந்து திருவண்ணாமலைக்கு வாகனங்களில் செல்பவர்கள் பாலாறு பழைய பாலம் கிரீன்சர்க்கில் பழைய பஸ் நிலையம் தொரப்பாடி பாகாயம் வழியாக செல்லவேண்டும். ஊரடங்கு முடியும்வரை வாகன ஓட்டிகள் ஆரணி சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.
காரில் டிரைவரை தவிர 2 பேர் பயணிக்கலாம். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளில் விதியை மீறி வந்த வாகன ஓட்டிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் வேலூரில் காட்பாடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வேலூர்:
சென்னை மாதவரம் பால் பண்ணையில் இருந்து மற்ற இடங்களுக்கு சப்ளை செய்யப்படும் பால் பாக்கெட்டுகள் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் வேலூர், சேலம், மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள ஆவின் நிறுவனங்களில் இருந்து தலா 20 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளை மாதவரம் பால் பண்ணைக்கு அனுப்பி வைக்க ஆவின் நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டார்.
அதன்படி, வேலூர் ஆவின் நிறுவனத்தில் இருந்து மாதவரம் பால் பண்ணைக்கு தலா 500 மி.லி. எடை அளவு கொண்ட 40 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் அனுப்பி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் பலியானார். 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து 1,516 நபர்கள் வேலூருக்கு வந்திருந்தனர். அதில் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த 22 பேரும் வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
காட்பாடி அருகே உள்ள 66 புதூர் கிராமத்தைச் சேர்ந்த வியாபாரிகள் 2 பேருக்கு கொரோனா உறுதியானது. அவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் கீரை காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு சென்று வந்தனர்.
இதனைத் தொடர்ந்து 66 புதூர் மற்றும் அதன் அருகே உள்ள லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் 30 குழுக்கள் வீடு வீடாகச் சென்று யாருக்காவது சளி, இருமல் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
வங்காளதேசத்தை சேர்ந்த 69 வயது மூதாட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் சிகிச்சைக்காக வேலூர் வந்திருந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் பாபு ராவ் தெருவில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார் .நேற்று முன்தினம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
அவரை பரிசோதித்ததில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்த 47 பேருக்கு பரிசோதனைக்கு ரத்தம், சளி எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பேரணாம்பட்டில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த வாலிபர் மற்றும் சென்னையில் இருந்து வந்த இளம்பெண் மற்றொரு வாலிபர் என 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் சேர்க்கப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு 18 நாட்களுக்கு மேல் ஆகி விட்டதால் அரசு அறிவித்தபடி நிபந்தனைகளுடன் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் 6 பேர் பாதிக்கப்பட்டிருப்பது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி அருகே நாட்டறம்பள்ளி ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த வாரம் லாரியில் சென்னை கோயம்பேட்டுச் சென்றுவிட்டு கடந்த சனிக்கிழமை திரும்பினார்.
பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது. இதையடுத்து அவர் வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்த பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை காலை 10 மணி முதல் 5 மணி வரை திறந்திருக்கும்.
மது வாங்க வருபர்கள் சுமார் 6 அடி சமூக இடைவெளி விட்டும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கொண்டு வந்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டும்.
பின்னர் சமூக இடைவெளியை பின்பற்றி மதுபாட்டில்களை வாங்க வேண்டும். டாஸ்மாக் கடையின் அருகே மது அருந்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முக கவசம் அணிந்து வரும் நபர்களுக்கு மட்டுமே மது வழங்கப்படும்.
ஒரு சமயத்தில் 5 நபர்களுக்கு மேல் மதுபான கடை எல்லைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். டோக்கன் காலை 10 மணி முதல் மாலை 4 வரை மட்டுமே வழங்கப்படும்.
டோக்கன் பெறாதவர்களுக்கு மதுபாட்டில் வழங்கப்படாது. சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்கள் மீது காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கடைகளுடன் கூடிய மதுக்கூடங்கள் இயங்க அனுமதி இல்லை.
மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இந்த தகவலை வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.






