என் மலர்
செய்திகள்

காட்பாடியில் இருந்து வடமாநிலங்களுக்கு இன்று முதல் மேலும் 3 சிறப்பு ரெயில்கள் இயக்கம்
வேலூர்:
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு வட மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
ஊரடங்கு உத்தரவால் 9 ஆயிரம் வட மாநிலத்தவர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் கலெக்டர் ஆபீசை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட வட மாநிலத்தினரை அவர்களது சொந்த மாநிலத்திற்கு திரும்பி செல்ல வேலூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதில் முதல் கட்டமாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1,230 பேர் சிறப்பு ரெயில் மூலம் நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் வேலூரில் தங்கியுள்ள ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மேலும் 1,200 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு சொந்த மாநிலத்திற்கு திரும்புவதற்கான அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
பாஸ் வழங்கப்பட்டுள்ள 1,200 பேர் இன்று இரவு 10 மணிககு காட்பாடியில் இருந்து சிறப்பு ரெயிலில் ஜார்கண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதேபோல் காட்பாடியில் இருந்து நாளை முதல் 2 நாட்கள் மேற்குவங்கத்துக்கு 2 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. 3 ரெயில்களில் வேலூரில் உள்ள 3,500 வடமாநிலத்தவர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.






