search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    வேலூர் மாவட்டத்தில் 18 நாட்களுக்கு பிறகு 6 பேருக்கு கொரோனா

    வேலூர் மாவட்டத்தில் 18 நாட்களுக்கு பிறகு 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் பலியானார். 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்நிலையில் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து 1,516  நபர்கள் வேலூருக்கு வந்திருந்தனர். அதில் கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த 22 பேரும் வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    காட்பாடி அருகே உள்ள 66 புதூர் கிராமத்தைச் சேர்ந்த வியாபாரிகள் 2 பேருக்கு கொரோனா உறுதியானது. அவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் கீரை காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு சென்று வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து 66 புதூர் மற்றும் அதன் அருகே உள்ள லட்சுமிபுரம் ஆகிய கிராமங்களில் 30 குழுக்கள் வீடு வீடாகச் சென்று யாருக்காவது சளி, இருமல் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    வங்காளதேசத்தை சேர்ந்த 69 வயது மூதாட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் சிகிச்சைக்காக வேலூர் வந்திருந்தார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற அவர் பாபு ராவ் தெருவில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார் .நேற்று முன்தினம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

    இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    அவரை பரிசோதித்ததில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. அவருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்த 47 பேருக்கு பரிசோதனைக்கு ரத்தம், சளி எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    பேரணாம்பட்டில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த வாலிபர் மற்றும் சென்னையில் இருந்து வந்த இளம்பெண் மற்றொரு வாலிபர் என 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் சேர்க்கப்பட்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு 18 நாட்களுக்கு மேல் ஆகி விட்டதால் அரசு அறிவித்தபடி நிபந்தனைகளுடன் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் 6 பேர் பாதிக்கப்பட்டிருப்பது பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    வாணியம்பாடி அருகே நாட்டறம்பள்ளி ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த வாரம் லாரியில் சென்னை கோயம்பேட்டுச் சென்றுவிட்டு கடந்த சனிக்கிழமை திரும்பினார்.

    பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது. இதையடுத்து அவர் வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
    Next Story
    ×