என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்டம்
    X
    வேலூர் மாவட்டம்

    வேலூர் சிவப்பு மண்டலத்தில் நீடிப்பது ஏன்? அதிகாரிகள் விளக்கம்

    2 வாரங்களுக்கு மேல் பாதிப்பு இல்லாமல் இருந்தும் வேலூர் மாவட்டம் மட்டும் எப்படி சிவப்பு மண்டலத்தில் நீடிக்கிறது என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் பலியானார். 14 பேர் குணமாகி வீடு திரும்பினர். மேலும் 5 பேர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியிலும், 2 பேர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று மத்திய அரசு பச்சை, ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்கள் என பாதிப்பு ஏற்பட்டதின் அடிப்படையில் மாவட்டங்களைப் பிரித்து வெளியிட்டது. இதில் சிவப்பு மண்டலம் தவிர மற்ற மண்டலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என அறிவித்துள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் கடைசியாக கடந்த 17-ந் தேதி 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகு 15 நாட்களாக யாருக்கும் பாதிப்பு இல்லை. ஆனால் பல மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டு சில நாட்கள் ஆகியும் அந்த மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்திற்கு சென்றுள்ளன‌.

    2 வாரங்களுக்கு மேல் பாதிப்பு இல்லாமல் இருந்தும் வேலூர் மாவட்டம் மட்டும் எப்படி சிவப்பு மண்டலத்தில் நீடிக்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    மாவட்டங்களை மண்டல வாரியாக திங்கட்கிழமை தோறும் பிரித்து வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை கணக்கெடுப்பின்படி வேலூர் தொடர்ந்து சிவப்பு மண்டலத்தில் நீடிக்கிறது. மேலும் தற்போது தொடர்ந்து 21 நாட்கள் பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் மட்டுமே சிவப்பு மண்டலத்திலிருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அருகில் வேலூர் மாவட்டம் இருப்பதால் இங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன் காரணமாகவும் வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை பகுதிகளில் இருந்து வேலூருக்கு வருபவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது.

    நேற்று சென்னையில் இருந்து வேலூர் வந்த 200 பேருக்கும் வேலூர் மாநகர பகுதியில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 200 பேருக்கும் என மொத்தம் 400 பேரின் ரத்தம், சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.

    இன்னும் முடிவுகள் வெளி வரவில்லை. மற்றபடி இதற்கு முன்பு ரத்தம் சளி எடுக்கப்பட்ட அனைவருக்கும் முடிவுகள் வந்துள்ளன. அதில் யாருக்கும் அறிகுறிகள் இல்லை. அடுத்த வாரத்தில் வேலூர் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×