search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்திரப்பதிவு"

    • தொடர்ந்து வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்கும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
    • அதிக பட்சமாக ரூ.217 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பத்திரப் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொதுவாக ஆண்டு தோறும் தைப்பொங்கலுக்கு பிந்தைய நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும். இதையடுத்து, வருகிற 31-ந் தேதி வரை பதிவுக்கான டோக்கன்களை கூடுதலாக வழங்கும்படி சார்பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில், போதிய அளவில் தினசரி கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு, பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

    கடந்த 22-ந் தேதி, ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 21,004 பத்திரப் பதிவுகள் நடைபெற்று ரூ.168.83 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. தொடர்ந்து வரும் நாட்களிலும் பதிவுகள் அதிகரிக்கும் என்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இந்நிலையில், நேற்று முன்தினம் (24-ந்தேதி) பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 26 ஆயிரம் பத்திரப்பதிவுகள் நடைபெற்றதுடன், அதிக பட்சமாக ரூ.217 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • பத்திரப்பதிவு புதிய நடைமுறைகளில் குமரி மாவட்டத்திற்கு விலக்கு அளித்திட தமிழக முதல்-அமைச்சரிடம் முறையிடுவேன்.

    குளச்சல் :

    பிரின்ஸ் எம்.எல்.ஏ. வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டம் மலை சார்ந்த மாவட்டம் ஆகும். இது தமிழ்நாட்டிலேயே சிறிய மாவட்டம். இதன் பரப்பளவு 1672 சதுர கி.மீ. ஆகும். அரசு வனப்பகுதி 504.86 சதுர கி.மீ. இது மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 30.2 சதவீதம் ஆகும். கடற்கரையின் பரப்பளவு 36 சதுர கி.மீ. மீதி சுமார் 1200 சதுர கி.மீ. நிலப்பரப்பாகும். இதில் தான் மக்கள் அடர்த்தியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் பல்வேறு தரப்பு மக்களின் கட்டி டங்கள், விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளன. ஆனால் மக்கள் நெருக்கமாக வாழும் சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

    சமீபகாலமாக மாவட் டத்தில் ஏழை, எளிய மக்கள் தங்கள் பெண் குழந்தை களின் திருமணம் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய போன்ற கொடிய நோய் தீர்க்க சிகிச்சைக்கு பணம் புரட்ட தங்கள் நிலங்களை விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் நிலங்களின் பத்திரப்பதிவின்போது பத்திரப்பதிவு புதிய வழி காட்டுதல்படி 33 அடி இடம் பாதைக்கு விட்டு கொடுக்க வேண்டி உள்ளது.

    பிற மாவட்டங்கள் அதிக நிலப்பரப்பு கொண்டது. அங்கு 33 அடி இடம் விட்டால் பாதிப்பு இல்லை. குமரி மாவட்டம் நிலபரப்பு குறைந்த பகுதியாகும். இப்படி இடம் விடுவதால் குறைந்த அளவு நிலம் வைத்துள்ளவர்கள் இடத்தை விற்க முடியாமல் இருந்து வருகிறார்கள். இத னால் நிலங்களை வாங்கு வதற்கு யாரும் முன்வருவ தில்லை. நிலங்களை வாங்க யாரும் முன்வராத நிலையில் திருமணம், அவசர பணம் தேவை போன்ற காரியங் களுக்கு நிலங்களை விற்ப னை செய்ய முடியாமல் உள்ளது.

    எனவே அரசு ஏழை, எளியவர்களை பாதிக்கும் பத்திரப்பதிவு புதிய நடை முறைகளில் குமரி மாவட் டத்திற்கு விலக்களித்து குமரி மாவட்ட பொது மக்களை பாதுகாத்திட வேண்டும். பத்திரப்பதிவு புதிய நடைமுறைகளில் குமரி மாவட்டத்திற்கு விலக்கு அளித்திட தமிழக முதல்-அமைச்சரிடம் முறையிடுவேன். இதனை வரும் சட்டமன்ற கூட்டத்திலும் வலியுறுத்தி பேசுவேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்த்துவதாக இருப்பது மிகவும் வேதனைக் குரியதாகும்.
    • சொத்து பரிமாற்றத்திலும், மிகப்பெரும் மந்த நிலையை ஏற்படுத்தும்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் குடியிருப்பு மனைகளின் அரசு மதிப்பீடு அண்மையில் அனைத்து பகுதிகளிலும், உயர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் வணிக பயன்பாட்டுக்கான மனைகளின் அரசு வழிகாட்டு மதிப்பீடு, சாதாரண குடியிருப்பு மனை மதிப்பீட்டிலிருந்து 3 மடங்கு உயர்த்தி அறிவிப்பு வெளியிட இருப்பதாக தெரிய வருகின்றது.

    வணிகர்களும், வணிகமும் ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. ஆன்லைன் வர்த்தகம், தற்காலிக விழாக்கால கடைகள், போக்குவரத்து கட்டண உயர்வு, மின் கட்டணம், சொத்துவரி உயர்வு, என பல்வேறு காரணங்களால் தொழில் நசிந்து வரும் நிலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.

    இந்த கால கட்டத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான மனைகளுக்கு அரசு வழிகாட்டு மதிப்பு 3 மடங்கு உயர்த்துவதாக இருப்பது மிகவும் வேதனைக் குரியதாகும். இதனால் புதிதாக தொழில் தொடங்குவோர், புதிய வணிக நிறுவனர்கள் தொழிலுக்கு வருவதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, சொத்து பரிமாற்றத்திலும், மிகப்பெரும் மந்த நிலையை ஏற்படுத்தும். இதனால், வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கும். தமிழக முதலமைச்சர் இவற்றை கவனத்தில் கொண்டு, வணிக மனைகளுக்கான அரசு வழிகாட்டு மதிப்பீட்டு உயர்வினை உடனடியாக மறுபரிசீலனை செய்திட வேண்டுமென வணிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மாவட்டத்தில் 3 முதல் 5 சென்ட் நிலங்களை பதிவு செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது.
    • திருமணங்களை நடத்த முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நிலம் வாங்குவோர் விற்போ ர் நலச்சங்க கூட்டம் அதன் தலைவர் பி.டி.செல்வகுமார் தலைமையில் பால்குளத்தில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்று அவர் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவ ட்டம் நிலம் வாங்குவது, விற்பது தொடர்பான பிரச்ச னைகளில் அனைவரின் கருத்துக்களையும் கேட்டு மாவட்ட பதிவாளரிடம் ஏற்கனவே மனு அளிக்க ப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 3 முதல் 5 சென்ட் நிலங்களை பதிவு செய்ய முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனால் தங்கள் நிலங்களை விற்க முடியாத பெற்றோர்கள் பிள்ளைகளை உயர்கல்வி கற்க அனுப்ப முடியாமலும், திருமணங்களை நடத்த முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் நிலம் தொடர்பா ன தொழில் செய்வோர் அண்டை மாநிலங்களுக்கு சென்று தொழில் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன், அரசுக்கு வருவாய் கிடைக்காத நிலையும் உள்ளது. எனவே, இப்பிரச்சி னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வகையில் தமிழக முதல்-அமைச்சரின் கவன த்துக்கு கொண்டு செல்லும் வகையில் சென்னை சென்று முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளிக்க முடிவு செய்ய ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இக்கூட்டத்தில் நிலம் வாங்குவோர், விற்போர் சங்க கௌரவத் தலைவர் எஸ்.அழகேசன், செயலர் பாண்டியன், பொருளாளர் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் டி.பாலகிரு ஷ்ணன், சுதர்சன், தீபன் சக்ரவர்த்தி, சம்பூர்ண தேவராஜன், விஸ்வை சந்திரன், சொர்ணப்பன், சில்வஸ்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அரசுக்கும், கட்டுமான துறைக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
    • பதிவு கட்டண மற்றும் சேவை கட்டண உயர்வுகளால் சிறிய மற்றும் நடுத்தர வகுப்பினரின் வீடு வாங்கும் கனவு பாதிக்கப்படும்.

    சென்னை:

    சிங்கார சென்னை கட்டுனர் சங்க தலைவர் அனிபா, செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சமீபத்திய பதிவு கட்டணம் மற்றும் சேவை கட்டண உயர்வு சம்பந்தமாக அனைத்து கட்டுனர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று எங்களது குறைகளை பரிவுடன் கேட்டு நிவர்த்தி செய்வதாக வாக்களித்த பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்திக்கும் அதில் கலந்து கொண்ட பதிவுத்துறை அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் உயர்த்தப்பட்ட பல்வேறு சேவைகளின் பதிவு கட்டணங்களின் அதீத உயர்வை மறு மதிப்பாய்வு செய்வது சம்பந்தமாக உடனடி தீர்வு காணும்படி அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம். காலதாமதம் ஏற்படும் பட்சத்தில் அரசுக்கும், கட்டுமான துறைக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

    சிறிய மற்றும் நடுத்தர கட்டுமான தொழில் புரியும் கட்டுனர்களுக்கு பெரிதும் பொருளாதார உதவியாக இருப்பது "இன்வெஸ்டர்ஸ் " எனப்படும் முதலீட்டாளர்கள். அவர்கள் கட்டுமான திட்டங்களில் முதலீடு செய்து கட்டுமானம் நிறைவு பெறும்போது அதை மீண்டும் மறு விற்பனை செய்து தங்களது லாபத்தை எடுத்து கொள்வார்கள். இத்தகைய முதலீட்டாளர்களால் அரசுக்கு ஒரே சொத்துக்கு இரண்டு முறை வருவாய் வரக்கூ டிய வாய்ப்பாய் அமைகிறது. அத்தகைய முதலீடுகள் இத்தகைய பதிவு கட்டண மற்றும் சேவை கட்டண உயர்வுகளால், சொத்து பரிவர்த்தனைகளுக்கான செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும்.

    இதன் விளைவாக, செலவினங்கள் குறைவாக உள்ள மற்றும் லாபம் அதிகம் உள்ள அண்டை மாநிலங்களில்மு தலீட்டாளர்கள் முதலீடு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பதிவு கட்டணங்கள் மற்றும் ஜிஎஸ்டி போன்ற வருமானங்களில் பெருமளவு பாதிப்பு ஏற்படும். இத்தகைய நிகழ்வுகள் பொருளாதார முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்வினையாக அமையும். பதிவு கட்டண மற்றும் சேவை கட்டண உயர்வுகளால் சிறிய மற்றும் நடுத்தர வகுப்பினரின் வீடு வாங்கும் கனவு பாதிக்கப்படும்.

    முன்பு பவர் ஆப் அட்டர்னி பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ரூ.10,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இப்போது பத்திரப்பதிவு துறையால் அரசாணை எண். 1337 படி சொத்தின் சந்தை மதிப்பில் 1 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சந்தை நிலவரங்கள் மற்றும் நியாயமான மதிப்பீட்டிற்கு ஏற்ப கட்டணத்தை ரூ. 20,000, ரூ. 25,000 ஆக மாற்றுவதை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பத்திரப்பதிவு துறையால் அரசாணை எண். 1337 படி கட்டுமான ஒப்பந்தங்களுக்கான பதிவுக் கட்டணத்தை 1 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தியதை மறு ஆய்வு செய்ய வேண்டும். கட்டணத்தை அதன் முந்தைய விகிதத்தில் வைத்திருப்பதற்கான சாத்தியத்தை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    பெரு முதலாளிகளை மட்டுமே மனதில் வைத்து சீர்திருத்தப்படும் சட்டங்களால் குறுந்தொழில்கள் பாதிப்படைந்து நலிவடைந்து மறைந்து வருகிறது. உதாரணத்திற்கு தெருவுக்கு தெரு இருந்த மிதிவண்டி சீர்திருத்த கடைகள், நூலகங்கள், முடி திருத்தும் நிலையங்கள், அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் பெட்டிக்கடைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. இதனால் பாமர மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்புகளால் சிறு குறு தொழில்கள் பெரும் பண முதலாளிகளின் கைக்கு சென்று விடுகிறது. சுய தொழில் செய்து சுயமரியாதையுடன் வாழ நினைக்கும் தமிழர்கள் பெரு முதலாளிகளின் வேலையை சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சீர்திருத்தம் மற்றும் மாற்றம் என்பது காலத்துக்கு ஏற்ப தேவையான ஒன்றுதான். ஆனால் அத்தகைய மாற்றங்களை மறுசீரமைக்கும் போது தமிழர்களின் பொருளாதார மரபு சார்ந்த வாழ்க்கை நெறிமுறை பாதிப்படைய செய்யும் வகையில் இருப்பது ஏற்புடையதல்ல. எனவே இது சம்பந்தமாக அரசு கவனத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையாத வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது தமிழக அரசுக்கு மேலும் வலு சேர்க்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கடந்த 3-ந்தேதி ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக 50 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன.
    • 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.

    சென்னை:

    சுபமுகூர்த்த தினமான வருகிற 21-ந்தேதி பத்திர பதிவுக்காக கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

    வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு கடந்த 3-ந்தேதி ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதலாக 50 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டன.

    அன்றைய தினம் மாநிலம் முழுவதும் 14 ஆயிரத்து 449 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.100 கோடி வருவாய் ஈட்டப்பட்டது.

    ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான வருகிற 21-ந்தேதி அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதல் முன்பதிவு டோக்கன் வழங்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

    இதை ஏற்று 21-ந்தேதி ஒரு சார்பதிவாளர் பணியில் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்பதிவாளர்கள் பணியில் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும். 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.

    இதுதவிர ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பிற்கு 7% முத்திரைத் தீர்வையும் 2% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
    • கடந்த 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இருந்த அதே நடைமுறைதான் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல் சொந்த வீடு வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளின் ஆவணப் பதிவு தொடர்பான சமீபத்திய அறிவுரை குறித்த கூடுதல் விளக்கத்துடன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனத்தினர் முதலில் இடத்தை விலைக்கு வாங்கி அங்கே அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்கு திட்டமிட்டு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க முன்வருவோருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்து கொள்வது வழக்கம்.

    இவ்வாறு அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க முன்வருபவர்களின் பெயர்களில் ஆவணங்களைப் பதிவு செய்ய பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு வரும்போது மேற்படி நிலத்தின் பிரிபடாத பாக மனைக்கான விக்கிரைய ஆவணம் தனியாகவும், கட்டுமான ஒப்பந்த ஆவணம் தனியாகவும் பதிவு செய்யப்படுகிறது.

    பிரிபடாத பாக மனையின் விக்கிரைய ஆவணத்திற்கு தற்போது நடைமுறையிலுள்ள அட்டவணைப்படி மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பிற்கு 7% முத்திரைத் தீர்வையும் 2% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவோருக்கும் கட்டுமான நிறுவனத்தார்க்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளும் கட்டுமான ஒப்பந்த ஆவணத்திற்கு அடுக்குமாடி குடியிருப்பின் கட்டுமான விலைக்கு 1% முத்திரைத் தீர்வையும் 1% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த பதிவுக்கட்டணம் மட்டும் 10.07.2023 முதல் 2% உயர்த்தப்பட்டு கட்டுமான விலைக்கு 1% முத்திரைத் தீர்வையும் 3% பதிவுக்கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையானது அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதற்கு முன்பாக பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

    இது போன்ற ஆவணங்கள் பதிவுக்கு வருகையில் அடுக்குமாடி குடியிருப்பை ஆவணத்தில் குறிப்பிட வேண்டும் என சார்பதிவாளர்கள் வலியுறுத்தத் தேவையில்லை என்ற அறிவுரை கடந்த 2020ஆம் ஆண்டு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் இந்த அறிவுரையை சிலர் தவறாக பயன்படுத்தத் தொடங்கினர்.

    அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானம் முழுவதுமாக முடிக்கப்பட்டு வழங்கப்படும் நிகழ்வுகளில்கூட அடுக்குமாடி குடியிருப்பை நேரடியாக பயனாளர்களுக்கு விற்பனைக் கிரையம் எழுதிக் கொடுத்து ஆவணப் பதிவு செய்வதற்கு பதிலாக கட்டுமானம் முடிந்த பின்னரும்கூட அதனை ஆவணத்தில் தெரிவிக்காமல் கட்டுமான ஒப்பந்த பத்திரம் மற்றும் பிரிபடாத பாக மனை விக்கிரைய பத்திரம் என்று மட்டுமே எழுதி பதிவு செய்யும் பழக்கம் 2020க்குப் பின்னர் கட்டுமான நிறுவனங்களால் பின்பற்றப்பட்டு வந்தது.

    முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பான ஆவணங்கள் 7% முத்திரைத் தீர்வை மற்றும் 2% பதிவுக்கட்டணத்தில் அரசுக்கு சேர வேண்டிய கூடுதலான 5% கட்டணம் செலுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக கிரைய பத்திரமாக பதிவு செய்யப்படாமல் 2020 அறிவுரைக்குப் பின்னர் 1% முத்திரைத் தீர்வை மற்றும் 3% பதிவுக்கட்டணம் மட்டுமே செலுத்தி கட்டுமான உடன்படிக்கை ஆவணமாக பதிவு செய்யப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

    ஆவணம் பதிவு செய்யும்போது கட்டடம் இருப்பதை ஆவணத்தில் குறிப்பிட வலியுறுத்த வேண்டாம் என கடந்த 2020ஆம் ஆண்டு சார்பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததால் இது போன்ற நேர்வுகளில் சார்பதிவாளர்கள் கட்டடம் குறித்து கேள்வி எழுப்ப இயலாத நிலை இருந்து வந்தது.

    இவ்வாறு முழுமையாக முடிக்கப்பட்ட குடியிருப்புகளை வாங்குவோர் கட்டுமான நிறுவனங்களிடமிருந்து கிரையமாக வாங்காமல் கட்டுமான ஒப்பந்தம் மட்டுமே பதிவு செய்யும் நிலை தொடர்ந்ததால் அந்த குடியிருப்பை எதிர்காலத்தில் மறுகிரையம் செய்யும்போது பிரச்சனை எழலாம்.

    இதனைக் கருத்தில் கொண்டே ஆவணங்கள் பதிவின்போது கட்டடத்தின் கட்டுமானம் நிறைவுற்ற சான்றை வலியுறுத்த வேண்டாம் என ஏற்கெனவே வழங்கப்பட்ட அறிவுரை மட்டுமே தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதே தவிர அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

    முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளை வாங்குவோர் கட்டுமான நிறுவனங்களிடமிருந்து நேரடியாக பிரிபடாத பாக மனை மற்றும் குடியிருப்பு இரண்டையுமே கிரையமாக பெற்றுக் கொள்வது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படாத நிலையில் கட்டுமான ஒப்பந்தம் செய்துகொண்டு குடியிருப்புகளை வாங்க உத்தேசிப்பவர்களுக்கு மட்டும் ஏற்கெனவே உள்ள அதே நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும்.

    முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு ஆவணங்களைப் பொருத்தமட்டில் கட்டுமான கிரைய ஆவணமாகவே அதன் தன்மையைப் பாவித்து பதிவு செய்ய வேண்டும் என அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. எனவே கடந்த 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இருந்த அதே நடைமுறைதான் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளதே தவிர சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டண உயர்வு என்று தவறாக செய்தி பரப்பப்படுவது உண்மைக்கு புறம்பானதாகும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு பத்திரப்பதிவு செய்ய 200 டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும்.
    • அலுவலகம் முன்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பந்தல்கள் போடப்பட்டிருந்தது.

    குன்றத்தூர்:

    குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட குன்றத்தூர், மலையம்பாக்கம், நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லசேரி, கோவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களுடைய நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கு குன்றத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தை நாடுவது வழக்கம், வழக்கமாக குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நாள் ஒன்றுக்கு பத்திரப்பதிவு செய்ய 200 டோக்கன்கள் வினியோகம் செய்யப்படும்.

    அதில் அதிகபட்சமாக 100 முதல் 120 வரை பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம்.

    நிலம் வாங்குபவர்கள் ஆடிப்பெருக்கன்று பத்திரப்பதிவு செய்ய அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள் என்பதால் குன்றத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று காலை முதலே அதிக அளவில் பொதுமக்கள் குவிந்தனர். அலுவலகம் முன்பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக பந்தல்கள் போடப்பட்டிருந்தது.

    நேற்று ஒரு நாள் மட்டும் பத்திரப்பதிவு செய்ய 214 டோக்கன்கள் வினியோகம் செய்யப்பட்டிருந்தது. அதில் 160 பேர் பத்திரப்பதிவு செய்தனர்.

    • முதல்வர் தாய் உள்ளத்தோடு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
    • வீட்டுமனைகளுக்கு ரூ. 500 செலுத்தி நில வரையறை செய்து கொள்ள 6 மாத கால அவகாசத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் விருகை வி.என். கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசுக்கு எப்பொழுதும் நிரந்தர வருவாய் ஈட்டி தரும் தொழிலாக ரியல் எஸ்டேட் தொழில் அமைந்துள்ளது. இந்த தொழிலையே நம்பி செயல்படும் ரியல் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக கடந்த 10-ந் தேதி முதல் பத்திரப்பதிவின் சேவை வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை முதல்வர் தாய் உள்ளத்தோடு மறுபரிசீலனை செய்ய வேண்டும்

    பவர் பத்திரத்திற்கான கட்டணம் சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதை கிரையப் பத்திரம் செய்யும்போது 7 சதவீத பத்திர கட்டணம் மற்றும் 2 சதவீத பதிவு கட்டணம் இவற்றில் ஒரு சதவீதத்தை குறைத்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். வீட்டுமனைகளுக்கு ரூ. 500 செலுத்தி நில வரையறை செய்து கொள்ள 6 மாத கால அவகாசத்தை உடனே அமல்படுத்த வேண்டும். பழைய வீட்டுமனையில் அமைந்துள்ள குறைந்த அளவில் உள்ள சாலையை ஒட்டி புதிய லே-அவுட் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    • சர்வரில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவதால் பத்திர பதிவு செய்வதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டு பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
    • 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஒருங்கிணைந்த பத்திர பதிவு அலுவலகத்திற்கு பொதுமக்கள் பத்திர பதிவு செய்ய வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி சாலை விநாயகர் கோவில் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இரண்டு தளங்களில் செயல்படும் இந்த அலுவலகத்தில் கிழக்கு, மேற்கு என்று பிரிக்கப்பட்டு தரைதளத்திலும், மேல் தளத்திலும் பத்திர பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு பத்திரம் பதிவு செய்வதற்காக தருமபுரி, நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை, தொப்பூர், உங்கரணஅள்ளி, வெ ங்கட்டம்பட்டி, இலளிகம், செம்மாண்டகுப்பம், செட்டிகரை, குப்பூர், நாயக்கன் கொட்டாய் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் பத்திர பதிவு தொடர்பான பல்வேறு பணிகளுக்கு தினமும் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பத்திரங்கள் பதிவு செய்ய ப்படும் அலுவலகங்களில் இதுவும் ஓன்று.

    இங்கு தினமும் 100 டோக்கன்கள் வழங்க ப்பட்டு பத்திரபதிவு நடை பெறுகிறது.

    சுபமுகூர்த்த நாட்களில் சுமார் 150 டோக்கன்கள் வரை வழங்கப்பட்டு பத்திரப்பதிவு நடைபெறும்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இணையத்தள சர்வரில் அடிக்கடி பிரச்சனை ஏற்படுவதால் பத்திர பதிவு செய்வதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டு பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    அதேபோல் நேற்று முதல் சர்வர் பிரச்சனை ஏற்பட்டு பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டு பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    காலை 10 மணிமுதல் முதல் மாலை 3 மணி வரை சர்வர் பிரச்சினை ஏற்பட்டு 100 டோக்கன் வழங்கப்பட்டதில் 3.30 மணிக்கு மேல் சுமார் நான்கு டோக்கன்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டது.

    இது குறித்து பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு பத்திர பதிவு செய்ய வந்தவர்கள் கூறும்போது:-

    தருமபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஒருங்கிணைந்த பத்திர பதிவு அலுவலகத்திற்கு பொதுமக்கள் பத்திர பதிவு செய்ய வருகின்றனர்.

    அவ்வாறு வரும் பொது மக்களுக்கு உடனுக்குடன் பத்திர பதிவு செய்ய முடிவதில்லை சர்வர் பிரச்சினை எனக் கூறுவதால் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

    சில சமயங்களில் நள்ளிரவு வரை பத்தி ரப்பதிவு நடைபெறுகிறது. இதனால் பொதுமக்களுக்கு காலவிரயம், வருவாய் இழப்பு, தேவையின்றி செலவுகள் உள்ளிட்டவை ஏற்படுகின்றன.

    மேலும் முகூர்த்த நாளில் நல்ல நேரத்தில் பத்திரம் பதிவு செய்ய திட்டமிட்டவர்கள் அந்த நேரத்தில் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடையும் சம்பவங்களும் நடைபெறுகிறது.

    எனவே இணையத்தள சர்வரை மேம்படுத்தி பத்திரப்பதிவு விரைவாக நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • சொத்து பத்திரம், வீட்டு மனைப்பட்டா ஆகியவை இருந்தும் வங்கிகளில் கடன் உதவி பெற முடியவில்லை.
    • மருத்துவ சிகிச்சை, திருமணம், வீடு உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் இன்றி பலரும் சிரமப்பட்டு வருகின்றனா்.

    திருப்பூர்:

    தமிழகத்தில் நத்தம் நிலங்களை பூஜ்ஜியம் என்ற மதிப்பின்மை வகைப்பாடு ஆக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் சொத்து கிரயம் செய்ய முடியாத பிரச்னைக்கு அரசு தீா்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மதச்சாா்பற்ற ஜனதா தளத்தின் திருப்பூா் மாவட்டத் தலைவா் பனப்பாளையம் பாலசுப்பிரமணியம், பத்திர ஆவண எழுத்தா்கள் சங்க பல்லடம் கிளைத் தலைவா் ஜெகதீசன், பல்லடம் நகர காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான ஈஸ்வரமூா்த்தி ஆகியோா் பல்லடம் பத்திரப்பதிவு துறை சாா்பதிவாளா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

    பின்னா் அவா்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக நத்தம் நில பட்டா உரிமையாளா்கள் தங்களது இடத்தை விற்கவோ, வாங்கவோ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். ஏனெனில் நத்தம் நிலத்திற்கு அரசு மதிப்பு பூஜ்ஜியமாக பத்திரப்பதிவு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் சொத்து பத்திரம், வீட்டு மனைப்பட்டா ஆகியவை இருந்தும் வங்கிகளில் கடன் உதவி பெற முடியவில்லை. அவசர செலவுக்கு இடத்தை அடமானம் வைக்கமுடியவில்லை. இதனால் மருத்துவ சிகிச்சை, திருமணம், வீடு உள்ளிட்ட செலவுகளுக்கு பணம் இன்றி பலரும் சிரமப்பட்டு வருகின்றனா். அரசு நத்தம் நில வகைப்பாட்டிற்கு உரிய மதிப்பு தொகையை நிா்ணயம் செய்து பத்திரப்பதிவு துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நத்தம் நிலங்களை கிரையம், அடமானம் போன்ற வழக்கமான நடைமுறைப்படி பத்திரப்பதிவு செய்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். 

    • கொரோனா தொற்று கடந்த ஆண்டில் குறைந்ததால் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் வேகம் எடுத்தது.
    • இனிவரும் காலங்களில் வீடு, நிலம் வாங்கும் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கியது. புதிய வீடுகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. கட்டுமான தொழிலிலும் தொய்வு நிலை காணப்பட்டது.

    இந்நிலையில் கொரோனா தொற்று கடந்த ஆண்டில் குறைந்ததால் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் வேகம் எடுத்தது. புதிய கட்டுமான திட்டங்களும் தொடங்கப்பட்டன.

    வீடு வாங்குவதில் பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். இதன் காரணமாக வீடுகள் மற்றும் மனைகள் விற்பனை கடந்த ஆண்டு முதல் அதிகரித்து உள்ளது. தமிழகம் முழுவதும் இதே நிலை காணப்பட்டது.

    தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 34.41 லட்சம் பத்திரங்கள் பதிவாகி உள்ளன.

    இதன் மூலம் ரூ.17 ஆயிரத்து 296 கோடி வருமானம் கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள 63 பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலம் 5.83 லட்சம் பத்திரங்கள் பதிவாகி உள்ளன.

    இதன் மூலம் ரூ.7 ஆயிரத்து 727 கோடி வருமானம் கிடைத்துள்ளது.பத்திரப்பதிவுத்துறை மூலம் கிடைக்கும் மொத்த வருமானத்தில் 44 சதவீதம் சென்னையில் இருந்தே கிடைத்துள்ளது.

    கடந்த 2021-2022-ம் நிதியாண்டில் சென்னை மண்டலத்தில் 3.4 லட்சம் பத்திரங்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது.

    சென்னை குன்றத்தூர், திருப்பத்தூர், கூடுவாஞ்சேரி, சேலையூர், ஆவடி, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் மட்டும் கடந்த நிதி ஆண்டில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பத்திரங்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம் இந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் நிலம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சென்னையில் முக்கியமான இடங்களில் நிலத்தின் விலை அதிகரித்துள்ளதால் நடுத்தர மற்றும் உயர்வருவாய் பிரிவினர் குன்றத்தூர், அம்பத்தூர், ஆவடி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம், திருப்போரூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வாங்குகிறார்கள்.

    சென்னையில் அதிகபட்சமாக குன்றத்தூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் 27 ஆயிரத்து 705 பத்திரங்கள் பதிவாகி உள்ளன. அதற்கு அடுத்த படியாக திருப்போரூரில் 25 ஆயிரத்து 941 பத்திரங்கள் பதிவாகி உள்ளன.

    இனிவரும் காலங்களில் வீடு, நிலம் வாங்கும் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×