என் மலர்
வேலூர்
வேலூர் மேட்டு இடையம்பட்டி ரோடு எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது45), தொரப்பாடியில் டெய்லர் கடை வைத்துள்ளார்.
இவருடைய மனைவி கமலி. தம்பதிக்கு கடந்த 19 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக ராமச்சந்திரன் கமலி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.
இந்தநிலையில் கரூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தொரப்பாடியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு வந்தபோது ராமச்சந்திரனுடன் பழக்கம் ஏற்பட்டது.
ராமச்சந்திரன் அந்த இளம் பெண்ணை 2 வதாக திருமணம் செய்ய முடிவு செய்தார். இன்று காலை அடுக்கம்பாறை அருகே உள்ள ஓசூர் அம்மன் கோவிலில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
இன்று காலையில் கோவிலில் பூஜை செய்து தாலி கட்டுவதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கமலி அவரது மகன்களுடன் கோவிலுக்கு சென்றார் .அப்போது மணக்கோலத்தில் இருந்த கணவனை கண்டு அவர் திடுக்கிட்டார். அங்கிருந்தவர்களிடம் எடுத்துக்கூறி கணவரது திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.
இதனால் கமலிக்கும் 2 வது திருமணத்திற்கு வந்திருந்த பெண் வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
மேலும் இது தொடர்பாக வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கமலி புகார் அளித்தார்.
அனைத்து மகளிர் போலீசார் ராமச்சந்திரன் மற்றும் இளம்பெண் உறவினர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்தனர். அப்போது ராமச்சந்திரனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் உடனடியாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி வ.உ.சி.நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது45). அரப்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் டீ, புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்தனர்.
வீட்டின் கதவை திறந்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது சுரேஷ் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். உடலை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சுரேஷ் சில ஆண்டுகளாக அந்தப்பகுதியில் வசித்து வந்துள்ளார். ஆனால் அவரது சொந்த ஊர் மற்றும் குடும்பம் குறித்த விவரம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும், உடன் வேலை செய்தவர்களுக்கு தெரியவில்லை. அவருக்கு குடிப்பழக்கம் இல்லை என கூறப்படுகிறது.
வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்படவில்லை. இதனால் அவரது சாவில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கலாம்.அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியை சேர்ந்தவர் தயாளன் (வயது 48). இவர், டி.பார்ம் படித்துள்ளார்.
அப்பகுதியில் கிளீனிக் வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார்.
தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி வந்தார். இதுகுறித்து கலெக்டருக்கு புகார் வந்ததது. அவரது உத்தரவுபடி மாவட்ட மருத்துவ அலுவலர் கீர்த்தி தலைமையில் குழுவினர் பாணாவரம் பகுதிக்கு விரைந்து வந்து சிகிச்சை மையத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கிருந்த தயாளனை பிடித்து விசாரித்தபோது அவர் டி.பார்ம் படித்து விட்டு சிகிச்சை மையத்தை தொடங்கி 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக கூறினார். தற்போது பரவி வரும் கொரோனா தொற்றுக்கும் சிகிச்சை அளிப்பதாக கூறினார்.
மேலும் கிளினிக்கில் வைத்திருந்த மருந்து, மாத்திரைகள், ஊசிகள் மற்றும் பெண்களுக்கான கருக்கலைப்பு மாத்திரைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பரிமுதல் செய்து கிளீனிக்குக்கு சீல் வைத்தனர்.
தயாளன் மீது மாவட்ட மருத்துவ அலுவலர் கீர்த்தி பாணாவரம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலி டாக்டர் தயாளனை போலீசார் கைது செய்யப்பட்டார்.
கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் காட்பாடியில் சித்தூர் பஸ் நிலையம், குடியாத்தம் ரோடு மற்றும் மாநில எல்லை சோதனைச் சாவடியான கிறிஸ்டியான்பேட்டை ஆகிய சோதனைச் சாவடி பகுதிகளில் போலீசார் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அங்கு, போலீசார் 24 மணி நேரமும் வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
தற்போது பஸ்கள், ரெயில் போக்குவரத்தில் சில தளர்வு செய்யப்பட்டு, இயக்கப்படுகின்றன. இதனால் அந்தப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் சோதனை சாவடிகள் நேற்று மாலை அகற்றப்பட்டன. அப்பகுதிகளுக்கு காட்பாடி தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அந்தப் பணியை, காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் பார்வையிட்டார்.
வேலூர் அருகே உள்ள கம்மவான்பேட்டையை சேர்ந்த 32 வயது நபர் சென்னையில் கடந்த சில நாட்களாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் மோட்டார்சைக்கிளில் ஊர் திரும்பினார். இதுகுறித்து அக்கம்பக்கத்தை சேர்ந்தவர்கள் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று அவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். அதற்கான முடிவு நேற்று காலை தெரியவந்தது.
அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்தது. பின்னர் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் தாத்தா, பாட்டியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர் வீட்டுக்கு செல்லும் சாலையை அடைத்து அதிகாரிகள் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல தொரப்பாடியை சேர்ந்த 26 வயது பெண்ணின் கணவர் சென்னையில் ஒரு மருத்துவமனையில் கால் பிரச்சினை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உதவியாக இப்பெண்ணும் சென்னையில் இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் வேலூர் திரும்பினர். இதுகுறித்து சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அதிகாரிகள் அவர்களின் சளி மாதிரியை எடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. அவரின் கணவருக்கு பாதிப்பு இல்லை. எனினும் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதுதவிர வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 55 வயது ஆண், சென்னை கொரட்டூரை சேர்ந்த 50 வயது ஆண், வேலூர் லட்சுமி புரத்தை சேர்ந்த 35 வயது ஆண் ஆகியோர் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
ஆற்காடு:
ஆற்காடு அடுத்த கலவை புத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 44). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி தெய்வானை இவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு முத்துலட்சுமி கணவரை பிரிந்து பெண் குழந்தையுடன் சென்னையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
மனைவி, குழந்தை பிரிந்து சென்றதால் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் ஜீவானந்தம் சுற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு ஜீவானந்தம் கலவை புத்தூர் ரோட்டில் திருமண மண்டபம் எதிரே உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்துள்ளார்.
அப்போது மின்சாரம் தாக்கி உடல் கருகிய நிலையில் டிரான்ஸ்பார்மரில் தொங்கினார்.
இதனை கண்ட அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் கலவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு கலவை போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.
டிரான்ஸ்பார்மரில் இறந்து கிடந்த ஜீவானந்தம் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் 1000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கைதிகளை உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் புழல் ஜெயிலில் புதிதாக வந்த கைதிகள் மூலம் சுமார் 30 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சிறையிலேயே சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனால் தமிழகத்தில் ஜெயிலில் உள்ள கைதிகளின் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயிலில் தனித்தனியாக டாக்டர்கள் உள்ளனர். கிளினிக் உள்ளது.
இங்கு கைதிகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் உள்ளது.ஜெயில் டாக்டர்கள் கைதிகள் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.
அவர்களில் யாருக்காவது சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சுகாதார துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் அறிகுறி எதுவும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
வேலூர் ஜெயிலில் புதிதாக அடைக்கப்படும் கைதிகளை ஏற்கனவே உள்ள கைதிகளுடன் அடைக்கக்கூடாது.
அவர்களை தனியாக அடைக்க வேண்டும். அவர்களுடைய உடல் நிலையை கண்காணிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.
அதன்படி வேலூர் ஜெயிலுக்கு புதிதாக வரும் கைதிகள் தனியாக அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காட்பாடியில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் ஆரம்பத்திலேயே கொரோனாவை கிள்ளி எறியும் காரியத்தை இந்த அரசு செய்யவில்லை. மார்ச் ஆரம்பத்திலேயே நாங்கள் அரசாங்கத்தை எச்சரித்தோம். ஆனால் வியாதியை பற்றி அமைச்சர்களுக்கு தெரியவில்லை.
இந்த ஆட்சி கொரோனாவை கட்டுப்படுத்த தவறிவிட்டது. எனவே கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரம், உயிரிழப்புக்கு பொறுப்பேற்க வேண்டியது அ.தி.மு.க. அரசுதான்.
தமிழக அரசு புது பட்ஜெட் போட வேண்டும். போட்ட பட்ஜெட் பொறுப்பாக முழுநிலை எட்டவில்லை. ஏனென்றால் பட்ஜெட்டுக்கும் இப்போது ஏற்பட்டிருக்கும் செலவுக்கும் கொஞ்சம் கூட தொடர்பு கிடையாது. ஒவ்வொன்றுக்கும் கோடிக்கணக்கில் வாங்குவதைவிட ஒரு புதிய பட்ஜெட் போடலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குடியாத்தம்:
ஆந்திர மாநிலம் பலமனேர் பகுதியில் உள்ள கவுண்டன்யா சரணாலயத்தில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் குடியாத்தம் பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
நேற்று முன்தினம் குடியாத்தம் அடுத்த மோடி குப்பம், வலசை, கீழ் கொல்லப்பள்ளி, தனகொண்டபள்ளி பகுதிகளில் உள்ள விவசாய நிலத்தில் 17 காட்டு யானைகள் புகுந்தன.
அங்குள்ள 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியது. அத்துடன் மா மரங்கள் தேக்கு மரங்கள் ஆகியவற்றை பிடிங்கி வீசின.அப்பகுதியில் நேற்று மதியம் முதல் காட்டுயானைகள் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தன.
வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பட்டாசு வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டியடித்தனர்.
ஆந்திர எல்லையோரம் உள்ள காடுகளில் தற்போது காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. மீண்டும் யானைகள் எப்போது வேண்டுமானாலும் தமிழக பகுதிக்கு வரலாம் என கூறப்படுகிறது. அவற்றை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் நேற்று காலை காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது காகிதப்பட்டறை உழவர்சந்தை அருகே ஒரு வீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அவர் பார்த்தார். பின்னர் அவர், 2-வது மண்டல உதவி கமிஷனர் மதிவாணனை தொடர்பு கொண்டு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு வருவது தொடர்பாக கேட்டார். அப்போது ஆழ்துளை கிணறு அமைக்க யாரும் அனுமதி பெறவில்லை என்பது அவருக்கு தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு அவர், உதவி கமிஷனருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து உதவி கமிஷனர் மதிவாணன் மற்றும் சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மாநகராட்சியின் அனுமதி பெறாமல் ஆழ்துளை கிணறு போடப்பட்டது தெரிந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பணியை தடுத்து நிறுத்தினர். மேலும் ஆழ்துளை கிணறு அமைக்க பயன்படுத்திய போர்வெல் வாகனத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆழ்துளை கிணறு அமைக்க மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டும். மேலும் எந்த அளவுடைய குழாய் மூலம் ஆழ்துளை அமைக்கப்படுகிறது. விவசாய நிலமா?, வீட்டு தேவைக்கு அமைக்கப்படுகிறதா? என பல்வேறு தகவல்களை தெரிவித்து மாநகராட்சி நிர்ணயித்துள்ள தொகையை செலுத்த வேண்டும். அத்தொகையை செலுத்திய பின்னரே ஆழ்துளை கிணறு அமைக்க அனுமதி வழங்கப்படும். அனுமதி பெறாமல் ஆழ்துளை கிணறு அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
காட்பாடி தாலுகா லத்தேரியை அடுத்த பி.என். பாளையத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 75). இவருடைய மனைவி தனபாக்கியம் (70). இவர்களுக்கு உத்திரகுமார் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். அருணாச்சலம் யாருக்கும் இன்னும் சொத்தைப் பிரித்துக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில் 23-ந்தேதி உத்திரகுமாரின் மகன் கோட்டீஸ்வரன், தாத்தா அருணாச்சலம் வீட்டுக்குச் சென்றார். அங்கு, அவரிடம் சொத்தைப் பிரித்துக் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் ஆத்திரம் அடைந்த கோட்டீஸ்வரன் பாட்டி தனபாக்கியத்தை இரும்புக்கம்பியால் தாக்கி உள்ளார். அதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து லத்தேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிவு செய்து கோட்டீஸ்வரனை கைது செய்தார். இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற தனபாக்கியம் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். முதலில் இந்த வழக்கு கொலை முயற்சி வழக்காக பதிவு செய்யப்பட்டது. தனபாக்கியம் இறந்ததால், அந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவுவதை தடுக்க இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் சாமி ஊர்வலம், கோவில் திருவிழா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை எவ்வித ஆடம்பரமும் இன்றி எளியமுறையில் நடத்த வேண்டும். இந்த நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாட்டுப்புற கலைஞர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 60 நாட்களுக்கும் மேலாக எந்த நிகழ்ச்சிகளும் இல்லாததால் அவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் நேற்று காலை வாகனங்கள் மூலம் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே திரண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்குவதற்காக அங்கிருந்து தாரை, தப்பட்டைகளுடன் ஊர்வலமாக புறப்பட்டனர். நாட்டுப்புற கலைஞர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும், 144 தடை உத்தரவை மீறியும் ஊர்வலமாக வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் 94 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முக்கிய நிர்வாகிகள் 4 பேரை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க போலீசார் அழைத்து சென்றனர்.
நாட்டுப்புற கலைஞர்கள் அளித்த மனுவில், “ஊரடங்கால் 2 மாதங்களாக கோவில் திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. எளியமுறையில் திருமணங்கள் நடைபெறுகின்றன. அதன்காரணமாக கோவில் திருவிழா, சுபநிகழ்ச்சிகளை நம்பி வாழ்க்கை நடத்தி வரும் நாட்டுப்புற கலைஞர்களாகிய நாங்கள் வருமானம் இல்லாமல் தவித்து வருகிறோம்.
நலவாரிய உறுப்பினர்களுக்கும், வாரியத்தில் பதிவு செய்யாத கலைஞர்களுக்கும் கொரோனா நிவாரண உதவியாக மாதம் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் அரசு நிகழ்ச்சிகளுக்கு நாட்டுப்புற கலைஞர்களை பயன்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அலுவலக மேலாளர் முரளி இதுதொடர்பாக கலெக்டரிடம் தெரிவிப்பதாக கூறினார்.






