என் மலர்
வேலூர்
வேலூர் அருகே உள்ள கம்மவான்பேட்டையை சேர்ந்தவர் செல்வம் (வயது42). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். தற்போது தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மனைவி சித்ரா (36) தம்பதிக்கு கடந்த 20 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகள், மகன் உள்ளனர்.
சித்ராவுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அது கள்ளக்காதலாக மாறியது இருவரும் அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர்.
இதுபற்றி தெரிந்த செல்வம் மனைவியை கண்டித்தார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் நேற்று சித்ராவிடம் அவருடைய மகள் கள்ளக்காதலை கைவிடும்படி கூறினார்.
அப்போது ஆத்திரமடைந்த சித்ரா அவரது மகளை தாறுமாறாக அடித்தார். இதுபற்றி அவருடைய மகள் செல்போன் மூலம் செல்வத்திற்கு தகவல் கூறினார்.
இரவு பணியில் இருந்து வந்த செல்வம் இதுபற்றி கேட்டதால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்வம் வீட்டில் இருந்த கட்டையால் சித்ராவின் தலையில் அடித்தார். பலத்த காயமடைந்த அவர் சரிந்து விழுந்து இறந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் அடுத்த கணியம்பாடி சுற்று வட்டார பகுதி கிராமங்களில் அடிக்கடி பசுமாடுகள், ஆடுகள் திருட்டு போனது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சோழவரம் பகுதியை சேர்ந்த ரவி மற்றும் மேல்வல்லம் பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகியோரின் 7 பசுமாடுகள் தனித்தனியே திருட்டு போனது.
இதுதொடர்பாக அவர்கள் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சப்தலிபுரம் கிராமத்தை சேர்ந்த தியாகு (வயது 26), கணியம்பாடி பாரதியார் நகரை சேர்ந்த சுரேஷ் என்ற தனஞ்செயன் (26) ஆகியோர் மாடுகளை திருடிச் சென்றது தெரிந்தது.
2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தியாகு, சுரேஷ் ஆகியோர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பகல் நேரத்தில் சென்று மாடுகளை நோட்டமிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அந்த பகுதிக்கு வேன்களில் சென்று மாடுகளை திருடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவர்கள் 2 பேரும் இதுவரை 350-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை திருடி சென்று விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 7 பசுமாடுகள் மீட்கப்பட்டன.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் தனது மனைவி நளினி மற்றும் வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதி கேட்டு சென்னை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் சிறையில் ஜீவசமாதி அடைய அனுமதிக்கக்கோரி முருகன் கடந்த 1ந் தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதி மறுக்கப்படுவதால் மனமுடைந்த அவர் உண்ணாவிரதம் மேற்கொள்வதாகவும், சிறை வளாகத்திலேயே முருகன் ஜீவசமாதி அடைய அனுமதி கேட்டு சிறைத்துறை நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளதாகவும், தினமும் அவர் குறிப்பிட்ட நேரம் மட்டும் பழங்களை மட்டும் உட்கொள்கிறார் எனவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானம் அருகே உள்ள இன்பென்டரிரோடு பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 48). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று வேலூர் தீயணைப்பு நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் தனபாலை வழிமடக்கி பணம் கேட்டார்.
தனபால் பணம் இல்லை என கூறினார். இதையடுத்து அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனபாலின் கழுத்தில் வைத்து நான் பெரிய ரவுடி என்று மிரட்டி, அவரின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.2,600 -யை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த வாலிபரை பிடிக்க முயன்ற போது, அவர்களை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து தனபால் வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றது வசந்தபுரத்தை சேர்ந்த நைனா என்ற ஜெயப்பிரகாஷ் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் வியாபாரிகள் கட்டாயம் முக கவசம், கையுறை போன்றவற்றை அணிய வேண்டும்.
கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் செய்ய வேண்டும். கடை ஊழியர்கள் மற்றும் கடைக்கு வருபவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக காட்பாடியில் சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில் ஆய்வு செய்து வருகின்றனர். முகக் கவசம் அணியாத வியாபாரிகளுக்கு ரூ.100 அபராதம் விதித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று காலை விருதம்பட்டு காட்பாடி செல்லும் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஜூஸ் கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொதுமக்கள் நின்று ஜூஸ் குடித்தனர்.
அங்கு சென்று விசாரித்தபோது பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நிற்க வட்டம் எதுவும் வரையப்படவில்லை. இதனையடுத்து அந்த ஜூஸ் கடைக்கு சீல் வைத்தனர்.
இதேபோல் காட்பாடி காந்திநகரில் உள்ள ஒரு மீன் கடையில் ஆய்வு செய்தபோது 5 பேருக்கு மேல் பணியில் இருந்தனர். இதையடுத்து அந்த மீன் கடைக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
வியாபாரிகள் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் அடுத்த ஊசூர் தெள்ளூர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு மகன் ஏழுமலை (வயது 22). தனியார் பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்த ஏழுமலை விவசாய பயிர்களுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டார்.
மயக்கமடைந்த அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி ஏழுமலை இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த அவருடைய உறவினர்கள் இன்று காலையில் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டீன் அலுவலகம் உள்ள கட்டிடத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிகிச்சையில் இருந்த ஏழுமலை நன்கு குணமடைந்து வந்ததாகவும் டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் அவர் இறந்துவிட்டதாகவும் கூறினர். எனவே உடலை வாங்க மாட்டோம். தவறான சிகிச்சை அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விஷம் குடித்த ஏழுமலையின் உடலில் ஏற்கனவே விஷம் ரத்தத்தில் கலந்துவிட்டதால் அவர் மிக மோசமான நிலையில் தான் சேர்க்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை அளித்தும் அவர் இறந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர்.இதுபற்றி போலீசார் அவரது உறவினர்களிடம் எடுத்து கூறினர். இதனால் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஏ பிளாக்கில் வருவாய் துறை உதவியாளராக குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பணியாற்றி வருகிறார். அவருடைய உறவினர் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
இதனையடுத்து வருவாய் உதவியாளர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ரத்தம், சளி மாதிரி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் வேலூர் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று காலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 80க்கும் மேற்பட்டோருக்கு ரத்தம், சளி பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.
இதன் முடிவுகள் நாளை வெளிவரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நேற்று வரை 68 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மூலம் தற்போது வேலூரில் கொரோனா பரவி வருகிறது.
வேலூர் ஆற்காடு சாலையில் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த மெடிக்கல் உரிமையாளர் நேற்று முன்தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் இன்று அவருடைய தாயாருக்கு பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும் காட்பாடி காந்திநகரில் சென்னையிலிருந்து வந்த ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருடைய மனைவி மற்றும் அவருடைய 22 வயது மகன் பதிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர வேலூர் கொணவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். அவர் 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதியானது.
சதுப்பேரி பெரியமேடு கிராமத்தில் 25 வயது வாலிபர், வேலூர் அரசமரப்பேட்டையில் 65 வயது முதியவர், தாலுகா ஆபீஸ் பஸ் ஸ்டாப் பகுதியில் 30 வயது பெண் ஆகியோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து இவர்கள் சமீபத்தில் ஊருக்கு வந்தனர். பரிசோதனையில் இவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
பாதிக்கப்பட்ட 7 பேரும் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்கள் வசிக்கும் பகுதிகளில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலூர் மாநகர பகுதியில் ஒரே நாளில் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து யாராவது வந்து தங்கி இருந்தால் அவர்கள் குறித்த விவரங்களை உடனே அருகிலுள்ள போலீஸ் நிலைய மற்றும் சுகாதாரத் துறையினருக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் கொரோனா பரவுவதை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28,694ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 232-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19,826 ஆக அதிகரித்துள்ளது. 10,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 178-ஆக உள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 53 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி உள்ளது. அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக அரசு அலுவலகங்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்கள், உள்ளாட்சி நிர்வாக அலுவலகங்களில் என அரசு கேபிள் டி.வி. துறைக்கு கீழ் சுமார் 10 இ-சேவை மையங்கள் மையங்கள் உள்ளது.
ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட இந்த இ-சேவை மையங்கள் பின்னர் தளர்வினால் கடந்த மாதம் 18-ந் தேதி திறக்கப்பட்டு மீண்டும் செயல்பட தொடங்கியது. ஆனால் தனியார் இ-சேவை மையங்கள் திறக்கப்படவில்லை. அரசு இ-சேவை மையங்களுக்கு மக்கள் சென்று பல்வேறு சான்றிதழ்கள் பெற விண்ணப்பித்தனர்.
நாளுக்குநாள் மக்களின் கூட்டம் இ-சேவை மையங்களில் அதிகமாக காணப்பட்டது. அவ்வாறு வருபவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றும் முககவசம் அணியவில்லை என்றும் புகார்கள் எழுந்தது. மேலும் அங்கு பயோ மெட்ரிக் முறை கையாளப்படுவதாலும் கொரோனா பரவல் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்பட்டது. இந்த நிலையில் இந்த இ-சேவை மையங்களை மூட மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று காலையில் திறக்கப்பட்ட அனைத்து இ-சேவை மையங்கள் காலை 11 மணி அளவில் மூடப்பட்டது. அங்குள்ள கதவில் தேதி குறிப்பிடாமல் மூடப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை மையங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மறு உத்தரவு வந்த பின்னர் மீண்டும் திறக்கப்படும் என்றும், பேரணாம்பட்டு, அணைக்கட்டு தாலுகாவில் உள்ள இ-சேவை மையங்களுக்கு மக்கள் குறைவாக வருவதால் அந்த மையங்கள் மூடப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் கூறுகையில், இ-சேவை மையங்களில் குறிப்பிட்ட மக்களுக்கு சேவைகள் செய்ய டோக்கன் முறையை பயன்படுத்தலாம். இதனால் அதிகமாக மக்கள் கூடுவதை தவிர்க்க முடியும். மக்களின் தேவையும் ஒருபுறம் நிறைவேறும். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 27,256ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 14,901 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 220-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18,693 ஆக அதிகரித்து முதலிடத்தில் உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. செங்கல்பட்டில் 1,537 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் திருவள்ளூர் மாவட்டம் உள்ளது. அங்கு 1,124 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 52 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஏராளமான வெளி மாவட்டத்தை சேர்ந்த கொரோனா பாதித்தவர்கள் படையெடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் முழுமையான தகவலை தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
எனவே வெளி மாவட்டங்களில் இருந்து மருத்துவமனைக்கு கொரோனா பாதித்தவர்கள் வரும் வாகனங்கள் குறித்து கண்காணிக்க ஆற்காடு சாலையில் காகிதப் பட்டறையில் பேரிகார்டுகள் வைத்து இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல சோதனை சாவடி அமைக்கப்பட்டது. மேலும் காமராஜ் சிலை அருகே வாகனங்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் ஆற்காடு சாலையில் நேற்று காலை முதல் புதிய போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி காமராஜர் சிலை அருகே உள்ள சிக்னல் பகுதியில் இருந்து மருத்துவமனை உள்ளே செல்லும் வரை சாலையை 3 ஆக பிரித்து பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளது. சிக்னல் பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு செல்லாதவர்கள் நடுப்பகுதியை பயன்படுத்தும் வகையிலும், மருத்துவமனைக்கு செல்பவர்கள் இடதுபுறத்தை பயன்படுத்தும் வகையிலும் தனித்தனியே வாகனங்கள் செல்லும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்கள் குறித்த விவரம் முழுமையாக சேகரிக்கப்படுவதில்லை என்றும் மாவட்ட நிர்வாகத்தின் கண்துடைப்பு நடவடிக்கையாகவே இது உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
மாவட்ட எல்லையான பிள்ளையார்குப்பத்திலும் போக்குவரத்து போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்டுகளை வைத்து போக்குவரத்தை பிரித்து வாகனங்களை சோதனை செய்து வருகின்றனர்.






