என் மலர்
செய்திகள்

வேலூர் அருகே 350 பசுமாடுகளை திருடிய 2 பேர் கைது
வேலூர்:
வேலூர் அடுத்த கணியம்பாடி சுற்று வட்டார பகுதி கிராமங்களில் அடிக்கடி பசுமாடுகள், ஆடுகள் திருட்டு போனது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சோழவரம் பகுதியை சேர்ந்த ரவி மற்றும் மேல்வல்லம் பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகியோரின் 7 பசுமாடுகள் தனித்தனியே திருட்டு போனது.
இதுதொடர்பாக அவர்கள் வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சப்தலிபுரம் கிராமத்தை சேர்ந்த தியாகு (வயது 26), கணியம்பாடி பாரதியார் நகரை சேர்ந்த சுரேஷ் என்ற தனஞ்செயன் (26) ஆகியோர் மாடுகளை திருடிச் சென்றது தெரிந்தது.
2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தியாகு, சுரேஷ் ஆகியோர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பகல் நேரத்தில் சென்று மாடுகளை நோட்டமிட்டுள்ளனர். இரவு நேரங்களில் அந்த பகுதிக்கு வேன்களில் சென்று மாடுகளை திருடி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவர்கள் 2 பேரும் இதுவரை 350-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை திருடி சென்று விற்பனை செய்துள்ளது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 7 பசுமாடுகள் மீட்கப்பட்டன.






