என் மலர்tooltip icon

    வேலூர்

    • மாணவர் திட்டங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
    • புதிய ஆய்வு துறைகளில் கவனம் செலுத்தும்.

    வேலூர்:

    வி.ஐ.டி. பல்கலைக்கழகம் நோக்கியாவுடன் 5ஜி மற்றும் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் பற்றி கூட்டு ஆராய்ச்சி தொடர ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

    வி.ஐ.டி. நிறுவனர் வேந்தர் டாக்டர். ஜி.விசுவநாதன், வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன் மற்றும் டாக்டர் ஜி.வி. செல்வம் முன்னிலையில் விஐடி பதிவாளர் டாக்டர் டி.ஜெயபாரதி மற்றும் நோக்கியா பெங்களூரு பல்கலைக்கழக ஒத்துழைப்புத் தலைவர் பொன்னி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    விஐடி துணைவேந்தர் டாக்டர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் டாக்டர் பார்த்த சாரதி மல்லிக், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் துறை டீன் டாக்டர்.எஸ்.சிவானந்தம் மற்றும் நோக்கியா லேப்ஸ் தலைவர் எஸ்.மீனாட்சி, நோக்கியா விஐடி புரிந்துணர்வு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் க. கோவர்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், விஐடி மற்றும் நோக்கியா ஆகியவை 5ஜி, செயற்கை நுண்ணறிவு (ஏ1உ) மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு, டிஜிட்டல் ட்வின், ரேடியோ அடிப்படையிலான உணர்திறன், இணைக்கப்பட்ட வான்வழி வாகனங்கள், மின்னணு ஆரோக்கியம் மற்றும் ஆட்டோமேஷன் போன்ற புதிய ஆய்வு துறைகளில் கவனம் செலுத்தும்.

    நோக்கியாவின் வல்லுநர்கள் விஐடியின் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள், கற்றல், முன்மாதிரி மற்றும் மாணவர் திட்டங்களுக்கு வழிகாட்டுவார்கள்.

    நோக்கியா விஐடி மாணவர்களுக்கான கற்றல் வாய்ப்புகளை வழங்கும் மற்றும் குறுகிய கால தொடர் கல்வி திட்டங்களை கூட்டாக ஏற்பாடு செய்யும் என தெரிவித்தனர். 

    • வேலூர் அடுத்த மோட்டூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
    • விபத்தில் சிக்கி மாணவி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 19) ஈக்காட்டுத்தாங்களை சேர்ந்தவர் டிராவிட் (21). ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர்கள் அஸ்வதி (21) மற்றும் சக்தி (21).

    இதில் விஷ்ணுவும், அஸ்வதியும் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் 4 பேரும் திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டனர்.

    வேலூர் அடுத்த மோட்டூர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு கம்பியில் மோதியது. இதில் கார் உருண்டு சென்று லாரியின் மீது மோதியது. காரின் முன் பகுதி முழுவதும் சேதமானது.

    காரில் இருந்த இளம்பெண் உட்பட 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்வதி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏலகிரிக்கு சுற்றுலா சென்ற போது விபத்தில் சிக்கி மாணவி இறந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    • பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
    • 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள கஸ்பாவில் நடந்த கெங்கையம்மன் சிரசு திருவிழாவில் புரட்சி பாரத கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை. இதையடுத்து எங்கள் கட்சி உயர் மட்டக்குழுவை கூட்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஏன் இந்த பின்னடைவு என்பதை கூட்டணி கட்சி தலைமையும் ஆலோசிக்க வேண்டும்.

    எதிர்க்கட்சியாக இருக்கிற இந்தியா கூட்டணி வலுவாக இருந்த காரணத்தால் இந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு வந்திருக்கிறது.

    இது தொடரும் என்று சொல்ல முடியாது. 2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

    ஒரு சில குழப்பங்களால் அ.தி.மு.க பிரிந்திருக்கிறது. அது, ஒன்று சேர்ந்தால் எப்படிப்பட்ட கட்சியையும் வீழ்த்துவார்கள். ஜெயலலிதா இருந்தபோது எதிரிகளே இல்லாத நிலை இருந்தது.

    இப்போது எதிரிகள் வளர்ந்து விட்டனர். இதற்கு அ.தி.மு.க பிரிந்து இருப்பதே காரணம். அ.தி.மு.க.வினர் ஒன்று சேர்ந்தால் தமிழகத்துக்கு நல்லது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது.
    • புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது..

    நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து புஷ்பா-2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. நடிகர் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர்.புஷ்பா-2 படத்தின் 2 பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி மக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது..

    வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி புஷ்பாபு-2 வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது.

    தற்போது படத்தின் வெளியீட்டை ஒத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் இறுதி கட்டப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதனால் படம் வெளி வருவதில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.

    புஷ்பா-2 வெளியாவதில் தாமதம் ஏற்பட்டால் தமிழ் மற்றும் இந்தி திரையுலகில் தயாராக உள்ள மற்ற சினிமா படங்கள் ஆகஸ்ட் 15-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தமிழகத்தில் 39 வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன.
    • வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன், ஐபேட், லேப்டாக், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் கடந்த சனிக்கிழமை அன்று நிறைவடைந்தது. இதையடுத்து பதிவான வாக்குகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

    தமிழகத்தில் 39 வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 14 மேஜைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்குள் முகவர்கள் செல்போன், ஐபேட், லேப்டாக், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதனால் மாவட்டம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் வாக்கு பெட்டிகள், தேர்தல் அலுவலர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.


    வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் வாக்கு பெட்டிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் பதிவான 9,993 தபால் வாக்குகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    • கொலை-கொள்ளை, சட்டம் ஒழுங்கு சரியில்லை.
    • கஞ்சா போதை கூலிப்படையை வைத்து கொலை செய்வது அதிகரித்துவிட்டது.

    வேலூர்:

    வேலூர்மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் சித்த மருத்துவமனையில் தெலுங்கானாவின் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி ஆனந்தன் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இன்று பிறந்தநாள் காணும் தமிழிசை சவுந்தரராஜன், தந்தையை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் வாங்க முடிவு செய்தார். இதனால் தந்தையை பார்ப்பதற்காக தமிழிசை சவுந்தரராஜன் ரெயில் மூலம் காட்பாடிக்கு வந்தார். காட்பாடி ரெயில் நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    என்னுடைய பிறந்தநாளும் ஜுன் 2 தான், தெலுங்கானாவும் பிறந்தது ஜூன் 2 தான். மீண்டும் மோடி பிரதமராக நன்றியுடன் வாக்களித்த மக்களுக்கு நன்றி. தமிழகத்திலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, வாக்கு சதவிகிதமும் அதிகரிக்கும். வேங்கை வயல் பிரச்சினைக்கு தீர்வில்லை.

    கொலை-கொள்ளை, சட்டம் ஒழுங்கு சரியில்லை. கஞ்சா போதை கூலிப்படையை வைத்து கொலை செய்வது அதிகரித்துவிட்டது.

    காங்கிரசின் மாவட்டத்தலைவர் கொலைக்கு தடயமும், தீர்வும் கிடைக்கவில்லை. இவ்வளவு தோல்விகளை வைத்துகொண்டும் ரேஷன் அரிசி கடத்தல், மின் கட்டணம் பால், பத்திரபதிவு கட்டணம் உயர்வு. இலாகா இல்லாத ஒரு அமைச்சர் ஊழலால் சிறையில் உள்ளார். மக்கள் இதனால் வெறுப்படைந்துள்ளனர்.

    வருங்காலத்தில் இதனை உணர வேண்டும். பாரத தேச மக்கள் வளர்ச்சிக்காகவும், ஊழலுக்கும் எதிராக வாக்களித்துள்ளனர். நாங்கள் நாட்டின் பாதுகாப்பிற்காக வாக்களிக்கிறோம் என மக்கள் மகிழ்ச்சியாக சொல்கின்றனர்.

    மக்கள் நாட்டின் பாதுகாப்பை உணர்ந்தே பா.ஜ.க.வுக்கு வாக்களி த்துள்ளனர். பிரதமர் மீது, மக்கள் அபரிவிதமான அன்பை வைத்திருகின்றனர்.

    தமிழகத்தில் இன்னும் அதிகமான எண்ணிக்கையை எதிர்பார்த்தோம். தி.மு.க. கூட்டணி பலமாக உள்ளது. ஆனால் எதிர் வாக்கு சிதறுகிறது.

    இருந்தாலும் தமிழக கருத்து கணிப்பை விட அதிக எண்ணிக்கையை பெறுவோம். திராவிட மாயையுடன் தவறுகள் நடக்கிறது. இதனை மக்கள் புரிந்துகொள்வார்கள். கன்னியாகுமரிக்கு மோடி தியானம் செய்ய வந்தார். ஆனால் ஸ்டாலின் கொடைக்கானால் கோள்ப் விளையாடினார். இதையெல்லாம் கேமரா இல்லாமலே படம் எடுத்தனர். மோடி எங்கு சென்றாலும் தியானம் செய்யலாம்.

    ஆனால் கன்னியாகுமரி ஒரு தியாக பூமி. அது பார்வதி மாதா தவம் செய்த இடம். விவேகானந்தர் தவம் செய்த இடம். இப்படிப்பட்ட ஆன்மீக இடமாக கன்னியாகுமரி உள்ளது என்பதை எடுத்து சொல்ல தான் மோடி அங்கு தியானம் செய்து திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

    பிரதமர் அங்கு தியானம் செய்ததால் அதன் முக்கியத்துவம் அதிகமாக தெரிகிறது. பிரதமர் செல்லும் போது தியானம் செய்த இடம் குறித்து மக்களுக்கு அதற்கான முக்கியத்துவம் தெரியவரும்.

    பிரதமர் மோடி தினமும் காந்தி சிலைக்கு பூதூவி தான் அலுவலகத்தில் பணியை தொடங்குகிறார்.

    மோடி எதை செய்தாலும் அது திணிக்கப்படுகிறது .ஒரு நடிகர் சொல்கிறார் மோடி ஷுட்டிங்க் நடத்துகிறார் என்று. தி.மு.க. அலுவலகத்தில் எல்லாம் இப்போது தான் தேசிய கொடியை ஏற்றுகின்றனர்.

    முரசொலியில் காந்தியை பற்றி தலையங்கம் எழுதுகின்றனர். இதற்கு அவர்களை எழுத வைக்க மோடி தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • இந்திய தியாகிகளை நாங்கள் மறைத்ததாக கூறுகிறார்கள். அதை மறைத்தது கவர்னர் தான்.
    • ஒரு விழாவுக்கு நாங்கள் கவர்னர் மாளிகைக்கு போயிருந்தபோது அவர் போட்டுக்காட்டிய தியாகிகள் வரலாற்று படத்தில் காந்தி, நேரு படம் இல்லை.

    வேலூர்:

    தி.மு.க பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் காட்பாடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்த தேர்தலில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் எத்தனையோ அத்துமீறல்களுக்கு உட்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும், பிரதமருக்கும் வித்தியாசம் உண்டு. பிரதமரின் பேச்சு முக்கியத்துவம் பெறும்.

    அதில் ஒன்றுதான் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ள வேளையில் ஒருவித மறைமுகமான செல்வாக்கை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு இவரது செய்கை உள்ளது என்பதால் தான் நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். நாங்கள் மட்டும் அல்ல, இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லாம் மோடியின் செய்கையை தவறு என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். அதையெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் கன்னியாகுமரிக்கு வந்து தடை உத்தரவு போட்டு வியாபாரம் ஸ்தம்பித்து போகிற நிலையை உருவாக்கி தியானத்தில் அமர்ந்துள்ளார். இது நல்லது அல்ல என்பதை தான் நாங்கள் சுட்டிக் காட்டியுள்ளோம்.

    காந்தி பற்றி மோடி பேசியதை நான் எதிர்பார்க்கவில்லை. காந்தி குஜராத்தை சேர்ந்தவர். அவரது ஆசிரமம் அங்குதான் உள்ளது. அதைக்கூட பார்த்திருக்க மாட்டாரா?. காந்தி பற்றி தெரியாதா?. அவரது பேச்சு காந்தி மீது எவ்வளவு வஞ்சகம் கொண்டிருக்கிறார் என்பதை காட்டுகிறது.

    இந்திய தியாகிகளை நாங்கள் மறைத்ததாக கூறுகிறார்கள். அதை மறைத்தது கவர்னர் தான். ஒரு விழாவுக்கு நாங்கள் கவர்னர் மாளிகைக்கு போயிருந்தபோது அவர் போட்டுக்காட்டிய தியாகிகள் வரலாற்று படத்தில் காந்தி, நேரு படம் இல்லை. அதை மறைத்தவர் கவர்னர்.

    புதிய அணை கட்ட கேரள அரசு அறிக்கை தாக்கல் செய்தாலும் சரி, டி.பி.ஆர். தாக்கல் செய்தாலும் சரி, அவர்களால் நம்மை கேட்காமல் ஒரு செங்கல்லையும் எடுத்து வைக்க முடியாது. வைக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தனது தீர்ப்பில் திட்டவட்டமாக கூறியுள்ளது.

    அவர்கள் அரசியலுக்காக வேண்டுமானால் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மதிக்காமல் நடந்து கொள்ளலாம். ஆனால் மேகதாது, சிலந்தி ஆறு, முல்லை பெரியாறில் எந்த காரணத்தைக் கொண்டும் சுப்ரீம் கோர்ட்டின் அனுமதியின்றியும், தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமலும் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைப்பதற்கு முடியவே முடியாது.

    ஒடிசாவை தமிழர் ஆள்வதா என்று மத்திய மந்திரி அமித்ஷா பேசியுள்ளார். ஒடிசா ஒரு காலத்தில் தமிழர்கள், சோழ மன்னர்கள் ஆண்ட காலத்தில் எங்களிடம் தான் இருந்தது. ஏன் நாங்கள் இலங்கை வரை சென்று ஆட்சி செய்துள்ளோம். இதெல்லாம் அமித்ஷாவுக்கு தேவையில்லாத ஒன்று. ஒடிசாவில் எத்தனை வடமாநிலத்தவர் செல்வாக்கோடு உள்ளனர். அதேபோன்றுதான் ஒரு தமிழர் உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழை பெய்யும் போது சாலை சந்திப்புகளில் தெரு விளக்குகள் மற்றும் உயர் மட்ட விளக்குகள் எரிவதில்லை.
    • கடந்த 5 ஆண்டுகளில் இந்த நெடுஞ்சாலையில் 520-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வேலூர்:

    ராணிப்பேட்டை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிப்காட் வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் வரை சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ள கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.

    இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் சென்னையில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் ஆரணி, காஞ்சிபுரம் பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் ஆந்திரா வழியாக எளிதில் கர்நாடகா மாநிலம் பெங்களூரு செல்ல முடியும்.

    இதனை கருத்தில் கொண்டு ராணிப்பேட்டை- சித்தூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்கான டெண்டர் அறிவிப்பு வெளியானது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 18-வது முறையாக டெண்டர் விடும் பணியை நிறுத்தி வைத்துள்ளது.

    இதனால் சாலை விரிவாக்க பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சாலை விரிவாக்கம் செய்யப்பட்டால் சென்னை துறைமுகத்திலிருந்து வரும் கனரக வாகனங்கள் செல்வதில் முக்கிய வழித்தடமாக இருக்கும். இதனை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இது ஒருபுறம் இருக்க சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் வேலூர் கிருஷ்ணகிரி வழித்தடத்தில் தற்போது நடந்து வரும் சாலை விரிவாக்க பணிகளும் நிலுவையில் உள்ளன.

    ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ராணிப்பேட்டை இடையான தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மேம்பாலங்கள் கட்டும்பணி நடந்து வருகிறது. போதிய தடுப்புகள் மற்றும் பிரதிபலிப்பு விளக்குகள் இல்லாமல் வாகனங்கள் அடிக்கடி பிரேக் போடும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.

    மழை பெய்யும் போது சாலை சந்திப்புகளில் தெரு விளக்குகள் மற்றும் உயர் மட்ட விளக்குகள் எரிவதில்லை. இதனால் மேம்பால பணிகள் நடைபெறும் இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் இந்த நெடுஞ்சாலையில் 520-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதனால் சென்னை-பெங்களூரு செல்லும் லாரி டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ராணிப்பேட்டை வாலாஜா சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்பட்டு அதுவும் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. புதிய திட்டம் வகுக்கும் வரை இந்த சாலை 4 வழிச்சாலையாகவே செயல்படும் என தெரிவித்துள்ளனர்.

    வாகன ஓட்டிகளிடம் தேசிய நெடுஞ்சாலை துறை கோடிக்கணக்கில் பணம் வசூலித்து வருகிறது. ஆனால் சாலை பணிகளை முறையாக செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளது.

    சென்னை-பெங்களூரு இடையே சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் சாலை பணிகள் அரசின் ஒப்புதல் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது அலட்சியப் போக்கை காட்டுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

    • 2-ம் நூற்றாண்டுகளில் இது போன்ற தவளை இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
    • தவளைகள் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன.

    ஆந்திர மாநிலம், பலமனேறு அருகே உள்ள கவுண்டன்யா வனப்பகுதியை ஒட்டி கவுனிதிம்மேபள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குளத்தில் இந்திய புவியியல் ஆய்வு மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிய வகையை சேர்ந்த முதுகு தங்கம் போல் மின்னும் தவளையை கண்டு பிடித்தனர்.

    2-ம் நூற்றாண்டுகளில் இது போன்ற தவளை இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதுபோன்ற தவளைகள் இலங்கையில் மட்டுமே காணப்படுகின்றன. இந்த தவளையின் முதுகு தங்க நிறத்திலும் உடல் மேல் பகுதி கருமையாகவும் உள்ளது. இதனுடைய அறிவியல் பெயர் ஹைரா கிராசிலிஸ் என்பதாகும்.

    இந்திய துணை கண்டத்தில் இதுவரை 19 வகையான தங்க முதுகு தவளைகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • வேலூர் தங்க கோவிலில் இன்று காலை தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்.
    • பாரதப் பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

    வேலூர்:

    வேலூர் தங்க கோவிலில் இன்று காலை தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    வந்தே பாரத் ரெயில் தற்போது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்த ரெயில் மூலம் பயணம் செய்வதால் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்த ரெயிலை அறிவித்த பாரத பிரதமருக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இது நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சி இதனை பொறுத்துக் கொள்ளாத எதிர்க் கட்சியினர் பிரித்தாள்கிறது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர் இதனை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள்.

    பாரதப் பிரதமரின் ஒவ்வொரு வளர்ச்சியையும் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். விரைவில் சென்னையில் இருந்து மைசூருக்கு புல்லட் ரெயில் வர உள்ளது.

    நடைபெற்று முடிந்த 4 கட்ட தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க எவ்வளவு இடங்கள் வேண்டுமோ அவ்வளவு கிடைத்துவிட்டது.

    எதிர்க்கட்சியினர் சுயநலத்துக்காக வாக்குகளை கேட்கின்றனர். ஆனால் பிரதமர் மோடி மக்களின் நலன் கருதி வாக்குகளை கேட்டு வருகிறார்.

    தமிழக அரசு இந்தியா கூட்டணியில் இருந்து வரும் நிலையில் தமிழகத்திற்க்கு 2.5 டி.எம்.சி தண்ணீர் தர வேண்டுமென ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

    ஆனால் தமிழக அரசு இதற்கு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. காங்கிரசும் தி.மு.க.வும் கூட்டணியில் இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்கும் என்று தமிழக மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

    தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது காவிரி தண்ணீருக்காக போராட்டம் நடத்தினார்.

    டாஸ்மாக் கடைகளுக்கும் போராட்டம் நடத்தினார். காவிரியில் தண்ணீர் கொண்டு வரவில்லை. ஆனால் அதிகமாக டாஸ்மாக் கொண்டு வந்தார்கள் இதுதான் தி.மு.க.வின் சாதனை. தமிழக அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்து வருகிறது.

    கஞ்சா வழக்கில் ஜாபர் சாதிக்கை தி.மு.க. அரசு காப்பாற்ற நினைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உயர்நீதிமன்றமே கஞ்சா விற்பவர்களுக்கும் காவல் துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கும், விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் போதை தான் காரணம். போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

    தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருவதால் அதற்கான இடங்களை தமிழக அரசு கூடுதல் ஆக்க வேண்டும்.

    கருணாநிதி பற்றிய பாடம் 9 மற்றும் 10-ம் வகுப்பு ஆகிய பாடப் புத்தகங்களில் இடம்பெற்று இருந்தது.தற்போது 8-ம் வகுப்பிலும் அவரைப் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது.

    பா.ஜ.க. கல்வியில் ஏதோ ஒரு சின்ன மாற்றம் கொண்டு வந்ததற்காக கல்வி காவியமாக்கப்படுகிறது என்று கூறினார்கள். இன்று தமிழகத்தில் கல்வி கலைஞர் மயமாக்கப்பட்டு வருகிறது.

    ஒரு தலைவரைப் பற்றி எத்தனை பாட புத்தகங்களில் கொண்டு வருவீர்கள். எனவே இதற்கு ஒரு வழிகாட்டும் முறைகள் இருக்க வேண்டும்.

    எத்தனையோ அறியப்படாத தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி புத்தகங்களில் இடம்பெற வேண்டும். குழந்தைகள் மனதில் விதைப்பது எல்லாம் நல்ல விதைகளாக இருக்க வேண்டும்.

    57 வருடமாக காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வளர்க்க தவறிவிட்டதாக இப்போது செல்வ பெருந்தகை கூறுகிறார். தி.மு.க.வின் தோளில் அமர்ந்து கொண்டு காங்கிரசை எப்படி வளர்க்க முடியும்.

    நாங்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தனித்து நிற்கிறோம். தி.மு.க.வை விட்டு ஒருபோதும் காங்கிரசால் வெளியே வர முடியாது.

    அரசியலுக்காக தற்போது செல்வ பெருந்தகை இப்படி பேசியுள்ளார். இது ஒரு புறமிருக்க தற்போது நடந்து வரும் தி.மு.க. ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என ஈ . வி. கே. எஸ். இளங்கோவன் சொல்கிறார்.

    இது ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • சிரசு ஊர்வலம் சென்ற பாதையில் கெங்கையம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • சிரசு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் குடியாத்தம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் இன்று நடந்தது.

    அதிகாலை 4.30 மணியளவில் குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    அப்போது, சிலம்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பம்பை, உடுக்கை, மேள-தாளம் முழங்க அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

    நடுப்பேட்டை, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக நடைபெற்ற ஊர்வலம் கெங்கையம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, தரணம்பேட்டை முதல்கோபாலபுரம் வரை சாலையின் இருபுறமும் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணா மலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் 5 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் குடியாத்தம் வந்து, விழாவில் குவிந்தனர்.

    சிரசு ஊர்வலம் சென்ற பாதையில் கெங்கையம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு மக்கள் வெள்ளத்தில் சென்ற சிரசு, கெங்கையம்மன் கோவில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது.

    தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் தேங்காய்களை உடைத்தும், ஆடு, கோழி பலியிட்டும், பலர் அலகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன. பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மலர் மாலை, எலுமிச்சை மாலை, ரூபாய் நோட்டு மாலை ஆகியவற்றை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனுக்கு அணிவித்து வழிபட்டனர். வழி எங்கும் பக்தர்களுக்கு நீர், மோர், கூழ் இலவசமாக வழங்கினர்.

    தொடர்ந்து இன்று இரவு அம்மன் உடலில் இருந்து சிரசு பிரிக்கப்பட்டு, கவுண்டன்ய ஆற்றங்கரையில் அலங்காரம் கலைக்கப்பட்டு மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    சிரசு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் குடியாத்தம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுதவிர தனிப்பிரிவு போலீசார், உளவுத்துறை, வெடிகுண்டு நிபுணர்க்ள பல்வேறு பாதுகாப்பு கருவிகளுடன் கோவில் கட்டிடம், ஊர்வலம் உள்ளிட்ட பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

    சிரசு ஏற்றத்திற்கு பிறகு பக்தர்கள் உடலில் கரும்புள்ளி-செம்புள்ளி வேடமிட்டும், உடலில் எலுமிச்சை பழங்கள் குத்தி கொக்கலியாட்டம் ஆடியபடி ஊர்வலமாக வந்து வேண்டுதல்கள் நிறைவேற்றினர்.

    விழாவையொட்டி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று குடியாத்தத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் நகரமே குலுங்கியது. 

    • 4வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் தொடங்கியது.
    • முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும்.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது. மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தலம் மூலம் ஆந்திராவில் நடைபெறும் தேர்தலையொட்டி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அதில் ஆந்திர பிரதேச மக்கள் குறிப்பாக முதல் முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும்.

    இந்த சாதனை நமது ஜனநாயக உணர்வை மேலும் மேம்படுத்தட்டும் என கூறியுள்ளார்.

    ×