என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது.
    • போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலையில் புயல் மழை காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக 37 சென்டிமீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை வ. உ. சி. நகர் பகுதியில் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து ராட்சத பாறை ஒன்றும் உருண்டது. மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது. வீட்டில் இருந்த 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கினர்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கனமழை நின்ற பிறகு அந்த பகுதிக்கு செல்ல முடிந்தது.

    தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. மண் சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். ராஜ்குமார் (32), மீனா (26), கவுதம் (9), இனியா (7), மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகியோர் உள்ளே சிக்கினர். கவுதம், இனியா ஆகியோர் ராஜ்குமார், மீனா தம்பதியின் குழந்தைகள் ஆவர்.

    இதனை தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு படை வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீயணைப்பு துறையினர் எந்திர உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலையில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது.

    இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

    இந்நிலையில், திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 7 பேரில் குழந்தைகள் உள்பட 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. மீதமுள்ள ஒரு நபரின் உடலை மீட்கும் பணி நடந்து வந்தது.

    இந்த நிலையில், ஏழாவது நபரின் உடலும் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரையும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


    • மழை பெய்து கொண்டே இருப்பதால், மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது.
    • மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் 200 மீட்டர் தொலைவில் மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.

    வங்க்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் நேற்று மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்தது.

    இதன் எதிரொலியால், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.

    இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலையில் நேற்று பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது. இதில், வீட்டின் மீது பாறை விழுந்ததை அடுத்து அதனுள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மழை பெய்து கொண்டே இருப்பதால், மீண்டும் மண் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது.

    அதபோல், மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் 200 மீட்டர் தொலைவில் மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.

    இந்நிலையில், திருவண்ணாமலை தீபமலையில் அமைந்துள்ள குகை நமச்சிவாய ஆலயத்தின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.

    இதில், நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர்சேதம் இல்லை. அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது.

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலையில் பாறை உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்ட இடத்தை இன்று காலை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மண் சரிவு ஏற்பட்டு வீட்டினுள் சிக்கி இருக்கும் நபர்கள் குறித்து கேட்டறிந்தார். மழை பெய்து கொண்டே இருப்பதால் மீண்டும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அப்பகுதிமக்களை முகாமில் தங்குமாறு அறிவுறுத்தினார். மேலும் மீட்பு படையினரிடம் விரைந்து செயல்பட வேண்டும்.

    முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் மீட்பு பணியை துரிதப்படுத்த சென்னை ஐ.ஐ.டி. வல்லுனர்கள் 2 பேர் வருகிறார்கள். அவர்கள் வருகை பெரும் உதவியாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் 200 மீட்டர் தொலைவில் மேலும் ஒரு இடத்தில் மண் சரிவு ஏற்பட்டது. மண் சரிவில் சிக்காமல் இருப்பதற்காக பொதுமக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.

    • தனித்தீவு போல் காட்சியளித்து வருகிறது.
    • பொதுமக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

    திருக்கோவிலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து நேற்று நள்ளிரவு 1.70 லட்சம் கன அடி தண்ணீர் திறந்ததால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்துள்ளது.

    இதனால் வீரபாண்டி ஏரி உடைந்து திருக்கோவிலூர்-விழுப்புரம் சாலையில் உள்ள அரகண்டநல்லூர் முற்றிலும் துண்டிக்கப்பட்டு தனித்தீவு போல் காட்சியளித்து வருகிறது.

    இதனால் பொதுமக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் பாலத்தை எட்டிப்பிடிக்கும் அளவிற்கு தண்ணீர் வேகமாக செல்வதால் ஆற்றங்கரை ஓரமாக வசித்த பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீட்டை விட்டு வெளியேறி நடுரோட்டில் நின்று என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

    மனம்பூண்டியில் உள்ள ஓம் சக்தி நகர், பெருமாள் கோவில் தெரு, அஷ்டலட்சுமி நகர், தெய்வீகன் தெரு, தேவனூர் கூட்ரோடு, பழனி நகர், அரகண்டநல்லூர், பச்சையம்மன் கோவில் பகுதி ஆசிரியர் நகர் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் புகுந்ததில் சுமார் 1000 வீடுகள் தத்தளித்து கொண்டிருக்கின்றது.

    திடீரென தண்ணீர் புகுந்ததால் மக்கள் தங்கள் வீடுகளின் மாடியில் தற்சமயம் தஞ்சம் அடைந்துள்ளனர். மாடியில் தஞ்சம் அடைந்த மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற இதுவரை மோட்டார் படகு மற்றும் தீயணைப்பு வீரர்கள் யாரும் வராததால் பொதுமக்கள் உயிருக்கு பயந்து பதட்டமான நிலையில் உள்ளனர்.

    மேலும், தற்போது காலை உணவு கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் முதற்கட்டமாக உணவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அரகண்டநல்லூர் பகுதியில் பெருமளவு பாதிக்கப்பட்டு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பேரிடர் மேலாண்மை குழுவினர் விரைந்து வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    தென்பெண்ணை ஆற்றில் அளவுக்கு அதிகமாக ஓடும் வெள்ளம் நீரை காண ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றின் மேம்பாலத்தில் நின்று வேடிக்கை பார்த்து வருவதுடன் செல்போனில் செல்பி படம் எடுத்தும் வருகின்றனர்.

    ஆற்றின் வேகம் நீரின் அளவு குறித்து கொஞ்சம் கூட பயமில்லாமல் பொதுமக்கள் ஜாலியாக நின்று வேடிக்கை பார்ப்பதை போலீசாரும் அப்புறப்படுத்தவில்லை. திருக்கோவிலூர் பம்ப்ஹவுஸ் ரோட்டில் தென் பெண்ணை ஆற்றின் வெள்ளநீர் புகுந்ததால் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு திருக்கோவிலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    முகையூர் ஏரி உடைந்து போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    கீழையூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நகர மன்ற தலைவர் டி. என். முருகன் ஆணையாளர் திவ்யா துணை தலைவர் உமா மகேஸ்வரி குணா மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து மாற்று ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    • 4-ந்தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது.
    • அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழா காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நேற்று இரவு தொடங்கியது.

    இன்று பிடாரி அம்மன் உற்சவமும், நாளை விநாயகர் உற்சவமும் நடைபெற உள்ளன. 3 நாட்கள் நடைபெறும் எல்லை தெய்வ வழிபாட்டுக்குப் பிறகு மூலவர் சந்நிதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் 4-ந்தேதி காலை கொடியேற்றம் நடக்கிறது. இதையடுத்து 10 நாள் உற்சவம் ஆரம்பமாகிறது.

    6-ம் நாள் உற்சவத்தில் 63 நாயன்மார்கள் வீதி உலாவும் அன்று இரவு தங்கத் தேரோட்டமும் நடைபெறும். 7-ம் நாள் உற்சவத்தில் பஞ்ச ரத மகா தேரோட்டம் 10-ந் தேதி நடைபெறும்.

    அன்று ஒரே நாளில் 5 தேர்கள் மாட வீதியில் வலம் வரும். ஒவ்வொரு தேரும் நிலைக்கு வந்த பிறகு அடுத்த தேரின் புறப்பாடு இருக்கும். காலையில் தொடங்கும் மகா தேரோட்டம் நள்ளிரவு வரை நடைபெறும்.

    தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கார்த்திகை தீபத் திருவிழா 13-ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படும்.

    மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள திருவண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். 11 நாட்களுக்கு மகா தீப தரிசனத்தைக் காணலாம்.

    முன்னதாக அருணாசலேவரர் கோவில் தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளத் தங்க கொடிமரம் முன்பு அர்த்த நாரீஸ்வரர் காட்சி தருவார்.

    இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். இதையடுத்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் நடைபெற்றதும் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு பெறும்.

    கார்த்திகை தீப திருவிழாவில் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் நடந்து வருகிறது.

    • இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
    • 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் புயல் மழை காரணமாக நேற்று மிக கனமழை பெய்தது. அதிகபட்சமாக 37 சென்டிமீட்டர் மழை பதிவானது. சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த நிலையில் திருவண்ணாமலை வ. உ. சி. நகர் பகுதியில் மகா தீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அங்கிருந்து ராட்சத பாறை ஒன்றும் உருண்டது. மலைப்பகுதியில் இருந்த ராஜ்குமார் என்பவருடைய வீடு மண் சரிவில் முற்றிலுமாக புதைந்தது. வீட்டில் இருந்த 7 பேர் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கி உள்ளதாக தெரிகிறது.

    அந்த வீட்டுக்குள் வசித்தவர்கள் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக மாறிவிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சேறும் சகதியுமாக மாறியது.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கனமழை நின்ற பிறகு அந்த பகுதிக்கு செல்ல முடிந்தது.


    தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டதால் இடிபாடுகளில் சிக்கியவர்கள் வீட்டிற்கு அருகே செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தீயணைப்பு துறையினர் இரவு 8 மணிக்கு அங்கு சென்றனர்.

    மண் சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் இருந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். அப்போது உள்ளே ஆட்கள் இருப்பது போல மோப்பநாய் அடையாளம் காட்டியது. இதனை தொடர்ந்து அந்த இடத்தில் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

    போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மழை பெய்ததாலும் மண் சரிவு ஏற்பட்டதாலும் இரவில் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.

    மீட்பு படை வீரர்கள் 30-க்கும் மேற்பட்டோர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் தீயணைப்பு துறையினர் எந்திர உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இன்று காலையில் தொடர்ந்து மீட்பு பணி நடந்தது.

    அப்போது மழை பெய்ததால் மகா தீப மலையில் இருந்து மழை நீர் மீட்பு பணி நடந்த இடத்திற்கு வந்தது. இதனால் மேலும் மண்சரிவு ஏற்படாத வண்ணம் மீட்பு பணியை மேற்கொண்டனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்பதால் அந்த பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

    இதுகுறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கூறுகையில்:-

    மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து பாறைகள் உருண்டு விழும் ஆபத்தான நிலை இருப்பதால் இரவில் மீட்பு பணியை மேற்கொள்வது சிக்கலாக இருந்தது.

    இன்று காலையில் அரக்கோணம் பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 30 பேர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மண்ணில் புதைந்த வீட்டில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் இருந்ததாக தெரிவித்துள்ளனர். மலை அடிவாரப் பகுதியில் மழை வெள்ளத்தால் சில வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பொது மக்களை மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளோம்.

    மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு 7 பேர் கதி என்ன என்பது தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவண்ணாமலையில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மண்சரிவில் சிக்கி உள்ளவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

    • அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உளள் மலையிலிருந்து சரிந்த பாறைகள் வீடுகள் மீது விழுந்தது.
    • பாறையுடன் மண்ணும் சரிந்து வீடுகளை மூழ்கடித்தன.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. புயல் கரையை கடந்த நிலையிலும் தொடர் கனமழையால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன.

    மீட்புப் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையிலிருந்து சரிந்த பாறைகள் வீடுகள் மீது விழுந்தன. பாறைகளுடன் மண்ணும் சரிந்ததால் வீடுகள் மண்ணிற்குள் புதைந்துள்ளன.

    மண்ணில் புதைந்த வீட்டிற்குள் 5 குழந்தைகள், இரண்டு பெண்கள் என 7 பேர் உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கலெக்டர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் மீட்புப்பணிக்கான NDRF வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர். அவர்கள் தற்போது மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

    • கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
    • அணையில் நீர்வரத்து அதிகரிப்பால், மொத்த உயரமான 119 அடியில் முழுவதும் நிரம்பியது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, சாத்தனூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பால், மொத்த உயரமான 119 அடியில் முழுவதும் நிரம்பியது.

    இதனால் அணையில் இருந்து சுமார் 1.68 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், தென்பண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பாறை உருண்டு விழுந்ததில் அங்கிருந்த வீடுகள் அப்படியே பூமிக்குள் புதைந்துள்ளன.
    • வீட்டிற்குள் பெண்கள், குழந்தைகள் என 7 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தகவல்.

    ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் திருவண்ணாமலையின் மலை அடிவாரத்தின் கீழ் உள்ள வீடுகள் மீது பாறை உருண்டு விழுந்துள்ளது.

    இதில், அங்கிருந்த வீடுகள் அப்படியே பூமிக்குள் புதைந்துள்ளன.

    அந்த வீட்டிற்குள் பெண்கள், குழந்தைகள் என 7 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    இதையடுத்து, சம்பவ இடத்திற்கு ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், மாவட்ட எஸ்பி சுதாகர் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

    மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையினா அங்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    புதைந்த வீடுகளுக்கு மேல் பெரிய பாறை ஒன்று இருப்பதால், மீட்புப் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    • திருவண்ணாமலையில் நேற்றில் இருந்து இன்று வரை 370 மி.மீ. மழை பெய்துள்ளது.
    • பெஞ்சல் புயல் திருவண்ணாமலை வழியாக திருப்பத்தூர், தர்மபுரிக்கு சென்று கன மழையை கொடுக்கும்.

    ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடந்த நிலையில் அது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக் கொண்டுள்ளது.

    அதன்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் வழியாக மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஃபெஞ்சல் புயலினால் இதனையடுத்து தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "திருவண்ணாமலை நகரத்தில் ஃபெங்கல் மையம் கொண்டுள்ளது. அதனால் திருவண்ணாமலையில் பலத்த மழை பெய்துள்ளது. நேற்றில் இருந்து இன்று வரை அம்மாவட்டத்தில் 370 மி.மீ. மழை பெய்துள்ளது.

    இனி ஃபெஞ்சல் புயல் திருவண்ணாமலை வழியாக திருப்பத்தூர், தர்மபுரிக்கு சென்று கன மழையை கொடுக்கும். பின்னர் கர்நாடகாவுக்கு சென்று கன மழையை கொடுக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பிளாஸ்டிக் கவரில் உணவு இருப்பதாக நினைத்து பூனை அதனுள் தலையை விட்டது.
    • பொதுமக்கள் பூனையை காப்பாற்ற நினைத்து அதனை பிடிக்க முயன்றனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அச்சரப்பாக்கம் சாலையில் பூனை ஒன்று சுற்றி திரிந்தது.

    அப்போது யாரோ ஒருவர் உணவை வாங்கி சாப்பிட்டுவிட்டு மீதம் உள்ளதை சாலையில் வீசி சென்றுள்ளார். தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் கவரில் உணவு இருப்பதாக நினைத்து பூனை அதனுள் தலையை விட்டது. இதில் பூனையின் தலை சிக்கியது.

    இதனால் பிளாஸ்டிக் கவருடன் சாலையில் அங்கும் இங்கும் ஓடியது. பூனை சாலையில் ஓடியதால் விபத்தில் சிக்கும் இறக்கும் நிலை ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் பூனையை காப்பாற்ற நினைத்து அதனை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் யாரிடமும் சிக்காமல் ஆட்டம் காட்டியது. இந்த நிலையில் சிறுவன் ஒருவன் சாலையில் ஓடிய பூனையை லாவகமாக பிடித்து தலையில் சிக்கிய பிளாஸ்டிக் கவரை அகற்றினான். பிளாஸ்டிக் கவரை எடுத்தவுடன் நிம்மதியுடன் மூச்சு விட்ட பூனை மின்னல் வேகத்தில் அங்கிருந்து ஓடியது. சிறுவனை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.

    • கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் டிசம்பர் 4-ந் தேதி நடக்கிறது.
    • நெய் காணிக்கையையும் செலுத்தலாம்.

    வேக்கிங்கால்:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் டிசம்பர் 4-ந் தேதி நடக்கிறது. விழாவின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான மகாதேரோட்டம் டிசம்பர் 10-ந்தேதி நடைபெற உள்ளது.

    டிசம்பர் 13-ந் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

    மகா தீபம் ஏற்றுவதற்கு 3 ஆயிரத்து 500 கிலோ நெய், 1000 மீட்டர் திரி (காடா துணி) பயன்படுத்துவது வழக்கம். தீபத் திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகள் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.

    அதன் தொடர்ச்சியாக மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள யானை வளாகம் முன்பு சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டு உள்ளது.

    இதில் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் நெய் காணிக்கைக்காக பணம் செலுத்தி வருகின்றனர். பணம் செலுத்தும் பக்தர்களுக்கு அதற்கான ரசீது உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

    இதில் ஒரு கிலோ நெய் ரூ.250, அரை கிலோ ரூ.150, கால் கிலோ ரூ.80 என்ற அடிப்படையில் நெய் காணிக்கையை செலுத்தலாம்.

    அதேபோல் வெளியூர் பக்தர்கள் ஆன்லைனில் நெய் காணிக்கை செலுத்தலாம். பக்தர்கள், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் நெய் காணிக்கை என்ற இணையத்தில் சென்று செலுத்தலாம்.

    காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு தீபத் திருவிழாவை தொடர்ந்து ஆருத்ரா தரிசனம் முடிந்து 'மை' பிரசாதம் வழங்கப்படும்.

    கவுண்டரில் பணம் செலுத்தும் பக்தர்களுக்கு நேரடியாகவும், ஆன்லைனில் பணம் செலுத்தும் பக்தர்களுக்கு தபால் மூலமும் பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×