என் மலர்
திருவண்ணாமலை
- தமிழ்நாட்டில் முடியாட்சி நடக்கவில்லை குடியாட்சிதான் நடக்கிறது.
- 1971 ஆம் ஆண்டே இந்தியாவில் மன்னராட்சி முடிவுக்கு வந்துவிட்டது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" நூல் வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய அவர், "மன்னர் பரம்பரை போன்ற ஆதிக்கத்திற்கு தமிழகத்தில் இனி இடமில்லை. 2026ம் ஆண்டு தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் ஒரு முதலமைச்சர் தமிழகத்தில் உருவாக்கப்பட கூடாது. கருத்தியல் உள்ளவர் தான் தமிழகத்தில் முதல்வராக வேண்டும். தமிழகத்தில் மதம், ஜாதியை போல ஊழல் எதிர்ப்பை ஏன் யாரும் முன்னெடுக்கவில்லை" தெரிவித்தார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு தான் ஆதவ் அர்ஜுனா இவ்வாறு பேசியுள்ளார் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் இக்கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், "தமிழ்நாட்டில் முடியாட்சி நடக்கவில்லை குடியாட்சிதான் நடக்கிறது. 1971 ஆம் ஆண்டே இந்தியாவில் மன்னராட்சி முடிவுக்கு வந்துவிட்டது. யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மேடையில் பேசி முடிவு எடுக்கும் விஷயம் இது அல்ல" என்று தெரிவித்தார்.
- அருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது.
- தீபத் திருவிழாவை முன்னிட்டு சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது.
அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
தீபத் திருவிழாவை முன்னிட்டு சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிலையில், தீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் இருந்து, வரும் 15ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 பேருந்துகள் கட்டணமின்றி இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- தீபத் திருவிழாவிற்கு 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
- பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் தங்க ஏதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
தீபத் திருவிழா திருவண்ணாமலையில் 156 பள்ளிகளுக்கு, நாளை முதல் வரும் 16ம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
பாதுகாப்பு பணிக்கு வரும் காவலர்கள் தங்க ஏதுவாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதன்படி, தனியார், அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என 156 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- மகா தீப மலையில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் மலையேர அனுமதிக் வேண்டாம் என வனத்துனையினர் வேண்டுக்கோள் விடுத்தனர்.
- அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் ஃபெஞ்ஜல் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதனால் மகா தீபம் ஏற்றப்படும் அண்ணாமலையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து மண் சரிவு ஏற்பட்டது.
மண் சரிவு ஏற்பட்டதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . தற்போது மகா தீப மலையில் ஈரப்பதம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் மலையேர அனுமதிக் வேண்டாம் என வனத்துனையினர் வேண்டுக்கோள் விடுத்தனர். இதையொட்டி திருக்கார்த்திகை தீப திருவிழாவிற்கு பக்தர்களை மலைக்கு அனுமதிப்பது குறித்த ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.
இதையடுத்து திருவண்ணாமலை மகா தீப மலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பிரேமலதா உட்பட 8 பேர் அடங்கிய புவியியல் வல்லுனர் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.
- பாறைகளும் அடுத்தடுத்து வீட்டின் மீது விழுந்தன.
- 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன.
திருவண்ணாமலையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக 2 நாட்களுக்கும் மேலாக இடைவிடாது பலத்த மழை பெய்தது. இந்த மழையானது, மலையையே அசைக்கும் அளவுக்கு வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில் அண்ணாமலையார் என பக்தர்களால் அழைக்கப்படும் மலையில் வ.உ.சி.நகர் பகுதிக்கு மேலே உள்ள ராட்சத பாறைகள் திடீரென பயங்கர சத்தத்துடன் உருண்டு கீழ்நோக்கி வந்தன.
அதன் காரணமாக பாறைக்கு கீழே உள்ள மண் பெயர்ந்து அருவிபோல ஆக்ரோஷமாக வ.உ.சி.நகர் வீடுகளை நோக்கி பொலபொலவென சரிந்ததில் 2 வீடுகளுக்குள் புகுந்து அந்த வீடுகளே மண்ணுக்குள் புதைந்தன. அதுமட்டுமின்றி அத்துடன் பாறைகளும் அடுத்தடுத்து வீட்டின் மீது விழுந்தன
அப்போது ஒரு வீட்டில் இருந்தவர்கள் வெளியேறி விட்டனர். மற்றொரு வீடு கண் இமைக்கும் நேரத்தில் மண் சரிவில் சிக்கியது.
இந்த மண் சரிவில் புதைந்து 7 பேர் பரிதாபமாக இறந்தனர். 5 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. மீதமுள்ள 2 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது.
பிரேத பரிசோதனை நிறைவடைந்த பின்னர் நேற்று இரவு 7 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்தவர்களின் உடல்களை கண்ட அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். அது காண்போர் அனைவரின் கண்களையும் கலங்க செய்தது.

இந்நிலையில் மண் சரிவில் உயிரிழந்த 7 பேரின் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் பிச்சாண்டி அஞ்சலி செலுத்தினர்.
7 பேரின் உடலை பார்த்து அமைச்சர் எ.வ.வேலு கண் கலங்கினார். உயிரிழந்த 7 பேரின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.
- அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.
- 10 நாட்கள் காலை, இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் வருகிற 13-ந்தேதி கார்த்திகை தீபத் திருவிழா மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதனையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 1-ந் தேதி காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவம், தொடர்ந்து பிடாரி அம்மன், விநாயகர் உற்சவம் நடந்தது.
இன்று காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நடந்தது. அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடி மரத்தில் காலை 6.25 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. கொடிமரத்தின் அருகே அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்தி அம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இதனை தொடர்ந்து 10 நாட்கள் காலை இரவு என இருவேளையில் சாமி மாடவீதி உலா நடைபெறுகின்றன.
வருகிற 10-ந்தேதி மகா தேரோட்டம் நடைபெறும். கார்த்திகை தீபத் திருவிழாவின் உச்ச நிகழ்வான மகா தீபம் 13-ந்தேதி ஏற்றப்படுகிறது.
13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். அப்போது 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
13-ந்தேதி முதல் 11 நாட்களுக்கு மலை உச்சியில் அண்ணாமலையார் ஜோதிப்பிழம்பாக காட்சி தருவார். கார்த்திகை தீபத் திருவிழாவில் சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் பக்தர்களின் வசதிக்காக செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை நடைபெற்ற கொடியேற்று விழாவில் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- சரிந்து விழுந்திருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
- 12 மணி நேர மீட்பு பணிக்கு பிறகு நேற்று மாலை வீட்டில் புதைந்து இருந்த 5 பேர் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் புயல் காரணமாக வரலாறு காணாத அளவில் கனமழை பெய்தது. கடந்த 1-ந்தேதி காலை தொடங்கி விடாமல் மழைக் கொட்டியது. திருவண்ணாமலை வ.உ.சி.நகர் பகுதியில் மகாதீப மலையின் சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து பெரிய பாறை உருண்டது.
அதனை தொடர்ந்து பயங்கர சத்தத்துடன் மண் சரிவு ஏற்பட்டது. இதில் 2 வீடுகள் முற்றிலுமாக சிக்கிக் கொண்டது. அதில் ஒரு வீட்டுக்குள் இருந்தவர்கள் ஏற்கனவே வெளியேறி விட்டதால் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
ஆனால் மற்றொரு வீடு கண்ணிமைக்கும் நேரத்தில் மண் சரிவில் முழுமையாக மூடியது. அதோடு பாறைகளும் அடுத்தடுத்து வீட்டின் மீது விழுந்தன.
அந்த வீட்டுக்குள் இருந்த கூலித் தொழிலாளி ராஜ்குமார் (வயது 32) அவருடைய மனைவி மீனா (26) மற்றும் அவர்களது மகன் கவுதம் (9) மகள் இனியா ( 7) உறவினர்களான சுரேஷ் என்பவரது மகள் மகா (12) சரவணன் மகள் ரம்யா (12) மஞ்சுநாதன் மகள் வினோதினி (14) ஆகிய 7 பேரும் மண்சரிவில் சிக்கினர். அவர்கள் வீட்டுக்குள் உயிரோடு புதைந்து சமாதியானார்கள்.
இதனைக்கண்டு பதறிய அந்த பகுதி பொதுமக்கள் போலீசார், மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மற்றும் தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.
அரக்கோணம் பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த வீரர்கள் 30 பேர் மாநில பேரிடர் குழுவை சேர்ந்த 50 பேர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உட்பட 200 பேர் மீட்பு பணியில் களமிறங்கினர். மோப்ப நாய் உதவியுடன் மீட்பு பணி நடந்தது.
சரிந்து விழுந்திருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. ஆனாலும் சேறும் சகதியுமாக வீட்டின் மீது குவிந்து கிடந்த மண்ணையும் பாறை கற்களையும் அகற்றுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டது. மலைப்பகுதியில் பெரிய பொக்லைன் எந்திரங்களை கொண்டு செல்ல முடியவில்லை.
இதை தொடர்ந்து சிறிய பொக்லைன் எந்திரத்தை குறுகலான பாதையின் வழியே செங்குத்தாக படிப்படியாக கொண்டு செல்லும் முயற்சி நடந்தது. அதனை வைத்து மீட்பு பணியை மேற்கொண்டனர்.
12 மணி நேர மீட்பு பணிக்கு பிறகு நேற்று மாலை வீட்டில் புதைந்து இருந்த 5 பேர் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்டன.
இதில் ஒரு உடல் மண்ணில் ஆழத்தில் சிக்கியிருந்ததால் வெளியே எடுக்க முடியவில்லை. அதனை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அந்த உடல் மீட்கப்பட்டது.
மேலும் 2 பேரின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
- லேசான மலையின் போது எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
- மலை அருகே வீடுகள் கட்டும் பொதுமக்கள் முன்கூட்டியே என்ஜினீயர் மூலம் ஆய்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்து பலியான மேலும் 2 பேர் உடல்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. சென்னை ஐ.ஐ.டி ஓய்வு பெற்ற வல்லுனர்கள் மோகன், நாராயண ராவ், பூமிநாதன் ஆகியோர் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை வந்தனர். அவர்கள் மீட்பு பணிக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவண்ணாமலை மகாதீப மலையில் தொடர் மழை பெய்தால் மீண்டும் மண் சரிவு ஏற்படும். லேசான மலையின் போது எந்தவித பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. மலை அருகே வீடுகள் கட்டும் பொதுமக்கள் முன்கூட்டியே என்ஜினீயர் மூலம் ஆய்வு செய்து பணிகளை தொடங்க வேண்டும். மண் சரிவு குறித்து அறிக்கை தயார் செய்துள்ளோம்.
இதனை அரசிடம் சமர்ப்பிப்போம். இது குறித்த முழு விவரங்களை அரசு வெளியிடும் என்றனர்.
- விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டது.
- திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
வேங்கிகால்:
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதனால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டது. இன்று காலை சாத்தனூர் அணைக்கு 36 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து நீர் திறப்பு 36 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று காலை ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா சோளிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் பரலான மழை பெய்தது.
திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், பள்ளிகொண்டா, காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை லேசான சாரல் மழை பெய்தது.
- விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெற உள்ளது.
- விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள்.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்னர் 3 நாட்கள் காவல் தெய்வ வழிபாடு நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் திருவண்ணாமலை சின்னக்கடை தெருவில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து நேற்று கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு அங்காரத்தில் பிடாரி அம்மன் எழுந்தருளி கோவிலின் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் முன்பு தயார் நிலையில் இருந்த சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் அம்மன் மாட வீதி உலா நடந்தது. இன்று (செவ்வாய்க்கிழமை) விநாயகர் உற்சவ நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா நடைபெற உள்ளது.
தொடர்ந்து நாளை (புதன்கிழமை) காலை 6 மணியில் இருந்து 7.25 மணிக்குள் சாமி சன்னதியில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று காலையில் மற்றும் இரவில் விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2-ம் நாள் விழாவில் இருந்து 9-ம் நாள் விழா வரை காலையில் விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி விழாவும் நடைபெற உள்ளது.
இதற்கிடையில் 10-ந் தேதி (7-ம் நாள் விழா) பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 13-ந் தேதி (10-ம் நாள் விழா) விடியற்காலை 4 மணிக்கு கோவில் கருவறைக்கு முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அன்று இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாட வீதி உலாவும் நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- தமிழக அரசு சார்பில் காவல், தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
- அரசு 7 பேரையும் உயிருடன் மீட்கவே முயற்சிகளை மேற்கொண்டது.
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இடிபாடுகளில் சிக்கியுள்ள வீட்டை துணை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர், " திருவண்ணாமலையில் நடந்தது மிகவும் தயரமான சம்பவம். விபத்து நடந்த பின்பு தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு சார்பில் காவல், தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அரசு 7 பேரையும் உயிருடன் மீட்கவே முயற்சிகளை மேற்கொண்டது.
அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் தொடர்ந்து மீட்பு பணியினை ஆய்வு செய்து வருகின்றனர். ஃபெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய ரூ.2000 கோடி கேட்கப்பட்டுள்ளது.
நாளை மாலைக்குள், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். ஐஐடி குழுவினர் நாளை மண் மாதிரிகளை எடுத்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.
- கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே கரையை கடந்தது.
இதன் எதிரொலியால், தமிழ்நாட்டில் வடமாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. குறிப்பாக புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் கடலூர், விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..
இந்நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.






