என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மகளின் படிப்பு செலவுக்காக நந்தகுமார் தான் ஓட்டிவந்த ஆட்டோவை விற்று விட்டார்.
    • பல் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள மஞ்சங்காரணை கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் நந்தகுமார். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு தமிழ்விழி, கனிமொழி என்ற 2 மகள்கள் உள்ளனர்.

    இதில் தமிழ்விழி கன்னிகைப்பேர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து 419 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட தமிழ்விழி நீட் தேர்வு எழுதியும் தேர்ச்சி ஆனார்.

    ஆனால் அவருக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் சேர இடம் கிடைத்தது. ஆனாலும் போதிய பணம் இல்லாததால் மாணவி தமிழ்விழி கல்லூரியில் சேரமுடியாமல் தவித்தார்.

    இதைத்தொடர்ந்து மகளின் படிப்பு செலவுக்காக நந்தகுமார் தான் ஓட்டிவந்த ஆட்டோவை விற்று விட்டார். தற்போது அவர் கூலித்தொழிலாளியாக மாறி வேலைக்கு சென்று வருகிறார். அவரது மனைவியும் கூலி வேலை பார்த்து வருகிறார். ஆனாலும் மகளின் மருத்துவ கனவை எப்படியும் நிறைவேற்றிவிட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

    இதுகுறித்து மாணவி தமிழ்விழி கூறும்போது, பல் டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஆனால் படிக்க வைக்க பெற்றோரிடம் வசதி இல்லை. எனது படிப்பிற்காக தந்தை ஓட்டி வந்த ஆட்டோவையும் விற்று விட்டார். இப்போது பெற்றோர் கூலி தொழிலாளர்களாக உள்ளனர்.

    அவர்களது வருமானம் வீட்டு செலவுக்கே போதுமானதாக இல்லை. எனினும் எனது கனவை அவர்கள் நிறைவேற்றி வருகின்றனர். கல்லூரியில் சேர உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.

    • காக்களூர் பகுதியில் வாகன எடைமேடை உள்ளது.
    • ஆத்திரம் அடைந்த வாலிபர் கத்தியால் பாஸ்கரின் தலையில் வெட்டிவிட்டு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2 ஆயிரத்தை கொள்ளையடித்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளுவர் அடுத்த காக்களூர் பகுதியில் வாகன எடைமேடை உள்ளது. இங்கு திருவேற்காடு அகரம் பகுதி சேர்ந்த பாஸ்கர் (42) என்பவர் கணினி ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு அவர் பணியில் இருந்தபோது ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் திடீரென கத்திமுனையில் பணம் கேட்டு பாஸ்கரை மிரட்டினார். ஆனால் பாஸ்கர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர் கத்தியால் பாஸ்கரின் தலையில் வெட்டிவிட்டு கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2 ஆயிரத்தை கொள்ளையடித்தார். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவையும் நொறுக்கி தப்பிசென்று விட்டார்.

    இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கிராம பகுதியில் சிறுத்தைப்புலியின் கால்தடம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று பார்வையிட்டனர்.
    • ஆடுகளை கொன்ற மர்மவிலங்கு குறித்து அறிய அப்பகுதியை சுற்றிலும் 5 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர்.

    திருவள்ளூர்:

    பூண்டி பகுதியில் உள்ள காப்புக்காடு அருகே மோவூர் கிராமம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை சேர்ந்த ரஜினி என்பவரின் 8 ஆடுகளை மர்ம விலங்கு கடித்தில் இறந்து போனது.

    அனைத்து ஆடுகளின் கழுத்திலும் விலங்கின் பல் தடம் பதிந்து இருந்தால் தாக்கியது சிறுத்தைப்புலியாக இருக்கலாம் என்ற தகவல் பரவியது. இதனால் மோவூர் கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். கிராமத்திற்கும் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கும் குறைந்த தூரமே உள்ளதால் சிறுத்தைப்புலி வந்திருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    ஆனால் இதுவரை சிறுத்தை நடமாட்டம் அப்பகுதியில் இல்லை. எனினும் வன அலுவலர் விஜயசாரதி தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் மோவூர் கிராமத்திற்கு சென்று இறந்து போன ஆடுகளை ஆய்வு செய்தனர். கிராம பகுதியில் சிறுத்தைப்புலியின் கால்தடம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று பார்வையிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ஆடுகளை கொன்ற மர்மவிலங்கு குறித்து அறிய அப்பகுதியை சுற்றிலும் 5 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். அதில் சிறுத்தைப்புலி அல்லது வேறு ஏதேனும் உருவம் பதிவாகி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகிறார்கள். பூண்டி காப்புக்காடு பகுதியிலும் ரோந்து சென்று மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து பார்வையிட்டனர்.

    ஒரே நாளில் 8 ஆடுகளை மர்மவிலங்கு கடித்து கொன்றதால் மோவூர் கிராம மக்கள் சிறுத்தைப்புலி பீதியில் உள்ளனர்.

    • அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக திருவள்ளூர் டவுன் போலீசார் பா.ஜனதா கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
    • 30 பெண்கள் உட்பட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே பாரதிய ஜனதா கட்சி சார்பில் நேற்று நூதன போராட்டம் நடைபெற்றது.

    இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக திருவள்ளூர் டவுன் போலீசார் பா.ஜனதா கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    இதுதொடர்பாக பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் லட்சுமி காந்த், மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வா, மாநில ஓ.பி.சி. அணி செயலாளர் ராஜ்குமார், மாவட்டத் தலைவர் அஸ்வின் ராஜசிம்மா, மாவட்ட பொதுச்செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், மாவட்டச் செயலாளர் பாலாஜி மற்றும் 30 பெண்கள் உட்பட 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாலை விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
    • தூட்டார் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலிலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பெரியபாளையம்:-

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி, பஜார் வீதியில் ஸ்ரீராஜமன்னார் கிருஷ்ண பஜனை மந்திர தேவஸ்தான திருக்கோவில் உள்ளது.

    இக்கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலை மூலவருக்கு பால், தயிர், நெய் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    இதன் பின்னர், மகா அலங்காரம், மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. மதியம் கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


    மாலை சிறப்பு பூஜை, சிறப்பு ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன்பின்னர், பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் மங்கள வாத்தியம் முழங்க, வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதன் பின்னர், கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    மேலும், ஆரணி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஸ்ரீ ஆதி லட்சுமி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாலை விசேஷ பூஜைகள் நடைபெற்றது. தூட்டார் தெருவில் உள்ள கிருஷ்ணர் கோவிலிலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    • போராட்டத்தை மாவட்ட தலைவர் அஸ்வின் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளரும், பெருங்கோட்ட பொறுப்பாளரான வினோஜ் பி.செல்வா பங்கேற்று பேசினார்.

    திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே பா.ஜ.க பட்டியல் அணி சார்பில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே திமுக அரசுக்கு பிச்சை அளிக்கும் போராட்டம் நடைபெற்றது

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பட்டியல் அணி மாவட்ட பொதுச் செயலாளர் லட்சுமி காந்த் ஆதி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன், லயன்சீனிவாசன், ஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில், மாவட்ட தலைவர் அஸ்வின் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளரும், பெருங்கோட்ட பொறுப்பாளரான வினோஜ் பி.செல்வா பங்கேற்று பேசினார்.

    அப்போது, பட்டியலின மக்களுக்கான கல்வி உதவி தொகை மற்றும் நலத்திட்டங்களுக்கு இதுவரையில் ரூ.10 ஆயிரம் கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கியது. இதை மாநில அரசு வேறு திட்டங்களுக்கு செலவு செய்வது அல்லது மாநில அரசு திருப்பியும் அனுப்பி விடுகிறது.

    இதை கண்டித்து, "திறனற்ற திமுக அரசுக்கு பிச்சை அளிக்கும் போராட்டத்தில்" மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது.

    நிதியை பள்ளி, கல்லூரி மற்றும் விடுதியில் தங்கிப்பயிலும் பட்டியலின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகையாக வழங்காமல் பாதிக்கும் நிலையுள்ளது. அதேபோல் ஏழை எளிய மக்களும் பாதிக்கும் சூழ்நிலை உள்ளன. இதற்கு முறையாக வெள்ளை அறிக்கை தமிழக அரசு அளிக்க வேண்டும்.

    இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை அளிப்போம் என கூறியதற்கு வடமாநிலங்களில் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    அதனால் சனாதனம் என்னவென்றே தெரியாமல் யாரும் பேசக்கூடாது. அதை யாரும் அழிக்கவும் முடியாது. இந்த மாவட்டத்தில் கூட திமுகவில் நிர்வாகிகள் பெண்களுக்கு தொல்லை கொடுப்பதாக புகார் உள்ளது.

    ஏற்கெனவே திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை எல்லோரும் அறிந்ததுதான். அதேபோல் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேவலமான நிலையில் உள்ளன. பட்டியலின மாணவரை வீடு புகுந்து, மற்ற பிரிவு மாணவர்களால் அரிவாளால் தாக்குதலில் ஈடுபட்டது.

    அதேபோல் குடிநீர் தொட்டியில் மனித கழிவை கலந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை போன்ற ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த பகுதிகளில் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளை கண்டித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஓபிசி அணி செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் பாலாஜி, மாவட்ட துணைத்தலைவர் முல்லை ஞானம், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சிவரஞ்சனி, மாவட்ட செயலாளர்கள் ரமேஷ், பாலாஜி, பன்னீர்செல்வம், நகர் தலைவர் சதீஷ், மண்டல பொறுப்பாளர்கள் சுரேஷ், பழனி, ரவிக்குமார், ஆடிட்டர் ராஜேந்திரன், பட்டியல் அணி மாவட்ட செயலாளர் தேவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • திருப்பாலைவனத்தில் ஒன்றிய செயலாளர் சுகுமாரன் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் டி.ஜே. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

    பொன்னேரி:-

    முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பாலைவனத்தில் ஒன்றிய செயலாளர் சுகுமாரன் ஏற்பாட்டில் மாவட்ட செயலாளர் டி.ஜே. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, ஈ.ஏ.பி. சிவாஜி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் பொன்னேரி எம் எல் ஏ துரை சந்திரசேகர் , ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

    இதில், சேர்மன் ரவி, நகர மன்ற தலைவர் பரிமளம் விஸ்வநாதன், நகர செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன், எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஏ.கே. சம்பத்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் தேசராணி தேசப்பன், இளைஞர் அணி அமைப்பாளர் சிலம்பரசன், முன்னாள் நகர இளைஞர் அணி அமைப்பாளர் டாக்டர் மா. தீபன், ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேஷ், அன்பு, வார்டு கவுன்சிலர் பரிதா ஜெகன், திருப்பாலைவனம் விஜய் அன்பு, காண்ட்ராக்டர் ஜோதீஸ்வரன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சம்பத், சுகுமார், ஜெயசீலன் உட்பட திமுக கழக ஒன்றிய நகர நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் சோதனை செய்ததில் மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் ரெயில்வே கேட் அருகே குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
    • குட்கா விற்பனை செய்த தவுலத் கானை கைது செய்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியில் குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஆவடி காவல் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது.

    ஆவடி ஆணையர் சங்கர் உத்தரவின் படி இணை ஆணையர் விஜயகுமார் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் காவல் உதவி ஆணையர் குமரேசன் தலைமையில் மீஞ்சூர் ஆய்வாளர் காளிராஜ் மற்றும் போலீசார் மீஞ்சூர் பகுதியில் தீவிர சோதனை செய்ததில் மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் ரெயில்வே கேட் அருகே குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து விசாரித்த போது சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த தவ்லத் கான் மீஞ்சூர் குடோனில் பதுக்கி சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.

    பின்னர், குடோனில் பதுக்கி இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான பான் மசாலா குட்கா, புகையிலைபொருட்களை பறிமுதல் செய்து விற்பனை செய்த தவுலத் கானை கைது செய்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஜெகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார்.
    • கொலையாளிகள் எந்த வித பதட்டமும் இல்லாமல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    அம்பத்தூர்:

    முகப்பேர் மேற்கு, ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (வயது48). அப்பகுதியில் மீன் கடை வைத்துள்ளார். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தொழிற்சங்க தலைவராக இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று இரவு ஜெகன் மீன்கடையில் இருந்தார். அப்போது 6 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மீன்கடைக்குள் புகுந்தனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெகன் அவர்களிடம் இருந்து தப்பிக்க கடையில் இருந்து சாலையில் தப்பி ஓடினார். ஆனாலும் அவரை விரட்டிசென்ற கும்பல் ஓட,ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஜெகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திேலயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். கொலையாளிகள் எந்த வித பதட்டமும் இல்லாமல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். கொலை நடந்த இடம் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து நொளம்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஜெகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பழிக்குப்பழியாக ஜெகன் தீர்துக்கட்டப்பட்டு இருப்பது தெரிந்தது. கொலையுண்ட ஜெகனின் சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஆகும். இவரது அண்ணன் மதன் கடந்த 2015-ம் ஆண்டு தேர்தல் முன் விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இதற்கு பழிவாங்க கடந்த 2021-ம் ஆண்டு ராஜேஷ் தீர்த்துக்கட்டப்பட்டார். இந்த கொலைவழக்கில் கைதான ஜெகன் ஜாமீனில் வெளிவந்து பின்னர் தலைமறைவானார். எதிரிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கருதி தொடர்ந்து தலைமறைவாக இருந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் ஜெகன், முகப்பேர் பகுதியில் உள்ள அடுக்குமாடிகுடியிருப்பு ஒன்றில் தனது மனைவி மற்றும் மகனுடன் தங்கியிருந்தபடி மீன்கடை நடத்தி வந்தார். இதனை அறிந்த ஏற்கனவே கொலையுண்ட ராஜேஷின் கூட்டாளிகள் பழிக்கு பழியாக ஜெகனை தீர்த்து கட்டடி இருப்பது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. எனினும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அ.ம.மு.க. பிரமுகர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் முகப்பேர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது.
    • இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்

    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி விட்டு அதனை நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ரசாயனம் கலப்பு இல்லாமல் விநாயகர் சிலைகளை செய்யவும், அதனை கரைக்கும் இடங்கள் குறித்தும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 16 ஏரி, குளங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மா கோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப் பொருட்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்பட லாம்.

    ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள்/பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

    சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம்/எண்ணெய் வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த / மக்கக்கூடிய / நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

    விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நகர் ஏரி (புட்லூர் ஏரி), கூவம் (ஈசா ஏரி) மப்பேடு, திருமழிசை, வெள்ளவேடு, ஊத்து கோடை குளம், சித்தேரி, ஊத்துக்கோட்டை, கொசஸ்தலையாறு, ஊத்துக்கோட்டை, காந்தி ரோடு குளம், திருத்தணி, வண்ணான் குளம், ஆர்.கே.பேட்டை, கரிம்பேடு குளம், பள்ளிப்பட்டு, பாண்டரவேடு ஏரி, பொதட்டூர்பேட்டை, பராசக்தி நகர் குளம், திருத்தணி, கனகமாசத்திரம், குளம் புலிகாட் ஏரி, திருப்பாலை வனம், ஏழு கண்பாலம், கும்மிடிப்பூண்டி, பக்கிங்காம் கால்வாய், காக்களூர் ஏரி, திருவள்ளூர் ஆகிய 16 ஏரி, குளங்களில் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • 2 லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அதில் 50 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.
    • லாரிகளை ஓட்டி வந்த பெருமாள், ஜானகி ராமன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    சோழவரம் பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம், நகரிக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் இன்று காலை திருவள்ளூர் காமராஜர் சிலை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 2 லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அதில் 50 டன் ரேசன் அரிசி ஆந்திராவுக்கு கடத்தி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து லாரிகளை ஓட்டி வந்த பெருமாள், ஜானகி ராமன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • கடந்த 4-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் பள்ளிகூடத்தானை, மோகன் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகே உள்ள காமாட்சிப்பட்டியை சேர்ந்தவர் பள்ளிகூடத்தான் என்கிற கிருஷ்ணன் (வயது 65). கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மோகன் (26) என்பவர் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை இருந்தது.

    கடந்த 4-ந் தேதி ஏற்பட்ட பிரச்சினையில் பள்ளிகூடத்தானை, மோகன் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயம் அடைந்த பள்ளிகூடத்தான் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக சாமல்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×