என் மலர்
திருவள்ளூர்
- இளைஞர் ராஜ்குமாருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரையில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது இளைஞர் ராஜ்குமார் தீக்குளித்து ஓடி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜ்குமாருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோட்டக்கரையில் இளைஞர் தீக்குளித்த விவகாரம் தொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி 3 அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி வி.ஏ.ஓ. பாக்கிய ஷர்மா ஆகிய 3 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் 3 பேரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
- நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைத்தனர்.
- வீடுகள் கட்டி வரும் பயனாளிகள் கதறி அழுதனர்.
திருவள்ளூர்:
ஆர்.கே.பேட்டை தாலுகா எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 100 பேருக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருத்தணி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மூலம் பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பட்டா வழங்கி பல ஆண்டுகளாகியும், ஒரு சிலர் மட்டுமே அப்பகுதியில் வீடு கட்டினர். இதற்கிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் இலவச வீட்டுமனைகள் வழங்கப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது அந்த இடத்தில் யாரும் வீடுகள் கட்டக்கூடாது என்றும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைத்தனர்.
எனினும் வீட்டுமனை பட்டா பெற்றுள்ள பயனாளிகள் வீடுகள் கட்டிக்கொள்ள அனுமதி வழங்க கோரி மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை ஆர்.கே.பேட்டை தாசில்தார் விஜயகுமார் தலைமையில் வருவாய் துறையினர் 6 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அனுமதியின்றி அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடித்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடுகள் கட்டி வரும் பயனாளிகள் கதறி அழுதனர்.
சுமார் 50-க்கும்மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்ட மாக்கப்பட்டது. திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் எஸ்.வி.ஜி.புரத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்புணியில் ஈடுபட்டனர்.
- கடைக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- 182 கிலோ பிளாஸ்டிக் பைகள் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் அறிவுரையின்படி, திருவள்ளூர் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவசங்கரன் மற்றும் திருவள்ளூர் நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் திருவள்ளூர் பஸ் நிலையம், பஜார் வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், பேக்கரி, ஸ்வீட் ஸ்டால், ஓட்டல், டீக்கடை, பூக்கடைகளில் ஆய்வு செய்தனர்.
அப்போது உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருந்த 5 கடைக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மேலும் 3 இனிப்பகத்தில் இனிப்புகளுக்கு அதிகப்படியாக வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தது. அந்த 3 கடைகளில் இருந்த வண்ணம் சேர்க்கப்பட்டிருந்த 10 கிலோ இனிப்பு மற்றும் கார வகைகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் 3 பிரியாணி கடையில் சிக்கனில் அதிகப்படியான வண்ணம் சேர்க்கப்பட்டிருந்த 6 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து கடைக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

11 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை இருந்ததால் தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. 182 கிலோ பிளாஸ்டிக் பைகள் பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
2 கடைகளில் உணவுப் பொருட்களில் காலாவதியான 100 பாக்கெட் சிப்ஸ், பிஸ்கட், முறுக்கு உள்ளிட்ட பொருட்கள் 5 லிட்டர் எண்ணை பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கடைகளுக்கும் தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.
- முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
- போலீசார் 2 பெண்களிடம் இருந்து ரூ. 1.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.
பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் கோவில் தேவர் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவத வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை இணை ஆணையர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.
இதில் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட கலந்து கொண்டு மலைக்கோவில் தேவர் மண்டபத்தில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெண் ஊழியர்கள் 2 பேர், பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் 1.15 லட்சத்தை திருடியது கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது. கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் போலீசார் 2 பெண்களிடம் இருந்து ரூ. 1.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருத்தணி கோவில் உண்டியல் காணிக்கை பணத்தை அங்கு பணி செய்யும் 2 பெண் ஊழியர்களே திருடிய சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடினார்.
- மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து 60 சதவீதத்துக்கு கீழ் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு பள்ளியின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.
மாணவர்களின் தேர்ச்சிவிகிதத்தை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடினார். மேலும் 60 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற்றுள்ள அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது கலெக்டர் பிரபுசங்கர் பேசியதாவது:-
பள்ளிகளில் மாதந்தோறும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள் நடத்தி நன்றாக படிக்கும் மாணவர்கள், மிதமான முறையில் படிக்கும் மாணவர்கள், சரியாக படிக்காத மாணவர்கள் என கண்டறிந்து அவர்களை அட்டவணைப்படுத்த வேண்டும். பின்னர் அவர்களுக்கு ஏற்றார் போல் கல்வி பயிற்சி அளித்து தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்கலாம். 10 மற்றும் 12-ம் வகுப்பில் அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகளை தனித்தேர்வுகள் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உயர்கல்வி சேர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ள அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ், மற்றும் கேடயத்தை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.
- மரங்களை வெட்டி அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.
- போலீசார் பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை
பொன்னேரி:
சோழவரம், செங்குன்றம்,பொன்னேரி, காரனோடை, பழைய எருமை வெட்டிபாளையம் புதிய எருமை வெட்டி பாளையம், பூதூர் உள்ளிட்ட பகுதியில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.
அழிந்து வரும் பனைமரங்களை பாதுகாக்க அதனை வெட்டுவதற்கு அரசு கட்டுப்பாடு விதித்து உள்ளது. மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்ற பின்னரே தனியார் நிலத்தில் உள்ள மரத்தினை அகற்ற வேண்டும் எனவும் அரசு நிலத்தில் உள்ள பனை மரங்களை அகற்ற உரிமை கிடையாது எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் சோழவரம் அடுத்த பூதூர் கிராமத்தில் அரசு நிலத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. இரவில் வந்த மர்மகும்பல் எந்திரத்தால் மனைமரங்களை வெட்டி அங்கேயே போட்டு விட்டு தப்பி சென்று இருக்கிறார்கள்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வருவாய்த்துறையினருக்கும், சோழவரம் போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் பனைமரங்கள் வெட்டப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் ஏராளமான பனை மரங்கள் உள்ளன. அரசு நிலத்தில் இருந்த பனை மரங்களை நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் எந்திரத்தால் வெட்டி சாய்த்து உள்ளனர். அதனை வெட்டிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாராட்சி, தாமரைக்குப்பம், பேரண்டூர், செஞ்சியகரம் ஆகிய நான்கு ஊராட்சிகளை பேரூராட்சியோடு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கு இந்த ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் ஊராட்சியை பேரூராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தாராட்சி உள்பட 4 ஊராட்சியை சேர்ந்த ஊராட்சிமன்றத் தலைவர்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் ஊராட்சியை, பேரூராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக வந்து கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.
அப்போது கலெக்டர் வெளியே சென்று இருந்ததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் திடீரென மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
இதையடுத்து திருவள்ளூர் டவுன் போலீசார் எவ்வித அனுமதியும் இன்றி நெடுஞ்சாலையில் ஊர்வலமாக வந்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையுறு ஏற்படுத்தும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 100 பெண்கள் உள்பட 131 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.
- பிடிபட்ட வாலிபரை போலீசார் அழைத்து சென்றபோதும் அவர் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து சென்று உள்ளார்.
- கஞ்சா போதை கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மாலை பள்ளி முடிந்து மாணவி ஒருவர் அப்பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார் . அப்போது மாணவியை பினதொடர்ந்து 3 வாலிபர்கள் வந்தனர். கஞ்சா போதையில் இருந்த அவர்கள் மாணவியை கிண்டல் செய்தபடியும், தங்களிடம் பேசும்படியும் வற்புறுத்தினர்.
இதனை அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் தட்டிக்கேட்டார். அவர் போதை கும்பலை எச்சரித்தார். இதனால் அந்த வாலிபருக்கும் போதை கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் மாணவி அங்கிருந்து அச்சத்துடன் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த போதை கும்பல் தங்களை தட்டி கேட்ட வாலிபரை பின்தொடர்ந்து அவரது வீடுவரை சென்று மிரட்டினர். மேலும் அங்கு நின்று ரகளையில் ஈடுபட்டனர். சத்தம்கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் போதை வாலிபர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினர்.
இதையடுத்து 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒருவன் மட்டும் பொதுமக்களிடம் சிக்கினான். இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து பிடிபட்ட வாலிபரை விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அவர், வரமறுத்து அங்கிருந்து கண்காணிப்பு கேமரா கம்பத்தில் தனது தலையை மோதி ஆவேசம் ஆனார். பின்னர் ஒருவழியாக போதை வாலிபரை மடக்கி பிடித்து போலீசார் அழைத்து சென்றனர். விசாரணியில் பிடிபட்டவர் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த அருண் என்பது தெரிந்தது. மேலும் தப்பி ஓடிய கூட்டாளிகள் ஷியாம், தீனா என்பதும் தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிடிபட்ட வாலிபரை போலீசார் அழைத்து சென்றபோதும் அவர் பொதுமக்களுக்கு மிரட்டல் விடுத்து சென்று உள்ளார். நான் விரைவில் திரும்பி வருவேன், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து உள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, தினந்தோறும் இந்த பகுதியில் போதை வாலிபர்கள் மாணவிகள் மற்றும் பெண்களை கிண்டல் செய்வது அதிகரித்து உள்ளது. கஞ்சா விற்பனை அதிகரித்து அச்சுறுத்தல் நிலவுகிறது. எனவே கஞ்சா போதை கும்பல் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கடந்த ஆண்டும் இதே பகுதியில், பூந்தமல்லி போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் விசாரணைக்காக சென்றபோது கஞ்சா போதை கும்பலால் தாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன.
- கோப்புகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டையில் கடந்த 1989 -ம் ஆண்டு ஜூன் 24-ந் தேதி தாலுகா அலுவலகம் தொடங்கப் பட்டது. அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தாலுகா அலுவலகத்தை தொடங்கி வைத்தார்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு சான்று, முதியோர், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற இந்த அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து பயன் அடைந்து வருகிறார்கள். சுமார் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.
2 அடுக்கு மாடியில் செயல்படும் இந்த தாலுகா அலுவலகத்தின் கட்டிட சுவர்களில் பல இடங்களில் விரிசல்கள் காணப்படுகின்றன. மாடிகளின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் மழை பெய்தால் ஒழுகி தண்ணீர் அலுவலகத்தின் உள்ளே வருகிறது. இதனால் கோப்புகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
கம்ப்யூட்டர் அறையில் உள்ள மின் விசிறிகள் உடைந்து காணப்படுகின்றன. கம்ப்யூட்டர் மற்றும் இதர எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் சின்னாபின்னமாக அகற்றப்படாமல் அலங்கோலமாக கிடக்கின்றன.
மேலும் இங்கு செயல்படும் இ-சேவை மையத்தில் அடிக்கடி சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி அனுப்புவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

இதனால் அருகில் உள்ள தனியார் இ -ேசவை மையங்களில் பணம் கொடுத்து மனுக்களை பதிவு செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோல் ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் அறை மேல்தளத்தில் உள்ளதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மேல்தளத்திற்கு நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே ஆதார் பதிவு மையத்தை கீழ்தளத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தாலுகா அலுவலக வளாகத்தில் எங்கு பார்த்தாலும் முள்செடிகள், புதர்கள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது.
அலுவலகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலம் முறையாக பாராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. அங்கு சென்றால் அரசு அலுவலகத்துக்கு சென்றது போன்ற உணர்வு இல்லை. இதனை பராமரிக்க வேண்டும்.
மேலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்த வேண்டும். போதுமான கிராம நிர்வாகம், மற்றும் வருவாய் அலுவலர்கள் இல்லாததால் கோப்புகள் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
மழை பெய்யும் போது தண்ணீர் செல்ல வழியில்லாததால் வளாகம் முழுவதும் தேங்கி நிற்கிறது. தாலுகா அலுவலகத்தை சுற்றிலும் முட்புதர்கள் அகற்றப்படாமல் கிடக்கின்றன.
கடந்த ஆண்டில் மட்டும் 18 தாசில்தார்கள் இங்கு பணியாற்றிவிட்டு இடம்மாறுதல் பெற்று சென்று உள்ளனர். எனவே ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.
திருவள்ளூர்:
திருத்தணியில் அமைந்துள்ள திருமுருகப்பெருமானின் ஐந்தாம்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அடுத்த மாதம் 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆடிக்கிருத்திகை திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள கருவூலங்களும், சார்நிலைக் கருவூலங்களும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு ஜூலை 29-ந்தேதி செயல்படவேணடும்.
இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு ஆகஸ்ட் மாதம் 10-ந்தேதி அன்று பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.
- 5 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்துதீர்ப்பளித்தார்.
- போலீசார் குற்றவாளிகள் 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த ராகவரெட்டிமேடு கிராமத்தைச்சேர்ந்தவர் திருச்செல்வம். இவர் கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையின் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 6-ந்தேதி அவர் மதுக்கடையில் விற்பனையான பணம் ரூ. 12 லட்சத்தை எடுத்துக் கொண்டு நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
கும்மிடிப்பூண்டி பஜார் வழியே சென்ற போது காரில் வந்த மர்ம கும்பல் திருச்செல்வத்தை கத்தியால் தாக்கி, ரூ. 12 லட்சத்தை பறித்து சென்றனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சோழவரத்தை சேர்ந்த அருண், மீஞ்சூரை சேர்ந்த ஜெயசீலன் என்கிற கார்த்திக், வன்னியம்பாக்கத்தை சேர்ந்த அருண், மதன்குமார், புழலைச்சேர்ந்த பக்ருதீன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பொன்னேரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிரேமாவதி தீர்ப்பளித்தார். அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் அருண், கார்த்திக் உள்பட 5 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்துதீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் பல்லவன் வாதாடினார்.
இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையிலான கும்மிடிப்பூண்டி போலீசார் குற்றவாளிகள் 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
- கடந்த ஆண்டு இதே நாளில் 7.132 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- பூண்டி ஏரியில் ஷட்டர் பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு தமிழகத்துக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஆக மொத்தம் 12 டி.எம் சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு திறந்து விடவேண்டும்.
இன்றைய காலை நிலவரம் படி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆறு ஏரிகளிலும் 6.412 டி.எம்.சி. தண்ணீர்(மொத்தம் 13.2 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 7.132 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இருப்பில் உள்ள தண்ணீரைக் கொண்டு வரும் நவம்பர் மாதம் வரை சென்னையில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்க முடியும். எனினும் பூண்டி ஏரி முழுவதுமாக வறண்டு வருவதால் இனி கிருஷ்ணா நதி நீரை நம்பித்தான் ஏரி உள்ளது. கண்டலேறு அணையில் தற்போது 3 1/2 டி. எம். சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் ஆந்திராவில் பலத்த மழை பெய்தால் மட்டுமே கண்டலேறு அணைக்கு போதுமான தண்ணீர் வந்த பின்னர் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விட முடியும். இதனால் பூண்டி ஏரி கிருஷ்ணா தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் மொத்த கொள்ளவான 3231 மி.கனஅடியில் வெறும் 74 மி.கனஅடி மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் எரிக்கு தண்ணீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பூண்டி ஏரியில் ஷட்டர் பகுதியில் மட்டும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஏரியில் தண்ணீர் இருப்பு குறைந்து விட்டதால் ஏராளமான மீன்கள் இறந்து மிதக்கின்றன.






