என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • திருவள்ளூர் மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் 6 தனிப்படை போலீசார் தமிழகம், ஆந்திரா எல்லையோர கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • கள்ளச்சாராயம், போலி மதுவிற்பனை குறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் விற்பனை நடக்கிறதா? என்று சோதனை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவிட்டு உள்ளார்.

    இதையடுத்து திருவள்ளூர் மதுவிலக்கு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் தலைமையில் 6 தனிப்படை போலீசார் தமிழகம், ஆந்திரா எல்லையோர கள்ளச்சாராய சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளச்சாராயம் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் தமிழக - ஆந்திரா எல்லையோரம் உள்ள புதூர்மேடு, தேவலாபுரம், காட்டூர், பொன்பாடி, ஊத்துக்கோட்டை, நாகலாபுரம் ரோடு, சத்தியவேடு ரோடு, பொம்மராஜா குளம், ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுவிற்பனை குறித்து பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவள்ளூர் மாவட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சாராயம், கள்ளச்சாராயம், போலி மதுபானம், சில்லரை விலையில் மதுபானங்கள், கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை குறித்து ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் 63799 04848, 9444005105 என்ற தொலைபேசி எண்ணிற்கு வாட்சப் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவே தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவிப்பவர்கள் விவரங்கள் பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினி திருவேங்கடபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.
    • அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற நந்தினி பின்னர் திரும்பி வரவில்லை.

    அயனாவரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி நந்தினி. 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தினி பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

    இந்த நிலையில் அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற நந்தினி பின்னர் திரும்பி வரவில்லை. அவரை பொன்னேரி போலீசார் தேடிவருகிறார்கள்.

    • காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
    • காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குட்பட்ட உப்பளம், பரிக்கப்பட்டு கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    இந்த பகுதியில் வசித்தவர்கள் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் காய்ச்சல் பரவி வந்தது. பரிசோதனையில் 5-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இதைத் தொடர்ந்து சுகாதாரப்பணி மாவட்ட துணை இயக்குனர் ஜவகர்லால், மீஞ்சூர் வட்டார மருத்துவர் மகேந்திரவர்மன் தலைமையில், அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுமார் 150-க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்தனர். கொசு ஒழிப்பு பணியாளர்கள், வீடு வீடாக சென்று பிளீச்சிங் பவுடர் தெளித்தல், தெருக்களை சுத்தம் செய்தல், நீண்ட நாட்களாக தேங்கி நின்ற தண்ணீரை அகற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். காய்ச்சல் பரவிய பகுதியை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வட்டார மருத்துவர் மகேந்திரவர்மன் தெரிவித்தார்.

    • அனல்மின் நிலைய விரிவாக்க பணிக்காக அருகில் உள்ள கிராமங்களில் வசித்த 531 குடும்பத்தினர் தங்களது இடங்களை வழங்கினர்.
    • கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்க்கீசிடம் மனு அளித்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் கடந்த 32 வருடங்களுக்கு முன்னர் வட சென்னை அனல்மின் நிலைய விரிவாக்க பணிக்காக அருகில் உள்ள கிராமங்களில் வசித்த 531 குடும்பத்தி னர் தங்களது இடங்களை வழங்கினர். அவர்களுக்கு அருகில் மாற்று இடம் வழங்கப்பட்டது. ஆனால் நிலம் உரிமையாக்க பட்டா வழங்கப்படவில்லை.

    இதையடுத்து தங்களது நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் பல கட்ட போராட் டங்கள் நடத்தினர். ஊராட்சி மன்றம், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். எனினும் அவர்களுக்கு நிலப்பட்டா வழங்கப்படவில்லை. இதனால் கிராமமக்களின் போராட்டம் கடந்த 32 ஆண்டுகளாக நீடித்து வந்தது.

    இதற்கிடையே சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்க்கீசிடம் மனு அளித்தனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவிடம் கலெக்டர் உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட இடத்திற்கு சார் ஆட்சியர் ஐஸ்வர்யா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து வடசென்னை அனல் மின்நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் வழங்கி மாற்று இடத்தில் வசிக்கும் 531 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். இதற்காக வருவாய்துறை அதிகாரிகள், ஊராட்சி தலைவர் சுகந்தி வடிவில், துணைத் தலைவர்கதிர்வேல் முன்னிலையில் தற்போது வீடுகளை அளவிடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இப்பகுதியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் பட்டா வழங்க அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இது இரண்டு மாதத்திற்குள் முடிக்கப்படும். விரைவில் வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கபணிக்கு இடம் வழங்கிய கிராம மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என்றார்.

    • கண்டலேறு அணையில் இருந்து முதலில் 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
    • தண்ணீர் 3-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்ட்டுக்கும், மறுநாள் பூண்டி ஏரிக்கும் சென்றடைந்தது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 1-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 3-ந் தேதி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்ட்டுக்கும், மறுநாள் பூண்டி ஏரிக்கும் சென்றடைந்தது.

    கண்டலேறு அணையில் இருந்து முதலில் 2 ஆயிரத்து 200 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தத் தண்ணீர் பூண்டி ஏரிக்கு முதலில் வினாடிக்கு 20 கனஅடி வீதம் வந்தது. தற்போது கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 450 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பூண்டி ஏரிக்கு தண்ணீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 300 கன அடிவீதம் வந்தடைந்தது.

    இந்நிலையில் ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு தற்போது கிருஷ்ணா தண்ணீரை எடுத்து வருகின்றனர். இதனால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 215 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அட. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 26.26 அடியாக பதிவானது. 1.027 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    • பிரசாந்த் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதும் தனக்கு பழக்கமான பெண்ணுடன் தனியாக குடும்பம் நடத்த தொடங்கி உள்ளார்.
    • பிரசாந்த் மீது பவானியின் பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது30). தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பவானி(24). இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் பிரசாந்த்துக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினர். மேலும் அந்த பெண்ணுடன் பிரசாந்த் தனியாக குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பவானி கணவரை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இதில் மனவேதனை அடைந்த பவானி வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென தூக்குப்போட்டு தொங்கினார். உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பவானி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மணவாள நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பிரசாந்தை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    பிரசாந்த் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதும் தனக்கு பழக்கமான பெண்ணுடன் தனியாக குடும்பம் நடத்த தொடங்கி உள்ளார். மேலும் 3 மாதமாக அவர் வீட்டுக்கும் வரவில்லை என்று தெரிகிறது. இந்த மனவேதனையில் பவானி தற்கொலை செய்து இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே பிரசாந்த் மீது பவானியின் பெற்றோர் புகார் தெரிவித்து உள்ளனர். இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அசோக்குமார் வீட்டுக்கு அனுப்பும்படி போதைமறுவாழ்வு மைய நிர்வாகிகளிடம் கேட்டார்.
    • சமையல் அறைக்கு சென்ற அசோக்குமார் திடீரென அங்கிருந்த கத்தியால் தனது வயிற்றில் தனக்குத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார்.

    திருநின்றவூர்:

    ஆவடி, சிந்து நகரில் தனியார் போதை மறுவாழ்வு செயல்பட்டு வருகிறது. இங்கு திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த ஏ.சி. மெக்கானிக்கான அசோக்குமார் என்பவர் கடந்த வாரம் சிகிச்சைக்கு வந்தார். அவர் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் அசோக்குமார் வீட்டுக்கு அனுப்பும்படி போதைமறுவாழ்வு மைய நிர்வாகிகளிடம் கேட்டார். ஆனால் அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் அசோக்குமாரை அங்கேயே தங்கி சிகிச்சை பெறும்படி வலியுறுத்தினர். இதனால் அவர் ஆத்திரம் அடைந்தார்.

    இதற்கிடையே அங்குள்ள சமையல் அறைக்கு சென்ற அசோக்குமார் திடீரென அங்கிருந்த கத்தியால் தனது வயிற்றில் தனக்குத்தானே குத்தி தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சிஅடைந்த போதைமறுவாழ்வு மைய அதிகாரிகள் அவரை மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஆவடி போலீசார் போதை மறுவாழ்வு மைய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருவள்ளுரில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
    • தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் இதற்கான இணையதளம் மூலம் தெரிவித்து பயனடையலாம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருவள்ளுரில் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    மேலும் திருவள்ளுரில் இயங்கிவரும் ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொது மக்களுக்கு தரமான. சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

    தற்போது, தரமற்ற கலப்பட உணவுகள் குறித்த பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விவரங்களை மிக எளிமையாக தேர்ந்தெடுக்கும் வசதிகளுடன் கூடிய புதிய இணையதளம் மற்றும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

    இதில் பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் ஏதும் செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் உருவாக்கப்பட்ட புதிய இணையதளம் foodsafety.tn.gov.in மற்றும் கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்யும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் இதற்கான இணையதளம் மூலம் தெரிவித்து பயனடையலாம்.

    மேலும் புகார்தாரரின் விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்பட்டு புகார் தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • திருநெல்வேலியை சேர்ந்த தினகரன், ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
    • பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட 27 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.36 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    செங்குன்றம்:

    புழல் அடுத்த காவாங்கரை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்.

    இவர் கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் ஒருவரது இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் குணசேகரின் வீட்டு பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் ரொக்கம், 18 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.

    இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கொள்ளையில் ஈடுபட்டது திருநெல்வேலியை சேர்ந்த தினகரன், ராமநாதபுரத்தை சேர்ந்த செல்வகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து பல்வேறு இடங்களில் கொள்ளையடிக்கப்பட்ட 27 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.36 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட இருவர் மீதும் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரத்தம் பரிசோதனையில் 5-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது.
    • 20- கும் மேற்பட்டோர் தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த கூடுவாஞ்சேரி ஊராட்சிக்குப்பட்ட உப்பளம் பரிக்கப்பட்டு, கிராமங்களில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இங்கு கடந்த சில நாட்களாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது ரத்தம் பரிசோதனையில் 5-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதியானது. மேலும் 20- கும் மேற்பட்டோர் தனியார் ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, காய்ச்சல் பரவிவரும் பகுதியில் கொசு மருந்து அடித்தல், குப்பைகளை அகற்றுதல், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், உள்ளிட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு தெருவிலும் பத்துக்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் இருப்பதால் மருத்துவ முகாம் அமைத்து காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மேட்டுப்பாளையம் கிராமத்தில் நடந்த வாகன சோதனையில் 168 பாக்கெட் பான் மசாலா பொருளை பறிமுதல் செய்தனர்.
    • நெய்வேலி கிராமத்தின் கடையில் நடத்திய சோதனையில் 450 பாக்கெட் பான் மசாலா பொருளை பறிமுதல் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் காவல் நிலைய சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் போலீசார் நேற்று மதியம் ரோந்து பணி மேற்கொண்டனர். மேட்டுப்பாளையம் கிராமத்தில் வாட்டர் டேங்க் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்பொழுது சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை வழிமடக்கி நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்கள் விற்பனை செய்ய கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் 168 பாக்கெட் பான் மசாலா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் கிராமம் செல்லப்பா (59), ஜனப்பன்சத்திரம், கிருபா நகரைச் சேர்ந்த சிவா (55) என்பது தெரிய வந்தது.

    நெய்வேலி கிராமத்தில் ஒரு கடையில் போலீசார் சோதனை செய்தபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 450 பான் மசாலா பொருட்கள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளர் நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்த அலி (55) என்பவரை கைது செய்தனர். 3 பேரையும் போலீசார் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊத்துக்கோட்டை முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    • அகரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
    • குற்றவாளிகள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். அகரம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்பொழுது அவர்கள் விற்பனை செய்ய மறைத்து வைத்திருந்த சுமார் 500 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர்கள் ஆரணி, சுப்பிரமணிய நகரைச் சேர்ந்த சந்தோஷ்சிவம்(வயது20), நரேஷ்(வயது19) என்பது தெரியவந்தது.

    மேலும், ஆரணி சமுதாயக்கூடம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது அந்த வாலிபர் விற்பனை செய்ய மறைத்து வைத்திருந்த சுமார் 300 கிராம் எடை கொண்ட கஞ்சாவை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் சின்னக்கிளாம்பாக்கம் கிராமம்,பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தினேஷ்(வயது21) என்பது தெரிய வந்தது. மூன்று வாலிபர்களையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும், குற்றவாளிகள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர். பின்னர் அவரது உத்தரவின் பேரில் மூன்று வாலிபர்களையும் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

    ×