என் மலர்
திருவள்ளூர்
- சாலையில் வழிந்தோடிய ஆயிலால் வாகனங்கள் பாதிக்காமல் இருக்க அவ்வழியே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
- விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த ஆயிலை வேறொரு லாரியில் மாற்றி மீண்டும் எடுத்து சென்றனர்.
பொன்னேரி:
மணலி புதுநகர் அடுத்த ஆண்டார் மடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் தடாவிற்கு கண்டெய்னர் லாரியில் 18 டன் எடை கொண்ட போம் மற்றும் வாகனங்களுக்கு தயாரிக்க கூடிய என்ஜின் ஆயில் கொண்டு செல்லப்பட்டது. இந்த ஆயில் கண்டெய்னர் லாரியின் உள்ளே ராட்சத பாதுகாப்பு பலூனில் நிரப்பப்பட்டு இருந்தது.லாரியை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் தர்மராஜ் ஓட்டினார்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் மீஞ்சூரை அடுத்த நாளூர் அருகே கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னர் சென்ற மற்றொரு லாரி மீது மோதியது. இதில் கண்டெய்னர் லாரியில் இருந்த பாதுகாப்பு பலூனின் மேல்பகுதி கிழிந்து அதில் இருந்து ஆயில் வெளியேறியது.
இதனால் சாலை முழுவதும் ஆயில் ஆறாக ஓடியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் சரக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சோபிதாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
சாலையில் வழிந்தோடிய ஆயிலால் வாகனங்கள் பாதிக்காமல் இருக்க அவ்வழியே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
வாகனங்கள் அனைத்தும் பொன்னேரி-மீஞ்சூர் சாலையில் திருப்பி விடப்பட்டது. விபத்துக்குள்ளான லாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலையில் வழிந்தோடிய ஆயில் மீது மணல் போடப்பட்டது.
கண்டெய்னர் லாரியில் இருந்து சுமர் ஒரு டன் ஆயில் வெளியேறி இருந்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பலூனில் மேல் பகுதி மட்டுமே கிழிந்ததால் குறைந்த அளவு ஆயில் வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 9 மணிக்கு பின்னரே அப்பகுதியில வாகன போக்குவரத்து சீரானது. விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த ஆயிலை வேறொரு லாரியில் மாற்றி மீண்டும் எடுத்து சென்றனர்.
- செல்போன் டவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- செல்போன் டவரால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நிலை பாதிப்பு ஏற்படும். எனவே இதனை அமைக்க விடமாட்டாம்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் கசவநல்லாத்தூர்,சுந்தர கணேசன் நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடம்பத்தூர் துணை மின் நிலையம் அருகே தனியார் நிறுவனத்தினர் செல்போன் டவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் செல்போன் டவர் அமைக்கும் பணியை இரவில் தொடர்ந்ததாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்றுகாலை செல்போன் டவர் அமைக்கப்படும் இடத்தை முற்றுகையிட்டனர். மேலும் கடம்பத்தூர்-பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த நிலஅபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கந்தன், திருவள்ளூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் கடம்பத்தூர் போலீசார் விரைந்து வந்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அப்பகுதியில் செல்போன் டவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் செல்போன் டவர் அமைக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து பணி நடந்து வருகிறது. செல்போன் டவரால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் நிலை பாதிப்பு ஏற்படும். எனவே இதனை அமைக்க விடமாட்டாம். பணி தொடர்ந்தால் போராட்டம் தீவிரம் அடையும் என்றனர்.
- சிறிது நேரம் கழித்து மற்ற மாணவிகள் வந்து பார்த்த போது விடுதி அறையில் ஜெயா தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
- கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பூந்தமல்லி:
பள்ளிப்பட்டு அடுத்த ஸ்ரீகாளிங்கபுரத்தை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகள் ஜெயா (வயது19). இவர் பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு விடுதி அறையில் உடன் தங்கி இருந்த மாணவிகள் படிப்பதற்காக மற்றொரு இடத்திற்கு சென்று இருந்தனர். அறையில் மாணவி ஜெயா மட்டும் இருந்தார்.
சிறிது நேரம் கழித்து மற்ற மாணவிகள் வந்து பார்த்த போது விடுதி அறையில் ஜெயா தூக்கில் தொங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பரிசோதித்த டாக்டர்கள் மாணவி ஜெயா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் உடன் படிக்கும் மாணவிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்தினருக்கும், நசரத்பேட்டை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நேற்று இரவு உடன் தங்கிஇருந்த மாணவிகள் இரவு படிப்பிற்காக சென்ற போது ஜெயா, தனக்கு தலை வலிப்பதாக கூறி செல்லவில்லை. இந்த நிலையில் அறையில் தனியாக இருந்தபோது மாணவி ஜெயா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.
அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரிய வில்லை. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் மாணவியின் செல்போனை கைப்பற்றி அவர் கடைசியாக யாரிடம் பேசினார் என்ற விபரத்தையும் சேகரித்து வருகிறார்கள். கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காக்களூர் தொழிற்பேட்டையில் ரூ. 8.34 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டார்.
- ரூ. 2.92 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பொது உற்பத்தி மைய கட்டிடத்தினையும் ஆய்வு செய்தார்.
சென்னையை அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில், 475 தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ரூ.2.72 கோடி மதிப்பில், நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார். தொழில் முனைவோர்களுக்கு உதவிடும் வகையில் 9,000 சதுர அடி பரப்பளவில் ரூ.2.92 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பொது உற்பத்தி மைய கட்டிடத்தினையும் ஆய்வு செய்தார். காக்களூர் தொழிற்பேட்டையில் ரூ8.34 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் பார்வையிட்டார்.
அதனை தொடர்ந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.60.55 கோடி மதிப்பீட்டில் 1.31 லட்சம் சதுர அடியில் 112 தொழிற்கூடங்களுடன் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி தொழில் வளாகத்தினை பார்வையிட்டு அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், ரூ.1.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.29.47 கோடி மதிப்பில் 5 தளங்களுடன் 810 தொழிலாளர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர் தங்கும் விடுதியினை ஆய்வு மேற்கொண்டார்.
- ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
- மின்வெட்டால் பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்க முடியாமல் அவதி அடைந்தனர்.
திருநின்றவூர்:
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று முன்தினம் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. இதனால் பெரும்பாலானவர்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகிறார்கள். எனினும் வீட்டுக்குள் இருக்கும்போது கூட வெப்பத்தின் தாக்கம் காரணமாக புழுக்கத்தால் மக்கள் தவிக்கிறார்கள். கடந்த 3 நாட்களாக கொளத்தூர், திரு.வி.க.நகர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியல் மற்றும் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குள் இருக்க முடியாமல் அவதி அடைந்தனர்.
நேற்று இரவும் பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதால் இருளில் தவித்தனர். சுமார் ஒரு மணிநேரம் முதல் 2 மணி நேரம் வரை மின்தடைக்கு பின்னர் மீண்டும் மின்வினியோகம் சீரானது.
பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம் பகுதியில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. மாடர்ன் சிட்டியில் நேற்று மதியம் 2 மணிக்கு தடை பட்ட மின்சாரம் இரவு 8 மணிக்கு சீரானது. இதே போல் கோபாலபுரம் பகுதியிலும் மின் வினியோகம் தடைபட்டது.
ஆவடி பகுதியில் காமராஜர் புதிய ராணுவ சாலை, தமிழ்நாடு வீட்டு வசதிவாரிய குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களிலும் தொடர்ந்து மின்சாரம் தடைபட்டது. இன்று காலையும் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொது மக்கள் புழுக்கத்தால் தவித்தனர். திருமுல்லைவாயல் பகுதியில் தினமும் இரண்டு மணி நேரம் தொடர் மின் தடை ஏற்படுவதாக பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மின்தடை தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது சரியான பதில் கூறுவதில்லை என்று ஆதங்கத்துடன் கூறினர்.
இதேபோல் திருநின்றவூர் பகுதியில் தொடர் மின்வெட்டால் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் சங்க தலைவர் சாலமன் தலைமையில் வியாபாரிகள் மின்வாரிய அதிகாரியை சந்தித்து முறையிட்டனர்.
- மரத்தின் வளர்ச்சிக்கு ஹியூமிக் ஆசிட் 1 கிலோவும், கூடுதல் வளர்ச்சிக்கு வேப்ப புண்ணாக்கு 5 கிலோவும் அந்த பள்ளத்தில் போடப்பட்டது.
- சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வேரோடு சாய்ந்த மரத்தை நட்டு முடித்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள முகமது அலி தெருவில் கோலம் கொண்ட அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா, ஜாத்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த கோவிலின் முன்பு 150 ஆண்டு பழமையான வேப்பமரம் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதில் கோவில் முன்பு இருந்த பழமையான வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
அந்த மரத்தை அதே இடத்தில் நட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த வேண்டுகோளை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ரா தேவி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி கோவில் தக்கார் பிரகாஷ், மற்றும் வேளாண்மை துறை சார்பில் விஜயகாந்த், மின்சாரத்துறை சார்பில் உதவி பொறியாளர் தட்சிணா மூர்த்தி உள்பட அதிகாரிகள் வேரோடு சாய்ந்த வேப்ப மரத்தை மீண்டும் அதே இடத்தில் நடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சாய்ந்த மரத்தின் கிளைகளை முழுவதுமாக முதலில் அகற்றினர். பின்னர் அந்த இடத்தில் 5 அடி ஆழத்திற்கு வேர்கள் ஊடுருவும் பகுதி வரை ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத கிரேன் உதவியுடன் வேப்பமரத்தை அதே இடத்தில் நட்டனர். பணி நடைபெற்றபோது, மரம் மின்கம்பத்தின் மீது படாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மேலும் வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் பரிந்துரையின் பேரில் காப்பர் ஆக்சி குளோரைடு 50 சதவிகித சத்து பவுடர் அரை கிலோவில் மரத்தின் வேரின் அடி பாகத்தில் நன்கு நனையும்படி மெழுகு பதத்தில் பூசப்பட்டது. மரத்தின் வளர்ச்சிக்கு ஹியூமிக் ஆசிட் 1 கிலோவும், கூடுதல் வளர்ச்சிக்கு வேப்ப புண்ணாக்கு 5 கிலோவும் அந்த பள்ளத்தில் போடப்பட்டது.
சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வேரோடு சாய்ந்த அந்த மரத்தை நட்டு முடித்தனர். இதனை கண்டு அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அந்த மரத்திற்கு பக்தர்கள் மஞ்சள், குங்குமம் பூசி வழிபட்டு சென்றனர்.
- பருவமழையின்போது ஏரி முழுவதுமாக நிரம்புவதால் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றின் வழியாக கடலுக்கு திறக்கப்படுகிறது.
- பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீர் சேமிக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரி கட்டுமான பணிகள் 1940-ம் தொடங்கப்பட்டு 1944-ல் முடிக்கப்பட்டன.
அப்போதைய சென்னை கவர்னராக இருந்த சத்தியமூர்த்தி இந்த நீர்த்தேக்கத்தை கட்ட சீரிய முயற்சி எடுத்துக் கொண்டதால் நீர்த்தேக்கத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
ஆரம்பத்தில் இதில் 2.750 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டது. அதன் பிறகு ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டு 1990 முதல் 1996-ம் ஆண்டு வரை பணிகள் நடந்தன. இதனை அடுத்து தற்போது 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது.
பருவமழையின்போது ஏரி முழுவதுமாக நிரம்புவதால் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றின் வழியாக கடலுக்கு திறக்கப்படுகிறது.
இப்படி பல டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் போய் சேருகிறது. இதைக்கருத்தில் வைத்து பூண்டி ஏரியில் கூடுதல் தண்ணீர் சேமிக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஏரியின் கொள்ளளவு மேலும் 0.74 டி.எம்.சி. 27 ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்பட இருக்கிறது. இதற்காக ஏரியின் மதகுகளை பலப்படுத்தும் பணிகள் ரூ.10.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ளது. எந்தெந்த பகுதிகளில் கரைகளை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு பணிகள் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்கும் பணிகள் தொடங்கப்படும். இதற்காக நவீன தொழில்நுட்பங்களை நீர்வளத்துறையினர் பயன்படுத்த உள்ளனர். இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வரும்போது பூண்டி ஏரியில் 4 டி.எம்.சி. வரை நீரை சேமித்து வைக்க முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையில் நேற்று இரவு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
- அடையாளம் தெரியாத வாகனம் முதியவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
மதுரவாயல்:
வானகரம் அருகே மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள சர்வீஸ் சாலையில் நேற்று இரவு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கியாஸ் சிலிண்டர் வெடித்தபோது அப்பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் போல் கேட்டு உள்ளது.
- வீட்டில் கியாஸ் கசிந்து இருப்பது தெரியாமல் கோபால் தீயை பற்ற வைத்ததால் கியாஸ்சி லிண்டர் வெடித்து இருக்கலாம் என்று தெரிகிறது.
திருநின்றவூர்:
ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் கோபால் (வயது66). இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களது மகன்கள் 2 பேர் திருமணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். கோபால் மட்டும் இங்கு தனியாக வசித்து வந்தார். அவரை மகன்கள் அடிக்கடி பார்த்து கவனித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கோபால் வீட்டில் இருந்த போது பயங்கர சத்தத்துடன் கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் வீடு முழுவதும் தீ பரவியது. இதில் கோபால் சிக்கி அலறினார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஆவடி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு அதிகாரி முத்துகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயில் சிக்கி உடல் கருகிய கோபாலை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி கோபால் பரிதாபமாக இறந்தார். கியாஸ் சிலிண்டர் வெடித்தபோது அப்பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் போல் கேட்டு உள்ளது. இந்த அதிர்வில் கோபாலின் வீட்டில் இருந்த கதவு, ஜன்னல்கள் சேதம் அடைந்தன. மேலும் வீட்டில் இருந்த சிமெண்டு பலகை தூக்கி வீசப்பட்டதில் அருகே நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ ஒன்றும் சேதம் அடைந்தது.
சம்பவ இடத்தை ஆவடி உதவி கமிஷனர் புருஷோத்தமன், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டில் கியாஸ் கசிந்து இருப்பது தெரியாமல் கோபால் தீயை பற்ற வைத்ததால் கியாஸ்சி லிண்டர் வெடித்து இருக்கலாம் என்று தெரிகிறது. இது பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புழல் சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் தனித்தனியாக அடைக்கப்பட்டு உள்ளனர்.
- கைதிகளுக்கு செல்போன் கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
செங்குன்றம்:
புழல் சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் தனித்தனியாக அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் உள்ள கைதிகளிடம் செல்போன் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் புழல் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கைதிகள் கார்த்திக், சையது இப்ராகிம் ஆகியோர் மறைத்து வைத்திருந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தண்டனை பிரிவு கைதிகளின் கழிவறையில் கேட்டபாரற்று கிடந்த செல்போனையும் கைப்பற்றினர். போலீசார் ரோந்து வருவதை கண்டதும் செல்போனை பயன்படுத்திய கைதிகள் வீசி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
கைதிகளுக்கு செல்போன் கிடைத்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- மூன்று சக்கர மின்கலன் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
- எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே. ரமேஷ் தலைமை தாங்கினார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கோடுவெளி, தண்டலம், பெரியபாளையம், கன்னிகைப்பேர், தாமரைப்பாக்கம், கன்னிகாபுரம், இலட்சிவாக்கம், ஆத்துப்பாக்கம், காக்கவாக்கம், ஏனம்பாக்கம் உள்ளிட்ட பத்து ஊராட்சிகளுக்கு தலா ரூ.26,500 தொகையில் 15-ம் நிதி குழு மானியம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் தொகையில் மூன்று சக்கர மின்கலன் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே. ரமேஷ் தலைமை தாங்கினார். எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பி.ஜே.மூர்த்தி, துணைப்பெருந்தலைவர் வக்கீல் கே.சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், மாநில ஆதிதிராவிட நலக்குழு செயலாளரும், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு பத்து ஊராட்சிகளுக்கு மூன்று சக்கர மின்கலன் வண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்ச்சியில், கே.வி.லோகேஷ், ஆ.சத்தியவேலு, வக்கீல்கள் எ.சீனிவாசன், முனுசாமி, வடமதுரை அப்புன், வெங்கல் வி.ஜே.சீனிவாசன், கோடுவெளி குமார், தாமரைப்பாக்கம் கீதா துளசிராமன், கன்னிகைப்பேர் காயத்ரி உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் உதயசங்கர் நன்றி கூறினார்.
- லாரிகளை சாலையோரம் நிறுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.
- சாலையோரம் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க போலீசார் ரோந்து வாகனங்களில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
பொன்னேரி:
காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம், எல்.என்.டி.துறைமுகம், நிலக்கரி முனையம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு தினந்தோறும் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருவொற்றியூர் முதல் மீஞ்சூர்-பொன்னேரி- மணலி சாலைகளை பயன்படுத்தி வருகின்றன.
சரக்குகள் ஏற்றி மற்றும் இறக்கி செல்லும் வாகனங்களை டிரைவர்கள் சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தி செல்வது வழக்கம். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வந்தனர். இதுகுறித்து போக்குவரத்து போலீசாருக்கு தொடர்ந்து ஏராளமான புகார்கள் வந்தது.
இதையடுத்து சாலையோரங்களில் கனரக வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதன் டிரைவர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களிடம் போக்குவரத்து போலீசார் மற்றும் மீஞ்சூர் போலீசார் பலமுறை அறிவுறுத்தினர். ஆனால் லாரிகள் நிறுத்தப்படுவது தொடர்ந்து நீடித்து வந்தது.இந்த நிலையில் செங்குன்றம் சரக போக்குவரத்து உதவி ஆணையாளர் மலைச்சாமி ஆய்வாளர் சோபிதாஸ் தலைமையில் போலீசார் மணலிசாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட லாரிகளுக்கு அதிரடியாக அபராதம் விதித்தனர். ரூ.1000 முதல் ரூ.4 ஆயிரம் வரை 92 லாரிகளுக்கு மொத்தம் ரூ.1¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதில் ரூ.56 ஆயிரம் உடனடியாக வசூல் செய்யப்பட்டது.
தொடர்ந்து லாரிகளை சாலையோரம் நிறுத்தினால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிவேல், பேபி, மணவாளன், நரேஷ், சண்முகராஜ் மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடன் இருந்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து உதவி கமிஷனர் மலைச்சாமி கூறும்போது, திருவொற்றியூர்-மணலி-மீஞ்சூர் நெடுஞ்சாலைகளில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்தது. லாரிகளை அதனை நிறுத்தும் வளாகத்தில் நிறுத்த வேண்டும். இதனை மீறும் லாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும். சாலையோரம் லாரிகள் நிறுத்தப்படுவதை தடுக்க போலீசார் ரோந்து வாகனங்களில் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றார்.






