என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • பொதுமக்களுக்கு கோடை கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
    • நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டேரிக்கும் நிலையில் பொது மக்களின் தண்ணீர் தாகம் தீர்க்க பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் செயல் அலுவலர் வெற்றி அரசு வழிகாட்டுதலின் பேரில் பொதுமக்களுக்கு கோடை கால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்கபட்டன இதனை மீஞ்சூர் பேரூராட்சி துணை தலைவர் அலெக்சாண்டர் துவக்கி வைத்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் அபுபக்கர், பாஸ்கர், ஜெயலட்சுமி தன்ராஜ், கவிதா சங்கர், சங்கீதா சேகர், ஜெயசங்கர், சுகண்யா, வெங்கடேசன், சுகாதார மேற்பார்வையாளர் கோபி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதி வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • சோழவரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பொன்னேரி:

    சோழவரம் அடுத்த விஜயநல்லூரை சேர்ந்தவர் கண்ணன் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இன்று பிற்பகல் இருசக்கர வாகனத்தில் நல்லூர் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்த போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.

    மேலும் உயிரிழந்த நபரின் சடலத்தை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தில் உயிரிழந்த கண்ணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக நல்லூர் சுங்கச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது

    • 21 முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது.
    • விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தவறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பொன்னேரி:

    தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா? என்பதை ஆய்வு செய்ய வருவாய்த் துறை, காவல்துறை, கல்வித் துறை மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழுவினர் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு கோடை விடுமுறையில் வாகனங்களை தணிக்கை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை சிறப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.

    பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா தலைமையில் பள்ளி வாகனங்களில் மாணவர்களின் பாதுகாப்புக்காக அரசு அறிவித்துள்ள வேகக் கட்டுப்பாட்டுக் கருவிகள், படிக்கட்டு வசதி, அவசர கால கதவு, முதலுதவி பெட்டி, ஜன்னல் பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட 21 முக்கிய அம்சங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்யப்பட்டது.

    மொத்தம் 208 வாகனங்களை சோதனை செய்ததில் தகுதியுடைய 178 வாகனங்களுக்கு சான்றுகள் வழங்கப்பட்டன. விதிமுறைகளை கடைபிடிக்காமல் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 30 வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டு அவை திருப்பி அனுப்பப்பட்டன. குறைபாடுகள் கண்டறியப்பட்ட வாகனங்களில் அவற்றை சரி செய்து மீண்டும் தணிக்கை குழுவினரிடம் சான்று பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது.

    முன்னதாகபள்ளி வாகனங்களில் திடீரென தீப்பிடித்தால் அதனை எவ்வாறு கையாள்வது? தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது எப்படி? என்பது போன்ற தத்ரூப ஒத்திகையை தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செய்து காண்பித்தனர்.

    தொடர்ந்து தனியார் பள்ளி டிரைவர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்க கூடாது எனவும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டக் கூடாது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், தவறும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

    இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இள முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருப்பையன், ராஜராஜேஸ்வரி, கல்வித் துறை அலுவலர் சுப்ரமணி உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர்.
    • காலையில் கோவில் குருக்கள் வந்து பார்த்தபோது உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு கொள்ளை நடந்து இருப்பது தெரியவந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த குமரஞ்சேரி கிராமத்தில் பிரசித்தி பெற்ற குமாரசாமி முருகன்கோவில் உள்ளது. நேற்று இரவு பூஜை முடிந்ததும் வழக்கம்போல் கோவிலை பூட்டிச்சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர். அவர்கள் கடப்பாரையால் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை அள்ளினர்.

    மேலும் அங்கிருந்த பீரோவை உடைத்து ரூ.2 ஆயிரம் ரொக்கம் மற்றும் பூஜை பொருட்களை கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர். காலையில் கோவில் குருக்கள் வந்து பார்த்தபோது உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு கொள்ளை நடந்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    முருகன் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின் கம்பி தாழ்வாக செல்கின்றன.
    • உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் முன்பு இந்த ஆபத்தான மின்கம்பியை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த மெதூர் துணை மின் நிலையத்தில் இருந்து அச்சிரம்பள்ளம் கிராமத்திற்கு உயர்அழுத்த மின்கம்பம் செல்கிறது.

    இந்தநிலையில் அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின் கம்பி தாழ்வாக செல்கின்றன.தாவிப்பிடித்தால் எட்டும் உயரத்தில் இருப்பதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் முன்பு இந்த ஆபத்தான மின்கம்பியை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, அச்சிரபள்ளம் குளத்தின் அருகே செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே செல்லவே அச்சம் அடைந்து வருகிறோம்.

    சிறுவர்கள் குளத்தில் குளிக்க செல்லும் போது விபரீதம் ஏற்படுவதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் இந்த தாழ்வான மின் கம்பியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த மூன்று வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    • ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் 531 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரூ.45 லட்சத்துக்கு ஏலம் எடுத்து சென்றனர்.

    பொன்னேரி:

    ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சோழவரம் காவல் நிலையத்தில், விபத்து, திருட்டு, கேட்பாரற்று கிடந்த வாகனம், மது போதையில் வாகனம் பறிமுதல், உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த மூன்று வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்பை பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் வெளியிட்டார். அதன்படி பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் தலைமையில் சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் முன்னிலையில் கடந்த 3 நாட்களாக வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் கலந்து கொண்டவர்கள் 531 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ரூ.45 லட்சத்துக்கு ஏலம் எடுத்து சென்றனர்.

    • பலத்த காயமடைந்த முருகன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று இரவு உயிரிழந்தார்.
    • வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார் வடிவேலுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    பூந்தமல்லி:

    சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் (45). அதே பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (30).

    இவர்கள் இருவரும் போரூர், பூந்தமல்லி பகுதிகளில் குப்பைகளில் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், காகிதம், அட்டை, இரும்பு போன்ற பொருட்களை சேகரித்து விற்று சாலை யோரம் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.

    அதேபோல பூந்தமல்லியை சேர்ந்த ஜமுனா என்பவரின் மகன் கார்த்திக் இவரும் தாயுடன் சேர்ந்து குப்பையில் உள்ள பொருட்களை சேகரித்து விற்று வருகின்றார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பூந்தமல்லி பைபாஸ் சாலையோரம் வடிவேல், முருகன், கார்த்திக் 3 பேரும் பேசிக் கொண்டிருந்தனர்.

    அப்போது முருகன், கார்த்திக்கின் தாயாருடன் வடிவேலுக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். இதனால் வடிவேலுக்கும் முருகனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த முருகன் இரும்பு கம்பியால் வடிவேலு முகத்தில் தாக்கியுள்ளார். பதிலுக்கு வடிவேலு உருட்டு கட்டையால் முருகனின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முருகன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் நேற்று இரவு உயிரிழந்தார்.

    தகவல் அறிந்த பூந்தமல்லி போலீசார் வடிவேலை பிடித்து விசாரித்து வந்தனர். முருகன் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்த போலீசார் வடிவேலுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விசாரணை செய்ததில் செல்போன் கடைகளில் அடிக்கடி மிரட்டி பொருட்கள் வாங்குவதாகவும், வழிப்பறிகளில் ஈடுபடுவதாகவும் தெரிய வந்தது.
    • கைது செய்தவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியில் செல்போன் கடை நடத்தி வருபவர் அன்சாரி (40). நேற்று முன்தினம் கடைக்கு வந்த மர்ம நபர்கள் செல்போன் சார்ஜர், ஹெட்செட் கேட்டு வாங்கினார்கள்.

    கடை உரிமையாளர் பணம் கேட்டபோது மிரட்டி தாக்கி அடித்து பணம் கொடுக்காமல் தப்பி சென்றனர். அவர்கள் மீது கடை உரிமையாளர் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பொன்னேரி ஜீவா தெருவை சேர்ந்த சுதன் (26), பொன்னேரி அடுத்த வஞ்சிவாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த அஜித் (21), பொன்னேரி அடுத்த காட்டாவூர் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரண்ராஜ் (21) என்பது தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். விசாரணை செய்ததில் செல்போன் கடைகளில் அடிக்கடி மிரட்டி பொருட்கள் வாங்குவதாகவும், வழிப்பறிகளில் ஈடுபடுவதாகவும் தெரிய வந்தது.

    மேலும் தப்பி ஓடிய ரபிக் (22) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். பின்னர் கைது செய்தவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பொதுமக்கள் சோழவரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
    • குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சோழவரம்:

    சென்னையை அடுத்த சோழவரம் அருகேயுள்ள பள்ளி சூரப்பட்டு கிராமத்தில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தையின் உடலை நாய்கள் கடித்து குதறிக் கொண்டிருந்தன.

    இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் நாய்களை விரட்டினார்கள். அப்போது குழந்தையின் இடுப்பு பகுதியில் இருந்து கால் வரை உள்ள பாகங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. முகமும் அழுகி சிதைந்து காணப்பட்டது.

    குழந்தையின் பாதி உடல் மட்டுமே இருந்தது. இதனால் அந்த குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து பொதுமக்கள் சோழவரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அந்த குழந்தையின் உடலில் தொப்புள் கொடி உள்ளது. எனவே பிறந்தவுடன் குழந்தையை தாய் வீசிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அந்த பகுதியை சுற்றியுள்ள மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 10 நாட்களில் குழந்தை பெற்றவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். அதன் மூலம் குழந்தையின் தாயை கண்டு பிடிக்கும் பணியில் போலீ சார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • பெரியபாளையம், பூவலம்பேடு, மாதர்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • தச்சூர் கூட்டுச் சாலையில் மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட தச்சூர் கூட்டுச் சாலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி.வி.சங்கர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் செந்தமிழன் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.

    இதே போன்று கும்மிடிப்பூண்டி தொகுதிக்குட்பட்ட பெரியபாளையம், பூவலம்பேடு, மாதர்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது.

    சோழவரம் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், எல்லாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முனுசாமி, எல்லாபுரம் கிழக்கு துணைச் செயலாளர் பூவரசன், கும்மிடிப்பூண்டி மத்திய ஒன்றிய செயலாளர் தமிழ் மணி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் முனி ரத்தினம், ஆரணி பேரூராட்சி செயலாளர் தன்ராஜ், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வாசு, மீஞ்சூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சூர்யா, மீஞ்சூர் பேரூராட்சி செயலாளர் சதீஷ், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் ராம்குமார், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கோடீஸ்வரன், பூண்டி ஒன்றிய செயலாளர் ஈஸ்வரன், வெங்கல் மணிமாறன், விவசாய அணி மாவட்ட செயலாளர் சி.என்.அன்பு, மகளிர் அணி மாவட்ட செயலாளர் மாலதி, கழக இணைச் செயலாளர் பானுமதி, கழகத் துணைச் செயலாளர் அங்கைய்யன், நத்தம், வாசு, எல்லாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி, இளம் பெண்கள் பாசறை செயலாளர் ரேகா உள்ளிட்ட  அமமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • மக்கள் கடந்த ஐம்பது ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
    • பல நூறு லோடு லாரி மண் இக்குளத்தில் இருந்து கடத்தப்படுவதாக பொதுமக்கள் சிலர் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சி, எர்ணாகுப்பம் கிராமத்தில், சின்ன ரெட்டி குளம் ஒன்று உள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2 கீழ் ரூ.15 லட்சத்து 40 ஆயிரம் நிதியில் இக்குளத்தை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இக்குளத்தை தூர்வாரி படிக்கட்டுகள் அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த ஐம்பது ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில், இப்பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த குளத்தை தூர்வாரும் பணி மேற்கொள்வதாக கூறி பல நூறு லோடு லாரி மண் இக்குளத்தில் இருந்து கடத்தப்படுவதாக பொதுமக்கள் சிலர் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளனர்.

    மேலும், 46 மீட்டர் அகலம், 44 மீட்டர் நீளம், மூணே கால் மீட்டர் அகலம், உள் ஆழம் இரண்டரை மீட்டர் என இக்குளம் அமைக்க வேண்டும். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இங்கு நடைபெறும் பணியை பார்வையிட்டு கால்நடைகளான ஆடு, மாடு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் இக்குளத்தை மேம்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொள்ளைகும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றுவிட்டனர்.
    • திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    திருநின்றவூர்:

    திருநின்றவூர், பார்வதி நகரில் வசித்து வருபவர் திருபால். ரெயில்வேயில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார். இவர் பணி சம்பந்தமாக பெங்களூர் சென்றார். இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு பம்மலில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதனை நோட்டமிட்ட கொள்ளைகும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    ×