search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiruvallur temple"

    • மரத்தின் வளர்ச்சிக்கு ஹியூமிக் ஆசிட் 1 கிலோவும், கூடுதல் வளர்ச்சிக்கு வேப்ப புண்ணாக்கு 5 கிலோவும் அந்த பள்ளத்தில் போடப்பட்டது.
    • சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வேரோடு சாய்ந்த மரத்தை நட்டு முடித்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் உள்ள முகமது அலி தெருவில் கோலம் கொண்ட அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா, ஜாத்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த கோவிலின் முன்பு 150 ஆண்டு பழமையான வேப்பமரம் உள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதில் கோவில் முன்பு இருந்த பழமையான வேப்ப மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

    அந்த மரத்தை அதே இடத்தில் நட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்த வேண்டுகோளை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ரா தேவி நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி கோவில் தக்கார் பிரகாஷ், மற்றும் வேளாண்மை துறை சார்பில் விஜயகாந்த், மின்சாரத்துறை சார்பில் உதவி பொறியாளர் தட்சிணா மூர்த்தி உள்பட அதிகாரிகள் வேரோடு சாய்ந்த வேப்ப மரத்தை மீண்டும் அதே இடத்தில் நடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    சாய்ந்த மரத்தின் கிளைகளை முழுவதுமாக முதலில் அகற்றினர். பின்னர் அந்த இடத்தில் 5 அடி ஆழத்திற்கு வேர்கள் ஊடுருவும் பகுதி வரை ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டு ராட்சத கிரேன் உதவியுடன் வேப்பமரத்தை அதே இடத்தில் நட்டனர். பணி நடைபெற்றபோது, மரம் மின்கம்பத்தின் மீது படாமல் இருப்பதற்காக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    மேலும் வேளாண்மை துறை சார்பில் வேளாண்மை இணை இயக்குனர் எல்.சுரேஷ் பரிந்துரையின் பேரில் காப்பர் ஆக்சி குளோரைடு 50 சதவிகித சத்து பவுடர் அரை கிலோவில் மரத்தின் வேரின் அடி பாகத்தில் நன்கு நனையும்படி மெழுகு பதத்தில் பூசப்பட்டது. மரத்தின் வளர்ச்சிக்கு ஹியூமிக் ஆசிட் 1 கிலோவும், கூடுதல் வளர்ச்சிக்கு வேப்ப புண்ணாக்கு 5 கிலோவும் அந்த பள்ளத்தில் போடப்பட்டது.

    சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி வேரோடு சாய்ந்த அந்த மரத்தை நட்டு முடித்தனர். இதனை கண்டு அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அந்த மரத்திற்கு பக்தர்கள் மஞ்சள், குங்குமம் பூசி வழிபட்டு சென்றனர்.

    ×