என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • பூண்டி ஏரியில் இருந்து 450 கன அடிவீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.
    • கடந்த மாதம் முதல் உபரிநீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் போது பெய்த பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகி முழு கொள்ளளவை எட்டியது.

    இதையடுத்து கடந்த மாதம் 12-ந் தேதி உபரி நீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. பின்னர் நீர்மட்டம் குறைந்ததால் உபரிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த திடீர் மழையாலும் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது.

    இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து 450 கன அடிவீதம் நீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் ஏரிக்கு தொடர்ந்து 450 கனஅடி தண்ணீர் இன்னும் வந்து கொண்டு இருக்கிறது.

    கடந்த மாதம் முதல் உபரிநீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. சுமார் 1 டி.எம்.சி. தண்ணீர் இப்படி வீணாக கடலில் போய் சேர்ந்துள்ளது. இது சென்னை மக்களின் ஒரு மாத குடிநீர் தேவை ஆகும்.

    புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளும் நிரம்பி உள்ளதால் பூண்டி ஏரியில் இருந்து இந்த ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்ப முடியாத நிலை உள்ளதால் உபரிநீராக வெளியேற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    பலத்த மழையின் போது பூண்டி ஏரி நிரம்பும் போதெல்லாம் உபரி நீர் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து திறந்து விடும் தண்ணீரும் வீணாக கடலில் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.

    இதனை கருத்தில் கொண்டு உபரி நீரை சேமிக்கும் வகையில் புதிய திட்டங்களை செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கார்த்திக் என்பவரை இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி ரெயில் நிலையம் சின்ன வேண்பாக்கம் ரெயில்வே பாலம் அருகே நடந்து செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பொன்னேரி அடுத்த பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் என்பவரை இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய போது ரெயில்வே பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் கார்த்திக்கின் வலது காலில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டது. அவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 30 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • திருத்தணி பகுதியில் கடைகளில் துளைபோட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள வள்ளியம்மாபுரம், அரக்கோணம் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் மதுக்கடையை பூட்டிச் சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வந்த மர்ம கும்பல் மதுக்கடையின் பக்கவாட்டு சுவரில் துளைபோட்டு உள்யே புகுந்தனர். அவர்கள் கடையில் இருந்து சில்லறையாக இருந்த ரூ.14 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர்.

    மேலும் அங்கிருந்த லாக்கரை உடைக்க முடியாததால் ஏராளமான மதுபாட்டில்களை மூட்டை கட்டி அள்ளிச் சென்றுவிட்டனர். லாக்கரில் பல லட்சம் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை மதுக்கடையின் சுவரில் துளை போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருத்தணி போலீசுக்கும், கடையின் சூப்பர்வைசர் கிரிராஜூக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    திருத்தணி பகுதியில் கடைகளில் துளைபோட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. கடந்த வாரம் மத்தூர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் கடையின் சுவற்றில் துளை போட்டு புகுந்து அங்கிருந்த பணம் மற்றும் மதுபாட்டில்களை அள்ளிச்சென்றனர்.

    மேலும் அங்கேயே உட் கார்ந்து விடிய விடிய மது குடித்துவிட்டு சென்று இருந்தனர். கொள்ளையர்களை பிடிக்க போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 70-க்கும் மேற்பட்டோர் கமலக் கண்ணன் மீது ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
    • தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரை அடுத்த புதூர் பஸ் நிறுத்தம் அருகே ஜவுளிக்கடை நடத்தி வந்தவர் கமலக் கண்ணன். இவர் ஏலச் சீட்டும் நடத்தி வந்தார். இதில் அம்பத்தூர், புதூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்தனர்.

    ஆனால் பணம் கட்டி முடித்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கமலக் கண்ணனுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் கடந்த மாதம் திடீரென தலைமறைவானார். இதனால் ஏலச் சீட்டுக்கு பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பணம் கட்டி ஏமாந்த சண்முகபுரத்தை சேர்ந்த அரசகுமார் உள்ளிட்ட சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கமலக் கண்ணன் மீது ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது கமலக்கண்ணன் ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி தப்ப முயன்ற பாம் சரவணனை போலீசார் இடது காலில் சுட்டு பிடித்தனர்.
    • ஆந்திர மாநில போலீசார் மற்றும் ஆந்திர வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சென்னை போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    போரூர்:

    சென்னை புளியந்தோப்பு, பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்கிற பாம் சரவணன். ரவுடியான இவர் மீது 6 கொலை, கொலை முயற்சி வெடி குண்டு வீசியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இவரது சகோதரரும் அரசியல் கட்சி ஒன்றின் மாவட்ட செயலாளருமான தென்னரசு என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு வெங்கல் பகுதியில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    தனது அண்ணனை கொலை செய்த கும்பலை பழி தீர்க்க திட்டம் தீட்டி வந்த பாம் சரவணன் வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் திடீரென தலைமறைவானார். கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு கடந்த 6 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த பாம் சரவணனை கடந்த 15-ந் தேதி புளியந்தோப்பு பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீசார் சுற்றி வளைத்தனர் அப்போது போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி தப்ப முயன்ற பாம் சரவணனை போலீசார் இடது காலில் சுட்டு பிடித்தனர்.

    இதில் காயமடைந்த அவருக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனது அண்ணன் தென்னரசு கொலை வழக்கில் தொடர்புடைய கோயம்பேட்டை சேர்ந்த ரவுடியான செல்வம் என்கிற பன்னீர்செல்வத்தை கடந்த 2018-ம் ஆண்டு பாம் சரவணன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி சென்று ஆந்திர மாநிலம் கூடூரில் உள்ள ஆற்றங்கரை யோரம் வைத்து கொன்று எரித்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

    இதையடுத்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பாம் சரவணனை கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் ஆந்திர மாநிலம் கூடூர் அழைத்துச் சென்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் அதை வீடியோவாக பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.

    இது தொடர்பாக ஆந்திர மாநில போலீசார் மற்றும் ஆந்திர வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சென்னை போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    • மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிபாபு, மதன், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் கிராம ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொதுச் செயலாளர் ரவி தலைமை தாங்கினார். இதில் பொன்னேரி வட்ட தலைவர் ரவிக்குமார், பொன்னேரி வட்ட செயலாளர் செல்வகுமார், மாவட்ட துணைத்தலைவர் சங்கர், பொன்னேரி வட்ட துணைத் தலைவர் ஸ்டாலின், பொன்னேரி வட்ட துணை செயலாளர் கணேசன், மாவட்ட இணை செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹரிபாபு, மதன், உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • சென்னை நகர மக்களுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.
    • பூண்டி ஏரியில் நீர் மட்டம் குறைந்ததும் கிருஷ்ணா தண்ணீர் பெறப்படும் என்று தெரிகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஓன்று பூண்டி ஏரி. இந்த ஏரி கடந்த 1944-ம் ஆண்டு சுமார் 121 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ரூ.65 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.

    பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஆந்திராவில் உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீரை பெறும் திட்டம் 1983-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு ஆந்திரா மாநிலம் வழங்க வேண்டும்.

    இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு வரும் 450 கனஅடி தண்ணீரும் அப்படியே கொசஸ்தலை ஆற்றில் வீணாக வெளியேறி வருகிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு முதல் பூண்டி ஏரி தொடர்ந்து 5 வது ஆண்டாக இதுவரை இல்லாத வகையில் முழு கொள்ளவை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு முந்தைய ஆண்டுகளில் பருவமழை குறைவு காரணமாக ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது மற்றும் போதுமான அளவு கிருஷ்ணா தண்ணீரை பெற முடியாததால் பூண்டி ஏரி தொடர்ந்து முழுவதும் நிரம்பாமல் இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக போதுமான மழை மற்றும் கிருஷ்ணா நீரை பெறுவதால் ஏரியின் நீர் மட்டம் முழுகொள்ளவை எட்டி வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது இதுவரை இல்லாத சாதனையாக உள்ளது.

    தற்போது போதுமான அளவு பூண்டி ஏரியில் தண்ணீர் உள்ள நிலையில் கிருஷ்ணா தண்ணீரை பெற்றால் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் இப்போதைக்கு கிருஷ்ணா நீரை திறக்க வேண்டாம் என்று தமிழக அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியில் நீர் மட்டம் குறைந்ததும் கிருஷ்ணா தண்ணீர் பெறப்படும் என்று தெரிகிறது. இதனால் சென்னை நகர மக்களுக்கு இந்த ஆண்டு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும்.

    • சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.
    • 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது.

    அம்பத்தூர்:

    சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி சி.டி.எச்.சாலை (சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை) மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றன. மேலும் விபத்துக்களும் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் முக்கிய சாலையான இந்த சாலையில் பாடியில் இருந்து திருநின்றவூர் வரை சாலை மிக குறுகலாக இருப்பதால் இதனை 200 அடி சாலையாக விரிவு படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து சி.டி.எச்.சாலை 200 அடி அகலத்தில் விரிவுபடுத்த அறிவிப்பு வெளியான நிலையில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் நில எடுப்பு பணிகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலையை அகலப்படுத்தும் பணியை தொடங்குவதில் பாதிப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து இந்த திட்டம் 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்கான நில எடுப்பு பணிகளுக்கு ரூ.168 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    இது குறித்து அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல் கூறியதாவது:-

    தேசிய நெடுஞ்சாலையாக இருந்த இந்த சி.டி.எச். சாலை கடந்த 2011-ம் ஆண்டிற்கு பிறகு மாநில நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது. இந்த சாலையில் பொதுமக்கள் கோரிக்கையின்படி சாலை விரிவுபடுத்தும் திட்டம் 160 அடி சாலையாக குறைக்கப்பட்டு 6 வழிச்சாலையாக அறிவிப்புகள் வெளியாகின. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நில எடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் இறுதியாக இந்த திட்டம் 6 வழிச்சாலையுடன் 100 அடி அகலத்தில் மாற்றி அமைக்கப்படுகிறது. நில எடுப்புக்கு ரூ.168 கோடி ஒதுக்கீடு செய்ய நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் கொரட்டூர் சந்திப்பில் இருந்து மண்ணூர்பேட்டை வரை ஒரு உயர் மட்ட மேம்பாலமும் , அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலைய சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலமும், அம்பத்தூர் டன்லப் தொழிற்சாலை சந்திப்பில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று உயர் மட்ட மேம்பாலமும் வர உள்ளது.

    விரைவில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை 100 அடி அகலத்தில் 6 வழிச்சாலையாக 3 உயர் மட்ட மேம்பாலங்களுடன் மாற இருக்கிறது. இதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்க இருக்கின்றன. இந்த பணிகள் முடிவடையும் போது தொழிற்பேட்டை நிறைந்த இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் இன்றியும், விபத்துக்கள் ஏற்படாத வகையிலும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
    • தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் ஆயில் சேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரெட்டைமலை சீனிவாசன் (வயது 27). அவரது தம்பி ஸ்டாலின் (24). ரெட்டைமலை சீனிவாசன் மீது பூந்தமல்லி, ஆவடி. பட்டாபிராம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும், ஸ்டாலின் மீது பல அடிதடி வழக்குகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலையில் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதனால் ரெட்டைமலை சீனிவாசன், ஸ்டாலின் ஆகியோருக்கும், அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் தங்கள் நண்பர்களை அழைத்துக் கொண்டு அங்கு வந்தனர். 7 பேர் கொண்ட அந்த கும்பல், அண்ணன் - தம்பி இருவரையும் பழிவாங்கும் நோக்கத்தில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி வெட்டினார்கள்.

    முதலில் ரெட்டைமலை சீனிவாசனை வெட்டிய கும்பல், தொடர்ந்து ஸ்டாலினையும் கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அண்ணன் - தம்பி இருவரும் உயிரிழந்தனர்.

    இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க ஆவடி துணை போலீஸ் கமிஷனர் ஐமன் ஜமால் தலைமையில், பட்டாபிராம் உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள். குடிபோதையில் தகராறு செய்ததால் தான் அண்ணன் - தம்பி இருவரையும் தீர்த்து கட்டினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை நடந்ததா என்று தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் கொலையாளிகள் உருவம் பதிந்துள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள். தப்பி சென்ற குற்றவாளிகள் 7 பேரையும் பிடிக்க போலீசார் பல இடங்களுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடு பட்டுள்ளனர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பட்டாபிராம் சட்டம் ஓழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    பட்டாபிராம் சட்டம்- ஒழுங்கு ஆய்வாளர் ஜெகநாதன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    பட்டாபிராம் காவல் ஆய்வாளராக, திருவேற்காடு காவல் ஆய்வாளர் கிருஷ்ணா விஜய ராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    • சி.சி.டி.வி. கேமராக்களில் கொலையாளிகள் உருவம் பதிந்துள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
    • குற்றவாளிகள் 7 பேரை பிடிக்க போலீசார் பல இடங்களுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆவடி:

    ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் ஆயில் சேரி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரெட்டைமலை சீனிவாசன் (வயது 27). அவரது தம்பி ஸ்டாலின் (24). ரெட்டைமலை சீனிவாசன் மீது பூந்தமல்லி, ஆவடி. பட்டாபிராம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளும், ஸ்டாலின் மீது பல அடிதடி வழக்குகளும் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலையில் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதனால் ரெட்டைமலை சீனிவாசன், ஸ்டாலின் ஆகியோருக்கும், அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் அந்த வாலிபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    சிறிது நேரத்தில் அந்த வாலிபர்கள் தங்கள் நண்பர்களை அழைத்துக் கொண்டு அங்கு வந்தனர். 7 பேர் கொண்ட அந்த கும்பல், அண்ணன் - தம்பி இருவரையும் பழிவாங்கும் நோக்கத்தில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டி வெட்டினார்கள்.

    முதலில் ரெட்டைமலை சீனிவாசனை வெட்டிய கும்பல், தொடர்ந்து ஸ்டாலினையும் கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அண்ணன் - தம்பி இருவரும் உயிரிழந்தனர்.

    இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து பிடிக்க ஆவடி துணை போலீஸ் கமிஷனர் ஐமன் ஜமால் தலைமையில், பட்டாபிராம் உதவி போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். குற்றவாளிகள் யார் என்பதை கண்டறிய அந்த பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினார்கள். குடிபோதையில் தகராறு செய்ததால் தான் அண்ணன் - தம்பி இருவரையும் தீர்த்து கட்டினார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை நடந்ததா என்று தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் கொலையாளிகள் உருவம் பதிந்துள்ளதா என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள். தப்பி சென்ற குற்றவாளிகள் 7 பேரையும் பிடிக்க போலீசார் பல இடங்களுக்கும் சென்று தேடுதல் வேட்டையில் ஈடு பட்டுள்ளனர்.

    • குடிநீர் மிகவும் மாசடைந்து கருப்பு நிறமாக மாறி உள்ளது.
    • புழல் ஏரி நீர் முழுவதுமே சாக்கடை நீராக மாறிவிடும் அபாயம் உள்ளது.

    அம்பத்தூர்:

    சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி தற்போது முழு அளவு நிரம்பியுள்ளது. இங்கிருந்து நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வாரியம் மூலம் வீடுகளுக்கு குழாய் மூலமும், லாரி மூலமும் சப்ளை செய்யப்படுகிறது. இந்த நிலையில் புழல் ஏரியின் கரை பகுதியான அம்பத்தூர் கள்ளிக்குப்பம், தென்றல் நகர், மேற்கு பாலாஜி நகர், சக்தி நகர், சரஸ்வதி நகர், கிழக்கு பாலாஜி நகர், பானு நகர் 1 முதல் 25 அவென்யூ வரை உள்ள குடியிருப்பு பகுதிகள் என அனைத்து பகுதிகளில் இருந்தும் மழை நீர் கால்வாய் மூலம் கழிவுநீர் இணைப்பு இணைக்கப்பட்டு இந்த ஏரியில் திறந்து விடப்படுகின்றன.

    இதனால் குடிநீர் மிகவும் மாசடைந்து கருப்பு நிறமாக மாறி உள்ளது.

    அது மட்டும் இல்லாமல் அப்பகுதியே கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறியதாவது:-

    அம்பத்தூர் கள்ளிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்த மழை நீர் வடிகாலில் சுற்றியுள்ள 2000-க்கும் மேற்பட்ட வீடுகளின் கழிவுநீரை விடுகின்றனர். இந்த கழிவு நீரானது நேரடியாக சென்னை மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் இந்த புழல் ஏரியில் கலக்கிறது.

    இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அது மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் ஒருவித விஷப்பூச்சி அனைத்து வீடுகளிலும் லட்சக்கணக்கில் படை எடுக்கிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் நாங்கள் முறையிட்டால் மழைநீர் கால்வாயில் கழிவுநீர் வெளியேற்றும் வீடுகளை கணக்கெடுத்து அவர்களுக்கு அபராதம் விதிக்காமல் இங்கு 2 பெரிய மின்விளக்குகளை வைத்து பூச்சிகள் அதில் உட்காரும் வகையில் ஏற்பாடு செய்து சென்று விட்டனர்.

    இதே நிலை தொடர்ந்தால் புழல் ஏரி நீர் முழுவதுமே சாக்கடை நீராக மாறிவிடும் அபாயம் உள்ளது. அது மட்டுமல்லாமல் 2 ஆயிரம் வீடுகளில் இருந்து கழிவுநீர் கலப்பதால் நீரின் நிறம் கருப்பாக உள்ளது. புழல் ஏரியை சுற்றியுள்ள திருமுல்லைவாயல், செங்குன்றம், முருகாம்பேடு, ஓரகடம் என எங்கெல்லாம் கரைப்பகுதி வருகிறதோ அப்பகுதி முழுவதும் கழிவுநீர் ஏரிகளில் வெளியேற்றப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • தாமஸ் விபத்தில் பலியானது பற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த சேலை கிராமத்தைச் சேர்ந்தவர் தாமஸ் (வயது 55). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் மகள் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது.

    மகளின் திருமணத்திற்காக உறவினர்களுக்கு பத்திரிகை கொடுப்பதற்கு சென்னைக்கு தாமஸ் மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் மீண்டும் திருவள்ளூர் நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டரசன் பேட்டை அருகே வந்து கொண்டு இருந்தபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென தாமசின் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்ததில் தாமசின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி தாமஸ் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே தாமஸ் விபத்தில் பலியானது பற்றி அறிந்ததும் அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரியில் குவிந்தனர். திடீரென அவர்கள் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். தொடர்ந்து ஆஸ்பத்திரியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×