என் மலர்
திருப்பூர்
- தண்டவாளங்களில் அத்துமீறல்களில் ஈடுபடும் பொதுமக்களால் விபத்துகள் ஏற்படுகிறது.
- மது குடித்தல், இயற்கை உபாதை கழித்தல் போன்ற செயல்களுக்காக தண்டவாள பகுதியை பயன்படுத்துகின்றனர்.
உடுமலை :
உடுமலை வழியாக பொள்ளாச்சி - கோவை - பொள்ளாச்சி, திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ், பாலக்காடு - திருச்செந்தூர், கோவை - மதுரை உள்ளிட்ட ெரயில்கள் இயக்கப்படுகின்றன.
ெரயில் போக்குவரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், தண்டவாளங்களில் அத்துமீறல்களில் ஈடுபடும் பொதுமக்களால் விபத்துகள் ஏற்படுகிறது.
ெரயில் தண்டவாளங்களில் மேய்ச்சலுக்காக ஆடு, மாடுகளை விடுகின்றனர். மேலும் மது குடித்தல், இயற்கை உபாதை கழித்தல் போன்ற செயல்களுக்காக தண்டவாள பகுதியை பயன்படுத்துகின்றனர்.
ெரயில் வருவதற்காக, கேட் அடைக்கப்பட்டாலும், அதை கண்டுகொள்ளாமல் ஒரு சிலர் ெரயில்வே கேட் தடுப்பை தாண்டி கடந்து செல்கின்றனர்.ஒரு சிலர், சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் நடந்து சென்று செல்பி எடுப்பது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். மாலை நேரங்களில் கூட்டமாக ெரயில்வே தண்டவாளத்தில் அமர்கின்றனர்.
இதுபோன்ற செயல்களால் விபத்துகள் அதிகளவு நடக்கின்றன. கடந்த மாதம் தென்னக ெரயில்வே பொது மேலாளர் மற்றும் அதிகாரிகள் வந்த ெரயில் மோதி, ஆடுகள் மற்றும் ஒரு வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி இறந்தார். வாழைக்கொம்பு நாகூர் அருகே ஒருவர் ெரயில் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழித்தடத்தில் மட்டும் 50 பேர் ெரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும், என தமிழக ெரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து ெரயில்வே போலீசார் கூறியதாவது:-
தடை செய்யப்பட்ட பகுதிகளில், ெரயில் தண்டவாளத்தை யாரும் கடக்க கூடாது. தண்டவாளப் பாதையை கடக்க மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும். மேம்பாலம் இல்லாத இடங்களில், தண்டவாள பாதையை கடக்கும் போது இருபுறமும் ெரயில் வருகிறதா என கவனிக்க வேண்டும்.
ெரயில் தண்டவாளத்தை கடக்கும் போது, மொபைல்போன் பேசியபடி கவனமின்றி செல்லக்கூடாது. வயதான முதியவர்கள் ெரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கவே கூடாது. ெரயில்வே கேட் மூடியிருக்கும் போது, தடுப்பை தாண்டி தண்டவாளத்தை கடப்பது குற்றமாகும். அதேபோன்று, தண்டவாளத்தில் போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.இயற்கை உபாதை கழித்தல், மது குடித்தல் போன்றவைக்கு தண்டவாளத்தை கடந்து செல்லக்கூடாது. விபத்துக்களை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
- இந்த கல்லூரியில் கடந்த ஏப்ரல் 2023ல் கோவை பாரதியார் பல்கலைக்கழக பருவ தேர்வு நடந்தது.
- திருப்பூர் குமரன் கல்லூரி மாணவிகள், பல்கலைக்கழக தேர்வில் சாதித்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூர் குமரன் கல்லூரி மாணவிகள், பல்கலைக்கழக தேர்வில் சாதித்துள்ளனர்.திருப்பூர் மங்கலம் ரோட்டில் செயல்படும் இந்த கல்லூரியில் கடந்த ஏப்ரல் 2023ல் கோவை பாரதியார் பல்கலைக்கழக பருவ தேர்வு நடந்தது. இதில் பி.காம்., பாடப்பிரிவில் மாணவி ஸ்வேதா, பி.காம்., (கோ-ஆபரேஷன்) பாடப்பிரிவில் கீர்த்தனா, பி.எஸ்சி., (கணிதம் சி.ஏ.,) பாடப்பிரிவில் மாணவி அனுசுயா, எம்.காம்., சி.ஏ., பாடப்பிரிவில் சரண்யா, எம்.எஸ்சி., கணிதம் பாடப்பிரிவில் சுகுணா, எம்.எஸ்.சி., மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவில் உம்மு குல்சம் ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றனர்.மேலும் 44 ரேங்க்குகளை இக்கல்லுாரி மாணவிகள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சாதித்த மாணவிகளை கல்லூரி தலைவர் மற்றும் தாளாளர் அர்த்தனாரீஸ்வரன், கல்லூரி முதல்வர் வசந்தி மற்றும் நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உட்பட பலர் பாராட்டினர்.
- கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது
- அகல் விளக்குகள் விற்பனை திருப்பூர் பகுதியில் தற்போது துவங்கியுள்ளது.
திருப்பூர் :
கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ந் தேதி கொண்டாடப்படுகிறது.இதற்காக கோவில்களில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படும். வீடுகள், கடைகள்,வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அலுவலகங்களிலும் அகல் விளக்கு உள்ளிட்ட விளக்குகளில் தீபம் ஏற்றி அனைவரும் வழிபாடு செய்வர்.
அவ்வகையில் வீடுகளில் ஏராளமான அகல் விளக்குகளில் தீபம் வைத்து வழிபடுவர். இதற்காக, அகல் விளக்குகள் விற்பனை திருப்பூர் பகுதியில் தற்போது துவங்கியுள்ளது. பொள்ளாச்சி, பொங்கலூர் ஆகிய பகுதிகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மண்ணால் ஆன அகல் விளக்குகள் பல்வேறு அளவுகளில் தற்போது திருப்பூர் பகுதி கடைகளில் விற்பனையாகிறது.திருப்பூரில் உள்ள நிரந்தர மண் பாண்டம் மற்றும் விளக்கு வகைகள் விற்பனை செய்யும் கடைகளில் விற்பனை துவங்கியுள்ளது.
இது மட்டுமின்றி திருவிழாவை முன்னிட்டு விளக்குகள் விற்பனை செய்யும் நடைபாதையோர கடைகள், தள்ளு வண்டி கடைகளிலும் இவற்றின் விற்பனை காணப்படுகிறது. தீபம் ஏற்றி வழிபாடு செய்வதற்காக இவற்றை கடைகளில் தேர்வு செய்து பலரும் வாங்கி செல்கின்றனர்.
- அரசுப்பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.
- பஞ்சாயத்து தலைவி ஆனந்தவேணி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாழ்த்தினர்.
உடுமலை:
உடுமலை வட்டார அளவில் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை வெளிக்கொண்டு வரும் நோக்கில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டிணம் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 48 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 25 பேர் இசை, நடனம், ஓவியம், வில்லுப்பாட்டு மற்றும் ஆங்கிலம், தமிழ் பேச்சுப்போட்டி மற்றும் சிற்பம் உருவாக்குதல் போன்ற பிரிவுகளில் வெற்றி பெற்று மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
பின்னர் மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்ற 13 மாணவர்களில் ஆர் ஹரிசுதன் (நவீன ஓவியம்), எஸ்.விஜய்கிருஷ்ணா ( எதிர்கால கனவு), எம். ஆசியா சுஹனா ( ஆங்கில பேச்சு போட்டி) ஆகிய மூன்று மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
இப்போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்தி, பயிற்சி வழங்கிய ஆசிரியர்கள் கஸ்தூரி பானு, சிவசுப்பிரமணியன், மகேந்திரன், மகேஸ்வரி ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியர் சதீஷ்குமார், பஞ்சாயத்து தலைவி ஆனந்தவேணி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாழ்த்தினர்.
- காரப்பாளையம் பகுதியில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.
- கணவன், மனைவி 2 பேரும் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.
முத்தூர்:
ஈரோடு மாவட்டம், சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமகிரி (வயது 39). இவர் காரப்பாளையம் பகுதியில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) ராமகிரியும் அவரது மனைவி சுமதி ஆகிய 2 பேரும் காங்கயம் - கோவை சாலையில் காங்கயம் நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை ராமகிரி ஓட்டி சென்றார். அப்போது மாலை சுமார் 6 மணி அளவில் காங்கயம் அருகே உள்ள காடையூர் பகுதி பக்கம் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது.
இதில் கணவன், மனைவி 2 பேரும் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து தலையில் பலத்த காயம் அடைந்த ராமகிரி மற்றும் அவரது மனைவியை அருகில் இருந்தவர்கள் ஓேடாடி வந்து மீட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காங்கயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 2 பேரையும் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராமகிரி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் இருந்த சுமதிக்கு கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காங்கயம் போலீசார், கார் டிரைவரான நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தங்கப்பிரகாஷ் (வயது 49) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- முகாமிற்கு சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கே.முரளி தலைமை தாங்கினார்
- ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குணபிரசாத் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முத்தூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே பரஞ்சேர்வழியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு சாவடிப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கே.முரளி தலைமை தாங்கினார். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
1996-ம் ஆண்டு 4-வது முறையாக தமிழக முதல்வராக கலைஞர் பொறுப்பேற்ற போது வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்தார். இத்திட்டத்தின் நோக்கம் மருத்துவமனையில் மட்டுமே மருத்துவர்கள் பணிபுரிவதோடு அல்லாமல், கிராமப்புறங்களுக்கும் நேரில் சென்று வயதானவர்கள், ஆதரவற்றோர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நோயை ஆரம்ப கட்டத்தில் சரி செய்வதால் தான் இது வருமுன் காப்போம் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம்கள் வட்டார அளவில் நடைபெறும். ஒவ்வொரு முகாமிலும் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர் குழுக்கள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க, இது சிறந்த திட்டமாக உள்ளது. இன்று பரஞ்சேர்வழி ஊராட்சியில் நடைபெற்ற ஒரு இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று நோயற்ற வாழ்வு வாழ வேண்டும். என்றார்.
முகாமில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பொதுவான நோய்கள், இருதய நோய், சர்க்கரை நோய், பல் மருத்துவம், காது மூக்கு தொண்டை தொடர்பான நோய், கண் பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, குழந்தைகளுக்கான மருத்துவம், தோல் நோய் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு முகாம் மூலம் 480 பேருக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும் வட்டார சுகாதார ஆய்வாளர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை சார்ந்த 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பணியாளர்கள் பங்கேற்று பணிபுரிந்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.மகேஷ்குமார், நத்தக்காடையூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குணபிரசாத் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் மூலம் விற்பனை நடைபெற்றது
- ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார்.
முத்தூர்:
திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் மூலம் விற்பனை நடைபெற்றது.
இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 4 விவசாயிகள், 15 மூட்டைகள் (704 கிலோ) தேங்காய் பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர்.
இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.53 ஆயிரத்திற்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.89-க்கும், குறைந்த பட்சமாக ரூ.62-க்கும், சராசரியாக ரூ.88- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார்.
- பல்லடம் பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் பேக்கரி கடை முன்பு சம்பவத்தன்று இரவு மூதாட்டி ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
- பல்லடம் ஊராட்சி ஒன்றிய மகளிர் ஊர் நல அலுவலர் பொன்னம்மாள், பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் பேக்கரி கடை முன்பு சம்பவத்தன்று இரவு மூதாட்டி ஒருவர் உட்கார்ந்திருந்தார்.
அதுசமயம் அந்த வழியே சென்ற இரண்டு பேர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து பல்லடம் ஊராட்சி ஒன்றிய மகளிர் ஊர் நல அலுவலர் பொன்னம்மாள், பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மரிய தைரிய நாடார் என்பவரது மகன் அந்தோணி முத்து (வயது 58) மற்றும் ஜெகதாளன் என்பவரது மகன் வினோத் (வயது 32) ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
- வக்கீல்கள் இமயம் சரவணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உருக்காலையை மூட வலியுறுத்தி அனுப்பட்டி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உள்ளிட்டோர் கடந்த 250 நாட்களாக உண்ணாவிரத போராட்டம், காத்திருப்பு போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) இரும்பு உருக்காலையை மூட வலியுறுத்தி நடைபெறும் 250- வது நாள் காத்திருப்பு போராட்டத்தில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி, வக்கீல்கள் இமயம் சரவணன், கோபாலகிருஷ்ணன் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
- சம்பவத்தன்று முருகேஷ், ஓலப்பாளையம் பொன்பரப்பி பிரிவு அருகே தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
- வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்தூர்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த முத்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 66). சம்பவத்தன்று முருகேஷ், ஓலப்பாளையம் பொன்பரப்பி பிரிவு அருகே தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, முருகேஷ் சென்று கொண்டிருந்த மொபட் மீது மோதியதாக தெரிகிறது.
இதில் மொபட்டில் இருந்து பலத்த காயத்துடன் முருகேஷ் கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை அங்கிருந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகேஷ் நேற்று (திங்கட்கிழமை) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோட்டில் இருந்து பழனிக்கு சென்ற தனியார் பஸ் ஒன்று அதிவேகத்தில் சென்று பொன்னுசாமி மீது மோதியதாக தெரிகிறது.
- பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள அவினாசிபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 46). வேன் ஓட்டுநர். இவர் நேற்று (திங்கட்கிழமை) மதியம் தனது இரு சக்கர வாகனத்தில் சாலையை கடந்து செல்ல காங்கயம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஈரோட்டில் இருந்து பழனிக்கு சென்ற தனியார் பஸ் ஒன்று அதிவேகத்தில் சென்று பொன்னுசாமி மீது மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் பொன்னுசாமி பேருந்திற்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தார்.
உடனே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பொன்னுசாமியை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் ஆவேசம் அடைந்து அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காங்கயம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர். இதனால் காங்கயம் பஸ் நிலைய சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
- கடந்த 16 நாட்களாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ. 2000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல்லடம்:
திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, பருத்தி, பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம் ஆகியவற்றை குறைக்க வலியுறுத்தி ஜவுளி உற்பத்தியாளர்கள், சிறு,குரு, தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழில்துறையினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 5-ந்தேதி முதல் நவம்பர் 25-ந்தேதி வரை உற்பத்தி நிறுத்த போராட்டத்தை திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்து அது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 16 நாட்களாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் ரூ. 2000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- திருப்பூர்,கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.தற்போதைய சூழ்நிலையில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் மின் கட்டண உயர்வு, மின் மிகை பயன்பாடு கட்டணம் விதிப்பு, நிலை கட்டணம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, பருத்தி,பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிப்படைந்துள்ளது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து துணி இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்துள்ளது. மேலும் மற்ற மாநிலங்களில் உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் தமிழ்நாட்டில் துணி உற்பத்தியாளர்கள் போட்டி போட்டு தொழில் செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டில் இருந்து துணி உற்பத்தியாளர்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வந்தனர்.
உலக பொருளாதார மந்தம், உக்ரையன், இஸ்ரேல் போர்கள் காரணமாக ஏற்றுமதி தடைபட்டுள்ளது. கடந்த 6 மாதமாகவே ஜவுளி உற்பத்தி தொழில் செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தோம். தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை, மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்ததால் கடந்த நவ.5 முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகிறோம். இதன் மூலம் கடந்த 16 நாட்களாக சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இருந்த போதிலும் ஜவுளி தொழிலுக்கு சாதகமான அறிவிப்புகள் இன்னும் அரசிடம் இருந்து வரவில்லை. மின் கட்டண உயர்வு, நிலை கட்டணம் ஆகியவற்றை குறைக்க வேண்டும். மின் மிகை பயன்பாடு கட்டணம் ரத்து செய்ய வேண்டும். அப்பொழுதுதான் ஜவுளி தொழிலை காப்பாற்ற முடியும். மத்திய அரசு நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நூல் விலையை கட்டுக்குள் வைக்க வேண்டும். பஞ்சு ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இது போன்ற நடவடிக்கைகளால் தான் ஜவுளி உற்பத்தி தொழிலை மீட்டெடுக்க முடியும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.






