என் மலர்
நீங்கள் தேடியது "Railway Police advises"
- தண்டவாளங்களில் அத்துமீறல்களில் ஈடுபடும் பொதுமக்களால் விபத்துகள் ஏற்படுகிறது.
- மது குடித்தல், இயற்கை உபாதை கழித்தல் போன்ற செயல்களுக்காக தண்டவாள பகுதியை பயன்படுத்துகின்றனர்.
உடுமலை :
உடுமலை வழியாக பொள்ளாச்சி - கோவை - பொள்ளாச்சி, திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ், பாலக்காடு - திருச்செந்தூர், கோவை - மதுரை உள்ளிட்ட ெரயில்கள் இயக்கப்படுகின்றன.
ெரயில் போக்குவரத்து மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், தண்டவாளங்களில் அத்துமீறல்களில் ஈடுபடும் பொதுமக்களால் விபத்துகள் ஏற்படுகிறது.
ெரயில் தண்டவாளங்களில் மேய்ச்சலுக்காக ஆடு, மாடுகளை விடுகின்றனர். மேலும் மது குடித்தல், இயற்கை உபாதை கழித்தல் போன்ற செயல்களுக்காக தண்டவாள பகுதியை பயன்படுத்துகின்றனர்.
ெரயில் வருவதற்காக, கேட் அடைக்கப்பட்டாலும், அதை கண்டுகொள்ளாமல் ஒரு சிலர் ெரயில்வே கேட் தடுப்பை தாண்டி கடந்து செல்கின்றனர்.ஒரு சிலர், சமூக வலைதளங்களில் பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் நடந்து சென்று செல்பி எடுப்பது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். மாலை நேரங்களில் கூட்டமாக ெரயில்வே தண்டவாளத்தில் அமர்கின்றனர்.
இதுபோன்ற செயல்களால் விபத்துகள் அதிகளவு நடக்கின்றன. கடந்த மாதம் தென்னக ெரயில்வே பொது மேலாளர் மற்றும் அதிகாரிகள் வந்த ெரயில் மோதி, ஆடுகள் மற்றும் ஒரு வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளி இறந்தார். வாழைக்கொம்பு நாகூர் அருகே ஒருவர் ெரயில் தண்டவாளத்தில் அடிபட்டு இறந்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழித்தடத்தில் மட்டும் 50 பேர் ெரயிலில் அடிபட்டு இறந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும், என தமிழக ெரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து ெரயில்வே போலீசார் கூறியதாவது:-
தடை செய்யப்பட்ட பகுதிகளில், ெரயில் தண்டவாளத்தை யாரும் கடக்க கூடாது. தண்டவாளப் பாதையை கடக்க மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும். மேம்பாலம் இல்லாத இடங்களில், தண்டவாள பாதையை கடக்கும் போது இருபுறமும் ெரயில் வருகிறதா என கவனிக்க வேண்டும்.
ெரயில் தண்டவாளத்தை கடக்கும் போது, மொபைல்போன் பேசியபடி கவனமின்றி செல்லக்கூடாது. வயதான முதியவர்கள் ெரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கவே கூடாது. ெரயில்வே கேட் மூடியிருக்கும் போது, தடுப்பை தாண்டி தண்டவாளத்தை கடப்பது குற்றமாகும். அதேபோன்று, தண்டவாளத்தில் போட்டோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.இயற்கை உபாதை கழித்தல், மது குடித்தல் போன்றவைக்கு தண்டவாளத்தை கடந்து செல்லக்கூடாது. விபத்துக்களை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு போலீசார் கூறினர்.






