என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் பெண்களுக்கான ஒருநாள் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது .
    • முகாமானது ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்றது

    திருப்பூர் : 

    திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் பெண்களுக்கான ஒருநாள் சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது .

    திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி அமைப்புடன் பள்ளியில் செயல்பட்டு வரும் மாணவர்களின் இன்ட்ராக்ட் அமைப்பும் இணைந்து நடத்திய இந்த முகாமானது ஏ.வி.பி. கல்வி குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமையில் நடைபெற்றது . ரோட்டரி அமைப்பின் மாவட்ட ஆளுநர் மருத்துவர் சுரேஷ்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களின் உடல்பாதுகாப்பு மற்றும் அதற்கான மருத்துவ முறைகள் பற்றி விளக்கி பேசினார்.

    அதனைத்தொடர்ந்து சுமார் 160க்கும் அதிகமான பெண்கள் தங்களை மருத்துவப்பரிசோதனைக்கு உட்படுத்தி தகுந்த மருத்துவ ஆலோசனைகள் பெற்றனர் .மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் மாணவிகள், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் ஆகியோர் தாங்களாகவே முன்வந்து தங்கள் தலைமுடிகளை தானமாக வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் ரோட்டரி அமைப்பை சார்ந்த ஆனந்த்ராம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக திருப்பூர் மெட்டல் டவுன் ரோட்டரி அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். முடிவில் ஏ.வி.பி., பள்ளி மாணவர்களின் இன்ட்ராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் ரஞ்சிதா நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

    • நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு, இந்த அணை குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது.
    • அணையின் நீா்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. இதனால் 90 அடி உயரமுள்ள அணையானது நிரம்பும் தருவாயில் உள்ளது.

    உடுமலை:

    திருப்பூா் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு, இந்த அணை குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிா்பாா்த்த அளவு பெய்யாமல் போனது. இதனால் அணையின் நீா் இருப்பைப் பொருத்து குடிநீா்த் தேவைகளுக்காகவும், பழைய, புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள நிலைப்பயிா்களை காப்பாற்றவும் ஜூன் 29, ஆகஸ்ட் 8, அக்டோபா் 13-ந் தேதி என 3 முறை அணையில் இருந்து உயிா் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையின் நீா் இருப்பு குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடந்த 10-ந் தேதி அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியது. அதன் பின்னா் கடந்த 10 நாள்களாக பெய்து வரும் மழையால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வந்தது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. இதனால் 90 அடி உயரமுள்ள அணையானது நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இதனால் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிட அரசுக்கு பொதுப் பணித் துறையினா் கருத்துரு அனுப்பியுள்ளனா். மேலும் இதுகுறித்து பொதுப்பணித்துறையினா் கூறியதாவது:- ஆண்டுதோறும் நவம்பா் மாதம் வடகிழக்குப் பருவமழையை பொருத்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும். தற்போது அணையின் நீா்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. மேலும் வடகிழக்குப் பருவமழையை நம்பிக்கையோடு எதிா்பாா்த்துள்ளோம். ஆகையால் இன்னும் சில நாட்களிலேயே அணையைத் திறந்துவிட வாய்ப்புகள் உள்ளன. இது குறித்து விளக்கமாக தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்துள்ளோம் என்றனா்.  

    • பாரதியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகளின்படி தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
    • பிரபாகரன் 3-ம் இடத்தையும், மாணவி உதயமலா் 4-ம் இடத்தையும் பெற்றுள்ளனா்.

    உடுமலை:

    2022 - 23 ம் கல்வி ஆண்டில் நடைபெற்ற பாரதியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகளின்படி தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 15 போ் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். இதில் இளநிலை பட்ட வகுப்புகளில் மாணவி பாண்டீஸ்வரி புள்ளியியல் துறையில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும், அரசியல் அறிவியல் துறையில் மாணவி வேதநாயகி 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும், மின் வணிகவியல் துறையில் மாணவன் பிரபாகரன் 3-ம் இடத்தையும், மாணவி உதயமலா் 4-ம் இடத்தையும் பெற்றுள்ளனா்.

    இதுதவிர தாவரவியல் துறையில் மாணவி லிடியா 3-ம் இடத்தையும், கே.ரமணி 10-ம் இடத்தையும், இயற்பியல் துறையில் மாணவி அா்ஸ்மா 7-ம் இடத்தையும், வேதியியல் துறையில் மாணவன் பொன் ஜீவகன் 6-ம் இடத்தையும், தமிழ் துறையில் மாணவி சத்யசுப்ரபானு 10-ம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

    முதுநிலை பட்ட வகுப்புகளில் சுற்றுலாவியல் துறையில் மாணவி ஷாலினி பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், மாணவன் பத்மநாதன் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கமும், புள்ளியியல் துறையில் மாணவி சந்தியா முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், வேதியியல் துறையில் மாணவன் கிஷோா் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும் வென்றுள்ளனா். பொருளியல் துறையில் மாணவி பி.அபிதா 5-ம் இடத்தையும், இயற்பியல் துறையில் மாணவி கே.அனிஸ் பாத்திமா 10-ம் இடத்தையும் பெற்றுள்ளனா். இந்நிலையில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் கல்யாணி மற்றும் துறைத்தலைவா்கள், பேராசிரியா்கள், முன்னாள் மாணவா் சங்க அறக்கட்டளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனர்.

    • ஏஐடியூசி., மாவட்ட அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • எல்பிஎப்., ஐஎன்டியூசி., எம்எல்எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் உள்ள ஏஐடியூசி., மாவட்ட அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொதுச்செயலாளா் பி.ஆா்.நடராஜன் தலைமை தாங்கினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினா் கூறியதாவது:- மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக விவசாயிகள், தொழிலாளா்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோா் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவது, வேளாண் பொருள்களுக்கு நியாயமான விலை வழங்க மறுப்பது ஆகியவை சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குகிறது. ஆகவே, பாஜக., அரசுக்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சாா்பில் சென்னைஆளுநா் மாளிகை முன்பாக வருகிற 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் தொடா் போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்க வேண்டும். மேலும், இப்போராட்டத்துக்கு ஆதரவாக திருப்பூா் குமரன் சிலை முன்பாக 28-ந் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா். இதில் ஏஐடியூசி., சிஐடியூ., எல்பிஎப்., ஐஎன்டியூசி., எம்எல்எப்., உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • திருட்டில் ஈடுபட்ட நபர் வடமாநில வாலிபர் போன்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் அவினாசி ரோடு காந்திநகர் சந்திப்பில் செல்போன் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை உள்ளது. அங்கு கோழிக்கோடு, வடகரை பகுதியை சேர்ந்த முகமது இஜாஸ் என்பவர் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.

    இரவு அப்துல் சலாம், முகமது இஜாஸ் ஆகியோர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றனர். மறுநாள் காலை முகமது இஜாஸ் கடையை திறக்க சென்றபோது கடையின் வெளிப்புறத்தில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த விலை மதிப்புள்ள புதிய செல்போன்கள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் உரிமையாளர் அப்துல் சலாம் மற்றும் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். அப்போது அதிகாலை 2.15 மணிக்கு முககவசம் அணிந்தபடி உள்ளே சென்ற மர்ம ஆசாமி ஒருவர் சாக்குப் பையுடன் உள்ளே சென்று புதிய செல்போன்கள் அனைத்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வெளியேறுவதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. திருட்டில் ஈடுபட்ட நபர் வடமாநில வாலிபர் போன்று இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    விலை மதிப்புள்ள செல்போன்களை மட்டும் திருடி இருப்பதால் ஏற்கனவே செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபராக இருக்கும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். சுமார் ரூ.7 லட்சம் மதிப்புள்ள 55 செல்போன்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் கடையின் பூட்டை உடைத்து 55 செல்போன்களை மர்ம ஆசாமி திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மாணவர்கள் மழை நீரை சேமிப்பதற்காக கல்லூரி வளாகத்தில் குளம் ஒன்றை வெட்டினர்.
    • இன்று காலை வரை பெய்த மழையால் குளம் நிரம்பி காணப்படுகிறது.

    திருப்பூர் : 

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவர்கள் மழை நீரை சேமிப்பதற்காக கல்லூரி வளாகத்தில் குளம் ஒன்றை வெட்டி அதற்கு என்.எஸ்.எஸ் குளம் என்று பெயரிடப்பட்டது. இந்தநிலையில் திருப்பூர் மாநகரில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெய்த மழையால் குளம் நிரம்பி காணப்படுகிறது. இந்த மழை சீசனில் மூன்றாவது முறையாக குளம் நிரம்பியது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் தெரிவித்தனர். அலகு -2 மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் ஆர்வத்தோடு குளம் நிரம்பி உள்ளதை செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

    • திருவாடானை வட்டம் நா்த்தன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பி.ரகுபதி
    • கண்ணப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரகுபதியை குத்திக்கொலை செய்துள்ளாா்.

    திருப்பூர் : 

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் நா்த்தன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பி.ரகுபதி ( வயது 22). இவா் திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே ஊத்துக்குளியில் டாஸ்மாக் பாா் நடத்தி வந்த சிவகங்கை மாவட்டத்தை சோ்ந்த கே.கண்ணப்பன் (37) என்பவரிடம் வேலை செய்து வந்தாா்.

    இந்த நிலையில் பாரில் இருந்த ரூ.6 ஆயிரத்தை எடுத்தது தொடா்பான விவகாரத்தில் ரகுபதி வேலையை விட்டுச் சென்றுள்ளாா். இதன் பின்னா் அருகம்பாளையத்தில் உள்ள வேறு ஒரு பாரில் ரகுபதி வேலை செய்து வந்துள்ளாா்.

    இந்த நிலையில், கடந்த 2018 மாா்ச் 12-ந் தேதி ரகுபதி வேலைசெய்து வந்த பாருக்கு கண்ணப்பன் சென்றுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரகுபதி, கண்ணப்பனை தகாத வாா்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து கண்ணப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரகுபதியை குத்திக்கொலை செய்துள்ளாா்.

    இதுகுறித்து ஊத்துக்குளி காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து கண்ணப்பனைக் கைது செய்தனா். இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி சொா்ணம் ஜெ.நடராஜன் தீா்ப்பு வழங்கினாா். அதில், கண்ணப்பனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் திருப்பூா் மாவட்ட குற்றத் துறை அரசு வக்கீல் கனகசபாபதி ஆஜரானாா்.

    • பூளவாடி கிளை நூலகம் வாசகா் வட்டத்துக்கு தமிழக அரசு விருது வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.
    • குழந்தைகளின் படைப்பு ஆக்கம் போன்ற நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

    உடுமலை : 

    உடுமலை வட்டம் பூளவாடி கிளை நூலகம் வாசகா் வட்டத்துக்கு தமிழக அரசு விருது வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளது.

    இந்த நூலகத்தில் சிறாா்களுக்காக பொம்மலாட்டம், கதை வட்டம், காகித பொம்மை செய்தல், விளையாட்டு மற்றும் குழந்தைகளின் படைப்பு ஆக்கம் போன்ற நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இளம் வயது மாணவா்களிடம் வாசிப்பை நேசிக்க வைக்க பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

    இந்நிலையில் மாநில அளவில் நூலக வளா்ச்சியில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய 14 நூலகங்கள் தோ்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி விருதுகளை வழங்கினாா்.

    இதில் உடுமலை வட்டம் பூளவாடி முழு நேர கிளை நூலகத்துக்கு மாநில அளவில் முனைப்புடன் செயல்பட்ட பூளவாடி கிளை நூலக வாசகா் வட்டத்துக்கு தமிழக அரசின் விருது மற்றும் கேடயம் வழங்கப்பட்டன.வாசகா் வட்டத் தலைவா் சுப்பிரமணியன், செயலாளா் மற்றும் நூலகா் லட்சுமணசாமி ஆகியோா் இதனை பெற்றுக்கொண்டனா்.

    • பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளது
    • நாளை மின் விநியோகம் இருக்காது

    பல்லடம் : 

    பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்: பனப்பாளையம், சிங்கனூா், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம், குங்குமம்பாளையம், மாதேஸ்வரன் நகா், மாதப்பூா், நல்லாகவுண்டம்பாளையம், ராயா்பாளையம் (ஒரு பகுதி).

    • நொய்யல் ஆற்றின் குறுக்கில் ஈஸ்வரன் கோவில் அருகே புதிய பாலம் கட்டப்படுகிறது.
    • இதன் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடத்தி பணி துவங்கியது

    திருப்பூர் : 

    திருப்பூர் நொய்யல் ஆற்றின் குறுக்கில் ஈஸ்வரன் கோவில் அருகே புதிய பாலம் கட்டப்படுகிறது.யூனியன் மில் ரோட்டையும், ஈஸ்வரன் கோவில் ரோட்டையும் இணைக்கும் வகையில் இந்த புதிய பாலம் திட்டமிடப்பட்டு, இதன் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடத்தி பணி துவங்கியது.நொய்யல் ஆற்றினுள் தூண்கள் அமைக்க வேண்டிய நிலையில் இதற்காக ஆற்றில் செல்லும் தண்ணீரை பணி நடக்கும் இடத்தில் தடை செய்து திருப்பி விடப்பட்டது. அதன் பின் பண்டிங் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் கோவை, திருப்பூர் சுற்றுப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.இதனால் நொய்யல் ஆற்றில் மழை நீர் பெருமளவு பெருக்கெடுத்ததில் பாலம் கட்டுமான பணியை மேற்கொள்ள முடியவில்லை.தற்காலிகமாக கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து குறைய துவங்கியுள்ளதால் கட்டுமானப்பணி முழு வீச்சில் துவங்கி உள்ளது.

    • கனமழை காரணமாக திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
    • திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொது மக்கள் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    திருப்பூர்:

    தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை.

    இந்தநிலையில் நேற்றிரவு 10 மணியளவில் திருப்பூர் மாநகர் பகுதியில் லேசான தூரலுடன் மழை பெய்தது. நேரம் செல்ல செல்ல பலத்த மழை பெய்தது. பயங்கர இடி, மின்னலுடன் இன்று காலை வரை விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. அதிகபட்சமாக திருப்பூர் கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில் 167 மி.மீ., மழை பெய்துள்ளது. திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதியில் 60 மி.மீ., திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக பகுதியில் 52 மி.மீ., கலெக்டர் அலுவலகம் பகுதியில் 37 மி.மீ., அவிநாசியில் 141 மி.மீ., ஊத்துக்குளியில் 65 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இந்த கனமழை காரணமாக திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நெருப்பெரிச்சல் பகுதியில் அதிக அளவில் மழைநீர் தேங்கியது. இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின் பேரில் அதிகாலையிலேயே அங்கு சென்ற வருவாய் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தேங்கியிருந்த மழை நீரை துரிதமாக அப்புறப்படுத்தினர்.

    இதேபோல் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு காந்திநகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பொதுமக்கள் வாளிகள் மூலம் இறைத்து வெளியேற்றினர்.

    திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த பொது மக்கள் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் அங்கு குடியிருப்பு பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியாமல் உள்ளேயே முடங்கி உள்ளனர். திருப்பூர் காந்திநகர் பகுதியில் வீட்டில் சிக்கிய மூதாட்டி ஒருவரை வடக்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு கொண்டு வந்தனர்.

    15வேலம்பாளையம் பகுதியில் பெரியமரம் ஒன்று முறிந்து நடுரோட்டில் விழுந்தது. அதனை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் மாநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் சாலைகள் பெயர்ந்துள்ளது. மேலும் சகதிக்காடாக மாறியுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். திருப்பூர் காட்டன் மார்க்கெட், தென்னம்பாளையம் மார்க்கெட்டில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் இன்று காலை முதலே மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்பணிகளை மேயர் தினேஷ்குமார் , மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் பணிகளை துரிதமாக முடிக்க உத்தரவிட்டனர்.

    மேலும் அங்கு சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கொசுக்களை ஒழிக்க புகை மருந்து அடிக்கும் பணி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் டி.எம்.எப். மேம்பாலத்தின் கீழ் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மாநகரின் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. பல்லடம் பகுதியில் 15 மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் 537 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. மாநகர் பகுதியில் மட்டும் அதிகபட்சமாக 17 செ.மீ., மழை பெய்துள்ளது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் தற்போது பெய்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. இன்று காலை மாநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் ஊத்துக்குளி சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு வெள்ளியம்பாளையத்திற்கு செல்பவர்கள் கடும் சிரமப்பட்டனர். சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மழைநீரில் ஊர்ந்து சென்றன. மேலும் அப்பகுதியில் குடியிருக்கும் குடிசை பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் விடிய விடிய தூங்காமல் மழைநீரை வெளியேற்றி கொண்டிருந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, நீரோடையை சரி செய்தனர். மேலும் சிவசக்தி நகரில் உள்ள குட்டைகளில் தண்ணீர் நிரம்பி, குளம் போல் காட்சி அளித்தது.

    இதேபோல் ஊத்துக்குளி சாலையில் இருந்து விஜயமங்கலம், பெருந்துறை வரை ஆங்காங்கே உள்ள குட்டைகளில் மழைநீர் நிரம்பி வழிந்தது. மேலும் செங்கப்பள்ளி மற்றும் பெருமாநல்லூர், தொரவலூர் உள்பட அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை கொட்டியது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளும் நிரம்பின. செங்கப்பள்ளி, பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலைகளில் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வாகனங்களை ஓட்டி செல்வதில் மிகவும் திணறினர். விடிய விடிய மழை கொட்டித்தீர்த்ததால் ஊத்துக்குளி, செங்கப்பள்ளி, பெருமாநல்லூர், பெருந்துறை ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கேரளாவுக்கு செல்லும் ெரயில்கள் அனைத்தும் கோவை வழியாகவே இயக்கப்படுகின்றன.
    • கோவையை புறக்கணிக்கும் ெரயில்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது

    திருப்பூர் : 

    தமிழக-கேரள எல்லையில் கோவை நகரம் அமைந்திருப்பதால் கேரளாவுக்கு செல்லும் ெரயில்கள் அனைத்தும் கோவை வழியாகவே இயக்கப்படுகின்றன.வடகோவை-இருகூர் இடையே இருவழிப்பாதை இல்லையென்பதை காரணம் காட்டி கேரளா செல்லும் 13 ெரயில்கள், போத்தனூர் வழியே கேரளாவுக்கு இயக்கப்பட்டு வந்தன. அதாவது 26 ெரயில் சேவைகளில் கோவை புறக்கணிக்கப்பட்டது.

    இதன் காரணமாக, 1996-1997 ெரயில்வே பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, 60 கோடி ரூபாய் மதிப்பில் இந்த வழித்தடத்தில் கூடுதல் ெரயில் பாதை அமைக்கப்பட்டது.சேலம் கோட்டம் தொடங்கிய பின் வேகமெடுத்து 2012ல் முடிவடைந்தது. அதன்பின்னும், கேரளா செல்லும் ெரயில்கள், கோவை சந்திப்புக்கு திருப்பப்படவில்லை.

    இந்த 13 ெரயில்களை திருப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, ெரயில்வே போராட்டக்குழு தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது.அதன் விளைவாக, 13 ெரயில்களில் முக்கியமான 4 ெரயில்கள் மட்டும் திருப்பப்பட்டன. மற்ற ெரயில்களும் படிப்படியாக திருப்பப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அதன் பின் அந்த ெரயில்கள் திருப்பப்படவே இல்லை.

    இந்நிலையில் கோவையை புறக்கணிக்கும் ெரயில்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இப்போது 15 ெரயில்கள், கோவை சந்திப்புக்கு வராமல் போத்தனூர் வழியே கேரளாவுக்கு செல்கின்றன.அதாவது7 ெரயில்கள் எதிரெதிர் திசையிலான இரு வழியான சேவைகளிலும், ஒரு ெரயில் ஒரு வழிச் சேவையிலுமாக 15 ெரயில்கள் கோவையை புறக்கணித்து செல்கின்றன.

    இந்த புறக்கணிப்பு பட்டியலில், பீஹார் மாநிலம் பரவ்னிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ெரயிலும், சபரிமலை பக்தர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ெரயிலும் , கோவைக்குள் வராமல் போத்தனூர் வழியே செல்கின்றன.

    சென்னை சென்ட்ரலில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு டிசம்பர் 31 வரை 7 சேவைகளும், கோட்டயத்திலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ( 2024 ஜனவரி 1 வரை) 7 சேவைகளுடன் இயக்கப்படும் சபரிமலை சிறப்பு ெரயிலும், கோவைக்கு வராமல் போத்தனூர் வழியே செல்கிறது. இந்த ெரயில், கோவை சந்திப்புக்கு வந்தால் பல ஆயிரம் அய்யப்ப பக்தர்கள் பலனடைவர்.

    கேரளாவிலிருந்து வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் ெரயில்கள் போத்தனூர் வழியே செல்வதால் பாதிப்பில்லை.அரிதாக பயணிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் போத்தனூரில் ஏறி இறங்கிக்கொள்வர்.

    ஆனால் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்குச் செல்லும் ெரயில்கள் போத்தனூர் வழியே செல்வதால் கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 3 மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.ஏனெனில் இந்த நகரங்களுக்குதான் கோவையில் இருந்து தினமும் பல ஆயிரம் மக்கள் அடிக்கடி பயணம் செய்கின்றனர்.எனவே கேரளாவிலிருந்து சென்னை, பெங்களூரு செல்லும் ெரயில்களை மட்டுமாவது கோவை சந்திப்பு வழியாக இயக்க வேண்டும் என திருப்பூர், கோவை தொழில் அமைப்பினர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    ×