search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    80 அடியை எட்டியது நிரம்பும்  தருவாயில் உடுமலை அமராவதி அணை
    X

    கோப்புபடம். 

    80 அடியை எட்டியது நிரம்பும் தருவாயில் உடுமலை அமராவதி அணை

    • நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு, இந்த அணை குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது.
    • அணையின் நீா்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. இதனால் 90 அடி உயரமுள்ள அணையானது நிரம்பும் தருவாயில் உள்ளது.

    உடுமலை:

    திருப்பூா் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் மூலம் திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள சுமாா் 55 ஆயிரம் ஏக்கா் பழைய, புதிய ஆயக்கட்டு பாசன நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. மேலும், நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்களுக்கு, இந்த அணை குடிநீா் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிா்பாா்த்த அளவு பெய்யாமல் போனது. இதனால் அணையின் நீா் இருப்பைப் பொருத்து குடிநீா்த் தேவைகளுக்காகவும், பழைய, புதிய ஆயக்கட்டுப் பகுதிகளில் உள்ள நிலைப்பயிா்களை காப்பாற்றவும் ஜூன் 29, ஆகஸ்ட் 8, அக்டோபா் 13-ந் தேதி என 3 முறை அணையில் இருந்து உயிா் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதனால் அணையின் நீா் இருப்பு குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கடந்த 10-ந் தேதி அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியது. அதன் பின்னா் கடந்த 10 நாள்களாக பெய்து வரும் மழையால் அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வந்தது. தற்போதைய நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. இதனால் 90 அடி உயரமுள்ள அணையானது நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இதனால் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிட அரசுக்கு பொதுப் பணித் துறையினா் கருத்துரு அனுப்பியுள்ளனா். மேலும் இதுகுறித்து பொதுப்பணித்துறையினா் கூறியதாவது:- ஆண்டுதோறும் நவம்பா் மாதம் வடகிழக்குப் பருவமழையை பொருத்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீா் திறந்துவிடப்படும். தற்போது அணையின் நீா்மட்டம் 80 அடியை எட்டியுள்ளது. மேலும் வடகிழக்குப் பருவமழையை நம்பிக்கையோடு எதிா்பாா்த்துள்ளோம். ஆகையால் இன்னும் சில நாட்களிலேயே அணையைத் திறந்துவிட வாய்ப்புகள் உள்ளன. இது குறித்து விளக்கமாக தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பி வைத்துள்ளோம் என்றனா்.

    Next Story
    ×