என் மலர்
திருப்பூர்
- சுடர் கொடிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
- உடல் உறுப்புகள் தேவைப்படுபவர்களுக்கு ஆபரேசன் மூலம் பொருத்தப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உகாயனூர் பகுதியை சேர்ந்தவர் தனபாண்டியன். இவரது மனைவி சுடர்கொடி (வயது 35) . இவர்களுக்கு சின்னத்தங்கம், அட்சயநிதி என்ற 2 மகள்கள் உள்ளனர். இதில் சின்ன த்தங்கம் பிளஸ்-2 முடித்து முதலாம் ஆண்டு கல்லூரி செல்ல உள்ளார். அட்சய திதி 11-ம் வகுப்பு முடித்து 12ம் வகுப்பு செல்ல உள்ளார். தனபாண்டியன், சுடர்கொடி தம்பதியினர் திருப்பூர் வீரபாண்டி அருகே உள்ள ஜே.ஜே.நகர் பகுதியில் தள்ளுவண்டி கடையில் உணவு வியாபாரம் செய்து வந்தனர்.
கடந்த 21-ந் தேதி இரவு சுடர்கொடி வியாபாரத்தை முடித்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் தனது மகள்களுடன் வீட்டிற்கு சென்றுள்ளார். வீரபாண்டி அருகே வந்தபோது, கண்ணில் பூச்சி அடித்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய சுடர்கொடி தனது மகள்களுடன் வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் சுடர் கொடிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மகள்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் சுடர் கொடியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சுடர் கொடியின் உறவினர்கள் அவரை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று அங்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இருப்பினும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதையடுத்து சுடர் கொடியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மீண்டும் உறவினர்கள் அழைத்து வந்தனர். இதையடுத்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுடர்க்கொடி மூளை சாவு அடைந்ததாக தெரிவித்தனர். மேலும், உடல் உறுப்பு தானம் செய்வதால் சுடர்கொடி இறந்தாலும் மற்றவர்கள் உடலில் அவர் வாழலாம் என மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். இதைத்தொடர்ந்து கணவர் மற்றும் மகள்கள் உடல் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் குழு 5 மணி நேர அறுவை சிகிச்சை மேற்கொண்டு சுடர்கொடி உடலில் இருந்து கல்லீரல், சிறுநீரகம், கண் ஆகிய உறுப்புகளை பாது காப்பாக அகற்றினர். பின்னர் ஐஸ் பாக்சில் வைத்து, மருத்துவர்களின் உதவியோடு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்து வமனைகளுக்கு உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடல் உறுப்புகள் தேவைப்படுபவர்களுக்கு ஆபரேசன் மூலம் பொருத்தப்பட்டது.
திருப்பூர் அரசு மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக உடல் உறுப்பு தானம் செய்வதற்கான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்த சுடர்கொடியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
- விபத்துக்குள்ளான கார்களில் பயணம் செய்து வந்த நபர்கள் சம்பவ இடத்தில் இல்லை.
- தப்பியோடியவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா பெருமாநல்லூர் அருகே வலசப்பாளையம் பகுதியில் இன்று அதிகாலை கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு காரின் டயர் வெடித்து டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது அந்த காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ் காரின் மீது மோதியது. மேலும், பஸ்சுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு டெல்லி பதிவு எண் கொண்ட சொகுசு காரும் பஸ் மீது மோதியது.
அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இந்தநிலையில் விபத்துக்குள்ளான கார்களில் பயணம் செய்து வந்த நபர்கள் சம்பவ இடத்தில் இல்லை. அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விபத்துக்குள்ளான காரில் சோதனை செய்த போது, அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு டன் அளவிற்கு குட்கா பொருட்கள் இருந்தன.
காருடன் குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் குட்கா பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன, யாருக்கு கொண்டு செல்லப்பட்டது, திருப்பூரில் விற்பனை செய்ய கொண்டு வந்தனரா என்ற விவரம் தெரியவரும். இதனால் தப்பியோடியவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த 4 நாட்களாக சாரல் மழையும், கனமழையும் பெய்து வருகிறது.
- கால்நடை வளர்ப்பிற்கும் இந்த மழை நீர் அமைந்துள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகரில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை பெய்து வருவது தொடர்கிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே திருப்பூரில் சதமடித்த வெயிலால் மக்கள் திக்குமுக்காடி போனார்கள். கொளுத்தும் வெயிலை சமாளிக்க முடியாமல் பகல் வேளையில் வீதியில் நடமாடுவதை தவிர்த்தனர். ஆனால் வெயில் உக்கிரகாலமான அக்னி நட்சத்திர காலத்தில் மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
நேற்று மாலை திருப்பூர் மாநகரில் தூறலுடன் மழை பெய்தது. சாலையோர வியாபாரிகளே இந்த மழையால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தள்ளுவண்டி உணவகங்கள், சாலையோர காய்கறி கடை அமைத்துள்ளவர்கள் தூறலுடன் மழை தொடர்ந்து பெய்ததால் கவலை அடைந்தனர். இரவு வரை தூறல் மழை தொடர்ந்தது.
திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே நல்லம்மன் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையின் மையப்பகுதியில் நல்லம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் மங்கலம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் அமாவாசை மற்றும் செவ்வாய், வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ தினங்களில் திரளான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டுச்செல்வது வழக்கம்.
தற்போது பெய்து வரும் மழையால் நொய்யலின் குறுக்கே உள்ள நல்லம்மன் தடுப்பணையில் நொய்யல் வெள்ளம் ஆர்ப்பரித்துச் செல்கிறது. இந்த நிலையில் நல்லம்மன் தடுப்பணையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் நல்லம்மன் கோவிலுக்கு செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.
தரைப்பாலம் மூழ்கியதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நல்லம்மன் கோவிலுக்கு செல்ல முடியாததால் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள கரையின் முன்பகுதியில் உள்ள சிமெண்டு தரையில் தேங்காய், பழம், மாலை, தீபம் வைத்து நல்லம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.

சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4 நாட்களாக சாரல் மழையும், கனமழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் மழை நீர் பெருக்கெடுத்ததுடன் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இ்ந்த மழையால் சேவூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது. கோடை வெயிலில் தவித்து வந்த மக்கள் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வெப்பம் தணிந்து மழையின் குளிர்ச்சியை அனுபவித்தனர். இரவில் இதமான குளிர்ந்த காற்று வீசியது.
இந்த நிலையில் தத்தனூர் ஊராட்சியில், பொதுப்பணித்துறையின் குளம் 50 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. தொடர்ந்து பெய்த கனமழையால் நேற்றுமுன்தினம் இரவு முதல் குளம் நிரம்பி வழிந்து செல்கிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். பலர் அங்கு வந்து நீர் நிலைகளை பார்த்து ரசித்து செல்கிறார்கள். இதேபோல் மங்கரசுவலையபாளையம் ஊராட்சி பேரநாயக்கன்புதூரில் கனமழைக்கு அப்பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்பணை குட்டை நிரம்பியது.
இதனிடையே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கன மழையால் திருப்பூர் நொய்யல் ஆற்றின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 7 அடி உயரம் வரை நீர் மட்டம் உயர்ந்து வெள்ளப்பெருக்காக ஓடுகிறது.
தொடர் மழையினால் ஊத்துக்குளி, கத்தாங்கன்னி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும், கிணறு, குளம் மற்றும் குட்டைகளில் நீரூற்றும் உயர்ந்துள்ளது. ஊத்துக்குளி அருகே உள்ள கத்தாங்கன்னி குளமும் நிறைந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் எதிர்பார்த்த அளவு விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்பிற்கும் இந்த மழை நீர் அமைந்துள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
- அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரளா மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது.
- ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது.
பல்லடம்:
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந்தேதி உடுமலை சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து திருப்பூரை சேர்ந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி., நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல லட்சம் மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது.
அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரளா மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது. இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும். இந்த நிலையில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.இது வன்மையாக கண்டி க்கத்தக்கது. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொது மக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தடுப்பணையின் அருகிலேயே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அந்த ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பணையை தாண்டி ஒரு சொட்டுநீர் கூட அமராவதி அணைக்கு வராது. கேரளாவின் இந்த சட்டவிரோத, தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கின்ற தடுப்பணை திட்டம் செயல்படுத்துவதை கண்டித்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் எல்லை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த முற்றுகை போராட்டத்தில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உழவர் போராளிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.
- மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் ஏற்பட்ட தீப்பொறி தேங்காய் பருப்பு மூட்டையின் மீது விழுந்து தீப்பற்றிக் கொண்டது.
- லாரியை நிறுத்திய டிரைவர் உடனடியாக காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
முத்தூர்:
காங்கயம் அருகே தேங்காய் பருப்பு ஏற்றிச் சென்ற லாரியில் தீப்பிடித்ததில் ரூ.14 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்பு மற்றும் லாரி எரிந்து சேதமானது.
காங்கயம் அடுத்துள்ள சிவியார்பாளையத்தை சேர்ந்தவர் சதாசிவம். தேங்காய் களம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு உலர்த்தப்பட்ட சுமார் 15 டன் அளவுள்ள தேங்காய் பருப்புகளை மூட்டையில் கட்டி, அதனை எடைபோடுவதற்காக நால்ரோடு பகுதியில் உள்ள எடை மேடை நிலையத்திற்கு லாரியில் கொண்டு சென்றனர். லாரியை ராசிபுரத்தை சேர்ந்த தர்மலிங்கம்(47) ஓட்டிச் சென்றார். காங்கயம் அருகே பரஞ்சேர்வழி சிவியார்பாளையம் சாலையில் தனியார் கிரஷர் அருகில் சென்றபோது தாழ்வாக சென்ற மின்கம்பியில் தேங்காய் பருப்பு லோடு உரசியதாக கூறப்படுகிறது. இதில் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசியதில் ஏற்பட்ட தீப்பொறி தேங்காய் பருப்பு மூட்டையின் மீது விழுந்து தீப்பற்றிக் கொண்டது. தேங்காய் பருப்பு மூட்டையிலிருந்து புகை வந்ததைக் கண்டவர்கள் உடனடியாக டிரைவரிடம் தெரிவித்தனர்.
லாரியை நிறுத்திய டிரைவர் உடனடியாக காங்கயம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் தீ குபு குபுவென பரவி லாரி முழுவதும் பற்றி எரிந்து, பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுக்கப்பட்டு அங்கிருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தேங்காய் பருப்பு மூட்டைகள் மற்றும் லாரி முழுவதும் எரிந்து சேதமானது. எரிந்து சேதமான தேங்காய் பருப்பின் மதிப்பு ரூ. 14 லட்சம் மற்றும் லாரியின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விவசாய விலை நிலங்களில் தண்ணீர் புகுந்தது.
- தீயணைப்புத் துறையினர் நவீன உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர்.
திருப்பூர்:
தமிழகம் முழுவதும் தற்போது பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக பெய்து வருகிறது. பருவமழை காரணமாக வருகின்ற 23ஆம் தேதி வரை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று கன முதல் அதிக கன மழை வரை பெய்யும். 22 மற்றும் 23ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே நேற்று முன்தினம் 364.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கிராமங்களில் குட்டைகளில் நீர் நிரம்பி பெருக்கெடுத்து ஓடியதால் கிராமங்கள் மழை நீரில் சூழ்ந்தது. விவசாய விலை நிலங்களில் தண்ணீர் புகுந்தது. தரைப்பாலம் மூழ்கியதில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மின்னல் தாக்கியதில் மூன்று பசு மாடுகள் உயிரிழந்தது.
இந்நிலையில் வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை முன்னதாக அந்தமானில் நேற்று முன் தினம் தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பருவ மழையின் தொடர்ச்சியாக கனமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழக அரசு சுகாதாரத்துறை , வருவாய்த்துறை, பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்டவற்றை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தீயணைப்புத் துறையினர் நவீன உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். கோவை மண்டல தீயணைப்பு துறை இணை ஆணையர் சரவணகுமார் உத்தரவின் பேரில், தீயணைப்புத்துறை திருப்பூர் மாவட்ட அலுவலர் அண்ணாதுரை தலைமையில், தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் மற்றும் இளஞ்செழியன் உள்ளிட்டோருடன் மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கு தேவைப்பட்டாலும் செல்வதற்கான தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். பேரிடர் மீட்புக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் திருப்பூர் தீயணைப்புத்துறை அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்களை மீட்பது, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்தால் அவர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவது, மரங்கள் முறிந்து விழுந்தால் அவற்றை அப்புறப்படுத்துவது, ஆழமான பகுதிக்குள் சிக்கிக் கொண்டவர்களை பத்திரமாக மீட்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான உபகரணங்களுடன் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக பயிற்சியுடன் கூடிய 100 கமோண்டோ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
- கடந்த வாரம் முதல் அவ்வப்போது மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது.
- பலத்த மழையின் காரணமாக அந்த பகுதியில் மின்னல் தாக்கியது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தார்கள். தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இதனால் மதிய நேரங்களில் வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் முதல் அவ்வப்போது மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கோடை வெப்பம் தணிந்து, குளிர்ச்சி நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே நேற்று காலை முதல் இரவு வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது. இந்த மழையின் காரணமாக பல இடங்களில் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவின் விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு பகுதியில் 52 மி. மீட்டர், குமார் நகரில் 60 மி.மீ, திருப்பூர் தெற்கு பகுதியில் 9 மி.மீ, பல்லடம் ரோட்டில் 27 மி.மீ, அவிநாசியில் 11 மி.மீ, ஊத்துக்குளியில் 13.90 மி.மீ, பல்லடத்தில் 4 மி.மீ, தாராபுரத்தில் 9 மி.மீ, மூலனூரில் 38 மி. மீ, குண்டடத்தில் 7 மி.மீ, உப்பாறு அணையில் 13 மி.மீ, நல்லதங்காள் ஓடையில் 25 மி.மீ, காங்கயத்தில் 23 மி. மீ, வெள்ள கோவிலில் 18 மி.மீ, வட்டமலை கடைஓடையில் 33.60 மி.மீ, அமராவதி அணை பகுதியில் 3 மி.மீ, திருமூர்த்தி அணை பகுதியில் 8 மி. மீ, மடத்துக்குளத்தில் 3 மி. மீ என மொத்தம் 364.50 மில்லி மீட்டர் மழை மாவட்டம் முழுவதும் பதிவானது. இதன் சராசரி 18.23 சதவீதம் ஆகும்.

இதற்கிடையே அவிநாசி அருகே உள்ள பொன்னேகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 75) என்ற விவசாயி தனது தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் மழையின் காரணமாக கொட்டகையில் மாடுகளை கட்டி வைத்திருந்தார். பலத்த மழையின் காரணமாக அந்த பகுதியில் மின்னல் தாக்கியது. அப்போது 2 சினை மாடு உட்பட 3 பசுக்கள் மீது மின்னல் தாக்கியதில் அவைகள் உயிரிழந்தன.
உயிரிழந்த பசுக்களின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இதே போல் திருப்பூர் மும்மூர்த்தி நகர், பிரிட்ஜ்வே காலனி, பிச்சம்பாளையம் ஆகிய பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் இரவு முழுவதும் அருகில் உள்ள பள்ளிகள், மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- யானை சாலையின் நடுவே நின்று கொண்டது.
- வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
உடுமலை:
கேரள மாநிலம் மூணாறுக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
வனப்பகுதியான உடுமலை-மூணாறு சாலையில் அவ்வப்போது யானைகள் உலா வருவது வழக்கம். எனவே வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் உடுமலை-மூணாறு சாலையில் பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில் ஒற்றை யானை ஒய்யாரமாக உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

மேலும் அந்த யானை சாலையின் நடுவே நின்று கொண்டது. நீண்ட நேரமாக நின்றதால் உடுமலை-மூணாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் பலர் தங்களது செல்போன்களில் யானையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். அதன்பிறகு அந்த வழியாக போக்குவரத்து சீரானது.
- சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
- வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமணலிங்கேசுவரர் கோவில் உள்ளது. கோவிலின் அடிவாரத்தில் இருந்து 950 மீட்டர் உயரத்தில் உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
அருவியில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறவும், பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை தரிசனம் செய்யவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.
இந்தநிலையில் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் நீர் வரத்து இல்லாமல் வறண்டு வந்த பஞ்சலிங்க அருவிக்கு கடந்த 4 நாட்களாக நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. இதற்கு குருமலை, குலிப்பட்டி, மேல் குருமலை உள்ளிட்ட அருவியின் நீராதாரங்களில் தொடர்ந்து மழைப்பொழிவு ஏற்பட்டு வருவதே காரணமாகும்.
வனப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அருவிக்கு குடும்பத்தோடு வருகை தந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது.
- கல்லூரி வளாகம் முழுவதுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறது.
- அரசியல் கட்சி முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூரில் பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்லடம் சாலை எல் ஆர் ஜி அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு , கோபி , அந்தியூர் , பவானி , பெருந்துறை ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளுக்கும் தனித்தனியாக ஸ்ட்ராங் ரூம் அமைத்து போலீசார் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகம் முழுவதுமே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் இருந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு பவானி சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் மின்சாரம் தடை ஏற்பட்டது. சுமார் 20 முதல் 25 நிமிடங்களுக்குள்ளாக மின்தடை நீடித்ததால் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை.
இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சி முகவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் எல் ஆர் ஜி கல்லூரிக்கு சென்றனர். மின்வாரிய சிறப்பு குழுவினர் பழுதை சீரமைத்தனர். ஆட்டோமேட்டிக் ஜெனரேட்டர் மூலம் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆன் செய்யப்பட்டது.
மழையின் காரணமாக மின்தடை ஏற்பட்டதாகவும் , 20 நிமிடங்களுக்குள்ளாக உடனடியாக சரி செய்யப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இதனால் எல்.ஆர்.ஜி கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் 96.38 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
- 5001 மாணவர்களும், 6426 மாணவிகளும் என மொத்தம் 11,427 பேர் தேர்ச்சி பெற்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை ஆண்கள் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 1,952 பேரும், பெண்கள் பள்ளியை சேர்ந்த 4,431 மாணவிகளும், இருபாலர் பள்ளிகளை சேர்ந்த 19, 781 பேரும் என மொத்தம் 26,164 பேர் எழுதினர்.
இந்தநிலையில் இன்று வெளியாக பிளஸ்-1 தேர்வு முடிவில் 24,917 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 1702 பேரும், மாணவிகள் 4237 பேரும், இருபாலர் பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 18,978 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் திருப்பூர் மாவட்டம் 95.23 சதவீதம் பெற்று மாநில அளவில் 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டம் 96.38 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளிகள் அளவில் 92.06 சதவீதம் பெற்று திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்துள்ளது. 78 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 5 ஆயிரத்து 666 பேரும், மாணவிகள் 6746 பேரும் என மொத்தம் 12,412 பேர் தேர்வு எழுதினர். இதில் 5001 மாணவர்களும், 6426 மாணவிகளும் என மொத்தம் 11,427 பேர் தேர்ச்சி பெற்றனர்.
கொரோனாவுக்கு முன் 2018, 2019 ஆகிய 2 ஆண்டுகளும் மாநிலத்தில் திருப்பூர் இரண்டாம் இடம் பெற்றது. கடந்த 2020ம் ஆண்டு 3 இடங்கள் பின்தங்கி, 5-ம் இடத்தை எட்டியது. 2021-ம் ஆண்டு அனைவரும் தேர்ச்சி பெற்றனர். கடந்த 2022ம் ஆண்டு பிளஸ் 1 தேர்வில் மாநிலத்தில் 11வது இடம் பெற்ற திருப்பூர் கடந்த 2023ம் ஆண்டு 96.83 சதவீத தேர்ச்சியுடன், 10 இடங்கள் முன்னேறி மாநிலத்தில் முதலிடம் பெற்று பாராட்டு பெற்றது. நடப்பாண்டு(2024) பிளஸ்- 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதித்த திருப்பூர், பிளஸ் 1 தேர்வில் 3-வது இடத்தை பிடித்துள்ளது.
- பிரகாசை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் நல்லூர் பிள்ளையார் கோவில் 2-வது வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 36). பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் ஒரு வங்கியின் கிரெடிட் கார்டு பெற்றிருந்தார்.
இந்நிலையில் பிரகாசை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் வங்கியில் இருந்து பேசுவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பிரகாஷ் அந்த பெண் கேட்ட கேள்விகளுக்கு செல்போன் மூலம் பதில் அளித்துள்ளார். அப்போது கிரெடிட் கார்டு சேவையை நிறுத்த வேண்டும் என்று பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண், செல்போனுக்கு ஒருமுறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல்(ஓ.டி.பி.) வரும் என்றும், அதனை தெரிவிக்குமாறும் கூறியுள்ளார். இதனை நம்பிய பிரகாஷ் கடவுச்சொல்லை பெண்ணிடம் தெரிவிக்கவே, சிறிது நேரத்தில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வாங்கியதாக பிரகாஷின் செல்போனுக்கு குறுந்தகவல் கிடைத்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே வங்கிக்கு சென்று முறையிட்டார். அப்போது வங்கியில் இருந்து யாரும் பேசவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதன் மூலம் தான் ஏமாற்றப்பட்டதை பிரகாஷ் உணர்ந்தார்.
உடனே இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இருப்பினும் ரூ.1லட்சம் பறிபோனதால் விரக்தி அடைந்த பிரகாஷ், விஷம் குடித்து விட்டார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பிரகாசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






