என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • நகராட்சி பூங்காவிற்கு எதிராக வணிக வளாகத்தில் உள்ள மூன்று கடைகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது
    • கடையில் துணிகரமாக கொள்ளையடிப்பது போலீசாருக்கு சவால் விடும் செயலாக உள்ளது.

    உடுமலை:

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ராமசாமி நகரை சேர்ந்தவர் செல்வநாராயணன் ( வயது 39).இவர் கபூர்கான் வீதியில் உழவர் சந்தைக்கு அருகே மளிகை கடை வைத்து உள்ளார். செல்வநாராயணன் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    காலை கடையை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது மளிகைப் பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் கல்லாவில் இருந்த பணம் ரூ. 30 ஆயிரம் திருட்டு போனதும் தெரியவந்தது.

    இது குறித்து செல்வநாராயணன் உடுமலை போலீசில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

    இதே போன்று நகராட்சி பூங்காவிற்கு எதிராக வணிக வளாகத்தில் உள்ள மூன்று கடைகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த அதன் உரிமையாளர்கள் உள்ளே சென்று பார்த்தனர். எந்த பொருளும் திருடு போகவில்லை. அதன் பின்னரே அவர்கள் நிம்மதி அடைந்தனர்.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,

    உடுமலை பகுதியில் இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும்.குறிப்பாக வணிக வளாகங்கள், விலைமதிப்பு மிக்க பொருட்கள் உள்ள கடைகள் அமைந்துள்ள பகுதியில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

    நேற்று நடைபெற்ற திருட்டு பிரதான சாலையில் அமைந்துள்ள கடையில் துணிகரமாக நடத்தப்பட்டு உள்ளது.இது போலீசாருக்கு சவால் விடும் செயலாகும்.அதில் ஈடுபட்ட நபர்களை விரைந்து பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். உடுமலை பகுதியில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவமானது கடை உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பள பாக்கி தொகையை கேட்பதற்காக கடந்த 7.9.2023 அன்று கம்பெனிக்கு சென்று கேட்டடனர்.
    • காவல் நிலையத்திற்கு வரவழைத்து புகாரை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சி.ஐ.டி.யூ., பனியன் பொது தொழிலாளர் சங்கம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மனு கொடுக்கப்பட்டது.அதில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் அங்கேரிபாளையம் ரோடு ஸ்ரீநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பனியன் கம்பெனியில் திலீப்குமார் என்ற பீகார் மாநில தொழிலாளி வேலை செய்து வந்தார். சம்பள பாக்கி தொகையை கேட்பதற்காக கடந்த 7.9.2023 அன்று கம்பெனிக்கு சென்று கேட்ட போது, சம்பளம் தரமறுத்ததுடன், முதலாளி, நிர்வாக ஊழியர் ஆகியோர் சேர்ந்து, திலீப்குமாரை தாக்கியதுடன், கத்தியால் குத்தி கொன்றுவிடுவோம் என்று மிரட்டி விரட்டியடித்துள்ளனர்.

    இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்ததுடன், காயமடைந்த திலீப்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். 8.9.2023 அன்று கம்பெனி முதலாளி மற்றும் போலீசார் சிலர் அரசு மருத்துவமனைக்கு சென்று, திலீப்குமாரை மருத்துவமனையிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து வந்துளளனர்.

    மேலும் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து புகாரை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என நிர்பந்தம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட தொழிலாளி தனது புகாரை வாபஸ் பெறவில்லை.

    ஏற்கனவே வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக எழுந்த வதந்தியினால் ஏற்பட்ட பதட்டம் முற்றிலும் தணியாத நிலையில், இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், திருப்பூர் நகரின் அமைதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே பீகார் மாநில தொழிலாளியான திலீப்குமாரை தாக்கிய கம்பெனி முதலாளி மற்றும் ஊழியர் ஆகியோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். 

    • ரெயில்வே பாதை அடைக்கப்பட்டதால் வழித்தடம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம்.
    • இந்த நகருக்குள் 60க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மேற்கு வஞ்சிப்பாளையம் சென்னிமலை கவுண்டர் நகருக்கு செல்லும் ரெயில்வே பாதை அைடக்கப்பட்டுள்ளது. இந்த நகருக்குள் 60க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக போக்குவரத்து சாலையாக ரெயில்வே பாதையை பயன்படுத்தி வந்தோம். சாலையை விரிவுப்படுத்துவதற்காக தற்போது ரெயில்வே பாதை அடைக்கப்பட்டதால் வழித்தடம் இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளோம். எனவே வழித்தடம் அமைத்து தர வேண்டும் என கூறியுள்ளனர். 

    • கால்வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு மாதம் சிகிச்சை பெற்றேன்.
    • எனது தாயார் இறந்து விட்டார். தந்தைக்கு வயதாகி விட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் பலவஞ்சிப்பாளையம் வஞ்சிநகரை சேர்ந்த பிரியா என்பவர் இன்று ஆம்புலன்ஸ் மூலம் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு 19-ந்தேதி தனியார் பஸ் மூலம் விபத்து ஏற்பட்டு 3 மாதம் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். 7 வருடங்கள் ஆகியும் இன்னும் பாதிப்பில் இருந்து மீளவில்லை. தங்களின் உதவி மூலம் கிடைத்த வீரபாண்டி குடியிருப்பு வாரியத்தில் 2-ம் மாடியில் வசித்து வந்தேன்.

    ஏறி இறங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் மீண்டும் கால்வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கடந்த ஆகஸ்டு மாதம் சிகிச்சை பெற்றேன். எனது தாயார் இறந்து விட்டார். தந்தைக்கு வயதாகி விட்டது. இதனால் எனது சித்தி வீட்டில் வசித்து வருகிறேன். நகைகளை அடகு வைத்தும், கடன் வாங்கியும் செலவுகள் செய்து வருகிறோம்.

    எனவே நீதிமன்ற வழக்கை விரைந்து முடித்து இன்சூரன்ஸ் பணம் கிடைக்கவும் ,குடியிருப்பில் கீழ் பகுதியை ஒதுக்கி தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழனிசாமி பழகி வந்தார்.
    • சமீபத்தில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    திருப்பூர்:

    காஞ்சிபுரம் சூரிய நல்லூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 25). இவர் காங்கயத்தை சேர்ந்த 25 வயதான இளம்பெண்ணை திருமணம் செய்தார்.

    அவரது மனைவி 2-வதாக கர்ப்பம் தரித்த போது மனைவியை பார்ப்பதற்காக பழனிச்சாமி அடிக்கடி காங்கயம் வந்து சென்றார்.

    அப்போது மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பழனிசாமி பழகி வந்தார். மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் பழனிசாமி ஈடுபட்டார்.

    சமீபத்தில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. குடும்பத்தினர் விசாரித்த போது, பழனிசாமி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பழனிசாமி மீது காங்கயம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து பழனிசாமியை கைது செய்தனர்.

    • பருத்தி விலை நாள்தோறும் மாறுபடுவதால் நூல் விலையும் உயா்ந்து கொண்டே செல்கிறது.
    • ஒரு கேண்டி ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையில் விற்பனை செய்கின்றனா்.

    திருப்பூர்

    இந்தியாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் பருத்தி இருப்பு குறித்த விவரங்களை தெரிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சைமா (தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம்) வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து மத்திய ஜவுளித்துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு, சைமா தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    பருத்தி விலை நாள்தோறும் மாறுபடுவதால் நூல் விலையும் உயா்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பின்னலாடை உற்பத்தி, கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில்கள் கடும் சிரமத்தில் உள்ளன. தொழிலாளா்கள் வேலைவாய்ப்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

    நமது நாட்டில் நமக்கு தேவையான அளவு பருத்தி உற்பத்தி செய்தும் பற்றாக்குறை ஏற்பட பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள்தான் காரணமாக உள்ளன.பருத்தி விளைச்சல் உள்ள காலங்களில் ஒரு கேண்டி 365 கிலோ ரூ.50 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் வரையில் குறைந்த விலையில் வாங்கி பல லட்சம் பேல்களை இருப்பு வைத்து கொள்கின்றனா்.

    பின்னா் பருத்தி விளைச்சல் காலம் முடிவடைந்தவுடன் செயற்கை பற்றாக்குறையை உருவாக்கி ஒரு கேண்டி ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையில் விற்பனை செய்கின்றனா். இந்த காலகட்டத்தில் நூல் விலையும் உயா்ந்து கொண்டே செல்கிறது.

    ஆகவே, பன்னாட்டு நிறுவனங்கள் பருத்தி இருப்பு குறித்த விவரங்களை வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து ஜவுளி தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குடிநீர் திட்டப்பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் குமாா் நகரில் உள்ள வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • இப்பணிகளை செப்டம்பா் மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்

    திருப்பூர்,

    குடிநீர் திட்டப்பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருப்பூா் குமாா் நகரில் உள்ள வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு திருப்பூா் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் தலைமை வகித்தாா்.

    இதில் அவா் பேசியதாவது:-

    திருப்பூா் வடக்கு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பூா் ஒன்றியம் பட்டம்பாளையம், சொக்கனூா், மேற்குபதி, வள்ளிபுரம், தொரவலூா், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லூா், காளிபாளையம், கணக்கம்பாளையம், பொங்குபாளையம் ஆகிய 10 ஊராட்சிகளுக்கு அன்னூா்-மேட்டுப்பாளையம் குடிநீர் திட்டப்பணிகள் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டன.

    இப்பணிகளை செப்டம்பா் மாத இறுதிக்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

    கூட்டத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் சொா்ணாம்பாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வேலுசாமி, ஜோதிநாத், ஒன்றிய உதவிப்பொறியாளா்கள் கற்பகம், மகேஸ்வரி, ஒன்றியக்குழு உறுப்பினா் ஐஸ்வா்ய மகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • அவிநாசி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆபத்து கால முதலுதவி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பாதிக்கப்பட்டவா்களை பாதுகாப்பான முறையில் மீட்பது குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

    அவிநாசி,

    உலக முதலுதவி தினத்தையொட்டி அவிநாசி அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆபத்து கால முதலுதவி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்திய மருத்துவக்கழகத்தின்கீழ் இயங்கும் 108 அவசர ஊா்தி இயக்குநரகம், தனியாா் அவசர ஊா்திகள் சங்கம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், யூத் ரோட்டரி சங்க பொறுப்பாளா் ராஜ்குமாா், 108 அவசர ஊா்தி ஊழியா்கள் ராஜேஷ், மனோஜ், மோகன்ராஜ் ஆகியோா் முதலுதவி குறித்த செயல்முறை விளக்கமளித்தனா்.

    இதில், இயற்கை பேரிடரில் பாதிக்கப்படுபவா்களை எவ்வாறு மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது, எலும்பு முறிவு, மாரடைப்பு, மூச்சு திணறல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவா்களை பாதுகாப்பான முறையில் மீட்பது குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.

    • பூங்காவில் தயாரிக்கப்படும் மண்புழு உரம், இயற்கை உரம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்
    • கழிவுகளில் இருந்து மாற்று பொருட்கள் உற்பத்தி செய்யவும் அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

    அவிநாசி

    ஈரோடு மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் மணிகண்டன் அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட 18 வாா்டுகளில் உள்ள வீடுகளிலிருந்து நாள்தோறும் சேகரமாகும் குப்பைகள் மூலம் கைகாட்டிபுதூா் வளம் மீட்பு பூங்காவில் தயாரிக்கப்படும் மண்புழு உரம், இயற்கை உரம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

    இதைத்தொடா்ந்து செழிப்பு, பசுமை உரம் குறித்து விவசாயிகள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கழிவுகளில் இருந்து மாற்று பொருட்கள் உற்பத்தி செய்யவும் அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

    பேரூராட்சி செயல் அலுவலா் (பொறுப்பு) இந்துமதி, சுகாதார ஆய்வாளா் கருப்புசாமி, தலைமை எழுத்தா் பாலசுப்பிரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

    • 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 106 பள்ளிகளைச் சேர்ந்த 1500 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
    • வெற்றியாளர்களுக்கு கோப்பைகள்,பதக்கங்கள்,சான்றிதழ்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.

    உடுமலை,செப்.11-

    பள்ளி கல்வித்துறையின் சார்பில் உடுமலை அளவிலான குறுமைய தடகள போட்டிகள் உடுமலை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் தொடங்கியது. போட்டிகளை காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி நடத்தி வருகிறது.3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் 106 பள்ளிகளைச் சேர்ந்த 1500 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். 2 -ம் நாள் நிகழ்வாக நேற்றும் 14 வயது,17 வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் போட்டிகள் நடைபெற்றது.ஆயிரத்து 500 மீட்டர், 600,100,80 மீட்டர் ஓட்டப்பந்தயம், தடைதாண்டுதல் ஓட்டம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம்,உயரம் தாண்டுதல், தட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்றது.

    அப்போது சக வீரர்கள், பயிற்சியாளர்கள் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு ஊக்கம் அளித்து வெற்றி பெற உறுதுணையாக இருந்தனர். அதைத்தொடர்ந்து வெற்றியாளர்களுக்கு கோப்பைகள்,பதக்கங்கள்,சான்றிதழ்கள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.அப்போது அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள், பயிற்சி யாளர்கள், பெற்றோர்கள் உடன் இருந்தனர்.

    இன்றுடன் தடகள போட்டிகள் நிறைவு பெற உள்ளது.

    • நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு,தனியார் அலுவலகங்கள்,தொழில் நிறுவனங்கள், ஜவுளி,மளிகை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • ஒரு சிலரின் சுயநோக்கம் காரணமாக வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவது வேதனை அளிக்கிறது.

    உடுமலை

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு,தனியார் அலுவலகங்கள்,தொழில் நிறுவனங்கள், ஜவுளி,மளிகை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடைகளுக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு வருகின்ற கனரக லாரிகள் பிரதான மற்றும் இணைப்பு சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து நிர்வாகமும் போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை. போக்குவரத்து நெருக்கம் மிகுந்த பகல் வேளையில் கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது என்ற விதி இருந்தும் அதை பின்பற்றாமல் வாகனங்களை கொண்டு வந்து சாலையில் நிறுத்தி விடுகின்றனர்.இதனால் அவசர கால உதவியை பெறுவதில் கூட தடங்கல்கள் ஏற்படுகிறது.

    ஒரு சிலரின் சுயநோக்கம் காரணமாக வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவது வேதனை அளிக்கிறது. மேலும் சாலையை அடைத்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மாற்று வழியை தேடி செல்ல வேண்டிய சூழலும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது. இதனால் காலநேர விரையம் ,எரிபொருள் செலவும் கூடுதலாக ஏற்படுகிறது.

    எனவே போக்குவரத்து இடையூறு ஏற்படும் விதத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் கனரக வாகனங்கள் பகல் வேளையில் நகரப்பகுதியில் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

    • வருகிற டிசம்பர் மாதம் 13-ந் தேதி வரை தொடர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • நஞ்சை சம்பா சாகுபடி பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.

    காங்கயம் : 

    காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தாமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நத்தக்காடையூர், முள்ளிப்புரம், மருதுறை, பழையகோட்டை, குட்டப்பாளையம், பரஞ்சேர்வழி ஆகிய வருவாய் சுற்றுவட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளில் இந்த ஆண்டு நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்வதற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந் தேதி முதல் வருகிற டிசம்பர் மாதம் 13-ந் தேதி வரை தொடர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீரை பயன்படுத்தி இப்பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாதாரண மற்றும் ஒற்றை நாற்று என்னும் திருந்திய நெல் நஞ்சை சம்பா சாகுபடி பணிகள் தற்போது தொடங்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் நத்தக்காடையூர் நகர, சுற்றுவட்டார கீழ்பவானி பாசன விவசாயிகள் தற்போது நஞ்சை சம்பா நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்வதற்கு தேவையான வேளாண் இடுபொருட்கள் நத்தக்காடையூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன்படி 120 நாள் முதல் 130 நாள் வயதுடைய மத்திய கால ரகமான ஐ.ஆர்-20 ரக நெல், 105 நாள் வயதுடைய குறுகிய கால கோ.ஆர்-51 ரக நெல், தூயமல்லி ரக நெல் ஆகிய விதை நெல்கள் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் இந்த ரக விதை நெல்கள் அனைத்திற்கும் தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்ட மானியம் வழங்கப்பட உள்ளது. இத்துடன் நெல்லுக்கு விதை நேர்த்தி செய்ய தேவையான உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்டம் ஆகியவையும் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. தென்னைக்கு நுண்ணூட்டம், கரும்பு நுண்ணூட்டம், பயிறு வகை நுண்ணூட்டம் மற்றும் சிறுதானிய நுண்ணூட்ட உரங்கள் ஆகியவைகள் தற்போது தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    எனவே நத்தக்காடையூர் சுற்றுவட்டார கீழ்பவானி பாசன வேளாண் விவசாயிகள் நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு ஏற்ற விதை நெல், நுண்ணுயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் ஆகியவைகளை மானிய விலையில் பெற்று பயனடைவதற்கு நத்தக்காடையூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தை நேரில் அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×