என் மலர்tooltip icon

    திருப்பூர்

    • புறநகர் பகுதிகளில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) வழியாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திட புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மேற்படி இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும், உரிமையாளர் கட்டணம் ரூ.2 லட்சம் முற்றிலுமாக விலக்கும் அளிக்கப்படும். விற்பனை செய்ய வாங்கும்பொருட்களுக்கு 5 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியும், பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும். மேலும் மாதாந்திர பில்லிங் மென் பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும். இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள் அந்நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

    18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இத்தொழிலுக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரை திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.2.25 லட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.3.75 லட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக்கொள்ளலாம் .மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண்: 501(ம) 503, 5வது தளம், மாவட்ட கலெக்டர் வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641604 என்ற முகவரியையும், 94450 29552 ,0421-297112 என்ற செல்போன், தொலை பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • சிவஹரி (14). பாண்டியன் நகரில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • வீட்டுப்பாடம் எழுதாததால், பள்ளி செல்ல பயந்து, வீட்டுக்கு தெரியாமல் உறவினர் வீட்டுக்கு சென்றதாக போலீசார் கூறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் போயம்பாளையம், நந்தா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சிவஹரி (14). பாண்டியன் நகரில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வருகிறார். சிவஹரி நேற்று அதிகாலை கடைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்திலும் உறவினர் வீடுகளிலும் தேடிப் பார்த்தனர் ஆனால் எங்கும் சிறுவனை காணவில்லை. பின்னர் இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான சிறுவனை தேடி வந்தனர்.

    போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஈரோடு மாவட்டம், திண்டலிலுள்ள உறவினர் வீட்டுக்கு சிறுவன் சென்றது தெரியவந்தது. திண்டல் சென்று சிறுவனை அழைத்து வந்த போலீசார் உரிய அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்

    வீட்டுப்பாடம் எழுதாததால், பள்ளி செல்ல பயந்து, வீட்டுக்கு தெரியாமல் உறவினர் வீட்டுக்கு சென்றதாக போலீசார் கூறினர்.

    • நேற்று பெருந்தொழுவு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • மோகனப்பிரியா ஸ்கூட்டியில் மணியம்பாளையத்திலுள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள பெருந்தொழுவு கரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி மோகனப்பிரியா (வயது 28). இவர்களுக்கு ரித்விக் என்ற 4 வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி மோகனப்பிரியா தனது மகனுடன் ஸ்கூட்டியில் மணியம்பாளையத்திலுள்ள அவரது தாயார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் மோகனப்பிரியாவை கீழே தள்ளியுள்ளனர்.

    இதில் வண்டியில் இருந்து மோகனப்பிரியா மற்றும் ரித்விக் ஆகியோக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த மர்ம நபர்கள் மோகனப்பிரியாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மோகனப்பிரியா கொடுத்த புகாரின் பேரில் அவினாசி பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பெருந்தொழுவு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் மோகனப்பிரியாவிடம் நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்ததில் அவர்கள் திருவாரூரை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் ஆகாஷ் (24 ), அதே ஊரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் முத்துப்பாண்டி (20) என்பதும் தெரிய வந்தது.

    மேலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரது மகன் மாதவன் (37 ) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • 100விவசாயிகள் கலந்து கொண்டு 59ஆயிரத்து 293கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்
    • மொத்தம் ரூ.43லட்சத்து 6ஆயிரத்து 728க்கு வணிகம் நடைபெற்றது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு , வியாழனன்று சூரியகாந்தி விதை ஏலம் நடைபெறும். இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை 100விவசாயிகள் கலந்து கொண்டு 59ஆயிரத்து 293கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 10வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 80.69 க்கும், குறைந்தபட்சம் ரூ.60 க்கும் கொள்முதல் செய்தனர்.

    நேற்று மொத்தம் ரூ.43லட்சத்து 6ஆயிரத்து 728க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • 38 ஊராட்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய 253 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
    • காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    உடுமலை:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள், துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 38 ஊராட்சிகளில் பல்வேறு நிகழ்வுகள் அடங்கிய 253 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

    உடுமலை ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன் தலைமை வகித்தார். உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.எம். தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    ஊராட்சி மன்ற தலைவர் பேச்சியம்மாள் பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். கண்ணம்மநாயக்கனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி சுப்பிரமணியம் (கி.ஊ), மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • முருகருக்கு தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, கொண்டு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது.
    • முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் சோழீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரமசோழீஸ்வரர் கோவில், மயில்ரங்கம் வைத்தியநாத சுவாமி கோயில் , உத்தமபாளையம் காசிவிசுவநாதர் கோவில், வெள்ளகோவில் எல்.கே.சி நகர், புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் கிருத்திகையையொட்டி நேற்று முருகருக்கு தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூதி, மஞ்சள்,சந்தனம், மலர், பன்னீர் ஆகிய வாசனைப் பொருட்களை கொண்டு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து விழாவை தொடங்கி வைத்தார்.
    • நாட்டுநலப்பணி திட்ட முககமில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் அடுத்த சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடந்தது. சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் பகுதியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக லிட்ரசி மிஷன் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து வேம்பு, பலா உள்பட 50 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவில் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் பள்ளியின் முதல்வர் ருக்மணி, வார்டு கவுன்சிலர்கள் மேனகா பாலசுப்பிரமணியம், பெரியசாமி, துளசிமணி ஆறுமுகம், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தனபால், உதவி அலுவலர் வசந்த்குமார் , ஆசிரியை உண்ணாமலை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அக்டோபா் 6 முதல் நவம்பா் 1 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.
    • பிரதிவாரம் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும்

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் நவம்பா் 1 ஆம் தேதி வரை நிறுத்திவைக்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பு:-

    திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை ஆகியன சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் அக்டோபா் 6 முதல் நவம்பா் 1 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது.

    இதனால், பிரதிவாரம் வெள்ளிக்கிழமைகளில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் நவம்பா் 1 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நவம்பா் 3 ஆம் தேதி முதல் மீண்டும் அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • க்ளினிக்கில் சுகாதாரத்துறை இணை இயக்குநா் கனகராணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.
    • க்ளினிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் தாசா்பட்டி பிரிவில் மருத்துவம் படிக்காத ஒருவா் க்ளினிக் நடத்தி வருவதாகவும், நோயாளிகளுக்கு அவா் ஊசி போடுவதுடன், ஆங்கில மருந்துகள் வழங்குவதாகவும் திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் கனகராணிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, அந்த க்ளினிக்கில் சுகாதாரத்துறை இணை இயக்குநா் கனகராணி தலைமையிலான மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, தாசா்பட்டி பிரிவைச் சோ்ந்த தங்கராஜ் (41) என்பவா், மருத்துவம் பயிலாமல் க்ளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, சுகாதாரத்துறை இணை இயக்குநா் கனகராணி அளித்த புகாரின்பேரில் குண்டடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, போலி டாக்டா் தங்கராஜுவை கைது செய்தனா். மேலும் அந்த க்ளினிக்கிற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    • ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • கிராம சபை கூட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    காந்தி ஜெயந்தியையொட்டி நாடு முழுவதும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் கலாமணி முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கிராம சபை கூட்டத்தில் வாலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுக்கடை பகுதியில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பாதுகாப்பு ஆடை (டயாபர்) தயாரிக்கும் தொழிற்சாலை கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று கிராம சபைக்கு திரண்டு வந்த பொதுமக்கள் தொழிற்சாலை இங்கு தொடங்குவதற்கு வரைபட அனுமதி மற்றும் தொழில் அனுமதி வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தனர். வாவி பாளையம் ஊராட்சி பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதாலும், இதற்கு நிலத்தடி நீரை மட்டுமே நம்பியுள்ளதால் இங்கு தொழிற்சாலை தொடங்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம், காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை பாதிப்பு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஏக மனதாக பொதுமக்கள் ஆதரவுடன் தொழிற்சாலை தொடங்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அவினாசிலிங்கம்பாளையம் எ.வி.தனபால், செந்தில்குமார், சுப்பிரமணியம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    • வக்கீல் பிரிவு மாவட்ட துணை செயலாளர் சுதர்சன் , பொருளாளர் செல்வம் உள்ளிட்ட திரளான அதிமுக.வினர் கலந்து கொண்டனர்.

    அவினாசி:

    கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அவினாசி தெற்கு ஒன்றிய அதிமுக., பூத் கமிட்டி செயல் வீரர் கூட்டம் நடந்தது.அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் நாசர், ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் தம்பி ராஜேந்திரன், அவினாசிலிங்கம்பாளையம் எ.வி.தனபால், செந்தில்குமார், சுப்பிரமணியம், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்காக பூத் கமிட்டி அமைத்தல், தேர்தல் பணி மேற்பார்வை ஆகியவை குறித்துவிளக்கம் அளிக்கப்பட்டது மேலும் தெற்கு ஒன்றியத்தில் 15000 வாக்குகள் அதிகம் பெற அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதேபோல் அவினாசி நகர அதிமுக., சார்பில் பூத்கமிட்டி பொறுப்பாளர் கூட்டம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் நாசர் தலைமையில் நடந்தது நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கணேசமூர்த்தி, இளைஞரணி செயலாளர் ஜெயபால், அதிமுக., நகர துணை செயலாளர் எம். எஸ். மூர்த்தி, மாணவரணி செயலாளர் மோகன், வக்கீல் பிரிவு மாவட்ட துணை செயலாளர் சுதர்சன் , பொருளாளர் செல்வம் உள்ளிட்ட திரளான அதிமுக.வினர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை தம்பி ராஜேந்திரன் செய்திருந்தார்.

    • மூலனூர் ஊராட்சி ஒன்றியம் குமாரபாளையம் ஊராட்சி மாதவநாயக்கன்பட்டி பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • மூலனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஸ்ரீதர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    மூலனூர்:

    காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மூலனூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குமாரபாளையம் ஊராட்சி மற்றும் பெரமியம் ஊராட்சி பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

    மூலனூர் ஊராட்சி ஒன்றியம் குமாரபாளையம் ஊராட்சி மாதவநாயக்கன்பட்டி பகுதியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.மூலனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் பற்றியும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் பள்ளி குழந்தைகளின் கல்வி ஆகியவை பற்றி சிறப்பாக எடுத்துக்கூறினார்.

    கூட்டத்தில் குமாரபாளையம் ஊராட்சி தலைவர் செந்தில் வடிவு சிவசாமி, மூலனூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஸ்ரீதர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலு மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்து பெரமியம் ஊராட்சியில் ஊராட்சித் துணைத் தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு இரு ஆண்டுகளில் செய்த சாதனைகள் காணொளி காட்சி மூலமாக அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு அரசின் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக்கூறி அந்த பகுதி விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் பொருட்களை வழங்கினார். கூட்டத்தில் பெரமியம் ஊராட்சி தலைவர் ராணி , போளூர் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் சுமதி கார்த்திக் , மூலனூர் மேற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் துரை , மூலனூர் பேரூராட்சி மன்ற தலைவர் தண்டபாணி, ஒன்றிய இளைஞரணி மற்றும் மாநில விளையாட்டு துறை துணை செயலாளர் கார்த்திக் மற்றும் ஊர் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×