என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • மாவட்டத்தில் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்புக்கு அதிகமாக குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
    • திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குறுவை நெல் சாகுபடி நிறைவடைந்து அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மாவட்டத்தில் 1லட்சம் ஏக்கர் நிலப்பரப்புக்கு அதிகமாக குறுவை சாகுபடி செய்யப்பட்டது.

    இதில் பெரும்பாலான நெல் வயல்களில் அறுவடை நடைபெற்றுள்ளன.

    மீதமுள்ள நெல் வயல்களிலும் அறுவடை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் அடிக்கடி மழை பெய்து வருகிறது.

    இதனால் பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன.

    தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்வதால் அறுவடை பணிகளையும் தொடர முடியாத நிலை உள்ளது.

    இதனால் வயலில் சாய்ந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் விவசாயிகள் ஆர்வத்துடன் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    உரத்தட்டுப்பாடு, பூச்சி தாக்குதல் உள்ளிட்ட இடர்பாடுகளையும் தாண்டி சாகுபடி பணிகளை முடித்து அறுவடை செய்யும் நிலையில் மழை பாதிப்புக்கு ஆளாகி இருப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    விரைந்து அறுவடை பணிகளை மேற்கொள்ளும் வகையில் கூடுதல் அறுவடை எந்திரங்களை வரவழைத்து உதவிட வேண்டுமென விவசாயிகள் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    • பயிற்சி வகுப்பு 3 நாட்கள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் முதல் நாள் பயிற்சி வகுப்பு தொடங்கியது.
    • மாணவர்களின் கவரும் வகையில் கற்றல் கற்பித்தல் அமைய வேண்டும் என்ற நோக்கில், எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட, அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 234 பேருக்கு, இரண்டாம் பருவ பாட திட்டத்தில், இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு 3 நாட்கள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் முதல் நாள் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

    இதில் தொடக்கக் கல்வி மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பள்ளி மாணவ மாணவர்களின் கல்விநிலை பாதித்து அதை சரிசெய்யும் வகையில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அதனடிப்படையில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் எளிதாகவும் இனிமையானதாக அமையும் வகையில், செய்முறையோடு, காட்சிப் பொருளாகக் கொண்டு, மாணவர்களின் மனதைக் கவரும் வகையில் கற்றல் கற்பித்தல் அமைய வேண்டும் என்ற நோக்கில், எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு தொடங்கியது.

    பயிற்சி வகுப்பிற்கு நன்னிலம் வட்டார கல்வி அலுவலர் முருகபாஸ்கர், மணி ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் நடேஷ் துரை வரவேற்றார்.

    ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். ஆசிரியர்கள் தன்னார்வத்தோடு பயிற்சியில் பங்கேற்றனர்.

    • கிராம புற மாணவ -மாணவியர்களுக்கான மாலை நேர கல்வி பண்பாட்டு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
    • மாணவர்களுக்கு விவேகானந்தர் பொன்மொழிகள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பகுதிகளில் தஞ்சை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சார்பில் கிராம புற மாணவ -மாணவியர்களுக்கான மாலை நேர கல்வி பண்பாட்டு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில் பொன்னிரை, கனந்தங்குடி, வேளூர், வடபாதி ஆற்றங்கரை, மருதவனம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய மையங்கள் திறப்பதற்கான இடங்களை மடத்தின் தலைவர் விமூர்த்தானந்த மஹராஜ் பார்வையிட்டார்.

    மாணவர்களுக்கு விவேகானந்தர் பொன்மொழிகள் அடங்கிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்நிகழ்வில் திருவாரூர் ராமகிருஷ்ண சேவா சமிதி தலைவர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மனநல காப்பகத்தின் செயல்பாடுகளை எடுத்துக் கூறி கொடி அசைத்து வாகன கலை துவக்கி வைத்தார்.
    • பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி பிரசார நிகழ்வை கேட்டு மகிழ்ந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நம்பிக்கை தொண்டு நிறுவனம் தமிழ்நாடு மக்கள் மனநல அமைப்புடன் இணைந்து உலக மனநல நாளை முன்னிட்டு வாகன கலை நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரசார நிகழ்வை திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடத்துகின்றது.

    இந்த நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் நம்பிக்கை மனநல காப்பக திட்ட மேலாளர் விஜயா வரவேற்றார்.

    நகர் மன்ற தலைவி கவிதா பாண்டியன் தலைமை வகித்தார்.

    வட்டாட்சியர் ஒன்றிய பெருந்தலைவர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    திருத்துறைப்பூண்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சோமசுந்தரம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கையாளும் விதம் அவர்களை வைத்து பராமரிக்கின்ற கஷ்டம் மனநல சிகிச்சை அளிக்கும் விதம் மனநல காப்பகத்தின் செயல்பாடுகளை எடுத்துக் கூறி கொடி அசைத்து வாகன கலை நிகழ்ச்சி பிரசார நிகழ்வை துவக்கி வைத்தார்.

    நிகழ்வில் ரோட்டரி டெல்டா சங்க தலைவர் ரமேஷ், லயன் சங்க தலைவர் வேதமணி, நூற்றாண்டு லயன் சங்க செயலாளர் தங்கமணி, பிசியோதெரபி டாக்டர் கருணாநிதி, சங்க உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சி பிரசார நிகழ்வை கேட்டு மகிழ்ந்தனர்.

    மனநல தினத்தையும் நம்பிக்கை மனநல காப்பகத்தையும் மனநல பாதுகாப்பையும் பற்றிய துண்டு பிரசுரங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    மனநலத்தைப் பற்றிய மேள தாள இசை நிகழ்ச்சியுடன் பாட்டுகள் பாடி சிறு நாடகத்தின் மூலம் நடத்திய கலை நிகழ்ச்சியை அனைவரும் கண்டு களித்தனர்.

    மனநலத்திற்காக தொண்டுகள் செய்யும் நம்பிக்கை மனநல காப்பகத்தை பற்றியும் வெகுவாக பாராட்டினர்.

    முடிவில் நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் இதயம் சௌந்தர்ராஜன் நன்றி கூறினார்.

    பிரசார வாகனம் ஆலத்தம்பாடி, திருவாரூர் பழைய பஸ் நிலையம், கூத்தாநல்லூர், மன்னார்குடி, முத்துப்பேட்டை, எடையூர் ஆகிய இடங்களில் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி திருத்துறைப்பூண்டியில் முடிவடைந்தது.

    • மழையில் தேர் நனைவதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
    • 2019-ம் ஆண்டு ஆழித்தேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.

    திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டுள்ளது.

    ஆழித்தேரை இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை கொண்டு மூடுவது வழக்கம். இதனால் பிரம்மாண்டான ஆழித்தேரின் அழகிய தோற்றம், மர சிற்பங்கள் என அனைத்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் இருந்து வந்தது.

    ஆழித்தேரை எல்லா நேரத்திலும் எல்லோரும் காணும் வகையில் கண்ணாடி கூண்டு அமைத்திட இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டது, அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஆழித்தேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேரோட்ட விழாவையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி ஆழித்தேரின் கூரைகள் பிரிக்கப்பட்டு தேர் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கி, தேரோட்டமானது மார்ச் 15-ந் தேதி நடந்தது.

    இதனையடுத்து ஆடிப்பூர விழாவையொட்டி அம்பாள் தேரோட்டம் நடைபெறும். ஆழித்தேருக்கு பின்னால் நிறுத்தப்பட்டு உள்ள அம்பாள் தேர், ஆழித்தேரை கடந்து செல்ல வேண்டும். இதனால் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டால் அம்பாள் தேர் வடம் பிடித்து செல்லும்போது இடையூறாக இருக்கும். மேலும் கண்ணாடி கூண்டு என்பதால் ஏதேனும் லேசாக உரசினால் கூட ஆழித்தேரின் கண்ணாடி கூண்டு சேதமடைந்து விடும்.

    இதனால் அம்பாள் தேரோட்டத்திற்கு வசதியாக ஆழித்தேருக்கு தற்காலிக இரும்பு தகடுகளை கொண்டு மூடப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 31-ந் தேதி அம்பாள் தேரோட்டமும் நடந்தது.

    இதனையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி தற்காலிக கூரை பிரிக்கப்பட்டு மீண்டும் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தொடங்கியது. பணிகள் தொடங்கி சுமார் 2 மாதங்கள் ஆன நிலையில் இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது.

    இதில் மேற்பகுதி கூரை மட்டும் போடப்பட்ட நிலையில் நான்கு புறங்களிலும் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி நிறைவு பெறாமல் உள்ளது.

    திருவாரூரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆழித்தேருக்கு சரிவர கண்ணாடி கூண்டுகள் பொருத்தாததால் தேர் நனைந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

    ஆழித்தேரை பாதுகாக்கும் நடவடிக்கையாக மந்த கதியில் நடைபெறும் கூண்டு அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். விரைந்து பணிகளை முடித்து மழையில் தேர் நனையாமல் பாதுகாக்க வேண்டும் என்று இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒவ்வொரு ஆண்டும் நடராஜருக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
    • நடராஜருக்கு மஞ்சள்,பால்,தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    திருவாரூர்:

    புரட்டாசி வளர்பிறை சதுர்த்தியையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், முக்தி அளிக்கும் தலமாகவும் விளங்குகிறது.

    பிரசித்திப்பெற்ற இக்கோவிலில் சித்திரை மாதம் திருவோண நட்சத்திரம், ஆனி மாதம் உத்திர நட்சத்திரம், மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம், ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி, மாசி மாதம் வளர்பிறை சதுர்த்தி ஆகிய நாட்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் நடராஜருக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியையொட்டி நேற்று முன்தினம் நடராஜருக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்டவற்றை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்தனர்.

    • ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    • 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நீடாமங்கலம்:

    நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நீடாமங்கலம் அருகே உள்ள திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக இந்த கோவிலில் உள்ள 33 அடி உயர ஆஞ்சநேயருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின் செயல்பாட்டுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • 328 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 82,622 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா கச்சனம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நெல்கொள்முதல் பதிவேடு, சாக்குகள் இருப்பு பதிவேடு ஆகியவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின் செயல்பாட்டையும், நெல் மூட்டை எடை எந்திரத்தின் செயல்பாட்டையும் ஆய்வு செய்தார்.

    இதனைத் தொடர்ந்து, முத்துப்பேட்டை தாலுகா கற்பகநாதர்குளம் கிராமத்திலுள்ள பல்நோக்கு பேரிடர் மையத்தில் சாய்தளம், குடிநீர், கழிவறை, மின்சார வசதிகள் உள்ளிட்டவைகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பின்னர், கள்ளிக்குடி கிராமத்தில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு வருவாய் துறையின் பயிர் சாகுபடி பதிவேட்டில் சரியாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார்.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் இதுவரை 328 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 82,622 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 8425 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கான தொகையாக ரூ. 91 கோடியே 21 லட்சத்து 2 ஆயிரத்து 360 சம்மந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

    ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டாட்சியர் மலர்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, கமலராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • குறுவை நெல் அறுவடை செய்யப்பட்டு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
    • சில கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கமிஷன் வாங்கப்படுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    திருவாரூர் மாவட்டம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெருமளவில் குறுவை நெல் அறுவடை செய்யப்பட்டு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறது.

    உடனடியாக நெல் கொள்முதல் செய் யாமல் இரண்டு நாட்கள் காலதாமதமாகிறது.

    நெல் ஈரப்பதமும் அதிகமாகிறது.

    மேலும் சில கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கமிஷன் வாங்கப்படுகிறது.

    இது சம்பந்தமாக விவசாயிகளிடமிருந்து மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்திற்கு புகார் வந்துள்ளது.

    எனவே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் ரெக்கார்டிங் வசதியுடனும் பொருத்தி நெல் மூட்டைக்குகமிஷன் பெறும் செயலை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருந்தில் உணவருந்திய சிறிது நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
    • பாதிக்கப்பட்டவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் உடல்நலம் பெற்று வீட்டிற்கு திரும்பினர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே உள்ள திருவாசல் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது26). இவர் 5 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

    இந்த நிலையில் இவருக்கு 5-ம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி விக்னேஷ் வீட்டில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், கருவேப்பிலை சாதம் ஆகியவற்றுடன் சிக்கன் பிரியாணி பரிமாறப்பட்டது.

    இந்த விருந்தில் உணவருந்திய சிறிது நேரத்தில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் உடல்நலம் பெற்று வீட்டிற்கு திரும்பினர்.

    திருவாரூர் அருகே உள்ள வேளுக்குடியைச் சேர்ந்த திருவாரூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். அலுவலக ஒப்பந்த தொழிலாளி செல்வமுருகன் (வயது 24), சந்துரு (10), இளரா (62), செல்வகணபதி (25), பாலாஜி (22), கர்ப்பிணி மாரியம்மாள், யஷ்வந்த் (4), ராஜமாணிக்கம் (60) ஆகிய 8 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் திருவாரூர் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பலனின்றி செல்வமுருகன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். அவரது உடல் அங்கேயே பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் சந்துரு உள்பட 7 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இதற்கிடையே சுகாதார துறை அதிகாரிகள் நிகழ்ச்சி நடைபெற்ற திருவாசலில் முகாமிட்டு உணவு சாப்பிட்டவர்களுக்கு வேறு ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என்று மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

    மேலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பரிமாறப்பாட்ட உணவின் தரம் குறித்து சோதனை செய்தனர்.

    இது குறித்த புகாரின் திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முதல் கட்ட விசாரணையில் , நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட 5 வகை சாதங்கள் கர்ப்பிணி பெண்ணான மாரியம்மாள் தாய் வீட்டிலிருந்து தயார் செய்து எடுத்து வரப்பட்டது.

    விக்னேஷ் வீட்டின் தரப்பில் பரிமாறப்பட்ட சிக்கன் பிரியாணி புலிவலத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலிலும், திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட வாழ வாய்க்காலில் உள்ள ஒரு ஓட்டலிலும் வாங்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெள்ளநீர் வடியாமல் வயல்களில் தேங்கி பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
    • ஆகாயதாமரை செடிகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிகுளம் மற்றும் இடும்பவனம் பகுதியில் செல்லும் கழனியாறு, புதிய மற்றும் பழைய கிளைதாங்கியாறு, மரைக்கா கோரையாறு ஆகியவற்றில் ஆகாயதாமரை செடிகள் மண்டியுள்ளதால் மழை காலங்களில் வெள்ளநீர் வடியாமல் வயல்களில் தேங்கி பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.

    செடிகளை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் சங்கர், முருகையன் மாவட்ட விவசாய சங்க துணைத்தலைவர் மற்றும் விவசாயிகளுடன் சென்று பார்வையிட்டு ஆகாயதாமரை செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • குளத்தின் வட பகுதியில் மண்ணை தோண்டி எடுக்கும் போது கற்சிலை ஒன்று தென்பட்டது.
    • உயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றும் பெண்களின் நினைவாக இது போன்ற சிலைகள் வைக்கப்படுவது வழக்கம்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் உள்ள ருக்குமணி குளத்தில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த பணியில் இரண்டு பொக்லைன் எந்திரங்கள் ஈடுபட்டு வருகின்றன. அப்போது குளத்தின் வட பகுதியில் மண்ணை தோன்றிய எடுக்கும் பொழுது கற்சிலை ஒன்று தென்பட்டது. அதனை பாதுகாப்பாக தொழிலாளர்கள் வெளியே எடுத்தனர்.

    அம்மன் சிலை போன்று தோற்றமளித்த இந்த சிலையானது ஒரு பெண் தனது இடுப்பில் குழந்தையை தூக்கி வைத்திருப்பது போன்று இருந்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி தாசில்தார் ஜீவானந்தம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சிலையை கைப்பற்றி மன்னார்குடி தாசில்தார் அலுவலகம் எடுத்துச் சென்றனர்.

    முந்தைய காலத்தில் தனது உயிரை கொடுத்து குழந்தையை காப்பாற்றும் பெண்களின் நினைவாக இது போன்ற சிலைகள் வைக்கப்படுவது வழக்கம் எனவும் இந்த சிலையும் அது போன்ற ஒரு சிலையாக இருக்கும் எனவும் பெரியோர்கள் தெரிவித்தனர்.

    ×