என் மலர்
திருவாரூர்
- உதயமார்தாண்புரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
- நாச்சிகுளம் பகுதிக்கு புதிய நீர்நிலை தேக்க தொட்டி கட்டிதர கோரிக்கை வைத்திருந்தோம்.
திருத்துறைப்பூண்டி:
உதயமார்தாண்புரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அப்போது நாச்சிக்குளம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக கிளை துணை செயலாளர் கல்பான் தலைமையிலான பொறுப்பாளர்கள் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கடந்த மே மாதத்தில் குடிநீர் பிரச்சனை காரணமாக காலி குடங்களுடன் ஊராட்சியை நோக்கி கவன ஈர்ப்பு பேரணி நடத்த திட்டமிட்டு அதிகாரிகளின் பேச்சுவார்த்தை அடிப்படையில் பல கோரிக்கைகளை முன் வைத்து சுமூகமாக முடிந்தது.
அதில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் முக்கிய கோரிக்கையான நாச்சிகுளம் பகுதிக்கு புதிய நீர்நிலை தேக்க தொட்டி கட்டிதர கோரிக்கை வைத்திருந்தோம்.அப்பேச்சுவார்த்தையில் நாச்சிகுளத்திற்கு ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 30,000 லிட்டர் அளவுள்ள புதிய நீர் தேக்க தொட்டி கட்ட அனுமதி கிடைத்திருப்பதாக சொல்லப்பட்டது.
இத்தொட்டியை விரைவாக கட்டினால் தான் நாச்சிகுளம் முக்கிய பகுதிகளுக்கு தண்ணீர் பிரச்சனை குறையும்.ஆகையால் ஜல்ஜீவன் திட்டத்தில் அனுமதி கிடைத்துள்ள குடிநீர் தேக்க தொட்டியை விரைவாக கட்டிதர வேண்டும்.
மேலும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு, புதியசாலை வசதி போன்ற பணிகளை விரைவாக அமைத்து தர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
தொடர்ந்து பொதுமக்க ளும் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.
- அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு பைங்காநாடு சிவன் கோயில் வளாகத்தில் உழவாரப்பணி நடந்தது.
- தூய்மை இந்தியாவை உருவாக்க உறுதியேற்க வலியுறுத்தியதுடன் உண்மை, அகிம்சை ஆகியவை சொற்கள் அல்ல செயல்கள்.
மன்னார்குடி:
மன்னார்குடி தூய வளனார் பெண்கள் மேனிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு பைங்காநாடு சிவன் கோயில் வளாகத்தில் உழவாரப்பணி நடை பெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார்.
பைங்காநாடுஅரசுமேனிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் அசோகன், முன்னாள் தலைவர் மலர்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்னார்குடி கூட்டுறவு அர்பன் பேங்க் நகராட்சி மேனிலைப் பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியர் முனைவர் இராசகணேசன் தொடங்கி வைத்து பேசும்போது, காந்தியடிகளின் பிறந்தநாளில் மகாத்மா காண விரும்பிய தூய்மை இந்தியாவை உருவாக்க உறுதியேற்க வலியுறுத்தியதுடன் உண்மை, அகிம்சை ஆகியவை சொற்கள் அல்ல செயல்கள்.
இவற்றை வாழ்வில் கடைப்பிடித்தாலே வாழ்வின் பயனை நாம் உணரலாம்.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு அடுத்தொரு பிறவி எடுத்தாவது திருக்குறளைமுழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய மகாத்மாகாந்தியின் சுயசரிதையான சத்திய சோதனை நூலை அனைவரும் படிக்க வேண்டும்.
காந்திய சிந்தனை உலக உய்விற்கான வழி, அதனால்தான் உலக நாடுகள் எல்லாம் காந்தியின் தனிமனித வாழ்க்கையிலிருந்து நிறைய பாடங்களைக் கற்று வருகின்றன என்று கூறியதுடன்பாரதியாரின் காந்திபுகழ் வணக்க பாடல்களையும், ரகுபதி ராகவ ராஜாராம் காந்தி பஜனைப் பாடலையும் பாடினார்.
முன்னதாக அனைவரையும் திட்ட அலுவலர் பிரான்சினா விண்ணரசி வரவேற்றார். முடிவில் உதவித்திட்ட அலுவலர் சுசீலா நன்றி கூறினார். தமிழாசிரியை இசபெல்லா நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
- 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
- மாணவரனி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாருர் தெற்கு மாவட்டம் நாச்சிகுளம் கிளை சார்பாக கிளை துணை செயலாளர் முகமது கல்பான் தலைமையில் நாச்சிகுளம் பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மக்தப் மதரஸா மாணவர்கள் நாச்சிகுளம் ஏரிகரை பகுதியில் மரகன்று நட்டு இந்நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.
முக்கிய பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிகழ்வில் கிளை தொண்டரனி பொறுப்பாளர் முஜம்மில், மாணவரனி பொறுப்பாளர் ரில்வான், கிளை உறுப்பினர்கள், மாணவரணி நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.
- வாதி மற்றும் பிரதிவாதிகளை அழைத்து வழக்கினை விரைவாக முடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர்.
- பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்.
நீடாமங்கலம்:
வலங்கைமான் காவல் நிலையத்தில் நீண்ட காலமாக தேங்கி இருக்கக்கூடிய வழக்குகளை எல்லாம் தீர்வு காணும் விதமாக வலங்கைமானில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெட்டி ஷன் மேளா நிகழ்வு நடைபெற்றது. இதில் நன்னிலம் டி.எஸ்.பி. தமிழ்மாறன், வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ரங்கராஜன், சப் இன்ஸ்பெக்டர் வில்வநாதன், காமராஜ், மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு, தேங்கி நிற்கும் மனுக்களை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட வாதி மற்றும் பிரதிவாதிகளை அழைத்து வழக்கினை விரைவாக முடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டனர். இதில் பல்வேறு தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் 10 கோடி பனை விதை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பனை மரத்தை தேவையில்லாமல் வெட்டி அழிப்பதை தடுக்க வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் டெல்டா பனை பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒரு இலட்சம் பனை விதை நடும்பணி தொடக்கவிழா நடைப்பெற்றது.
நகர்மன்ற நியமன குழு உறுப்பினர்பாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில், மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமையேற்று பனைவிதை நடும்பணியை தொடங்கிவைத்தார்.
ஒரு லட்சம் பனை விதை நடும் திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர்முசிறி விதையோகநாதன் கூறும்போது, திருத்துறைப்பூண்டி தாலுகா முழுவதும் நவம்பர் மாதம் வரை இப்பணி நடைப்பெறும், மக்கள் இயக்கமாக கொண்டு செல்லப்படும். அடுத்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பத்து கோடி விதை நடஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பனையின் பயன் குறித்து இயற்கை வேளாண் பயிற்றுனர் பாலம் செந்தில்குமார் பேசும் போது, பனை தமிழ் நாட்டின் மரம். அதிலிருந்து கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படுவதால் கற்பகதரு என்றழைக்கப்படுகிறது,.எந்த தட்பவெப்ப நிலையிலும் தழைத்து உயிர்வாழக்கூடியது. தனது சல்லிவேர்கள் மூலம் மழைநீரை பூமிக்குள் சேமிக்ககூடியது. மண் அரிப்பை தடுக்கும், ஒரு பனைமரம் ஆண்டிற்கு 180 லிட்டர் பதனீர், 25 கிலோ பனைவெல்லம்,16 கிலோ பனஞ்சீனி, 11 கிலோ தும்பு, 3 கிலோ ஈக்கி, 10 கிலோவிறகு, 10 கிலோ ஓலை, 20 கிலோ நார் , 100 கிலோ பனங்கிழங்கு என இதன் பயன் அளவிடமுடியாது. இப்படி பல்வேறு நன்மைகளை தரும் பனைமரத்தை தேவையில்லாமல் வெட்டி அழிப்பதை தடுக்கவும், மீண்டும் இதை அதிகளவு நட்டு வளர்த்து நமது சந்ததிகளுக்கு வளமான பூமியைவிட்டு செல்வோம் என இந்நாளில் உறுதியேற்போம் என்றார்.
நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பிரதான் பாபு, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரவி, தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடனம் ,
பாரத மாதா நிறுவனர் எடையூர் மணிமாறன், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜீவ், ரோட்டரிகாளிதாஸ், ரோட்டரி சங்க தலைவர் மாணிக்கம், அரிமா சங்க தலைவர் சின்னதுரை, நம்பிக்கை தொண்டு நிறுவன இயக்குனர் சௌந்தரராஜன், நூற்றாண்டு லயன்ஸ் சங்க தலைவர் கார்த்தி, தோட்டகலை, நீர் வள ஆதார துறை அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கோமதி செந்தில்குமார், வசந்த், நகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசைதம்பி சரவணம் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார்.
- சமூக வலைதளங்களில் சீனிவாசன் காணவில்லை எனவும் பதிவிட்டு வந்துள்ளனர்.
- திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் புள்ளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 65). இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அழகேசன் குமரேசன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சீனிவாசன் மற்றும் அவருடைய மனைவி வாசுகி புள்ளமங்கலத்தில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய முன்தினம் வயலுக்கு செல்வதாக சொல்லிவிட்டு சென்ற சீனிவாசன் வீட்டிற்கு திரும்ப வரவில்லை இதனால் உறவினர்கள் பல்வேறு இடங்களில் கடந்த 2 தினங்களாக தேடி வந்தனர். மேலும் சமூக வலைதளங்களில் சீனிவாசன் காணவில்லை எனவும் பதிவிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இன்று வடவேர்குடி ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டு வழியாக காலைக்கடன் கழிப்பதற்காக கிராம மக்கள் சென்றுள்ளனர்.
அப்போது சுடுகாடு மேற்கூரை முற்றிலுமாக இடிந்து விழுந்து கிடப்பதை பார்த்துள்ளனர். இதனைப் பார்த்தவுடன் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கிராம மக்கள் இடிந்து விழுந்த சுடுகாடு மேற்கூறையை அகற்றிய பொழுது சீனிவாசன் சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவர்களுடைய உறவினர்கள் கதிறி அழுதனர் மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது சம்பந்தமாக வடவாதிமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமம் மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் அருணாச்சலம். (வயது 48). இவரது மனைவி லாவண்யா. இந்த தம்பதிக்கு மகன் உள்ளார். அருணாச்சலம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் செட்டிசத்திரம் கிராமத்தில் வசித்து வரும் தனது தாயை பார்ப்பதற்காக வீட்டை பூட்டு விட்டு குடும்பத்துடன் சென்றுள்னார்.
மீண்டும் இரவு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 100 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் மன்னார்குடி போலீசுக்கு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருவாரூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தண்ணீர் வழங்காததால் சாகுபடி பயிர்கள் கருகி வருகின்றன.
- சம்பா சாகுபடியும் தொடங்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருத்துறைப்பூண்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட்டதும் விவசாயிகள் உற்சாகத்துடன் வழக்கமான அளவை விட அதிக அளவில் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். செப்டம்பர் 30-க்குள் சம்பா சாகுபடி பணிகள் நிறைவடைய வேண்டும்.
ஆனால், தமிழகத்திற்கு, கர்நாடகம் வழக்கமாக வழங்க வேண்டிய தண்ணீரை வழங்காததால் சாகுபடி பயிர்கள் கருகி வருகின்றன. சம்பா சாகுபடியும் தொடங்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
எனவே, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர்களை காப்பாற்றவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவருட்பா, தெய்வமணிமாலை பாடல்களை மாணவர்கள் இசையோடு பாடினர்.
- சமூகத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகளை களைய அரும்பாடு பட்டார் வள்ளலார்.
மன்னார்குடி:
மன்னார்குடி கூட்டுறவு அர்பன் வங்கி, நகராட்சி மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறை மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகியவை இணைந்து தமிழ்க்கூடல் நிகழ்ச்சி மேலகோபுரவாசலில் உள்ள வள்ளலார்அறச்சாலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராசசேகரன் தலைமை தாங்கினார். வள்ளலாரின் 200-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவருட்பா, தெய்வமணிமாலை பாடல்களை மாணவர்கள் இசையோடு பாடி வடலூர் ராமலிங்க அடிகளுக்கு அவல், நாட்டு சர்க்கரை, பொட்டுக்கடலை வைத்து படையலிட்டு வழிபாடு நிகழ்த்தினர். பள்ளி தலைமை ஆசிரியர் ராசசேகரன் பேசுகையில்:- சமூகத்தில் உள்ள பல்வேறு முரண்பாடுகளை களைய அரும்பாடு பட்டார் வள்ளலார் என்றார்.
பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் ராசகணேசன் பேசுகையில், உலக அமைதிக்கான வள்ளலாரின் ஜீவகாருண்யம், ஆன்ம நேய ஒருமைப்பாட்டுகளை கடைபிடிக்கவேண்டும் என்றார். உயிரிரக்கமும், ஒழுக்கமுமே உண்மையான கடவுள் வழிபாடு இதுவே வள்ளலாரின் சன்மார்க்க நெறிகள் என்றார்.
வள்ளலார் அறச்சா லையினர் மாணவர்களுக்கு பிரசாதம் வழங்கினர். மேலும், தமிழில் காலாண்டு தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாண வர்களுக்கு வள்ளலாரின் நூல்களை வள்ளலார் சத்திய தருமசாலையினர் பரிசாக வழங்கி பாராட்டினர்.
- சம்பா சாகுபடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டது.
- பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வேளாண் துறை வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் விவசாயிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் அதனைத் தொடர்ந்து மேட்டூர் அணை ஜூன் மாதம் 12ஆம் தேதி திறக்கப்பட்டதை நம்பி திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதன் காரணத்தினால் பயிர்கள் கருகி வருகிறது. ஆகையால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை உடனடியாக தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தி பெற்று தர வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30,000 நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் வணிக வங்கிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களை முழுவதுமாக எந்த நிபந்தனையும் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும்.
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டு சம்பா சாகுபடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டது இதற்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்த நிலையில் குறைந்த அளவு பயிர் காப்பீடு தொகையை பயிர் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. உடனடியாக பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் கலெக்டர் அலுவலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தையின் முடிவில் விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.அதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
- நேற்று குருவார சிறப்பு வழிபாடு நடை பெற்றது.
- நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடை பெற்றது
திருவாரூர் :
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நவக்கிரகங்களில் குருபகவானுக்கு உரிய கோவிலாகும். இங்கு நேற்று குருவார சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதனை முன்னிட்டு கலங்காமற் காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.
மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டு இருந்தது. உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதை போல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையை முன்னிட்டு குருதெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசசனம் செய்தனர்.
- குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 11-ந்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
- முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் என்கிற உமர் முகமது(43). வக்கீல். இவரது மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபா.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் உமர் முகமது மற்றும் அவரது மனைவி ஹாஜா ஜெய்னுல் அரபா இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 11ந்தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரம் அடைந்த ர் உமர் முகமது தனது மனைவியை சரிமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் ஹாஜா ஜெய்னுல் அரபா மயங்கினார். இதைத் தொடர்ந்து உமர் முகமது தலைமறைவாகி விட்டார்.
மறுநாள் ஹாஜா ஜெய்னுல் அரபாவிடமிருந்து போன் ஏதும் வராததை கண்ட அவரது பெற்றோர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டிற்குள் படுகாயத்து டன் ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் உமர் முகமது மீது மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் ஹாஜா ஜெய்னுல் அரபா மற்றும் அவரது இரு குழந்தைகள் மற்றும் அவரது உறவினர்கள் நேற்றிரவு முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு அமர்ந்து உமர் முகமதுவை கைது செய்யகோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பெரும் பரபரப்பு ஏறபட்டது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் இரவுக்குள் கைது செய்கிறோம் என வாக்குறுதியளித்தார்.
இதனையடுத்து அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
பின்னர் போலீசார் நேற்றிரவு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் சப் இன்ஸ்பெ க்டர்கள் பாலசுப்பிரமணியம் முத்துக்குமார் ஆகியோர் அடங்கிய போலீசார் மன்னார்குடியில் தலைமறைவாக இருந்த உமர் முகமதுவை கைது செய்து அழைத்து வந்து திருத்துறைப்பூண்டி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவம் முத்துப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






