என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • களக்காடு சுற்றுவட்டாரத்தில் 29.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    • தென்காசி நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று நெல்லை, தென்காசி மாவட்டத்தில் காலையில் இருந்து மாலை வரையிலும் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலை முதல் வெயில் அடித்தது

    நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    இதனால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து நேற்று சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் நீர்வரத்து சற்று குறைந்துள்ளதால் தலையணையின் கீழ் பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    களக்காடு சுற்றுவட்டாரத்தில் 29.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு வரையிலும் நீடித்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது.

    மாவட்டத்தில் அதிகபட்சமாக நாங்குநேரியில் 51 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மூலக்கரைப்பட்டியில் 25 மில்லிமீட்டரும், கன்னடியன் கால்வாய் பகுதியில் 13 மில்லிமீட்டரும் மழை பெய்தது. சேரன்மகாதேவியில் 9.6 மில்லிமீட்டர், அம்பையில் 8 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மாவட்டத்தின் மற்ற பகுதியில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.

    அணைகளை பொறுத்தவரை சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பரவலாக பெய்தது. அந்த அணை பகுதிகளில் தலா 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 92.55 அடியாக இருந்த நிலையில் இன்று சுமார் 1 அடி அதிகரித்து 93.40 அடியை எட்டியுள்ளது. பிற்பகல் 94 அடிரைய எட்டியது.

    அந்த அணைக்கு நேற்று காலை வரை வினாடிக்கு 288 கனஅடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில் தொடர்மழையால் இன்று காலை நிலவரப்படி 1,185 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேர்வலாறு அணை நீர்மட்டம் 104.49 அடியாக இருந்த நிலையில் இன்று நீர்வரத்து காரணமாக ஒரே நாளில் 2 1/4 அடி உயர்ந்து 106.82 அடியை எட்டியுள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 63.70 அடியாக உள்ளது. அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் மக்கள் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நாலுமுக்கு எஸ்டேட்டில் 46 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 42 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை சுற்றுவட்டாரத்தில் 31 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. இதனிடையே இன்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள நடத்தகூடாது என கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று காலையில் தொடங்கி இரவு வரையிலும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. சில இடங்களில் இடி-மின்னலுடன் மாலை நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் 38 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    தென்காசி நகர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 20 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆயக்குடி, சிவகிரி பகுதிகளிலும் கனமழை பெய்ததால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் லேசான சாரல் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை கடனா மற்றும் ராமநதி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியது. ராமநதியில் 24 மில்லிமீட்டரும், கடனா அணையில் 17 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. கடனா அணை நீர்மட்டம் இன்று 1 1/2 அடி உயர்ந்து 42 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 55.50 அடியாகவும் இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள் நீர் இருப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. இன்று காலை வரை அங்கு 32.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 73 அடியாக உள்ளது. அந்த அணை பகுதியில் நேற்று 17 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. அணைக்கு வரும் 40 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மேலும் கனமழை எச்சரிக்கையால் தென்காசி மாவட்டத்திலும் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என தனியார் பள்ளிகளுக்கு கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 9 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. குலசேகரன்பட்டினம் மற்றும் காயல்பட்டினத்தில் தலா 4 மில்லிமீட்டரும், சாத்தான்குளத்தில் 8.6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    • புயல் கரையை கடந்த போது, அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த கீழடுக்கு சுழற்சியில் இருந்து மேற்கு காற்றை ஈர்த்தது.
    • ஏற்கனவே பள்ளிகளுக்கு வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    வங்கக்கடலில் உருவான டானா புயல் நேற்று அதிகாலை ஒடிசாவில் தீவிர புயலாக கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடந்த போது, அரபிக்கடல் பகுதியில் நிலவி வந்த கீழடுக்கு சுழற்சியில் இருந்து மேற்கு காற்றை ஈர்த்தது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருந்தது. இதன் தொடர்ச்சியாக தெற்கு கேரள கடற்கரையையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக மேலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழையும், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் இன்று சிறப்பு வகுப்புகள் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்,

    திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    ஏற்கனவே பள்ளிகளுக்கு வழக்கமான வார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இன்று சிறப்பு வகுப்புகள் ஏதேனும் நடத்த உத்தேசித்துள்ள பள்ளிகள் அவற்றை நடத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    • பல மசோதாக்கள் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
    • சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்டத்திற்கும், அமைச்சரவை விதிக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.

    நெல்லை:

    நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கவர்னர் பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களை நியமிக்க முழு உரிமை உள்ளது.

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக சவிதா ராஜேஷ் நியமிக்கப்பட்டதில் குறையேதும் இல்லை. ஆனால் புதிய உறுப்பினர் சவிதா பல்கலைக்கழக வளாகத்தில் ஏ.பி.வி.பி. மாணவர்களுடன் 'செல்பி' எடுத்து விளம்பரப்படுத்தியது தவறு. பொது நலனில் நடுநிலையுடன் செயல்படவேண்டும்.

    இந்த பிரச்சினை தொடர்ந்து வருவதால் தான் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கு முதலமைச்சருக்கு அதிகாரம், அரசிடம் முழுமையாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்ட 10 மசோதாக்கள் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதுபோன்ற பல மசோதாக்கள் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கவர்னர் திருப்பி அனுப்பும் மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றினால் கவர்னர் அதற்கு அனுமதி தரவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் சட்டவிதி மற்றும் மரபுபடி நடப்பதில்லை.

    சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்டத்திற்கும், அமைச்சரவை விதிக்கும் கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். அவர் ஆர்.எஸ்.எஸ். விதிப்படி நடப்பது போல் உள்ளது. கூடங்குளம் அணு உலை மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. கூடங்குளம் அணுக்கழிவுகளை என்ன செய்வதென்று தெரியாத நிலை உள்ளது. தொடர்ந்து புற்றுநோய் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடற்கரை பகுதிகளில் இந்த நோய் அதிகரித்து வருகிறது. ராஜஸ்தான் பாலைவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அணுக்கழிவுகளை கொண்டு செல்லலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
    • மூன்றடைப்பு போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    களக்காடு:

    சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பொருட்களை ஏற்றிக் கொண்டு ஒரு மினி லாரி ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அதனை நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள படலையார்குளம் ஜே.ஜே. நகரை சேர்ந்த சுடலை மகன் மகேஷ் (வயது 20) என்பவர் ஓட்டிச்சென்றார்.

    இன்று அதிகாலையில் அந்த மினிலாரி நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு நான்குவழி சாலையில் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது நாகர்கோவிலில் இருந்து நெல்லை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் மூன்றடைப்பு பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது எதிரே வந்த மினிலாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பஸ்சின் முன் பகுதி கண்ணாடி உடைந்தது. அதே நேரத்தில், மினிலாரியின் முன்பக்க பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் மினி லாரி டிரைவரான மகேஷ், முதலை குளத்தை சேர்ந்த உசிலவேல் (36) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இடிபாட்டில் சிக்கி உடல் நசுங்கி பலியாகினர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த மூன்றடைப்பு போலீசார், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று இடிபாட்டில் சிக்கியிருந்த 2 பேரின் உடல்களையும் கடும் போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து காரணமாக ரெயில்வே மேம்பாலத்தில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. சம்பவம் நடந்த பகுதியில் ரெயில்வே மேம்பால சாலை பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் மட்டும் நான்குவழிச்சாலையின் ஒரு பகுதி அடைக்கப்பட்டு 2 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது அந்த இடத்தில் தான் விபத்து நடந்துள்ளது.

    திருவனந்தபுரத்திற்கு லோடு ஏற்றிக்கொண்டு சென்ற மினி லாரி டிரைவர் சற்று கண் அயர்ந்து இருக்கலாம். அதனால் தான் இந்த விபத்து நடந்திருக்க கூடும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • கடனா அணை பகுதியில் மட்டும் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.
    • சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை சில இடங்களில் இடி-மின்னலுடனும், சில இடங்களில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் நேற்று அங்கு மழை இல்லை. மாறாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து கொண்டே இருப்பதால் பாதுகாப்பு காரணமாக சூழல் சுற்றுலா தலமான களக்காடு தலையணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கி களக்காடு வனச்சரக அலுவலர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.


    களக்காடு சுற்று வட்டாரத்தில் அதிகபட்சமாக 9.2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதியில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. அணைகளை பொறுத்தவரை சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. பாபநாசத்தில் 3 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. கன்னடியன் கால்வாய் பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

    தென்காசி மாவடடத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் பகலில் வெயில் அடித்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. கடனா அணை பகுதியில் மட்டும் 2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக கொட்டி வருகிறது. அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மட்டும் பரவலாக மழை பெய்தது. அங்கு 9 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஓட்டபிடாரத்தில் 2 மில்லி மீட்டரும், தூத்துக்குடியில் 1 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மாடுகள் வளர்க்க அனுமதி பெற வேண்டும்.
    • பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக திரியும் மாடுகள் கோசாலைக்கு கொண்டு செல்லப்படும்.

    நெல்லை மாநகராட்சி 55-வது வார்டு திருமால் நகர் பகுதியில் நேற்று முன்தினம் சாலையில் சுற்றி திரிந்த ஒரு மாடு அந்த வழியாக மொபட்டில் சென்ற கல்லூரி மாணவி ஸ்வதிகா மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி சாலையில் சில அடி தூரம் போய் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்து அந்த மாணவியை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் 1988-ன் படி மாநகராட்சி எல்லைக்குள் அனுமதி இன்றி யாரும் மாடுகள் வளர்க்க கூடாது.

    * நெல்லை மாநகர எல்லைக்கு உட்பட்ட இடங்களில் மாடுகள் வளர்க்க அனுமதி பெற வேண்டும்.

    * போக்குவரத்திற்கு இடையூறாக அச்சுறுத்தலாக சாலையில் மாடுகளை அவிழ்த்துவிடக்கூடாது.

    * மாடுகளின் உரிமையாளர்கள் மீது பிராணிகள் துன்புறுத்தல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் அச்சுறுத்தலாக திரியும் மாடுகள் கோசாலைக்கு கொண்டு செல்லப்படும்.

    * சாலையில் சுற்றி திரியும் மாட்டின் உரிமையாளர்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    • தற்போது மாநகர பகுதியில் மீண்டும் பல இடங்களில் மாடுகள் சுற்றி திரிகிறது.
    • ஆஸ்பத்திரியில் மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் டவுன், தச்சநல்லூர், பாளை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களில் மொத்தம் 55 வார்டுகள் இருக்கின்றன.

    இதில் பெரும்பாலான வார்டுகள் நகரின் மையப் பகுதியிலும், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கூட்ட நெரிசலான இடங்களிலும் அமைந்துள்ளது.

    இந்நிலையில் மாநகர பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், சாலைகள் பரபரப்பாகவே இயங்கும்.

    இந்த நிலையில் ஆங்காங்கே நாய்கள் மற்றும் மாடுகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அவை வாகனங்களில் மோதி விபத்துக்களை ஏற்படுத்தி வருவது தொடர் கதையாகி விட்டது.

    சாலைகளில் திரியும் மாடுகளால் தொடர் விபத்துகளும், வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஒருவித அச்ச உணர்வையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால் நெல்லை மாநகராட்சி நிர்வாகித்திடம் பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்ததன் பேரில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளை அவ்வப்போது சிறை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் தற்போது மாநகர பகுதியில் மீண்டும் பல இடங்களில் மாடுகள் சுற்றி திரிகிறது.

    இந்நிலையில் நெல்லை மாநகராட்சி 55-வது வார்டு திருமால் நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த ஒரு மாடு அந்த வழியாக மொபட்டில் சென்ற கல்லூரி மாணவி ஸ்வதிகா மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த மாணவி சாலையில் சில அடி தூரம் போய் விழுந்தார்.

    இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து மாணவியை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் நடந்த இடத்தில் ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராவில் இந்த விபத்து காட்சிகள் பதிவாகி இருந்தது. அவை தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மாநகரில் கால்நடைகளால் விபத்து ஏற்படும் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடப்பது தொடர்கதையாகி வருவது வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

    இதில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்தி சாலையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக மாட்டின் உரிமையாளர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி, கடனா நதி பகுதிகளில் சாரல் அடித்தது.
    • மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மாலை நேரத்தில் நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் பிற்பகலில் ராதாபுரம் பகுதியில் திடீரென வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டது. தொடர்ந்து கனமழை பெய்ய தொடங்கியது. கூடங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அங்கு சுமார் 21 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக களக்காட்டில் 5 சென்டிமீட்டர் மழை கொட்டியது. மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டியிலும் சாரல் அடித்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் நேற்று பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டரும், நாலுமுக்கில் 18 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 16 மில்லி மீட்டரும், மாஞ்சோலையில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை நேற்று பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. இன்றும் அதே நிலை நீடிக்கிறது. எனினும் மழை பொழிவு எதுவும் இல்லை. பாபநாசம் அணையில் தற்போது 93.45 அடி நீர் இருப்பு உள்ளது. சேர்வலாறில் 105.18 அடியும், மணிமுத்தாறில் 63.64 அடியும் நீர் இருப்பு உள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கருப்பாநதி, கடனா நதி பகுதிகளில் சாரல் அடித்தது. அதிகபட்சமாக கருப்பாநதியி 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடனா அணை பகுதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்தது. சிவகிரியில் 6 மில்லிமீட்டரும், சங்கரன்கோ விலில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமாக விழுகிறது. மெயினருவி, பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவிகளில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குளித்து மகிழ்ந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று கனமழை பெய்தது. குறிப்பாக கயத்தாறு, மணியாச்சி, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் நீர் தேங்கியது.

    இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மணியாச்சியில் அதிகபட்சமாக 7.5 சென்டிமீட்டர் மழை கொட்டியது. கயத்தாறில் 37 மில்லிமீட்டரும், கடம்பூரில் 41 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது.

    ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டையபுரம், காடல்குடி பகுதிகளில் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. கீழ அரசடி பகுதியில் சுமார் 1 மணி நேரம் கொட்டிய மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்தது. விளாத்திகுளம் சுற்றுவட்டார கிராமங்களிலும் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாநகர், ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினத்தில் வெயில் அடித்தது.

    • தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கியவுடன் 1972-ம் ஆண்டு அக்கட்சியை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
    • தி.மு.க. ஆட்சியில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து விட்டது.

    அம்பை:

    அ.தி.மு.க.வின் 53-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நடந்தது. புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    இதில் அ.தி.மு.க. பொது செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கியவுடன் 1972-ம் ஆண்டு அக்கட்சியை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் உருவான கட்சிதான் அ.தி.மு.க. கட்சி தொடங்கியதில் இருந்து 16 தேர்தலில் போட்டியிட்டு 7 முறை ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தில் அதிகமுறை ஆண்ட கட்சி நமது அதி.மு.க.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நான் முதலமைச்சரான பிறகு அ.தி.மு.க.வை அழிக்க பல சதி திட்டங்கள் தீட்டினார்கள். நம்மிடம் இருந்த சிலரே பதவி வெறியில் இந்த கட்சியை எதிர்த்து ஓட்டு போட்டார்கள். அப்படி இருந்தும் அவர்களை மன்னித்து உயர்ந்த பதவியான துணை முதலமைச்சர் பதவி கொடுத்தும், அவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இல்லை.

    அ.தி.மு.க. ஓட்டு வங்கி குறைந்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்கு வங்கியை விட தி.மு.க.வுக்குத்தான் வாக்கு வங்கி குறைந்துள்ளது. அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.

    மு.க.ஸ்டாலின் மேயர், எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதலமைச்சர் என படிப்படியாகத்தான் வந்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் கட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே துணை முதலமைச்சராகி விட்டார். தி.மு.க. ஆட்சியின் ஒரே சாதனை மு.க.ஸ்டாலின் அவரது மகனை துணை முதலமைச்சராக்கியது தான்.

    தி.மு.க. ஆட்சியில் கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து விட்டது. கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த சிறப்புக்குழு அமைக்கப்படும் என உயர்நீதிமன்றம் சொல்லும் அளவுக்கு தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது. இந்த ஆட்சியில் கஞ்சா எங்கும் கிடைக்கிறது. அதை முதலமைச்சரால் தடுக்க முடியவில்லை.

    அ.தி.மு.க. இரண்டாகி விட்டது, மூன்றாகி விட்டது என தி.மு.க.வினர் கபட நாடகம் நடத்துகின்றனர். அ.தி.மு.க. எப்போதும் ஒன்றாகத்தான் உள்ளது. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. தி.மு.க.விற்கு தான் செல்வாக்கு குறைந்துள்ளது. அந்த கூட்டணியில் புகைச்சல் தொடங்கி விட்டது. அந்த புகைச்சல் விரைவில் நெருப்பாக பற்றி எரியும். சில நாட்களாக அதன் கூட்டணி கட்சியினர் பொது மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச தொடங்கி விட்டனர்.

    நாம் சொந்த காலில் நிற்கிறோம். தி.மு.க. சொந்த கட்சியை நம்பாமல் கூட்டணியை நம்பி உள்ளனர். சிலர் விரைவில் கூட்டணியில் இருந்து வெளியே வர இருக்கின்றனர். பல கட்சிகள் வெளியே வர உள்ளது. நடப்பதை பார்க்கும்போது அப்படி தான் தெரிகிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள சில கட்சிகள் எதிர்த்து குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். தி.மு.க. கூட்டணி விரைவில் உடையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு, ஆளுயர மாலை அணிவித்து வெள்ளி செங்கோலை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார். தொடர்ந்து வீரவாள் பரிசு வழங்கப்பட்டது. தையல் எந்திரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் பொதுமக்களுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    • அதிமுகவை வீழ்த்த எத்தனையோ அவதராங்களை எடுத்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
    • கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் குடும்பத்தினர் மட்டுமே திமுகவில் பதவிக்கு வர முடியும்.

    நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் இன்று மாலை அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழாவின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த பொதுக்கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மக்கள் அடிப்படையில் துவங்கப்பட்ட கட்சி அதிமுக. பிரிந்த இயக்கத்தை ஒன்றிணைத்த பெருமை முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவை சேரும்.

    துவக்க விழா என்பது சாதாரணம் அல்ல. அதிமுகவை வீழ்த்த எத்தனையோ அவதராங்களை எடுத்தார் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இவை அனைத்தையும் வீழ்த்தியவர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா.

    அதிமுக 2ஆக பிரிந்துவிட்டது என கூறி கொண்டு இருக்கிறார்கள். அதிமுக ஒன்றாகதான் இருக்கிறது. வேண்டுமென்றே திட்டமிட்டு கட்சியை பிளவுபடுத்த திமுக போடும் நாடகம் இது.

    கருணாநிதி மற்றும் அமைச்சர்கள் குடும்பத்தினர் மட்டுமே திமுகவில் பதவிக்கு வர முடியும். அதிமுகவில் மட்டுமே சாதாரண தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும். விசுவாசமாக இருப்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் பதவி கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக. ஜனநாயக முறைப்படி செயல்படும் கட்சி அதிமுக. அதிக உறுப்பினர்கள் கொண்ட கட்சி அதிமுக.

    தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட கட்சி அதிமுக. அதிமுகவிற்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது. திமுக தான் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்து வருகிறது. கூட்டணி கட்சிகளை தாங்கி நிற்கின்றது திமுக. அதிமுக சொந்த காலில் நிற்கிறது. சொந்த காலில் நிற்கின்றவர்களுக்கு தான் பலம் அதிகம். திமுக கூட்டணியில் பிரச்னை வந்துவிட்டது. திமுகவிற்கு மக்களிடத்தில் செல்வாக்கு சரிந்துவிட்டது. அதனால் தான் கூட்டணி கட்சியினர் மக்கள் பிரச்னைகளை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர்.

    திமுக ஆட்சியில் கடன் மட்டும் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. திமுக ஆட்சிக்கு வரும்முன் நீட் ரத்து என சொன்னார்கள். இதுவரை நீட் ரத்துகான ரகசியத்தை உதயநிதி வெளிவிடவில்லை"

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார்.
    • எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்சி கொடிகள் கட்டி உள்ளனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி கொடியேற்றுதல், பொதுக்கூட்டங்கள் நடத்துதல் என பல்வேறு நிகழ்ச்சிகளை நிர்வாகிகளும், தொண்டர் களும் மேற்கொண்டு வருகின்றனர்.

    நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் இன்று மாலை பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதனையொட்டி அம்பை-ஆலங்குளம் சாலையில் வடக்கு ரதவீதியில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். அங்கு அவருக்கு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதனைத்தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை மேலப்பாளையம் வழியாக அம்பைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து அம்பையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    அதன்பின்னர் அங்கிருந்து மீண்டும் மேலப்பாளையம் வழியாக நெல்லை மாநகருக்கு இரவில் புறப்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் வண்ணார் பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே மேளதாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதில் திரளான தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

    அதனை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் நயினார் வீரபெருமாள் இல்ல திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சந்திப்பு ரெயில் நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து இரவில் ரெயில் மூலம் அவர் சேலத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

    முன்னதாக எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் இருந்து வரும்போது பாளை கே.டி.சி.நகரில் தமிழ்நாடு யாதவ மகாசபை மாநில நிர்வாகி பொட்டல் துரை இல்ல திருமண விழாவில் கலந்து கொள்கிறார். எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்சி கொடிகள் கட்டி உள்ளனர்.

    மாநகரில் திருமண விழாவிற்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க மேலப்பாளையம் கருங்குளத்தில் தொடங்கி சிக்னல் வழியாக வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலை முழுவதும் அ.தி.மு.க. கொடிகள் கட்டப்பட்டு உள்ளது.

    தொடர்ந்து கொக்கிரகுளம், ஸ்ரீபுரம் வரையிலும் கொடி தோரணங்களும், பிரமாண்ட வரவேற்பு பதாகைகளும் மாநகர் மாவட்டம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் புறநகரில் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் தருவையில் தொடங்கி அம்பை வரையிலும் பிரமாண்ட கட் அவுட்டுகள், வரவேற்பு பேனர்கள், கொடிகள் கட்டப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    • கார் மூலம் நெல்லை மேலப்பாளையம் வழியாக அம்பைக்கு செல்கிறார்.
    • எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் இடையே புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    அ.தி.மு.க. 53-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதனையொட்டி அம்பை-ஆலங்குளம் சாலையில் வடக்கு ரதவீதியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். அங்கு அவருக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர்கள் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    அதனை தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை மேலப்பாளையம் வழியாக அம்பைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு புறநகர் மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். முன்னதாக அவர் சேரன்மகாதேவியில் சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு அம்பையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை போல் சமீப காலமாக அதிரடி முடிவுகளை எடுத்து வரும் எடப்படி பழனிசாமி, கட்சியை பலப்படுத்தவும், வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் நோக்கத்திலும் பல்வேறு புதிய அறிவிப்புகளை அறிவிக்கலாம் என்று கட்சி நிர்வாகிகள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.

    கட்சியின் பொதுக்குழுவை கூட்டுதல், உட்கட்சி தேர்தல், கட்சியின் வளர்ச்சி பணிகள் என பல முக்கிய முடிவுகளை எடப்பாடி பழனிசாமி இந்த பொதுக்கூட்டத்தில் அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    பொதுக்கூட்டத்தில் பேசி முடித்த பின்னர் அங்கிருந்து மீண்டும் மேலப்பாளையம் வழியாக நெல்லை மாநகருக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் வண்ணார்பேட்டை செல்லப் பாண்டியன் மேம்பாலம் அருகே பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    அதனை தொடர்ந்து நெல்லை மாநகராட்சி எதிரே அமைந்துள்ள வர்த்தக மையத்தில் நடைபெறும் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு சந்திப்பு ரெயில் நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து இரவில் ரெயில் மூலம் அவர் சேலத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி வருகையையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள் இடையே புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கட்சி கொடிகள் கட்டும் பணி, வழிநெடுகிலும் வரவேற்பு பேனர்கள் வைக்கும் பணியில் நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×