என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • பேட்டையில் இருந்து டவுன் ஆர்ச் வரை சாலைகள் மோசமாக காணப்பட்டது.
    • பணியை விரைந்து முடித்து தரமான தார்ச் சாலை அமைக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதிக்குள் நுழையும் முக்கிய எல்லை பகுதிகளில் ஒன்றாக குற்றாலம் சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தென்காசி மாவட்டத்தில் இருந்து தினமும் ஏராளமான வாகனங்கள் நெல்லை மாநகருக்குள் நுழைகிறது.

    அதேபோல் நெல்லையில் இருந்து தென்காசி, குற்றாலம் செல்லும் கார்கள், வாகனங்கள், கேரளாவுக்கு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்த சாலையின் இருபுறங்களிலும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இருப்பதால் தொண்டர் சன்னதி முதல் வழுக்கோடை வரையிலான சாலை ஒரு வழிப்பாதையாக செயல்பட்டு வருகிறது. அதன் பின்னர் இரு மார்க்க மாகவும் வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்நிலையில் அரியநாயகி புரம் கூட்டு குடிநீர்திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை, வாறு கால் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் காரணமாக பேட்டையில் இருந்து தொ ண்டர் சன்னதி, நயினார் குளம் வழியாக டவுன் ஆர்ச் வரையிலும் சாலைகள் மிகவும் மோசமாக காணப்பட்டது.

    சுமார் 3 ஆண்டுகளாக அந்த சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், அப்பகுதி குடியிருப்புவாசிகளும் மிகுந்த சிரமம் அடைந்து வந்த நிலையில் தொண்டர் சன்னதி முதல் டவுன் ஆர்ச் வரையிலும் தற்போது தார்ச் சாலை அமைக்கப் பட்டு சீரான போக்குவரத்து நடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

    ஆனால் பேட்டையில் இருந்து தொண்டர் சன்னதி வரையிலும் உள்ள சாலையானது மேடு, பள்ளங்களாக காட்சி யளிக்கிறது. தற்போது கோடை மழை பெய்து வருவதால் அந்த சாலை போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. சேறும், சகதியுமாக காட்சியளிப்பதோடு, மேடு-பள்ளம் இருக்கும் இடம் தெரியாத அளவிற்கு மழைநீர் தேங்கி கிடக்கிறது என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

    தற்போது நெடுஞ்சா லைத்துறை சார்பில் இருபுறமும் வாறுகால் அமைக்கும் பணி நடை பெற்று வரும் நிலையில், அந்த பணியை விரைந்து முடித்து தரமான தார்ச் சாலை அமைக்க வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. அந்த பணி தாமதம் அடையும் பட்சத்தில் தற்காலிகமாக பள்ளங் களில் ஜல்லிகளை கொட்டி சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாளை மேடை போலீஸ் நிலையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் தொழிற்பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.
    • பயிற்சி வகுப்பிற்கு செய்முறைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்படும்.

    நெல்லை:

    தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி சார்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் தொழிற்பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளது.

    பாளை மேடை போலீஸ் நிலையத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள இந்த வகுப்பை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி நாளை காலை தொடங்கி வைக்கிறார்.

    இந்த பயிற்சி வகுப்பில் சாயம் போடுதல் மற்றும் அச்சு பதித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பிற்கு செய்முறைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்படும். பொருட்களுக்கான கட்டணமாக ரூ. 20 வசூலிக்கப்படுகிறது.

    இப்பயிற்சி வகுப்பை மத்திய அரசு நெசவுத் துறை ஆய்வு துறையில் அதிகாரியாக பணியாற்றிய கிருஷ்ணமூர்த்தி நடத்துகிறார். மண்பாண்டம் பொருட்கள் செய்வது குறித்து பாலசுப்பிரமணியன் பயிற்சி அளிக்கிறார்.

    இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முத்து செல்விக்கு இளைப்பு நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்து செல்வி விஷம் குடித்து மயங்கினார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சத்திரம் கள்ளிகுளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி முத்து செல்வி (வயது 34). இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகள் முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் முத்து செல்விக்கு இளைப்பு நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் களக்காடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் நோயின் தாக்கம் குறையாததால் மனம் உடைந்து காணப்பட்டார்.

    கடந்த 27-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் முத்து செல்வி விஷம் குடித்து மயங்கினார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நாகர் கோவில் தனியார் மருத்து வமனைக்கு முத்து செல்வி அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இசக்கிபாண்டி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.
    • பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க கம்மல்கள் திருட்டு போயிருந்தது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிப்புதூர் பருத்திவிளை தெருவை சேர்ந்தவர் இசக்கி பாண்டி (வயது 37). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று பகலில் இசக்கி பாண்டி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த ஒரு பவுன் தங்க கம்மல்கள் திருட்டு போயிருந்தது. இசக்கி பாண்டி வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கம்மல்களை திருடி சென்றுள்ளனர்.

    இது குறித்து இசக்கி பாண்டி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

    • சுதன்ராஜ், விஷ்ணு ஆகியோர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தனர்.
    • விபத்தில் சுதன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    திசையன்விளை:

    வள்ளியூர் அருகே உள்ள மடப்புரத்தை சேர்ந்தவர் தங்கத்துரை. இவரது மகன் சுதன்ராஜ் (வயது 28). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (23). உறவினர்களான இவர்கள் 2 பேரும் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தனர்.

    நேற்று இரவு இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை விஷ்ணு ஓட்டி சென்றார்.

    மோட்டார் சைக்கிள் மீது மோதல்

    மன்னார்புரம் வள்ளியூர் சாலை அருகே சென்றபோது எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் சுதன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விஷ்ணுவிற்கு கால் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் காரை ஓட்டிவந்த கும்பிகுளத்தை சேர்ந்த சங்கர் (34) என்பவர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கண்ணன் கூலி வேலைக்கு சென்று வந்தார்.
    • கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மேலப்பாளையம் நடராஜபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது47). இவருக்கு கலா (45) என்ற மனைவியும், பிரதீப், திலீப் என்ற 2 மகன்களும், பிரீத்தி என்ற மகளும் உள்ளனர்.

    கண்ணன் கூலி வேலைக்கு சென்று வந்தார். நாளை முதல் 3 நாட்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியில் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. அதற்காக கோயம்புத்தூரில் நர்சிங் படிக்கும் தனது மகள் பிரீத்தியை அழைத்து வருவதற்கு ரெயிலில் செல்வதற்கு கலா முடிவு செய்துள்ளார்.

    இதற்காக நேற்று இரவு அவர் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் கலா கோவைக்கு புறப்பட்டு சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த கண்ணன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்ணன் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புகையிலை பொருட்களை அம்பை பகுதிக்கு கொண்டு செல்வதற்காக ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றியது தெரியவந்தது.
    • புகையிலை மூட்டைகளை லோடு ஆட்டோவுக்கு மாற்றிக் கொண்டிருந்த போது போலீசில் சிக்கியது விசாரணையில் தெரிய வந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே லாரியில் இருந்து லோடு ஆட்டோவில் புகையிலை பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களை அம்பை பகுதிக்கு கொண்டு செல்வதற்காக ஒரு வாகனத்தில் இருந்து மற்றொரு வாகனத்திற்கு மாற்றியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தில் இருந்த 4 பேரையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். மேலும் ரூ. 4.10 லட்சம் மதிப்பிலான 530 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து 4 பேரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் அம்பையை சேர்ந்த சூர்யமாதவன் (23), எடிசன் (24), திருவாலீஸ் வரத்தை சேர்ந்த ராஜீவ் காந்தி (30), வி.கே.புரத்தை சேர்ந்த தியாகராஜன் (29) என்பது தெரியவந்தது.

    லாரி டிரைவரான தியாகராஜன், தூத்துக்குடியில் இருந்து பெங்களூருவுக்கு சரக்கு ஏற்றி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி வந்தபோது திருவனந்தபுரத்திற்கு மெடிக்கல் பொருட்களை ஏற்றி உள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் அவரிடம் அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி புகையிலை பொருட்களை லாரியில் ஏற்றி நெல்லைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    நெல்லை வந்ததும், லோடு ஆட்டோ டிரைவரான எடிசன் அவரை முன்னீர்பள்ளத்திற்கு வரச்செய்து அங்கு வைத்து புகையிலை மூட்டைகளை லோடு ஆட்டோவுக்கு மாற்றிக் கொண்டிருந்த போது போலீசில் சிக்கியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • தென்மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
    • சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் செந்துருணி படகு சவாரி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    நெல்லை:

    கேரள மாநிலம் தென்மலை, ஆரியங்காவு பகுதிகளில் கோடை சீசனை அனுபவிக்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆரியங்காவு அருகே உள்ள கும்பவுருட்டி அருவியில் தண்ணீர் பற்றாக்குறையால் தமிழக மக்கள் சற்று வருத்தம் அடைந்துள்ள நிலையில், பாலருவியில் குளிப்பதற்கு பிரதான நீர்வழிப்பாதைக்கு கீழே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்கு குறைந்த அளவிலேயே தண்ணீர் கொட்டினாலும், அடுத்த சில நாட்களில் கோடை மழை பெய்தால் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கும்.

    தென்மலையில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு காடு, சாகச மண்டலம், ஓய்வு மண்டலம், மனிதர் பூங்கா, படகு சவாரி உள்ளிட்டவை செய்து மகிழலாம். தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் செந்துருணி படகு சவாரி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதில் 4 பேர் படகு பயணத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மலைகளை ரசிக்கக்கூடிய ஜீப் சவாரிக்கும் சுற்றுலா பயணிகள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து காணப்படுகிறது.

    புனலூரில் இருந்து சுற்றுலா தலங்களைப் பார்க்க ஆரம்பிக்கலாம். இந்த பயணத்தின்போது, லுக்அவுட் தடுப்பணை, முழு கல்லடையார் வலது மற்றும் இடது கரை கால்வாய்கள் வழியாக தண்ணீர் பாய்வதை காணலாம். தும்பாறை, புளோரன்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலைச்சரிவில் பனை தோப்புகள் விரிந்து கிடக்கின்றன. அங்குள்ள அம்பநாடு தேயிலை தோட்டத்திற்கும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சென்று சுற்றி பார்த்து வருகின்றனர்.

    • தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பாளையில் நடைபெற்றது.
    • பேச்சுப் போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 5 தலைப்புகளில் நடத்தப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி பளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

    தலை நிமிரும் தமிழகம் என்பதற்கு வலு சேர்க்கும் வகையில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இந்த பேச்சுப் போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தலா 5 தலைப்புகளில் நடத்த ப்பட்டது. இதில் திரளான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் மரியதாஸ் முன்னி லை வகித்தார். சிறுபான்மை யினர் நல ஆணையத்தின் மாவட்ட ஒருங்கி ணைப்பா ளரும், முன்னாள் எம்.பி.யுமான விஜிலா சத்யானந்த் வரவேற்றார். அப்துல்வகாப் எம். எல்.ஏ., மேயர் சரவணன், மாவட்ட பஞ்சா யத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.

    சிறுபான்மையினர் ஆணைய மாநில ஒருங்கி ணைப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான அழகிரிசாமி நோக்க உரையா ற்றினார். முடிவில் நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் அந்தோணி செல்வராஜ் நன்றி கூறினார்.

    மாவட்ட அளவில் நடை பெறும் இந்த பேச்சு போட்டியில் வெற்றி பெறும் மாணவ -மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கு வார்.

    பெண்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மகளிருக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் மகளிரு க்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பாளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

    இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். இதில் அப்துல் வஹாப் எம். எல். ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமானது கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உருவாகி வரும் ஒரு சோலார் நிறுவனத்தின் வேலை வாய்ப்புகளுக்காக நடத்தப்பட்டது. இந்த நிறுவனம் மூலம் 1600-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த வேலை வாய்ப்பு முகாமுக்கு 1,536 பேர் பதிவு செய்திருந்தனர். 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட 10,12-ஆம் வகுப்பு, பாலி டெக்னிக், பட்டப்படிப்பு மற்றும் என்ஜினீயரிங் ஆகிய துறைகளை சேர்ந்த பட்டம் பெற்ற அல்லது இறுதி ஆண்டு மாணவிகள் இதில் பங்கேற்றனர்.

    இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த படித்த மகளிர்கள் கலந்து கொண்டனர். தேர்ந்தெடு க்கப்பட்ட மகளிர்கள் அடுத்த 6 - 10 மாதங்களில் படிப்படியாக பணியில் சேர்த்துக் கொள்ளப்படு வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

    • பாளை தெற்கு பஜாரில் உள்ள ராமசாமி கோவில் பிரசித்தி பெற்றது.
    • இந்த கோவிலையொட்டி உள்ள தெப்பக்குளத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் சிறப்பு வாய்ந்தது.

    நெல்லை:

    பாளை தெற்கு பஜாரில் உள்ள ராமசாமி கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலை யொட்டி உள்ள தெப்பக்குளத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும் தெப்ப உற்சவம் சிறப்பு வாய்ந்தது.

    சிதிலமடைந்த தெப்பக்குளம்

    கடந்த சில ஆண்டுகளாகவே தெப்பக்குளத்தை சுற்றி உள்ள கல் சுவர்கள் உடைந்து விழுந்ததோடு, தெப்பக்குளம் சிதிலம் அடைந்து காணப்படுவதாக பக்தர்கள் புகார் கூறினர்.

    எனவே தெப்பக்குளத்தை சீரமைத்து தெப்ப உற்சவம் நடத்த வேண்டும் என பக்தர்களும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்தனர்.

    சீரமைப்பு பணிகள்

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் செத்து மிதந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து பக்தர்கள் கோவில் செயல் அலுவலர் சுஜாதாவிடம் புகார் கூறினர்.

    இதுபற்றி செயல் அலுவலர் சுஜாதா கூறுகை யில், கோவில் தெப்பகுளம் பல வருடங்களாக சீரமைக் கப்படாமல் உள்ளது. எனவே சிதிலம் அடைந்து காணப்படும் தெப்பக்குக் குளத்தை சீரமைத்து திருப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக தெப்பக்குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டியது அவசியமாக உள்ளது.

    எனவே 2 அடிக்கு மட்டும் தண்ணீர் வைத்து விட்டு மீதமுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மீன்களுக்காக தெப்பக்குளத்திற்குள் ஒரு கிணறு உள்ளது. அதையும் தாண்டி தற்போது வெயி லின் தாக்கத்தால் மீன்கள் இறந்துள்ளது.

    விரைவில் தெப்பக்குளத்தை முழுமையாக சீரமைத்து திருப்பணிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பாளை யூனியனுக்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    நெல்லை:

    பாளை யூனியனுக்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் பஞ்சாயத்து தலைவி அனுராதா ரவிமுருகன் தலைமையில் நடைபெற்றது. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் சார்பில் நடந்த இந்த விழிப்புணர்வு பிரசார கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    இதில் கலந்து கொண்ட பெண்களிடம், மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகள், பெண்களுக்கான நீதிகள், அதனை எவ்வாறு பெறுவது என்பது குறித்து அவர் விளக்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், வார்டு உறுப்பினர் ராஜாமணி, பணித்தள பொறுப்பாளர் சோபனா, ஊர் நாட்டாமைகள் செந்தூர் கனி, பரமசிவன், கிருஷ்ணன், பம்ப் ஆப்ரேட்டர் ராமச்சந்திரன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • களக்காடு அருகே உள்ள கருப்பந்தோப்பை சேர்ந்த விவசாயி இசக்கி மனைவி சீதை கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.
    • இதனைதொடர்ந்து இசக்கி தனது மகன் மணிகண்டனுடன் வசித்து வந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கருப்பந்தோப்பை சேர்ந்தவர் இசக்கி (வயது72).விவசாயி. இவரது மனைவி சீதை கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இதனைதொடர்ந்து இசக்கி தனது மகன் மணிகண்டனுடன் வசித்து வந்தார். மனைவி இறந்ததால் இசக்கி மன விரக்தியுடன் காணப்பட்டார். நேற்று அவர் கருப்பந்தோப்பு குளக்கரையில் வைத்து விஷம் குடித்தார்.

    பின்னர் வீட்டிற்கு வந்த அவர் மயங்கினார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக இசக்கி நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×