என் மலர்
திருநெல்வேலி
+3
- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 12 மையங்களில் 6,879 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
- தூத்துக்குடி மாவட்டத்தில் 1,888 மாணவ-மாணவிகள் தேர்வு எழுது கின்றனர்.
நெல்லை:
மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கான நீட் தகுதி தர்வு இன்று நாடு முழுவதும் நடக்கிறது.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று தேர்வு நடைபெறுவதை யொட்டி முன்னேற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டு தயார்நிலையில் மையங்கள் இருந்தன.
15 மையங்கள்
நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரியில் 960 பேரும், எப்.எக்ஸ். மேல்நிலைப்பள்ளியில் 375 பேரும், மகாராஜாநகர் ஜெயேந்திரா பள்ளியில் 480 பேரும், தென்காசி மாவட்டம் ஏ.வி.கே. இன்டர்நேஷனல் பள்ளியில் 480 பேர் உள்பட நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 12 மையங்களில் 6,879 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி உள்பட மொத்தம் 3 மையங்களில் 1,888 மாணவ-மாணவிகள் தேர்வு எழுது கின்றனர். இதனையொட்டி தேர்வு மையங்களில் மாண வர்களின் பதிவெண்களை ஒட்டி இடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
மேலும் நெல்லை, தூத்துக்குடி மாநகர பகுதி களில் உள்ள தேர்வு மையங்களை தூய்மை ப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணி யும் சுகாதாரத்துறை யினரால் மேற்கொள்ள ப்பட்டது. இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வானது மாலை 5.20 மணி வரை நடக்கிறது.
தேர்வு மையங்களில் முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக அனைத்து மையங்களின் உள்புறமும் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இதுதவிர தேர்வுத்துறை அதி காரிகளின் உத்தரவின்பேரில் அனைத்து மையங்களிலும் துல்லியமாக நேரத்தை அறியும் விதமாக கடிகாரங்கள் பொருத்தப்பட்டு இருந்தது.
மேலும் தேர்வின்போது மின்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மின்வாரிய அதிகாரி களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் மின்தடை ஏற்படவில்லை. கடுமையான ஆய்வு மற்றும் சோதனைகளுக்கு பின்னரே தேர்வர்கள் அறைக்குள் அனுமதிக்கப்படு வார்கள். பெரும்பாலான தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே தேர்வு கூடங்களுக்கு வந்தனர். அவர்களுடன் அவர்களது பெற்றோரும் வந்திருந்தனர். தேர்வையொட்டி இன்று காலை முதல் அனைத்து தேர்வு மையங்களும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
- நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 3,080 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
- விண்ணப்பித்தவர்களில் 1,310 பேர் தேர்வு எழுத வரவில்லை.
நெல்லை:
தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சாலை ஆய்வாளர் பணிக்கு 825 காலி இடங்களுக்கு எழுத்து தேர்வு இன்று நடை பெற்றது.
நெல்லை
எழுத்து தேர்வு முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என 2 நிலைகளில் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் 9 பள்ளிகளில் உள்ள 11 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை எழுதுவ தற்காக 3,080 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதில் 1,770 பேர் தேர்வு எழுதினார்கள். இது 57.4 சதவீதமாகும். விண்ணப் பித்தவர்களில் 1,310 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வை கண்காணிக்க துணை தாசில்தார் நிலை யில் 5 சுற்றுக்குழு அலு வலர்கள் மற்றும் தேர்வு நடவடிக்கை களை பதிவு செய்ய 12 வீடியோ கிராபர்கள், ஒரு அறைக்கு ஒரு அலுவலர் வீதம் 11 அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் தேர்வை கண்காணித்தனர். தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் 2 மணி நேரத்திற்கு முன்பு தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
- ஆவின் பாலகத்தை ஸ்டீபன் என்பவர் நடத்தி வருகிறார்.
- கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு ஸ்டீபன் அதிர்ச்சி அடைந்தார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மேலப்பாளையம் உழவர் சந்தையில் ஆவின் பாலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த ஆவின் பாலகத்தை அப்பகுதியை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் அவர் கடையை பூட்டிவிட்டு இன்று அதிகாலை அங்கு சென்று பார்த்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் பாலகத்தின் உள்ளே சென்று பார்த்தபோது ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ரூ.1,500 மதிப்புள்ள பால் பாக்கெட்டுகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது.
இதற்கிடையே கடை உரிமையாளர் ஸ்டீபன் கூறுகையில், கடந்த 2 வாரங்களில் இதே ஆவின் பாலகத்தின் பூட்டை உடைக்க 4 முறை முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
- சுப்பிரமணி நெல்லை சந்திப்பு பகுதியில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்தார்.
- காயம் அடைந்த சுப்பிரமணியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது21), தனியார் பஸ் கண்டக்டர். சுத்தமல்லி மேலத்தெருவை சேர்ந்தவர் தாமரை கண்ணன் என்ற மதன் (27). இவரும் தனியார் பஸ் கண்டக்டராக உள்ளார். இவர்கள் இருவரு க்கும் இடையே பயணிகளை ஏற்றுவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் நேற்று சுப்பிரமணி நெல்லை சந்திப்பு பகுதியில் பயணிகளை ஏற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தாமரை கண்ணன் மற்றும் அவரது நண்பரான நம்பிராஜன் என்ற சுந்தர் ஆகிய 2 பேர் சுப்பிரமணியை அவதூறாக பேசி அரிவாளால் வெட்டினர்.
சத்தம் கேட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தலைமை காவலர் முருகன் ஓடி வந்தார். உடனே தாமரை கண்ணன், நம்பிராஜன் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பின்னர் சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மற்றும் போலீசார் விரைந்து வந்து காயம் அடைந்த சுப்பிரமணியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர் கொடுத்த புகாரின் பேரில் தாமரைக்கண்ணன், நம்பிராஜன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
- அரவிந்த்குமார் விருதுநகரில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
- கார்த்திக் உள்ளிட்டோர் வேனின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
களக்காடு:
விருதுநகர் லெட்சுமிநகர் பாரதியார் தெருவை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது34). இவர் விருதுநகரில் கார்மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இவரும், இவரது நிறுவனத்தில் பணிபுரியும் 10 பெண்களும் கன்னியா குமரிக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் மாலையில் வேனில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
தகராறு
நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளம் நான்குவழி சாலையில் சென்ற போது, அந்த வழியாக வந்த ஜீப், வேன் மீது உரசுவது போல் வந்தது. இதைப்பார்த்த அரவிந்த்குமார் வேனை நிறுத்தி, ஜீப்பில் வந்த மஞ்சங்குளத்தை சேர்ந்த கார்த்திக் (30), தோவா ளையை சேர்ந்த நாகசுமன் (25), ஏர்வாடியை சேர்ந்த சேக்மன்சூர் (19) ஆகியோர் களிடம் தட்டி கேட்டார்.
இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் உள்பட 3 பேரும் சேர்ந்து, அரவிந்த்குமார், வேன் டிரைவரான விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர். நகர், துலுக்கர்பட்டியை சேர்ந்த நாகராஜ் (31), சூலக்கரையை சேர்ந்த மாதவி (45) ஆகியோரை சரமாரியாக தாக்கினர். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
வேன் கண்ணாடி உடைப்பு
மேலும் வேனின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் ஜீப்பில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கார்த்திக் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- சிவபுரம் கிராமத்தை சுற்றிலும் நீர் ஓடைகள் ஓடுகின்றன.
- இங்கு குளிக்க நுழைவு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிவபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் நீர் ஓடைகள் ஓடுகின்றன.
சுற்றுலா பயணிகள்
இதில் குளிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். சிவபுரம் பகுதி களக்காடு நகராட்சிக்கு உட்பட்டதாகும்.
வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வராததால் இங்கு குளிக்க நுழைவு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என்பதால் சிவபுரத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக களக்காடு வன த்துறையினர் சிவப்புரத்திற்கு செல்லும் சாலையை தடுப்புகள் வைத்து அடைத்துள்ளனர். மேலும் சிவபுரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியும் மறுத்து வருகின்றனர். தற்போது கோடைகால விடுமுறை தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
வனத்துறை அனுமதி மறுப்பு
சிவபுரத்திற்கு வனத்துறை யினர் அனுமதி மறுப்பதால் அவர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். அத்துடன் அங்கு பணியில் இருக்கும் வனத்துறை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து நெல்லை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுச்செயலாளர் களந்தை மீராசா வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவபுரம் பகுதி நகராட்சிக்கு உட்பட்டது. இங்கு செல்ல வனத்துறை தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது. சிவபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிவதால் தலையணையில் நுழைவு கட்டண வசூல் பாதிக்கப்படுகிறது. இதனால் கட்டண வசூலை அதிகரிக்க வனத்துறையினர் இது போன்று செய்வது ஏற்கக் கூடியது இல்லை.
களக்காட்டை பொருத்த வரை குளிப்பதற்கும் தண்ணீர் இல்லை. குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை. எனவே தான் பொதுமக்கள் சிவபுரத்தை நாடுகின்றனர். அதற்கும் தடை விதிப்பதை கண்டித்து விரைவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
எனவே வழக்கம் போல சுற்றுலா பயணிகள் சிவபுரத்திற்கு செல்ல மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நாளை காலை கோடை விடுமுறை கால பயிற்சி முகாம் தொடங்க உள்ளது.
- காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சிகள் நடைபெறும்.
நெல்லை:
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் கோடை விடுமுறை காலத்தினை பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு கோடை விடுமுறை கால பயிற்சி முகாம் தொடங்க உள்ளது.
இப்பயிற்சி முகாமில் ஓவிய பயிற்சி, கலை பயிற்சி ,கழிவுகளில் இருந்து கலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி, களிமண்ணில் பொம்மைகள் செய்யும் பயிற்சி, காகிதக்கலை பயிற்சி, பேச்சுக்கலை பயிற்சி, எழுத்துக்கலை பயிற்சி, கதை சொல்லல் பயிற்சி, யோகா பயிற்சி, சிலம்பம் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் நடைபெற உள்ளன. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இப்பயிற்சிகள் நடைபெறும். வருகிற 31-ந்தேதி வரை இப்பயிற்சி முகாம் நடைபெறும். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 75024 33751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.
- டாஸ்மாக் காவலாளி அய்யாக்குட்டி பணியில் இருந்தபோது அங்கு ஒரு மினி லோடு ஆட்டோவில் 4 பேர் கும்பல் வந்தனர்.
- மேற்பார்வையாளர் ராமர் ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடக்கன்குளத்தில் இருந்து பெத்தரெங்கபுரம் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இதன் மேற்பார்வையாளராக களக்காட்டை சேர்ந்த ராமர் என்பவர் பணியாற்றி வருகிறார்.
வழக்கம்போல் நேற்று இரவு விற்பனையை முடித்துவிட்டு ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை கைப்பையில் எடுத்துக்கொண்டு கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் டாஸ்மாக் காவலாளி அய்யாக்குட்டி பணியில் இருந்தபோது அங்கு ஒரு மினி லோடு ஆட்டோவில் 4 பேர் கும்பல் வந்தனர்.
அவர்கள் காவலாளியை மிரட்டி அமரச்செய்துவிட்டு, கடையின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்தனர். பின்னர் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் மற்றும் விலை உயர்ந்த மது பாட்டில்களை அந்த கும்பல் லோடு ஆட்டோவில் ஏற்றி சென்று விட்டனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராக்களையும் அந்த கும்பல் உடைத்தனர்.
இதுகுறித்து மேற்பார்வையாளர் ராமர் ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக இன்று காலை போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைந்துள்ளது.
- பண்ணை மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் லாபம் கிடைக்கிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம், மானூர் வட்டாரம் வன்னிக்கோனேந்தல் கிராமத்தில் 9.86 ஹெக்டேர் பரப்பில் அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைந்துள்ளது.
இப்பண்ணையில் ஆண்டுக்கு சுமார் 55 லட்சம் வீரிய ஒட்டு ரக குழித்தட்டு காய்கறி நாற்றுகள், சுமார் 3 லட்சம் மா, நெல்லி, சப்போட்டா ஒட்டுக்கன்றுகள், கொய்யா பதியன்கள் மற்றும் இதர தோட்டக்கலை நடவுச்செடிகள் உற்பத்தி செய்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்டங்களுக்கு தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்களுக்கும், அனைத்து தர விவசாயிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை வருமானம் ஈட்டப்பட்டு வருகிறது.
இதன் மூலம் அரசுக்கு ஆண்டுதோறும் குறைந்த பட்சம் ரூ.50 லட்சம் லாபம் கிடைக்கப் பெற்று வருகிறது. இப்பண்ணையை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேரில் ஆய்வு செய்தார்.
இங்கு உற்பத்தி செய்யப்படு கிற மா ஒட்டுக்கன்றுகள், கொய்யா பதியன்கள், சப்போட்டா ஒட்டுக்கன்றுகள், எலுமிச்சை வேர் பிடித்த குச்சிகள் மற்றும் இதர பழச்செடி கள் மற்றும் கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் முறைகளை கேட்டறிந்தார்.
மேலும் மாவட்டத்தில் நெல்லி, மா, எலுமிச்சை போன்ற பல்லாண்டு பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்து அதனை மாவட்டத்தில் உள்ள அதிகளவிலான விவசாயி களுக்கு திட்டங்கள் மூலம் வழங்குவதற்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது தோட்ட க்கலை துணை இயக்குநர் பாலகிருஷ்ணன், உதவி இயக்குநர் இளங்கோ மற்றும் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
- நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன.
- மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை உரமாக மாற்றப்படும்.
நெல்லை:
நாட்டில் அரசு துறைகளில் புதுமையான திட்டங்களை, வெற்றிகரமாக செயல்படுத்தும் நிறுவனங்களை பாராட்டி, 'ஸ்கோச்' அமைப்பு விருது வழங்குகிறது.
அந்த வகையில், நெல்லை மாநகராட்சி தனது தூய்மை மொபைல் செயலி மற்றும் வெப் அப்ளிகேஷன் மூலம் நகர்ப்புற குடிமை அமைப்பில் சிறந்த திடக்கழிவு மேலாண்மை நடைமுறைகளை ஏற்படுத்தியதற்காக ஸ்கோச் அமைப்பினர் 'தங்க வகை' விருதை பெற்றுள்ளது.
இந்த விருதை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி டெல்லியில் வருகிற 28-ந்தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெறுகிறார். நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இங்கு தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் ராமையன்பட்டியில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
ஆனால் பணியாளர்கள் பற்றாக்குறை, குறித்த நேரத்தில் வார்டுகளுக்கு சென்று குப்பைகள் சேகரிப்பதில் தாமதம் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் மாநகராட்சி சார்பில் 'தூய்மை' என்ற பெயரில் மொபைல் செயலி மற்றும் வெப் அப்ளி கேஷன் தொடங்கப்பட்டது. இதன் மூலம் தூய்மை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி பணியாளர்களின் வருகை, பணி முன்னேற்றத்தை கண்காணிப்பதில் தீர்வு ஏற்பட்டது.
மேலும் தூய்மை பணியா ளர்களின் வருகைப்பதிவு, நெல்லை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை உரமாக மாற்றப்படும் மைக்ரோ கம்போஸ்ட் சென்டர்கள் புதுப்பித்தல், பணி முன்னேற்றம், முதன்மை சேகரிப்பு புதுப்பித்தல் போன்ற திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் தனிப்பயனாக்கப்பட்டு இந்த ஆப்-பில் சேர்க்கப்பட்டன. அவையும் பின்னர் அதிகாரிகளால் கண்காணிக்கும் வகைக்கு கொண்டு வரப்பட்டது. தொடக்கத்தில் இந்த மொபைல் ஆப் பயன்பாட்டுக்கு வருவதில் மிகுந்த சிரமமாக இருந்த நிலையில் தற்போது சுகாதார அதிகாரிகள் புரிந்துகொண்டு செயல்படவும், பயனர்களுக்கு ஏற்றதாகவும் மாற்றப்பட்டது.
இது வார்டு அளவிலான செயல்பாடுகள் மற்றும் அறிக்கையிடலை பயனுள்ள முறையில் வழங்கியது. மேலும் இதுபோன்ற ஆப்-கள் மூலம் இருப்பிட கண்காணிப்பு பதிவு செய்யப்பட்டதால் கூடுதலாக பல நன்மைகள் கிடைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் விளைவாக வேலை அல்லது ஒரு செயல்பாடு உண்மையில் செய்யப்பட்டு ள்ளது என்பதற்கான ஆதாரம் இருக்கும். வார்டு எல்லைகளை மேப்பிங் மூலமாக ஜியோ-பென்சிங் செய்வதன் மூலம் இந்த தீர்வு செயல்படுத்தப்படுகிறது.
இந்த ஆப் மூலமாக அதிகாரிகள் மத்தியில் பொறுப்புணர்வு மற்றும் பணியில் கவனம் செலுத்தும் உணர்வு உருவாகி வருகிறது. இதன் மூலம் தூய்மை பணியாளர்களின் 100 சதவீதம் வருகையை பெற்று, குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக அளவு கழிவுகளை சேகரிக்க முடியும் என்பதால் தற்போது நெல்லை மாநகராட்சி தூய்மையான மாநகராட்சியாக திகழ்கிறது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- 22 மாதத்தில் 4.65 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது.
- இதுவரை 1,440 ஆரம்ப பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை:
வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் தமிழக அரசின் 2-ம் ஆண்டு சாதனையை முன்னிட்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை வழங்கும் விழா நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
மாதாந்திர உதவித்தொகை
கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு 500 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1000-ஐ வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-
500 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை இன்று வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு பொறுப் பேற்றதில் இருந்து முந்தைய அரசு கிடப்பில் போடப்பட்ட பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்துள்ளது. அடிக்கல் நாட்டிய பணி களை உடனடியாக தொடங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
22 மாதத்தில்
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 22 மாதத்தில் 4.65 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின் போது சாதி சான்று மற்றும் வருமான சான்று உள்ளிட்டவை கேட்டு 4.38 லட்சம் பேர் விண்ணப்பித்தி ருந்தனர். தற்போது அவைகள் அனைத்தும் கொடுக்கப் பட்டு 785 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது.
வருவாய் துறை அதிகாரிகள் இரவு, பகல் பார்க்காமல் உழைத்ததின் காரணமாகவே அரசுக்கு பாராட்டுகள் கிடைத்து உள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு
அரசு ஆரம்ப பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வறுமையை கருத்தில் கொண்டு இது வரை 1440 ஆரம்ப பள்ளிகளில் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பள்ளி களிலும் காலை உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
செப்டம்பர் 15-ந்தேதி தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கை) சுகன்யா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் குமார தாஸ் மற்றும் அதிகாரி கள் கலந்து கொண்டனர்.
- மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும்.
- விழாவில், சிறந்த மாணவிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை சாரதா மகளிர் கல்லூரியில் இறுதியாண்டு மாணவிகள் தங்கள் பெற்றோரின் பாதங்களை வழிபடுகிற பாத பூஜை விழா நடை பெற்றது. கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவபிரியா அம்பா அறிவுரையின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் கல்லூரி முதல்வர் கமலா வரவேற்று பேசினார்.
மாணவிகள் பேரவைத்தலைவரும், கணினிப்பயன்பாட்டியல் துறைத்தலைவருமான அனுஷா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் சாரதா கல்வியியல் கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்காபிரியா அம்பா கலந்து கொண்டு பேசுகையில், மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் என்றார்.
பின்னர் அவர் பாதபூஜை விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கல்லூரி மாணவிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவி கள் தங்கள் பெற்றோரின் பாதங்களை வணங்கி பூஜை செய்தனர்.
நிகழ்ச்சியில் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவிகள் பிரதிநிதி களுக்கு நினைவுப் பரிசும், சிறந்த மாணவிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
தொடர்ந்து பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பெற்றோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. முடிவில் கணிப் பொறியியல் துறை உதவி பேராசிரியர் விஜயலெட்சுமி நன்றி கூறினார்.






