என் மலர்
திருநெல்வேலி
- சிறார் நீதிமன்றத்தில் 4 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.
- 2 சகோதரர்கள் மற்றும் 2 சிறுவர்கள் கைது.
நெல்லை:
நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கடந்த 7-ந்தேதி மாலை 6.50 மணிக்கு பயணிகள் ரெயில் புறப்பட்டது.
அந்த ரெயில் இரவு 8 மணி அளவில் காயல்பட்டினத்தை கடந்து வீரபாண்டியன்பட்டனம் அருகே சென்றபோது தண்டவாளத்தில் சுமார் 5 அடி நீளமுள்ள கம்பி வேலி அமைக்க பயன்படுத்தப்படும் 3 கற்கள் வைக்கப்பட்டு இருந்தது.
இதைப்பார்த்து என்ஜின் டிரைவர், அதிர்ச்சி அடைந்து ரெயிலை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் ரெயில் சக்கரங்கள் 2 கற்களில் ஏறி உடைத்துவிட்டு நின்றது.
இதையடுத்து தகவலை நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு அவர் தெரிவித்தார். பின்னர் 15 நிமிட தாமதத்திற்கு பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராம கிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
தண்டவாளத்தில் கற்களை வைத்தது யார்? நாசவேலைக்காக கற்களை வைத்தார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தண்டவாளத்தில் கற்களை வைத்தது வீரபாண்டியன்பட்டினம் அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்த 19 மற்றும் 18 வயதுடைய 2 சகோதரர்கள் மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், வாலிபர்கள் 2 பேரும் தண்டவாளத்தில் கல்லை வைத்து ரெயில் ஏறுவதை 'ரீல்ஸ்' வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதற்காக திட்டமிட்டிருந்ததும், அதன்படி தண்டவாளத்தில் கல் மீது ரெயில் ஏறுவதை அவர்கள் வீடியோ எடுத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அதில் 2 பேர் சிறார்கள் என்பதால் நீதிபதிகள் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு சிறார் நீதிமன்றத்தில் சுமார் 4 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது.
பள்ளிக்கு சென்று படிப்பது, வாழ்வில் முன்னேறுவது குறித்து அறிவுரை கூறப்பட்டது. மேலும் கைதான 2 வாலிபர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- பாதுகாப்பான ரெயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
- போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
நெல்லை:
வேலூர் அருகே நேற்று முன்தினம் ஓடும் ரெயிலில் சைக்கோ வாலிபர் ஒருவர், ரெயில் பெட்டியில் இருந்த கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். பின்னர் அந்த பெண்ணை ரெயிலில் இருந்து தள்ளி விட்டார். இது தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். பாதுகாப்பான ரெயில் பயணம் தொடர்பாக பெண்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர்.
அதன்படி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இன்று நண்பகலில் வந்த திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயிலில் இருந்த பயணிகளுக்கு சந்திப்பு ரெயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா மோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வன் ஆகியோர் தலைமையிலான போலீசார் இன்டர்சிட்டி ரெயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் ஏறி அதில் இருந்த பெண் பயணிகளுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். காலியாக இருக்கும் பெட்டிகளில் தனிமையாக பயணிக்க வேண்டாம், சக பயணிகளுடன் சேர்ந்து பயணியுங்கள் என்று பெண் பயணிகளுக்கு அவர்கள் அறிவுறுத்தினர்.
ரெயிலில் சந்தேக படும்படியாக நபர்கள் யாரும் பயணித்தாலோ, நடுவழிகளில் ஏதேனும் நபர்கள் ரெயில் பெட்டியில் ஏறினாலோ உடனடியாக பெட்டியில் ஒட்டப்பட்டிருக்கும் ரெயில்வே பாதுகாப்பு தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும், அவ்வாறு தெரிவித்தால் அடுத்ததாக உள்ள ரெயில் நிலையத்தில் இருந்து போலீசார் விரைந்து வந்து விடுவார்கள் என்றும் அவர்கள் கூறி எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து அந்த ரெயிலில் உள்ள பெட்டிகளில் சந்தேகத்திற்கு இடமாக யாரேனும் பயணிக்கிறார்களா? என்று போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
- பாம்பின் கூடு பறவைகளின் கூடு போன்று அல்ல.
- கூடு வைத்திருக்கும் காலங்களில்தான் பாதுகாப்புக் கருதி கருஞ்சாத்தி ஆட்களை விரட்ட முற்படுகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் தற்போது பணிகள் எதுவும் நடக்காததால் யானை, சிறுத்தை, ராஜநாகம் என அனைத்து வன விலங்குகளும் சுதந்திரமாக வந்து செல்கிறது.
இந்நிலையில் மாஞ்சோலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தின் அருகே ராஜநாகம் ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து பரப்பி உள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது. சுமார் 18 அடி நீளம் கொண்ட அந்த ராஜநாகம் எவ்விதமான பரபரப்பும் இன்றி சாதாரணமாக நின்று மெதுவாக ஊர்ந்து செல்கிறது.
இதுகுறித்து மாஞ்சோலை மற்றும் காணி பழங்குடியின மக்கள் கூறுகையில், எங்கள் மக்கள் ராஜநாகத்தை 'கருஞ்சாத்தி' என்று அழைக்கின்றனர். இவைகளின் கூட்டை பல முறை பார்த்துள்ளோம். பாம்பின் கூடு பறவைகளின் கூடு போன்று அல்ல. இது மிக இறுக்கமாக இருக்கும். காட்டுத் தீ ஏற்பட்டால் கூட அதைத் தாங்கும் வலிமையில் அந்தக் கூடு வேயப்பட்டிருக்கும். அவை கண் இமைக்கும் நேரத்தில் நம்மை நோக்கி சீறிப் பாய்ந்து விரட்டும். கூடு வைத்திருக்கும் காலங்களில்தான் பாதுகாப்புக் கருதி கருஞ்சாத்தி ஆட்களை விரட்ட முற்படுகிறது. மற்ற காலங்களில் மிக சாதுவாக இருக்கும் என்றனர்.
- சண்முகர் ஆண்டு விழா நாளை நடக்கிறது.
- பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதா லும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தைப்பூசம் என்பதாலும், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்தவாறு உள்ளனர்.
மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 வருடங்கள் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் சண்முகர் ஆண்டு விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.
4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.
நாளை மறுநாள் (செவ்வாய் கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது.
10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் மருத்துவ வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க பக்தர்கள் வரும் வாகனங்கள் ஊருக்கு வெளியே பல்வேறு இடங்களில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வருகிற ஏப்ரல் மாதம் 13, 20, 27, மே மாதம் 4, 11, 18, 25 மற்றும் ஜூன் 1, 8, 15, 22, 29-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
- தாம்பரம்-கொச்சுவேலி ஏசி சிறப்பு ரெயில் (06035) வருகிற ஏப்ரல் மாதம் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.
நெல்லை:
நடைமுறை காரணங்களுக்காக தாம்பரம்-நாகர்கோவில், கொச்சுவேலி சிறப்பு ரெயில்கள் சேவை 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி, நெல்லை வழியாக இயக்கப்படும் நாகர்கோவில்-தாம்பரம் அதிவிரைவு ரெயில் (வண்டி எண்.06012) வருகிற ஏப்ரல் மாதம் 13, 20, 27, மே மாதம் 4, 11, 18, 25 மற்றும் ஜூன் 1, 8, 15, 22, 29-ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (06011) வரும் ஏப்ரல் மாதம் 14, 21, 28, மே 5, 12, 19, 26 மற்றும் ஜுன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல், தாம்பரம்-கொச்சுவேலி ஏசி சிறப்பு ரெயில் (06035) வருகிற ஏப்ரல் மாதம் 11, 18, 25, மே 2, 9, 16, 23, 30 மற்றும் ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.
- அனைத்து தரப்பிரனரும் திரண்டு வந்து முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- அதிருப்தி அடைந்த மக்கள், அரசு சுற்றுலா மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லையில் 2 நாள் கள ஆய்வு பயணத்தை நேற்று தொடங்கினார்.
இன்று 2-வது நாள் நிகழ்ச்சியாக நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டார்.
அப்போது சாலையோரம் செண்டை மேளமும், நாதஸ்வர இசை வாத்தியங்களும் இசைத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் மேளதாளங்கள் முழங்கப்பட்டது.
தொடர்ந்து பாளை காந்தி மார்க்கெட்டில் தொடங்கி விழா மேடை வரையிலும் ஏராளமான பெண்கள், நிர்வாகிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பிரனரும் திரண்டு வந்து முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் திரண்டிருந்ததை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேனில் இருந்து இறங்கி சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினார். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவருடன், செல்பி எடுத்து கொண்டனர்.
இதனிடையே, நெல்லை வரும் முதலமைச்சர் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகின.
அதன்படி, மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கி உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்க்க இன்று காலை வந்துள்ளனர். அப்போது முதலமைச்சரும் நேரம் ஒதுக்கி உள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் முதலமைச்சர் அரசு விழாவுக்குப்புறப்படும் போது வெளியே வேனில் இருந்துகொண்டே மனுக்களை வாங்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மக்கள், அரசு சுற்றுலா மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், இருட்டுக்கடையில் அல்வா சாப்பிட நேரம் இருந்த ஸ்டாலினுக்கு மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரமில்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரம் ஒதுக்கியும் சந்திக்க மறுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - இருட்டுக் கடையில் அல்வா சாப்பிட நேரம் இருந்த ஸ்டாலினுக்கு, 9 மாதம் பசியோடும் பட்டினியோடும் போராடும் மாஞ்சோலை மக்களை சந்திக்க நேரமில்லை.! என்று கூறியுள்ளார்.
- விவசாய நிலங்கள் பயன்பெறும்.
- 24 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது நாளான இன்று நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடந்த அரசு விழாவில் பங்கேற்றார்.
இந்த விழாவில் இந்தியாவின் முதல் நதிநீர் இணைப்பு திட்டமாக அறிவிக்கப்பட்டு ரூ.1060.76 கோடி மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டுள்ள தாமிரபரணி ஆறு-கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் உள்ள வறண்ட பகுதிகளான திசையன்விளை, எம்.எல். தேரி பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்.
தொடர்ந்து ரூ.77 கோடி மதிப்பில் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்கா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு அமைக்கப்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் திட்டம், நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட 24 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
மேலும் நெல்லை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கடந்த முறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லைக்கு வருகை தந்தபோது அறிவிக்கப்பட்ட நெல்லை மேற்கு புறவழிச்சாலை தொகுதி-1 திட்டம் உள்ளிட்ட 20 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மொத்தமாக இன்று ரூ.1,679.75 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

பின்னர் இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த 75,151 பயனாளிகளுக்கு ரூ.167 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேருரை ஆற்றினார். முன்னதாக அவர் பல்வேறு துறைகளுக்கும் வாங்கப்பட்டுள்ள புதிய வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் மேடையில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சிகளை பார்வையிட்டதோடு, பயனாளிகளுக்கு மொபட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், மூர்த்தி, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், ராபர்ட் புரூஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், நயினார் நாகேந்திரன், மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா, முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நாங்குநேரியில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும்.
- நெல்லை மாநகரத்தில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
நெல்லை:
நெல்லையில் நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. ஆட்சியில் நெல்லை மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து பேசினார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நெல்லை மாவட்டத்திற்கு 5 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர்,
* பாபநாசம் கோவிலில் உட்கட்டமைப்பு வசதி ரூ.5 கோடியில் மேம்படுத்தப்படும்.
* நாங்குநேரியில் புதிய சிப்காட் பூங்கா அமைக்கப்படும்.
* நெல்லை மாநகரத்தில் புதிய ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
* நெல்லை மாநகரத்தில் புதிய கழிவு நீரகற்று நிலையம் கொண்டு வரப்படும்.
* மேலப்பாளையம் பகுதியில் அம்பாசமுத்திரம் சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம்.
* சென்னை, கோவை மட்டுமில்லாமல் தென் தமிழ்நாட்டில் நவீன தொழிற்சாலைகள் நிறைய அமைய வேண்டும்
* இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் இதுதான் என் இலக்கு.
* தென்பாண்டிச்சீமையை தொழில் வளர்ச்சி மிகுந்த சீமையாக மாற்றியது இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி என்று வருங்காலம் சொல்லும்! அந்த அளவிற்கு வலுவான அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறேன் என்று பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
- வழி நெடுகிலும் மேளதாளங்கள் முழங்கப்பட்டது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நெல்லை வந்தார்.
நேற்று மாலை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் இருந்து பாளை மார்க்கெட் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ரோடு-ஷோ சென்று பொதுமக்களை சந்தித்தார்.
இன்று 2-வது நாள் நிகழ்ச்சியாக நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டார்.
அப்போது சாலையோரம் செண்டை மேளமும், நாதஸ்வர இசை வாத்தியங்களும் இசைத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வழி நெடுகிலும் மேளதாளங்கள் முழங்கப்பட்டது.
தொடர்ந்து பாளை காந்தி மார்க்கெட்டில் தொடங்கி விழா மேடை வரையிலும் ஏராளமான பெண்கள், நிர்வாகிகள், குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பிரனரும் திரண்டு வந்து முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் திரண்டிருந்ததை பார்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வ மிகுதியில் வேனில் இருந்து இறங்கி சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களை சந்தித்து கைகுலுக்கினார். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அவருடன், செல்பி எடுத்து கொண்டனர்.
அப்போது பச்சிளங்குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின்போது குழந்தைகள் பாரதியார், திருவள்ளுவர் உள்ளிட்ட வேடங்கள் அணிந்து வந்திருந்ததை பார்த்து மகிழ்ந்தார்.
அப்போது அந்த குழந்தைகள் திருக்குறளை வாசித்தனர். உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த குழந்தைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் குழந்தைகள் அவருக்கு அன்போடு ரோஜாப்பூக்களை வழங்கினர்.
பின்னர் சிறிது தூரம் வேனில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிமன்றம் அருகே இறங்கினார். அப்போது அவரை வக்கீல்கள் சந்தித்தனர். தொடர்ந்து அவரை பார்ப்பதற்காக ஆவலுடன் சாலையோரம் காத்திருந்த கல்லூரி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். பின்னர் விழா மேடைக்கு சென்றடைந்தார்.
- வரும் நவம்பருக்குள் நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி தேர் ஓடும்.
- தமிழகத்தில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகள் திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன.
நெல்லை:
நெல்லை அரசு மருத்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் விழாவில் ரூ.1,304.66 கோடி மதிப்பில் முடிவுற்ற 23 பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் ரூ.309.05 கோடி மதிப்பீட்டில் 20 புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* தமிழகத்தின் வரலாற்று பெருமைக்கு நெல்லை மண் அடையாளம்.
* எந்த ஆட்சியாக இருந்தாலும் முக்கியமான நகரமாக இருந்த ஊர் நெல்லை.
* நெல்லையப்பர் கோவிலை புதுப்பித்து திருப்பணிகள் செய்தவர் கலைஞர். வரும் நவம்பருக்குள் நெல்லையப்பர் கோவிலில் வெள்ளி தேர் ஓடும்.
* சென்னை அண்ணா மேம்பாலம் போல் நெல்லையில் ஈரடுக்கு பாலம் அமைத்தவர் கலைஞர்.
* தமிழகத்தில் நடக்கும் தொல்லியல் ஆய்வுகள் திருப்புமுனைகளை ஏற்படுத்துகின்றன.
* பொருநை ஆற்றின் கரையில் 3200 ஆண்டுகளுக்கு முன்பே நெல் பயிரிடப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் அகழாய்வில் கிடைத்துள்ளன.
* ஏப்ரல் மாதத்திற்குள் பொருநை அருங்காட்சியகம் பணிகள் நிறைவடையும்.
* தாமிரபரணி உபரி நீர் இணைப்பு திட்டம் மிக முக்கியமான திட்டம்.
* உபரி நீரை சாத்தான்குளம், திசையன்விளைக்கு கால்வாய்கள் மூலம் கொண்டு செல்ல உள்ளோம்.
* நெல்லை மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.
* தாமிரபரணி-நம்பியாறு- கருமேனியாறு உபரி நீர் இணைப்பு திட்டம் மிக முக்கியமான திட்டம்.
* வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது.
* நெல்லை அரசு மருத்துவக்கல்லூரியில் உயர் சிறப்பு மருத்துப்பிரிவு கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், முடிந்த திட்டப்பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
- 2026 தேர்தலில் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
- மக்களுக்கு நன்றாக தெரியும். யார் மக்கள் பணியாற்றுவார்கள்?
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்ற நிலையில், அதன் ஒருபகுதியாக பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அப்போது பா.ஜ.க. உள்ளிட்ட மாற்றுக்கட்சியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு கட்சி துண்டு மற்றும் உறுப்பினர் படிவத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தி.மு.க.விற்கு வலுசேர்க்கும் வகையிலும், புகழ் சேர்க்கும் வகையிலும் மாற்றுக்கட்சியினர் தி.மு.க.வில் இணைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணிசெய்யும் இயக்கம் தி.மு.க. மட்டும் தான்.
ஏழை-எளிய மக்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, தொழிலாளர்கள், விவசாயிகளுக்காக, ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்காக இந்த இயக்கம் பாடுபடுமென அண்ணா தெரிவித்தார். அந்த இயக்கத்தை என் கையில் தந்தார்கள்.
அப்படிப்பட்ட கழகத்தில் வந்து நீங்கள் எல்லாம் இணைந்து இருக்கிறீர்கள். பா.ஜ.க.வில் இருந்து வந்த தயாசங்கர் எங்களுக்காக தனி நேரம் ஒதுக்கி வந்ததற்கு நன்றி தெரிவித்தார். இதைவிட எங்களுக்கு வேறு வேலை இல்லை. இதுதான் எங்கள் வேலை. மாற்றுக் கட்சியில் இருந்து வந்த அனைவரையும் வரவேற்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
சிலர் கட்சியை தொடங்கியதுமே நாங்கள் தான் ஆட்சிக்கு வரப் போகிறோம் என கூறி வருகின்றனர். அதெல்லாம் மக்களிடம் எடுபடாது. மக்களுக்கு நன்றாக தெரியும். யார் மக்கள் பணியாற்றுவார்கள்? யார் மக்களுக்கு தொண்டாற்றுவார்கள்? என்பது மக்களுக்கு தெரியும். 2026 தேர்தலில் 7-வது முறையாக வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- திருநெல்வேலியில் உள்ள பிரபல இருட்டுக் கடைக்கு சென்றார்.
- அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்வா சாப்பிட்டார்.
நெல்லை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோவில் அருகே அமைந்துள்ள பிரபல அல்வா கடையான இருட்டுக் கடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் சென்றனர்.
அவர்களை கடை உரிமையாளர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அவர்கள் வழங்கிய அல்வாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டு, ருசியாக இருப்பதாக கூறினார்.
அதன்பின் இருட்டுக் கடை என பெயர் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கடை உரிமையாளர்களிடம் கேட்டார்.
முந்தைய காலத்தில் லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் அல்வா விற்பனை நடைபெற்றது என்றும், அப்போது மக்கள் அந்தக் கடையை 'இருட்டாக இருக்கும் கடை' எனக்கூறி அழைத்ததால் 'இருட்டுக் கடை' என பெயர் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், அல்வா தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்து கேட்டு தெரிந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பணம் கொடுத்து அல்வா வாங்கிச் சென்றார்.






